<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Saturday, July 02, 2005

புலம் பெயர் வாழ்வில் தமிழ் இனி தேவையா? இல்லை.

புலம் பெயர் வாழ்வில் தமிழின் தேவை சிறிதே. இதுவே உண்மை நிலவரம். தொழிலிலுக்கும் தொடர்பாடல்லுக்கும் தமிழின் பயன்பாடு அரிது. சமஸ்கிரதம் போல் சடங்குகளுக்கும், பண்டித படிப்புக்கும்மே தமிழ் தேவைப்படலாம், அதுவும் சிலருக்கே.

தமிழை உபயோகித்து, தமிழர் என்ற குழு நிலை மனப்பாட்டை பேணி இலாபம் அடைய முனையும் அரசியல், சமய, ஊடக சக்திகள் தமிழின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தியும், பிம்மபடுத்தியும், புனிதப்படுத்தியும் காட்டுகின்றனர். அவர்களின் இலாபமும், அடையாளமும் இதில் தங்கி இருப்பதால் இச் செயற்பாட்டில் ஆச்சிரியப்பட ஏதும் இல்லை. இவர்கள் தங்களை ஏமாற்றி கொள்கின்றார்களா, பிறரை ஏமாற்றுகின்றார்களா, அல்லது தமிழின் மீது கொண்ட அன்பின் ஒரு வித வெளிப்பாடா என புரியவில்லை?

தமிழ் மொழி கற்பதன் பயன்கள் குறித்து உரைக்கப்படும் கருத்துக்களை அலசி, சில மாறுபட்ட கருத்துக்கள் கீழே:

* இரு மொழி கற்பது சிந்தனை, கல்வி விருத்திக்கு நன்று.
(வேறு மொழிகளை (பிரேஞ்சு, ஸ்பானிஸ், சீனம்) பேன்ற மொழிகளை கற்பதாலும் இப்பயனை அடையலாம்.)

* தமிழ் தாய் மொழி என்பதால் கற்பது இலகு.
(தமிழகத்தில், தமிழீழத்தில் இக் கூற்று உண்மையாக இருக்கலாம். புலம் பெயர் குடும்ப, குமுகாய சுழலில் இக் கூற்று வலுவற்றது. பெற்றோரின் திறமை, நேரம், ஆர்வம், வசதி இன்மை போன்ற காரணங்களும், தமிழ் இயல்பாகவே கற்பத்ற்க்கு கடினமான மொழி (!) எனபதாலும் "தமிழ் தாய் மொழி என்பதால் கற்பது இலகு." என கருதமுடியாது. மேலும், குமுகாயம் வேறு ஒரு மொழியை பயன்படுத்துகையில், அங்கு தமிழ் கற்றலுக்கு ஏற்ற சூழலை எதிர்பார்க்க முடியாது.)

* தமிழின் இலக்கிய-அறிவியல் வளம் காரணமாகவும், அதன் பரந்த பாவனை (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்) காரணமாகவும் ஒரு வித பண்டித நோக்கில் தழிழை கற்கலாம். (இது ஒரு நல்ல காரணம்தான், ஆனால் சீனம், அரேபிக் போன்ற பிற மொழிகளும் இச் சிறப்புக்ளை கொண்டுள்ளன.)

* தமிழ் மட்டுமே நன்றாக தெரிந்த உறவுகளுடன் தொடர்பாடுவதற்க்கு தமிழ் அவசியம். (இதற்க்கு தமிழ் எழுதவோ, வாசிக்கவோ தெரியதேவையில்லை. சற்று புரிய பேச தெரிந்தாலே சாமாளித்து கொள்ளலாம். இது ஒரு தலைமுறை சிக்கலே. தமிழ் தாய் மொழி தலைமுறை போய், தமிழ் இரண்டாம் மொழி தலைமுறை வளர்ந்து கொண்டிருக்கின்றது. அவர்களுக்கு இச் சிக்கல் இருக்காது.)

