<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Saturday, July 30, 2005

தமிழ் விக்கிபீடியா - மீள் பதிப்பு 2

முதல் முழு பதிப்பின் சுட்டி. அப் பதிப்பில் கருத்துக்களை செல்ல Blogger பிரச்சினை கொடுக்கின்றது. நீண்ட பதிப்பு என்ற படியால் அப்படி இருக்கும் என்று நினைத்து இம் மீள் பதிவு. இ. மயூரநாதன் உடனான கேள்வி பதிலுக்கு இங்கே செல்லுங்கள். இவ் விதயம் நோக்கி உங்களின் கருத்துக்கள் முக்கியம். எனவே, முன்னர் கருத்துக்கள் கூற முயன்றவர்கள் உட்பட அனைவருடைய கருத்துக்களும் வரவேற்க படுகின்றன.



தமிழில் தகவல்களை திரட்டி வகுத்து தருவதற்க்கு மதுரை திட்டம், தமிழ்மணம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக செயற்படுவது தமிழ் விக்கிபீடியாதான். விக்கிபீடியா ஒரு இணைய தகவல் களஞ்சியம். தமிழ் விக்கிபீடியா மயூரநாதனால் அடித்தளம் நாட்டப்பட்டு, உந்தப்பட்டு இன்று பல பயணாளர்களை கொண்டு விரிந்து நிற்கின்றது. இது விருச்சியமாக வளர்ந்து நிற்க்கும் ஆங்கில விக்கிபீடியாவின் கட்டமைப்புக்கள், வசதிகள், நுட்பங்களையே அடிப்படையாக கொண்டது. யாரும் இலகுவில் பங்குகொண்டு சிறுக சிறுக கட்டமைத்து உருவாக்ககூடிய, உருவாக்கப்படும் தகவல் களஞ்சியமே தமிழ் விக்கிபீடியா. தமிழ் விக்கிபீடியா அனேகமான வலைப்பதிவாளர்களுக்கு அறிமுகமானதே. காசியின் "வலைப்பதிவெல்லாம் பழசு..." மற்றும் நவன் பகவதி அவர்களின் "இன்னுமொரு விக்கி" நல்ல அறிமுக பதிவுகள். விக்கி பற்றி மேலதிக தகவல்கள், சுட்டிகள் கீழே தருகின்றேன். முதலில் இ. மயூரநாதன் அவர்களுடான எனது மின் அஞ்சல் சந்திப்பு.

இ. மயூரநாதன் தமிழ் கணிமை ஆர்வலர்களுக்கு பரிச்சியமானவர்தான். அவரை பற்றிய ஒரு அறிமுக குறிப்பு அவரது தளத்தில் உள்ளது (சுட்டி). தமிழ் விக்கிபீடியாவை தமிழில் பல்துறை தகவல்களை பெறுவதற்க்கு ஒரு இணைய மையமாக பரிமானிக்க வைக்க வேண்டும் என்ற நோக்குடன் ஆழமாக சிந்தித்து செயலாற்றுபவர் இ. மயூரநாதன். நான் அனுப்பிய கேள்விகளுக்கு மிக விரிவாக பதில்களை தந்துள்ளார். நன்றி.



கேள்வி பதில் சுட்டி



மேலதிக தகவல்கள்

தமிழ் விக்கிபீடியாவை இன்னுமொரு இணைய தளம் என்று நோக்கினால், அதன் பின் இருக்கும் மென்பொருள் நுட்பத்தையும், நிர்வாக தத்துவத்தையும், குமுகாய கட்டமைப்பையும் புரிந்து கொள்ள முடியாது. விக்கியின் மென்பொருள் நுட்பத்தை மேலோட்டமாக அலசினால் கூட அது இலகுவில் யாரையும் பங்களிக்க, மாற்றங்கள் செய்ய அனுமதித்து அம் மாற்றங்களை பற்றிய ஒரு வரலாற்றை குறித்து வைத்து கொள்கின்றதென்பதை அவதானிப்பீர்கள். இது பலருடைய பங்களிப்பையும் உள்வாங்க சாத்தியமாக்கின்றது, உந்துகின்றது. விக்கியின் நிர்வாக தத்துவத்தில் பின்வரும் இரண்டு கருத்துநிலைகள் முக்கியமானவை: யாரையும் பங்களிக்க அனுமதிப்பது, மற்றும் நடுநிலையான அல்லது பாரபட்சமின்றிய தகவல்களை வேண்டி நிற்பது.

யாரையும் பங்களிக்க அனுமதித்தால் தரம் நம்ப்பிக்கை பாதிக்கப்படாதா என்ற முக்கிய கேள்வி எழுகின்றது? பங்களிக்க முன்வருவோர் தங்களுக்கு தெரிந்த வரையில் ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்தை மேன் படுத்தவே முனைவர் என்ற மனித குண மீதுள்ள நல்ல நம்பிக்கையிலேயே எந்த திறந்த நிர்வாக கட்டமைப்பும் இயங்குகின்றது. நாளடைவில், பலருடைய குறிப்பாக துறைசார் வல்லுனர்களுடைய பங்களிப்புக்களை உள்வாங்கி தரம் மேம்படும் என்பதுவே எதிர்பார்ப்பு, மற்றும் நடைமுறையில் நிரூபிக்கபட்ட உண்மை. நம்பிக்கை நாளடைவில், பாவனையில், பயனர்கள் மத்தியில் ஏற்படும் ஒரு நிலையே. தமிழ் விக்கிபீடியா மீது நம்பிக்கை உணரப்படும், அல்லது ஒரு குறிப்பிட்ட பரிமான வளர்ச்சி அடையும் பொழுது ஏற்படும் என்றே கருத முடியும்.

