<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Sunday, July 24, 2005

நான் யார்?

இக் கேள்வியை பலமுறை என்னுள் கேட்டு விட்டேன். நான் யார்?

இவ் உடலே நான் என்னும் சடப்பொருளின் எல்லையா?
நான் எங்கு அஸ்தமித்து, எனது குடும்பம்/குமுகாயம் எங்கு தொடங்குகின்றது?
எனக்குள் உயிர்/ஆத்மா என்ற ஒன்று உண்டா?
அல்லது நான் வெறும் சடப்பொருளின் ஒரு நிலை வெளிப்பாடுதானா?

இரு நாடுகள், இரு மொழிகள், இரு கலாச்சாரங்களின் நடுவே எது எனது, எது சிறந்தது என உசாலாடும் நான் யார்? தமிழ், கனடா என்ற வட்டத்துக்குள் வேரூன்றி சமயம், மொழி, இனம், கலாச்சாரம் மேவி இணைப்புக்கள் தேடும், மனிதம் தேடும், நான் யார்?

புகைப்படத்தை பார்த்து இதுவா நான் என்று சொல்லும் என்னை மனக்குகைக்குள் சிறைப்படுத்தி வைத்திருக்கும் நான் யார்? காலத்தின் போக்கில் உடல் மாறி, உரு மாறி, உள்ளம் மாறி போனாலும் இதுதான் நான் என்ற கதையின் விடைபொருளான நான், நான் யார்?

ஒரு முறை சோம்பேறியாக, அற்ப குணம் கொண்டவனாக, செயல்திறன் அற்றவனாக, மிருகதனமாக இயங்கும் நான் மறு முறை உயரிய சிந்த்னைகளோடும் செயற்பாடுகளோடும் இணைகின்றேனே. இவ் இரண்டுக்கும் நடுவே துலையும் நான் யார்? நேற்று உழைப்பாலும், செயலாலும் உயர்ந்த நான், இன்று சோம்லாலும் கோளைத்தனத்தாலும் தேயும் நான், நாளை எப்படி மலர்வேன் என்று எண்ணும் நான் யார்?

பிரபஞ்சத்தின் சிந்தையுள் கரைந்துவிடப்போகும் நான், இக்கணப்பொழுதில் உங்களோடு உரையாடும் நிலைபேறுள்ள இயல்பு, அதுவே வாழ்க்கை, நான் என்றதன் இருப்பு.

நான் நற்கீரன். நற்கீரன் என் புனைப்பெயர் இல்லை. அதுவே என் பெயர். இலங்கை என் பிறப்பிடம், கனடா என் வாழ்விடம். பொறியியல் என் படிப்பு, தமிழ் என் ஆத்ம ஈடுபாடு. முதலில் "இதழ்களின் இணையம்" என்று அவ்வப்பொழுது பதிந்து வந்தேன், தற்போது "எனக்குள் உலகம்" பதிவில் அவ்வப்போது பதிந்து வருகின்றேன். என்னை பற்றிய மேலதிக தகவல்கள் www.natkeeran.ca தளத்தில் உள்ளன.

"நக்கீரர்" என்ற பெயரின் வரலாறும் தெரிந்து வைத்திருக்கின்றேன். "நக்கீரர்" சங்க காலத்து புலவர். பாண்டியன் அவையில் படிக்கப்பட்ட பாட்டொன்ற்றில் ஒன்றில் பொருட்குறை கண்டார். அப்பாட்டு புலவர் வேடம் தரித்த சிவனால் எழுதப்பட்டது. பாட்டில் சொல்லப்பட்டது போல பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் வாசம் இல்லை என்று "நக்கீரர்" வாதிட்டார். கோபம் கொண்ட சிவன், நெற்றிக்கண்ணால் தன் சுயரூபத்தை நக்கீரர்ருக்கு காட்டினார். அதற்க்கு "நற்கீரர்" "நெற்றிக்கண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமே" என்று தன் நிலை நின்றார். இக் கதையின் கரு என்னவென்றால், எச் சக்தி என்றாலும் உண்மையின் சார்பில் நிற்பதுவே தகும் என்பதாகும்.

கனடாவில் என்னை தவிர பல "நக்கீரர்"கள் உள்ளார்கள். ஒருவர் ஆழ்ந்த தமிழ் அறிவும், ஈடுபாடும் கொண்டவர். அவரின் வலைத்தளம்: www.nakkeran.com.

என்னையும் (நற்கீரன் – www.natkeeran.ca) அவரையும் (நக்கீரன் – www.nakkeran.com) குளப்பிவிடாதீர்கள். அதற்க்கு நான் வசந்தனும் இல்லை, அவர் சயந்தனும் இல்லை.

8கருத்துக்கள்

At 10:35 PM, Blogger ஒரு பொடிச்சி said...