தமிழ் விக்கிபீடியாவின் நுட்ப, நிர்வாக கட்டமைப்புக்கள் முக்கியமானவை. அவை ஆங்கில கட்டமைப்புக்கு உட்பட்டவை அல்லது பிரதிபலிப்பவையே. இவற்றுக்கு இணையாக தமிழ் விக்கிபீடியாவிற்க்கு அதன் குமுகாய கட்டமைப்பும் முக்கியம். தமிழர்கள் ஒற்றுமையில்லாதவர்கள், திறந்த மன பண்பாடோ, கூட்டு செயல்பாடோ அற்றவர்கள் என்ற கருத்துநிலை பொதுவாகவும் எம்மிடேயேயும் நிலவுகின்றது. (இக் கருத்துநிலையில் எவ்வளவு உண்மை உண்டு என்பது ஒரு தனிப்பட்ட தலைப்பு. சினிமா தயாரிப்பு, ஈழ போராட்டம் இக் கருத்துநிலைக்கு எதிரான இரு உதாரணங்கள்.) இணையம் ஏற்படுத்தியுள்ள இணைபின் மூலம் உலக தமிழ் ஆர்வலர்கள் ஒற்றுமையாக இணைந்து, குமுகாயமாகவும் அதேவேளை அவர் அவருக்கு ஏற்ற முறையிலும் பங்களிக்க தமிழ் விக்கிபீடியா வழி செய்கின்றது.

மேலும், விக்கியில் ஏற்படக்கூடிய ஒரு முக்கிய பிரச்சினைகளை பற்றி குறிபிடுதல் வேண்டும். எந்தவொரு விக்கியிலும் குளப்பக்காரர்களால் வேண்டும் என்றே கட்டுரைகள் மாற்றப்படலாம் அல்லது நீக்கப்படலாம். அப்பொழுது என்ன செய்வது? ஒரு கட்டுரை மாற்றம் அடையும் பொழுது, அம் மாற்றத்தை விக்கி வரலாற்றில் பதிவு செய்கின்றது. மாற்றங்கள் தகுந்ததாக அமையாவிட்டால், அந்த வரலாற்றை அவதானித்து வரும் பயணர்கள் அம் மாற்றங்களை நீக்கி பழைய கட்டுரையை மீழ் பதியலாம். குளப்பக்காரர்கள் விடாது வற்புறுத்தினார்கள் என்றால் அவர்களுடைய இணைய இலக்கத்தை விக்கி கண்காணிப்பாளர்கள் தடைசெய்ய முடியும். குளப்புக்காரர்கள் வேறு இணைய இலக்கத்தை பாவித்து மீண்டும் வர முடியும். இப்படியான சந்தர்ப்பங்களில் கண்கானிப்பாளர்கள் புதிதாய் மாற்றப்படும் பக்கங்களை ஒரு வித தணிக்கையில் வைத்து பின் வெளியிடலாம். இவை தவிர மேலும் சில படி நிலை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

விக்கிபீடியா பற்றிய மேலதிக தகவல்களை தரும் ஆங்கில கட்டுரைகள்:
"The Book Stops Here"
"Why Wiki Works"
What Makes Wikipedia So Special
K5 Article on Wikipedia Anti-Elitism


விக்கிபீடியாவை விமர்சித்து எழுதப்பட்ட ஆங்கில கட்டுரைகள்:
"The Faith-Based Encyclopedia"
Why Wikipedia Must Jettison Its Anti-Elitism

தமிழ் விக்கிபீடியாவை தவிர பல தமிழ் விக்கிகள் இருக்கின்றன. விக்கிபீடியாவுடன் தொடர்புடைய விக்கிகள், மற்றும் வேறு குழுக்களின் விக்கிகள்.

தமிழ் விக்சனரி
http://ta.wiktionary.org/

தமிழ் விக்கி சோர்ஸ்
http://wikisource.org/

தமிழ் விக்கிநூல்கள்
http://ta.wikibooks.org

தமிழ் விக்கிகோட்டுக்கு.
http://ta.wikiquote.org

தமிழ் லினக்ஸ் விக்கி
http://www.thamizhlinux.org/wiki/index.php

வலைப்பதிவர்களுக்கான விக்கி
http://www.domesticatedonion.net/wiki/index.php/

தமிழில் கணினி விக்கி
http://wiki.thamizhkanini.org/index.php

தமிழ் புத்தக விக்கி
http://abbe.optics.utoronto.ca/tamilbooks/doku.php?id=start


இறுதியாக, தமிழ் விக்கிபீடியா தமிழில் பல்துறை சார் தகவல்களை உள்வாங்கி ஒரு தகவல் மையமாக பரிமானிக்க வேண்டும் என்பதே பல பயனர்களின் அவா. குறைந்த பட்சம் தமிழ் மட்டுமே அறிந்திருக்கும், நூலக வசதியற்ற பல இலங்கை, இந்திய வாழ் தமிழ் மாணவர்களுக்கு தரமான தகவல்களை திரட்டி, வகுத்து ஒரு மையத்தில் பெறக்கூடிவாறு வகை செய்தாலே நன்று. இப் பணியில் உங்கள் அனைவரையும், குறிப்பாக துறைசார் வல்லுனர்களை அழைக்கின்றோம். தமிழ் விக்கிபீடியா பற்றி உங்கள் கருத்துக்களையும் தெரியபடுத்தவும்.

Thursday, July 28, 2005

எதிர்பார்ப்பு, திறமை, உழைப்பு, பலன்: விரக்தி, பயம்

"காரியங்கள் குழம்பித் தட்டுக் கெட்டுப் போனால், அதற்குரிய காரணத்தை நமக்கு உள்ளேயே தேடிப் பார்க்க வேண்டும். நம்முடைய சுற்றுப்புறத்தை, நாமேதான் உருவாக்கியிருக்கின்றோம். புறத்தே தோன்றுவதெல்லாம் அகத்திலிருந்து கிளம்பியதே அன்றி வேறில்லை. நாம் எப்படியோ, அப்படித்தான் இருக்கும் அகிலமும். சுற்றுச் சூழ்நிலையை ஒழுங்குபடுத்த வேண்டுமாயின், நம்மை நாமே வெளிச்சம் அடித்துப் பார்த்து, நம்முடைய குறைபாடுகளைக் கண்டு களைந்திட முழு முயற்சி செய்ய வேண்டும். செய்தால் மற்றவர்மீது வெறுப்படையமாட்டோம், பிறரைக் குறை கூறவும் மாட்டோம்." - காந்தி

மனிதனுள் இயங்கும், மனிதனை இயக்கும் விளக்கு அவள்/அவன் மனதுனுள் இருந்து எழும் வேண்டுகோள்: "முன்னேறு". இல்லை எனில் அவள்/அவன் அமைதியாகி செயல் இழந்து விடுவார்கள், அவள்/அவன் இறப்பிற்க்கு அது சமம்.

அப்படியாயின், சோம்பலுக்கும், விரக்திக்கும் காரணம் என்ன? விரக்தி உண்டு, சோம்பல் அதன் உருவாக்கமே. மனிதனின் எதிர்பார்புகளுக்கும், திறமைக்கும், உழைப்பிற்க்கும், பலன்களுக்கும் இடையான முரண்பாடுகளால் ஏற்படுவதே விரக்தி.

1. எதிர்பார்ப்புக்கு ஏற்ற உழைப்பின்மை
2. உழைப்பிற்க்கு ஏற்ற திறமையின்மை
3. உழைப்பிற்க்கும் திறமைக்கும் ஏற்ற பலன் இன்மை
4. திறமை, உழைப்பு, பலன்களுக்கு மீறிய எதிர்பார்ப்பு

இவையால் ஏற்படுவதே விரக்தி.

ஏன் மனிதன் இலக்கை நோக்கி உழைக்க தயங்குகின்றான், தேக்க நிலை அடைகின்றான்? பயம். பயத்தின்பால் விளையும் அறியாமை. பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருப்பதால், அவள்/அவன் இருப்பிற்க்கும் செயல்களுக்குமான காரணத்தை அறியாதிருப்பதால், அவளது/அவனது உலகில் நோய், வறுமை, போர், இறத்தல் போன்றவை மலிந்து கிடப்பதால் அவளிடம்/அவனிடம் பயம். யார் என்ன சொல்வாரோ, எப்படி என்னால் முடியும், இப்படித்தான் உலகு போன்ற வேலிகளை பயம் உண்டாக்குகின்றது. உழைப்பு இதனால் தேக்கமடைகின்றது. உழைப்பின்றி திறமை கூர்மை இழக்கின்றது. பலன் குறைகின்றது. எதிர்பார்ப்புக்கள் சிதறுகின்றன.

பயம் முற்றிலும் ஒரு தீயசத்தி இல்லை. அது ஒரு எச்சரிக்கை கருவி. அதை நாம் எமக்கு சாதகமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கருதுகின்றேன். ஆயினும், பயம், பயத்தின்பால் விளையும் அறியாமை, இவையால் கட்டுன்று கிடக்கின்றேன். அதை நான் உணர்கின்றேன். "முன்னேறு" என்ற இயங்கு சக்தி என்னுள் இயங்குவதால் பயத்தை உணர்ந்தும் நான் செயல்பட முயல்கின்றேன். இவ் நிலையில் எனக்கு முன் ஒரு முக்கிய கேள்வி எழுகின்றது. முன்னேற்றத்தின் இறுதி இலக்கு எது?

முன்னேற்றத்தின் இறுதி இலக்கு எது? அடிப்படை வாழ்வியல் வசதிகளை அடையும் நிலையில், முன்னேற்றத்தின் இறுதி இலக்கு எது? சமயங்கள் பதில் சொல்ல முனைகின்றன. சம்சாரத்தில் இருந்து விடுதலை (இந்து சமயம்), நிர்வானம் (புத்தம்), தேவ மீட்ச்சி-தேவலோக வாழ்வு (கிறீஸ்தவம், இஸ்லாம்) என்பவற்றை குறிப்பிடலாம். விஞ்ஞானம் விரியும் பிரபஞ்சத்தை நோக்கி சுட்டி விட்டு முன்னேற்றம் மனித உலக செயல்பாட்டின் இயல்பு என்கின்றது. என்னை மட்டில் இப் பதில்களில் தெளிவு இல்லை.

முன்னேற்றத்தின் இறுதி இலக்கு எனக்கு தெரிய வில்லை. ஆனால், நான் இருக்கும் இடத்தில் இருந்து முன்னேற்றம் என்ற ஒரு திசை அல்லது வழி தெரிகின்றது. அத் திசை, வழி மூலமே என் பயனத்தை நான் தொடர்கின்றேன்.

Tuesday, July 26, 2005

தமிழ்ச்சொற் தேடல்கள்

"சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மையறிந்து" - திருக்குறள்

"சம அர்தமுள்ள எல்லா வார்த்தைகளும் நம் முன்னாலே வந்து அணிவகுத்து நிற்க வேன்டும். கருத்து முழுவதையும் நினைத்தை நினைத்தபடி சொல்ல ஏலாத வார்த்தைகளை யெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். மிஞ்சுகிற வார்த்தைகளில் ஒன்றையொன்று போரிடச் செய்து, எது எல்லா வார்த்தைகளையும் வென்று ஜெயம் பெறுகிறதோ, அந்த வார்த்தையைத் தான் சொல்ல வேண்டும்."

(குறளும் விளக்கமும்: நூல்: பாராட்டு தமிழ், கட்டுரை: "சொல் வழிபாடு" - எஸ். மகராஜன்)

தமிழில் வலை பதியும் யாவரும் தமிழில் சொற்கள் தேடுவது வழமை. தமிழில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்க்கு சொற்கள் அரிது என்றே இன்னும் பலர் கூறுகின்றனர். ஆனால், சற்று தேடினால் அனைத்து துறைகளிலும் நல்ல தமிழ் சொற்களை அறிந்துகொள்ளலாம்.

முதலில் நல்ல அகராதி வைத்திருப்பது உதவும். ப. அருளியார் தொகுத்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட "தமிழில் அருங்கலைச்சொல் அகராதி"யை இராம்கி அவர்கள் பரிந்துரைக்கின்றார்கள். (இவ் அகராதி கனடாவில் எங்கு கிடைக்கும் என்றோ, அல்லது இணையத்தின் மூலம் எப்படி பெறலாம் என்றோ தெரியவில்லை. தெரிந்தால் தெரியப்படுத்தவும்.) லிப்கோவின் ஆங்கில-ஆங்கில-தமிழ், தமிழ்-தமிழ்-ஆங்கில பொதுஅகராதிகளும் நன்று, பரவலாக கிடைக்கின்றன.