உங்களைப் பற்றிய இந்த அறிமுகமே அழகாக உள்ளது நற்கீரன். முக்கியமாக உங்களது தமிழ்.

இந்த வாரத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..!

 
At 4:55 AM, Blogger கிஸோக்கண்ணன் said...

வருக நற்கீரன். நீங்கள் குறிப்பிடும் கனேடிய நற்கீரன் ஐயாவை எனக்கும் தெரியும்.

இவ்வார நட்சத்திரத்திரமாக மினுக் மினுக் எனச் சுடர்விட வாழ்த்துக்கள்.

 
At 5:35 AM, Blogger வசந்தன்(Vasanthan) said...

முதலில் வாழ்த்துக்கள்.

//அதற்க்கு நான் வசந்தனும் இல்லை, அவர் சயந்தனும் இல்லை.//


என்னத்துக்கையா எங்கள் ரெண்டு பேரையும் போட்டு இப்படிப் பந்தாடுறியள்.
ஆனாப் பாருங்கோ, ரெண்டு பேருக்கும் நல்ல விளம்பரம்.
உங்கட அறவீடு எவ்வளவெண்டு சொன்னா நல்லம். ஷ்ரேயாவுக்கு குடுக்கிறது கட்டுப்படியாகுதில்ல. சுந்தரவடிவேலத்தாரின்ர அளவு எண்டாப் பரவாயில்லை.
விலையத் தனிமடலில் தெரியப்படுத்தவும்.

அந்த 'தங்க வேல்" ஐயாவை ஏற்கெனவே அறிமுகம். என்னட்டயும் ரெண்டொரு பேர் ரெண்டு நற்கீரனைப்பற்றியும் கேட்டவை. நான் இல்லயெண்டு தான் சொன்னன். அது உங்கட பதிவுகளிலயே வெளிப்படையாத் தெரியுதுதானே.

 
At 11:36 AM, Blogger நற்கீரன் said...

"ஒரு பொடிச்சி", கிஸோ, வசந்தன் வாழ்த்துக்களுக்கு நன்றி.

கிஸோ "நக்கீரன் ஐயா" அவர்கள் சாத்திரம் பார்ப்பதில் இருக்கும் மூடநம்பிக்கைகளை ஆய்ந்து எழுதிய கட்டுரை தொடரின் சில கட்டுரைகள் படித்திருக்கின்றேன். தனிப்பட்ட முறையில் அவரை தெரியாது. ஆனால், அவர் ஈடுபட்டிருக்கும் சில நடிவடிக்கைகளை செய்திகள் மூலம் அறிவதுண்டு.

வசந்தன் சுந்தரவடிவேல் அவர்களுக்கு உங்களைப்போலவே நல்ல நகச்சுவை உணர்வு உண்டு. ரொரன்ரோ வந்த போது அவர்தான் உங்களின் இரட்டை வேடங்களை பற்றி எனக்குள்ளும் ஒரு கேள்வியை உலா விட்டார் என்று நினைக்கின்றேன். எனக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை.

 
At 12:38 PM, Blogger கிஸோக்கண்ணன் said...

நற்கீரன், நீங்கள் மாட்டுப்பட்டது போதாது என்று சுந்தரவடிவேலை வேறா?

 
At 12:47 PM, Blogger இளங்கோ-டிசே said...

இந்த வார நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்து, நற்கீரன்!

 
At 2:30 AM, Blogger வசந்தன்(Vasanthan) said...

//வசந்தன் சுந்தரவடிவேல் அவர்களுக்கு உங்களைப்போலவே நல்ல நகச்சுவை உணர்வு உண்டு.//

அடடே!
சுந்தரவடிவேலரும் 'நகம்' சுவைக்கிறாரோ?;-)
அவர் இருக்கிற நிலைமையில மற்றாக்களுக்கெல்லோ புத்தி சொல்ல வேணும்.

அதுசரி, அப்ப எங்களப்பற்றியும் உங்கட "மாநாட்டில' கதைச்சிருக்கிறியள் என்ன?
கேள்வியெல்லாம் உலாவ விட்டிருக்கிறப்பாக்க பெருமையில வெட்கமா இருக்கு.

 
At 4:29 AM, Blogger கயல்விழி said...

வாழ்த்துக்கள் நற்கீரன். உங்களது அறிமுகம் நன்றாக உள்ளது.
நற்கீரன் ஐயாவின் கட்டுரை தமிழ்நாதத்தில் படிக்க கிடைத்தது அவர் தான் நீங்கள் என்று எண்ணியிருந்தேன். தெளியவைத்ததற்கு நன்றிகள்.

[b]தமிழ்மணத்தில வசந்தன் சயந்தன் பாடு பெரும்பாடாய் இருக்கிறதுபோல. [/b]

 

Post a Comment

<< Home