அகராதியை புரட்டுவதிலும் கணனியில் தேடுவது சுலபம். அவ் ரீதியில் சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட தமிழ் மென்பொருள் திரட்டில் உள்ள பழனியப்பா சகோதரர்களின் பால்ஸ் இ-அகராதி இலவசமாக இணையத்தில் இங்கு (http://www.ildc.in/GIST/htm/dictionary.htm) கிடைக்கின்றது. அதை தரையிறக்கம் செய்து பாவிக்கலாம். நல்ல தேடல் வசதி உண்டு.

இணையத்தில் இருக்கும் உபயோகமான ஆனால் மட்டுபடுத்தப்பட்ட ஒரு கலைச்சொல் அகராதி இங்கே(http://www24.brinkster.com/umarthambi/tamil/ETamil_search.asp). இலகுவாக சொற்களை தேடலமாம். பல நுட்பியல் சொற்களை கொண்டிருக்கின்றது, ஆனால் பொதுவான சொற்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை. நீங்களும் இதில் சொற்களை சேர்கலாம், அல்லது பரிந்துரைக்கலாம். யார் இதை பராமரிக்கின்றார்கள், இன்னும் பராமரிக்கப்பட்டு விரிவு படுத்தப்படுகின்றதா என தெரியவில்லை.

தமிழ் கலைச் சொல் திரட்டலில், வகுத்தலில் ஒரு மைக்கல்லாக அமையப்போவது தமிழ் விக்சனரிதான் http://ta.wiktionary.org/wiki/. மிக இலகுவாக சொற்களை திரட்ட, வகுக்க, தேடக்கூடியவாறு அமையப்பட்ட தளம். யாரும் இச் செயற்பாட்டில் பங்குகொள்ளலாம். பின்னிணைப்புக்கள் என்று பல பட்டியல்கள் திரட்டப்படுகின்றன. சொற் பட்டியல்கள் தகவல்களை ஒழுங்கமைப்பதில் ஒரு அடிப்படை முறை. தமிழில் பல தரப்பட்ட தகவல்களை சுலபமாக திரட்ட இப் பட்டியல்கள் உதவும்.

மிகவும் விரிவான, பல உத்தியோகபூர்வ கலைச்சொல் திரட்டல்களின் இணைய திரட்டாக அமைவது தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் கலைச்சொல் கோவைகள்தான் (சுட்டி: http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm).

இலத்திரணியல், இலக்கமியல், மின்னியல் போன்ற நுட்பியல் துறைசார் கலைச்சொற்களை தொழில்நுட்பம்.காம் திரட்டி தருகின்றது (சுட்டி: http://www.thozhilnutpam.com/).

நீண்ட நாட்களாக வலையில் இருந்த தற்சமயம் இணையத்தில் இல்லாத விரிவான கணனியில் கலைசொல் பட்டியல் கொண்ட்ட வலைத்தளம் http://www.tcwords.com/ஆகும்.

மைக்ரோசொப்ற் சேகரித்த தமிழ் கலைச்சொல் பட்டியலை இங்கு http://members.microsoft.com/wincg/home.aspx?langid=1097 நீங்கள் அங்கத்துவர் ஆகி பெற்றுக்கொள்ளலாம்.

இவற்றை எல்லாம் தேடியும் கிடைக்கவில்லை என்றால் இராம்கி, வெங்கட் போன்ற ஆழ்ந்த தமிழ் சொல்வளம் அறிந்தவர்களுக்கு மின்ன்ஞ்சல் செய்து முயற்ச்சிக்கலாம்.

இவற்றை விடவும் பல தமிழ் கலைச்சொல் பட்டியல்கள், திரட்டல்கள் இணையத்தில் இருக்கலாம். தெரியபடுத்தினால் நன்று.

Monday, July 25, 2005

பின்புலம் அறுந்த உருவகங்கள்

நிறம், இனம், மதம், மொழி, நாடு, வீடு, மரபுகள், கலாச்சாரங்கள் ஒருவனின் பின்புலம்கள் எனலாம். பிறக்கும் பொழுது ஒருவன் தன் பின்புலங்களை தெரிவுசெய்வதில்லை. எமக்கு உணர்த்தப்படும் இவ் அடியாளங்கள், பிரிவினைகள் சில எம்மால் மாற்றமுடியாதவை, ஆனால் பலவற்றை மாற்ற முடியும்.

புலம் பெயர் நிகழ்வு ஒருவனை தன் பின்புலம்களில் இருந்து விலகி நிற்க, அல்லது விலகி நின்று அலச உந்துகின்றது. புலம் பெயர்வு அவனுக்கு புதிய அடையாளத்தை தேட, கட்டமைக்க சந்தர்ப்பம் அழிக்கின்றது.

ஒரு நிலையில் புலம் பெயர்தல் ஒரு வித மீள்பிறப்புத்தான். இப்பிடியான ஒரு வாழ் நிகழ்வை வெவ்வேறு மார்க்கத்தில் அணுகலாம். சிலர் புலம் பெயர்ந்த பின் இயன்றவரை தம் முந்தைய பின்புலங்களை தேடி தம்மை மீழ் பிணைத்து கொள்வார்கள். சிலர் முந்தைய பின்புலங்களை இயன்றவரை துறந்து புதிய பின்புலங்களை தேடி கொள்வார்கள். சிலர் முந்தைய புகுந்த பின்புலகளை ஆய்ந்து தேர்ந்து ஒரு புதிய கட்டமைப்பை ஏற்படுத்திகொள்வார்கள்.

ஈழத்தமிழர்களின் மேற்குலக புலப்பெயர்வு, இரு துருவ (இட, சமூக, நுட்ப, பொருளாதார) விரிசல்களுக்கிடையேயானது. பெரும்பாலும் கிராமிய சுழல், எளிமையான பொருளாதாரம், இறுகிய உறவு பின்னல்கள், இந்திய கலாச்சாரம் ஆகிய கூறுகளால் அமைக்கப்பட்ட பின்புலத்தில் இருந்து நகர சூழல், சிக்கலான பொருளாதாரம், இழகிய உறவு பின்னல்கள் கொண்ட மேற்கத்தைய புலத்துக்கு ஈழ தமிழர்கள் புலர்ந்தார்கள்.

இவ் நிகழ்வு எமக்கு மனித வாழ்வின் தேவைகள், தெரிவுகள் குறித்து ஒரு பரந்த பார்வையை தந்தததோடு மட்டுமல்லாமல், ஒரு புதிய பின்புலத்தை கட்டவும் நிர்ப்பந்தித்தது. அனைத்து தெரிவுகளும் எமக்குமுன் இல்லை. புலம்பெயர்வு எமது பின்புலங்களுடான முற்றிலுமான இறுதியான பிரிவு இல்லை. ஆனாலும், ஒரு மாறுபட்ட பின்புல கட்டுமானத்துக்கு புலப்பெயர்வு எம்மை அனுமதித்து, நிர்ப்ந்தித்தது.

இந் நிலையில்தான் எம் பின்புலங்களை நாம் அவதானத்துடன் அலச ஆரம்பித்தோம். தாயகம், தமிழ், சமயம், சாதி பின்னல்கள், பெண் உரிமை, குடும்ப அமைப்பு, உறவு பின்னல்கள், தொழில், பொருளாதார தேவைகள், கல்வி, கலைகள், சமூகம் என பல கூறுகளை நாம் அவதானித்தோம். அவ் அவதானிப்புக்களில் இருந்தும், எமது புலர்ந்த சூழல் தேவகளுக்கு எற்ற முறையிலும் நாம் எமது புதிய பின்புலத்தை புனைய முயல்கின்றோம்.

தாயகம்:
நாம் எங்கிருந்து வந்தோம்? இக் கேள்வி என்றும் எம்முடன் இருக்கும். தெற்கு ஆசியா, இந்தியா, இலங்கை, ஈழம், ஈழத்தில் ஓர் ஊர் என்று தெளிவான பதில் எம்மிடம் உண்டு. ஆனால், தனி மனித நிலைமைகளை பொறுத்து தாயகத்துடனான எம் உறவு மாறலாம். புலத்தில் முழு அரசியல் உரிமை உடையோர், குடும்ப உறவினர்களோடு புலத்தில் உள்வர்கள் அகியோரின் தாயக தொடர்பு தளரலாம். சிலருக்கு தாயகம் உல்லாச இலக்காவும் மாறலாம். மிக சிலர் தாயகத்துடன் ஆத்ம தொடர்பை பேணி, மீண்டும் அங்கு சொல்ல காத்தும் இருப்பர்.

தமிழ்:
தமிழருக்கு தமிழ்தான் அடையாளம். பல் கலாச்சார சூழலில் எமது முக்கிய அடையாளமன தமிழை முன்நிறுத்த பலரும் முனைகின்றார்கள். ஆயினும் ஆங்கில சூழலில் இளையவர்கள் தம்மிடையே தமிழில் பேசுவது அரிது. எனினும், பலர் ஒரு பண்டித, பண்பாட்டு நோக்கில் தமிழை தெரிந்துவைக்க உந்தப்படுவார்கள் என்றும் நினைக்கின்றேன்.

இனம்:
தமிழ்ர்கள் "தனித்தமிழ்" என்ற வட்டத்தில் இங்கு இயங்க முடியாது. இலங்கையிலேயே சில தமிழ் குடும்பங்கள் சிங்கள, முஸ்லீம் உறுப்பினர்களை உள்வாங்கி அல்லது உறவாடி வருகின்றன. இந் நிலை இங்கு விரிந்து பல இன குடும்ப தொடர்புகள் நிகழும்.

சாதி:
பிறப்பு அடிப்படையிலான, தொழில் முறையிலான சாதியின் அர்த்தம் இன்மையை புலர்ந்தவர்கள் நன்கு புரிந்துவிட்டார்கள். அங்கு உயர் சாதி என்று தம்மை கருதியோர் புலர்ந்த நாட்டில் அடிமட்டத்துக்கு வந்த அனுபவ நினைவு என்றும் நிலைக்கும். உழைப்பால், படிப்பால் அங்கு ஒதுக்கப்பட்டோர் புலர்ந்த நாட்டில் எளிர்ச்சி அடைந்ததும் சாதியின் மாயை உடைத்தது. மேலும் புலர்ந்த நாட்டில் தமிழர் என்ற அடையாளமும் ஒற்றுமையும் முன்நிறுத்தப்படுகையில் சாதி அர்த்தமற்று போகின்றது. இங்கு நாம் எல்லோரும் "மண் நிற" சாதி. நிற ரீதியான வரையறைகளை, துன்புறுத்தல்களை பொது கனேடிய குமுகாயத்தில் எதிர்க்கு நாம் "வர்ண சாதி" அமைப்பை எம்முள் வைத்திருப்பது மடமை என்பதை அனைவரும் உணர தலைப்பட்டுள்ளார்கள். ஆயினும் சாதியின் கூறுகளை ஐயரின் பூனூலும், சடங்குகளிலும் அவதானிக்க முடியும்.

சமயம்:
சமயத்தின் பிடி தளர்ந்துள்ளது. கோயில்கள் சமூகத்தின் மையமாக இயங்கிய நிலை மாறி கோயில்களும் வியாபார - நுகர்வு நிலையங்களாக இயங்கும் நிலை இங்குள்ளது. கோயில்களின் தோற்றம், நோக்கம், பரப்புரைகள் புலம் பெயர் மக்கள் நன்கு அவதானித்தார்கள். "புனிதம்" உருவாக்கப்படும் முறைகள், சடங்குகளின் வெற்றுமை தன்மைகள், குருமார்களின் போட்டிகள் ஆகியவற்றை அவதானித்தார்கள். "அரிச்சினை 50% ஏல விற்பனையில்", "கோயிலில் விழா எடுப்பதற்க்கு இடங்களை பதிய முந்துங்கள்" போன்ற கூச்சல்கள் புலம்பெயர் மக்களின் உள்ளங்களை சோதனை செய்தது.

மேலும், கிறீஸ்தவ பிரிவுகள் எப்படி தம்மிடையே சண்டைபிடித்துகொண்டு பல தந்திரங்களை (பணம், தொழில், வசதிகள், பயப்படுத்தல்), மூளைச்சலவைகள் மூலம் மதம் மாற்ற முயன்றார்கள் என்பதை புலம் பெயர்ந்தவர்கள் அவதானித்தார்கள். "அவரை முட்டுகாலில் வைத்து கதற வைத்து விட்டேன்" என்று மதம்மாற்றிகள் சிறுபிள்ளைதனமாக தம்முள் தம்பட்டம் அடித்துகொள்வதையும் அவதானித்தார்கள். மனத்தை மாற்ற முயலாமல் மதத்தை மட்டும் மாற்றி குடும்ப ஒற்றுமையை குலைத்த மதமாற்றிகளையும் புலர்ந்தவர்கள் அவதானித்தார்கள்.

இவ் அவதானிப்புக்கள் புலர்ந்தவர்களின் சமய பிடிக்குள் இருந்து சற்று விடுவித்தது. ஒரு மன ரீதியான, ஆத்மீக தேடலுக்கும் இது உந்துவித்து எனலாம்.

உறவு பின்னல்கள்:
கூட்டு குடும்பம், இறுகிய உறவு பின்னல்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புலர்ந்தவர்கள் சிதறினார்கள். சிதறியவர்கள் தங்களை தன்நிலைப்படுத்த நிர்பந்திக்கப்பட்டார்கள். சார்ந்து வாழாமல் சுதந்திரமாக வாழ கற்றுகொண்டார்கள். உதவிக்கு அரசும், உழைப்புக்கு தொழிற்சாலையும், ஊடலுக்கு நுகர்வு அங்காடிகளும் இருக்கையில் இறுகிய இரத்த உறவு பின்னல்களின் தேவை, தொடர்பு அரிதாகவே பயன்பட்டது. ஒரு "தனி குடும்ப" உறுப்பினர்கள் கூட ஒவொரு மனிதனும் தன் காலின் பலத்தில் என்ற அமெரிக்க தத்துவத்தை ஏற்று படிப்பு, தொழில், பிற தொடர்புகள் என்று தம்மை நிலை நிறுத்த முயல்கின்றார்கள்.

ஒரு நிலையில் இம் மாற்றம் விடுதலையானதே, குறிப்பாக பெண்களுக்கு. பெண் என்பவள் தகப்பனையும், தமையனையும், கணவனையும் தங்கி வாழும் நிலையில் இருந்து விடுதலையாகி, அவளுக்கொன்றேரு வாழ்க்கை என்பது நிஜமாகியது. குறுகிய வட்டத்தில் வாழ்ந்து பழகிய தமிழர் ஒரு பரந்த வட்டத்தில் பல தொடர்பு பின்னல்களுடன் வாழ இவ் விடுதலை உந்தியது.

ஆயினும், இருத்த உறவு பின்னல்களின் தேவை என்றும் புலர்ந்தவர்களுக்கு உண்டு. ஒன்றுகூடல்கள், சடங்குகளின் முக்கியதுவம், இளையவர்களின் உறவு தேடல்கள் இவற்றையே சுட்டுகின்றன. ஆனால், இவ் புதிய பின்னல்கள் சார்பு நிலையில் அமையாமல், ஒரு வித சம பங்காளர்களின் பின்னலாக அமைகின்றது.

கல்வி, தொழில், பொருளாதார மீட்சி:
ஆரம்பத்தில் (80 களில்) புலர்ந்த இளைஞ்ஞர்கள் பலர் சூழ்நிலை காரணமாக தகுந்த கல்வியை தொழிலை பெற முடியாமல் இருந்தது. ஆனால், 90 களில் புலர்ந்தவர்கள் குறைந்த பட்சம் கல்லூரி கல்வியோ, பல்கலைகழக கல்வியோ பெற்றார்கள். எனினும் எதிர்பார்புக்கள் மாறி விட்டன. "டிக்றி" முடிப்பது வாழ்வியலின் ஒரு படி ஆகிவிட்டது. எது எப்படியாகினும் கல்வியே எமக்கு தாயகத்திலும் புலத்திலும் இருக்கும் முக்கிய மூலதானம், அத்திவாரம். அவ் அத்திவாரத்தில் இருந்து எப்படி எப்படி மேல் நோக்கி சுழல்வோம் என்பது தனிமனித முயற்சி மற்றும் சூழலை பொறுத்தது.

இறுதியாக, புலம் பெயர்ந்தலால் எமக்கு கிடைத்த விரிவடைந்த பார்வையை, அனுபவங்களை துணைகொண்டு ஒரு மறு மலர்ச்சி பின்புலர்த்தை இங்கு புனைய முனைகின்றோம். அக் கட்டுமானத்தில் தனி மனித தேர்வுகள் நிச்சியம் வேறுபடும்.

பல் கலாச்சார சூழலை அனுசரித்து, எமது தமிழ் அடையாளத்தின் அழகிய, வலுவான அம்சங்களை பேணி, சாதிய நிற பெண் உரிமை கட்டுபாடுகளை எதிர்த்து, உண்மையான ஆத்மீக தேடல்களுடன், சுயமான பொருளாதார வலுவுடன், வலுவான உறவு பின்ணிகளுடன் சீரிய சிந்தனைக்கு உட்படுத்தப்பட்ட உறுதியான மறுமலர்ச்சி பின்புலம் அமைக்கப்படல் வேண்டும்.

இம் முயற்ச்சி இலகுவானதல்ல. பல சோதனைகளையும் பின்னடைவுகளையும் நித்தியம் இம் முயற்ச்சி சந்திக்கும். ஆனாலும், உறுதியுடன் எம் முயற்ச்சி முன்னோக்கி செல்ல வேண்டு. ஏன் என்றால் எம் பின்புலங்களில் எமது இருப்பும் நோக்கும் தங்கியுள்ளது.

Sunday, July 24, 2005

நான் யார்?

இக் கேள்வியை பலமுறை என்னுள் கேட்டு விட்டேன். நான் யார்?

இவ் உடலே நான் என்னும் சடப்பொருளின் எல்லையா?
நான் எங்கு அஸ்தமித்து, எனது குடும்பம்/குமுகாயம் எங்கு தொடங்குகின்றது?
எனக்குள் உயிர்/ஆத்மா என்ற ஒன்று உண்டா?
அல்லது நான் வெறும் சடப்பொருளின் ஒரு நிலை வெளிப்பாடுதானா?

இரு நாடுகள், இரு மொழிகள், இரு கலாச்சாரங்களின் நடுவே எது எனது, எது சிறந்தது என உசாலாடும் நான் யார்? தமிழ், கனடா என்ற வட்டத்துக்குள் வேரூன்றி சமயம், மொழி, இனம், கலாச்சாரம் மேவி இணைப்புக்கள் தேடும், மனிதம் தேடும், நான் யார்?

புகைப்படத்தை பார்த்து இதுவா நான் என்று சொல்லும் என்னை மனக்குகைக்குள் சிறைப்படுத்தி வைத்திருக்கும் நான் யார்? காலத்தின் போக்கில் உடல் மாறி, உரு மாறி, உள்ளம் மாறி போனாலும் இதுதான் நான் என்ற கதையின் விடைபொருளான நான், நான் யார்?

ஒரு முறை சோம்பேறியாக, அற்ப குணம் கொண்டவனாக, செயல்திறன் அற்றவனாக, மிருகதனமாக இயங்கும் நான் மறு முறை உயரிய சிந்த்னைகளோடும் செயற்பாடுகளோடும் இணைகின்றேனே. இவ் இரண்டுக்கும் நடுவே துலையும் நான் யார்? நேற்று உழைப்பாலும், செயலாலும் உயர்ந்த நான், இன்று சோம்லாலும் கோளைத்தனத்தாலும் தேயும் நான், நாளை எப்படி மலர்வேன் என்று எண்ணும் நான் யார்?

பிரபஞ்சத்தின் சிந்தையுள் கரைந்துவிடப்போகும் நான், இக்கணப்பொழுதில் உங்களோடு உரையாடும் நிலைபேறுள்ள இயல்பு, அதுவே வாழ்க்கை, நான் என்றதன் இருப்பு.

நான் நற்கீரன். நற்கீரன் என் புனைப்பெயர் இல்லை. அதுவே என் பெயர். இலங்கை என் பிறப்பிடம், கனடா என் வாழ்விடம். பொறியியல் என் படிப்பு, தமிழ் என் ஆத்ம ஈடுபாடு. முதலில் "இதழ்களின் இணையம்" என்று அவ்வப்பொழுது பதிந்து வந்தேன், தற்போது "எனக்குள் உலகம்" பதிவில் அவ்வப்போது பதிந்து வருகின்றேன். என்னை பற்றிய மேலதிக தகவல்கள் www.natkeeran.ca தளத்தில் உள்ளன.

"நக்கீரர்" என்ற பெயரின் வரலாறும் தெரிந்து வைத்திருக்கின்றேன். "நக்கீரர்" சங்க காலத்து புலவர். பாண்டியன் அவையில் படிக்கப்பட்ட பாட்டொன்ற்றில் ஒன்றில் பொருட்குறை கண்டார். அப்பாட்டு புலவர் வேடம் தரித்த சிவனால் எழுதப்பட்டது. பாட்டில் சொல்லப்பட்டது போல பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் வாசம் இல்லை என்று "நக்கீரர்" வாதிட்டார். கோபம் கொண்ட சிவன், நெற்றிக்கண்ணால் தன் சுயரூபத்தை நக்கீரர்ருக்கு காட்டினார். அதற்க்கு "நற்கீரர்" "நெற்றிக்கண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமே" என்று தன் நிலை நின்றார். இக் கதையின் கரு என்னவென்றால், எச் சக்தி என்றாலும் உண்மையின் சார்பில் நிற்பதுவே தகும் என்பதாகும்.

கனடாவில் என்னை தவிர பல "நக்கீரர்"கள் உள்ளார்கள். ஒருவர் ஆழ்ந்த தமிழ் அறிவும், ஈடுபாடும் கொண்டவர். அவரின் வலைத்தளம்: www.nakkeran.com.

என்னையும் (நற்கீரன் – www.natkeeran.ca) அவரையும் (நக்கீரன் – www.nakkeran.com) குளப்பிவிடாதீர்கள். அதற்க்கு நான் வசந்தனும் இல்லை, அவர் சயந்தனும் இல்லை.

Friday, July 15, 2005

கொடுமை கொடுமை போர் கொடுமை

கொடுமை கொடுமை போர் கொடுமை
போரை இறைவன் படைத்தது கொடுமை
போரை தர்மமாய் வகுத்தது கொடுமை
போரை எம்மேல் திணித்தது கொடுமை

போதும் போதும் அழுகைகள் போதும்
ஆழ்கடல் பறந்து வந்தது போதும்
புதின உலகை பார்த்தது போதும்
ஜனனத்தை அலைச்சலில் துலைத்தது போதும்

வேண்டும் வேண்டும் விடுதலை வேண்டும்
மீண்டும் நம்கோர் புது வாழ்வு வேண்டும்
ஈழம் அமைதி பேண வேண்டும்
இலங்கையில் நீதி வெல்ல வேண்டும்

Saturday, July 02, 2005

புலம் பெயர் வாழ்வில் தமிழ் இனி தேவையா? இல்லை.

புலம் பெயர் வாழ்வில் தமிழின் தேவை சிறிதே. இதுவே உண்மை நிலவரம். தொழிலிலுக்கும் தொடர்பாடல்லுக்கும் தமிழின் பயன்பாடு அரிது. சமஸ்கிரதம் போல் சடங்குகளுக்கும், பண்டித படிப்புக்கும்மே தமிழ் தேவைப்படலாம், அதுவும் சிலருக்கே.

தமிழை உபயோகித்து, தமிழர் என்ற குழு நிலை மனப்பாட்டை பேணி இலாபம் அடைய முனையும் அரசியல், சமய, ஊடக சக்திகள் தமிழின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தியும், பிம்மபடுத்தியும், புனிதப்படுத்தியும் காட்டுகின்றனர். அவர்களின் இலாபமும், அடையாளமும் இதில் தங்கி இருப்பதால் இச் செயற்பாட்டில் ஆச்சிரியப்பட ஏதும் இல்லை. இவர்கள் தங்களை ஏமாற்றி கொள்கின்றார்களா, பிறரை ஏமாற்றுகின்றார்களா, அல்லது தமிழின் மீது கொண்ட அன்பின் ஒரு வித வெளிப்பாடா என புரியவில்லை?

தமிழ் மொழி கற்பதன் பயன்கள் குறித்து உரைக்கப்படும் கருத்துக்களை அலசி, சில மாறுபட்ட கருத்துக்கள் கீழே:

* இரு மொழி கற்பது சிந்தனை, கல்வி விருத்திக்கு நன்று.
(வேறு மொழிகளை (பிரேஞ்சு, ஸ்பானிஸ், சீனம்) பேன்ற மொழிகளை கற்பதாலும் இப்பயனை அடையலாம்.)

* தமிழ் தாய் மொழி என்பதால் கற்பது இலகு.
(தமிழகத்தில், தமிழீழத்தில் இக் கூற்று உண்மையாக இருக்கலாம். புலம் பெயர் குடும்ப, குமுகாய சுழலில் இக் கூற்று வலுவற்றது. பெற்றோரின் திறமை, நேரம், ஆர்வம், வசதி இன்மை போன்ற காரணங்களும், தமிழ் இயல்பாகவே கற்பத்ற்க்கு கடினமான மொழி (!) எனபதாலும் "தமிழ் தாய் மொழி என்பதால் கற்பது இலகு." என கருதமுடியாது. மேலும், குமுகாயம் வேறு ஒரு மொழியை பயன்படுத்துகையில், அங்கு தமிழ் கற்றலுக்கு ஏற்ற சூழலை எதிர்பார்க்க முடியாது.)

* தமிழின் இலக்கிய-அறிவியல் வளம் காரணமாகவும், அதன் பரந்த பாவனை (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்) காரணமாகவும் ஒரு வித பண்டித நோக்கில் தழிழை கற்கலாம். (இது ஒரு நல்ல காரணம்தான், ஆனால் சீனம், அரேபிக் போன்ற பிற மொழிகளும் இச் சிறப்புக்ளை கொண்டுள்ளன.)

* தமிழ் மட்டுமே நன்றாக தெரிந்த உறவுகளுடன் தொடர்பாடுவதற்க்கு தமிழ் அவசியம். (இதற்க்கு தமிழ் எழுதவோ, வாசிக்கவோ தெரியதேவையில்லை. சற்று புரிய பேச தெரிந்தாலே சாமாளித்து கொள்ளலாம். இது ஒரு தலைமுறை சிக்கலே. தமிழ் தாய் மொழி தலைமுறை போய், தமிழ் இரண்டாம் மொழி தலைமுறை வளர்ந்து கொண்டிருக்கின்றது. அவர்களுக்கு இச் சிக்கல் இருக்காது.)

* தமிழ் தமிழர் கலைகளை (பரதம், கர்நாடக சங்கீதம்), பண்பாட்டை கற்பதற்க்கு அவசியம். (பரதம், கர்நாடக சங்கீதம் போன்றவைகள் ஆங்கிலம் மூலமே கற்று கொள்ளலாம். தமிழ் சினிமா பட உரையாடல்கள் கூட மொழிபெயர்க்கப்பட்டு, எழுத்துருவில் பிம்மத்துக்கு கீழே பதியப்படுகின்றன. தேவாரங்கள் தமிழில் சமஸ்கிரதத்த தோத்திரங்கள் ஒதுவது போல புரிதல் தேடப்படாமல் சடங்குக்காக ஒதப்படுகின்றது. எனவே தமிழ் தமிழ் வழி கலைகளை கற்பதற்க்கோ, பண்பாட்டை பேணுவத்ற்க்கோ அவசியம்மற்றது.)

* தாயகம் திரும்புகையில் (திரும்பினால்!) தமிழ் தேவைப்படலாம்.
(தமிழ்ழம் என்றாலும், தமிழகம் என்றாலும் அங்கு ஆங்கிலம் துணைகொண்டு தொடர்பாடலாம். ஆங்கிலம் அல்லத ஐரோப்பா வாழ் தமிழ் மக்களுக்கு ஆங்கிலத்தையோ, தமிழையோ படிப்பதற்க்கு இது ஒரு வலுவான காரணமாக அமையலாம்.)

மேலும் தமிழ் படிப்பதற்க்கு தேவைப்படும் நேர, பொருள், ஈடுபாடு செலவுகளையும் கருத்திற் கொள்கையில் தமிழ் மொழி கற்பது புலம் பெயர்தவர்களால் ஏன் புறங்கணிக்கப்படுகின்றது என்பது சற்று விளங்கும்.

ஒரு பரந்த அடிப்படையில் புலம் பெயர் வாழ்வில் தமிழ் தேவையற்றது என்பது கசக்கும் உண்மை. புலம் பெயர் பொது வாழ்வு நீரோட்டத்தில் இணைவோருக்கு தமிழின் பயன்பாடு மட்டுபடுத்தப்பட்டதே. உலகமய நீரோட்டத்தில் புலம் பெயர்ந்தவர்களின் தேடல்களும் அடையாளங்களும் தொடர் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும், இதில் தமிழின் தேவை மீள்பிறப்பிக்கப்படலாம். ஆனால், இன்று பெரும்பான்மை புலம் பெயர்வர்களை நோக்குகையில் தமிழ் தேவையற்றதே.

புலம் பெயர் சூழலில் ஒரு சிலருக்கு, சில குழுக்களுக்கு தமிழ் அவர்களது அடையாளத்துக்கும், இருப்புக்கும் முக்கியமானதக அமையும். அதுவே தமிழின் மட்டுபடுத்தப்பட்ட பாவனையை சுட்டி நிற்க்கும்.