* தமிழ் தமிழர் கலைகளை (பரதம், கர்நாடக சங்கீதம்), பண்பாட்டை கற்பதற்க்கு அவசியம். (பரதம், கர்நாடக சங்கீதம் போன்றவைகள் ஆங்கிலம் மூலமே கற்று கொள்ளலாம். தமிழ் சினிமா பட உரையாடல்கள் கூட மொழிபெயர்க்கப்பட்டு, எழுத்துருவில் பிம்மத்துக்கு கீழே பதியப்படுகின்றன. தேவாரங்கள் தமிழில் சமஸ்கிரதத்த தோத்திரங்கள் ஒதுவது போல புரிதல் தேடப்படாமல் சடங்குக்காக ஒதப்படுகின்றது. எனவே தமிழ் தமிழ் வழி கலைகளை கற்பதற்க்கோ, பண்பாட்டை பேணுவத்ற்க்கோ அவசியம்மற்றது.)

* தாயகம் திரும்புகையில் (திரும்பினால்!) தமிழ் தேவைப்படலாம்.
(தமிழ்ழம் என்றாலும், தமிழகம் என்றாலும் அங்கு ஆங்கிலம் துணைகொண்டு தொடர்பாடலாம். ஆங்கிலம் அல்லத ஐரோப்பா வாழ் தமிழ் மக்களுக்கு ஆங்கிலத்தையோ, தமிழையோ படிப்பதற்க்கு இது ஒரு வலுவான காரணமாக அமையலாம்.)

மேலும் தமிழ் படிப்பதற்க்கு தேவைப்படும் நேர, பொருள், ஈடுபாடு செலவுகளையும் கருத்திற் கொள்கையில் தமிழ் மொழி கற்பது புலம் பெயர்தவர்களால் ஏன் புறங்கணிக்கப்படுகின்றது என்பது சற்று விளங்கும்.

ஒரு பரந்த அடிப்படையில் புலம் பெயர் வாழ்வில் தமிழ் தேவையற்றது என்பது கசக்கும் உண்மை. புலம் பெயர் பொது வாழ்வு நீரோட்டத்தில் இணைவோருக்கு தமிழின் பயன்பாடு மட்டுபடுத்தப்பட்டதே. உலகமய நீரோட்டத்தில் புலம் பெயர்ந்தவர்களின் தேடல்களும் அடையாளங்களும் தொடர் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும், இதில் தமிழின் தேவை மீள்பிறப்பிக்கப்படலாம். ஆனால், இன்று பெரும்பான்மை புலம் பெயர்வர்களை நோக்குகையில் தமிழ் தேவையற்றதே.

புலம் பெயர் சூழலில் ஒரு சிலருக்கு, சில குழுக்களுக்கு தமிழ் அவர்களது அடையாளத்துக்கும், இருப்புக்கும் முக்கியமானதக அமையும். அதுவே தமிழின் மட்டுபடுத்தப்பட்ட பாவனையை சுட்டி நிற்க்கும்.

24கருத்துக்கள்

At 11:38 AM, Blogger -/பெயரிலி. said...

நற்கீரன், நீங்கள் சொல்வதிலே மறுக்கமுடியாத நடைமுறையைச் சொல்லும் உண்மை இருக்கின்றது. புலம்பெயர்வாழ்விலே தமிழின் தேவை, சொந்த நாட்டிலே தமிழிலே பேசிக்கொண்டிருந்து பின்னாலே புலம் பெயர்ந்தவர்களுக்கு இன்றியமையாதது, அவர்களின் அடையாளத்துக்கான திருப்திக்காக இன்றியமையாதது; ஆனால், எதிர்காலசந்ததிக்குப் பயன்படுமொழி என்ற வகையிலே அது பயனாகாதபோதுங்கூட, அவர்களுக்கும் அவர்களின் அடையாளத்தினைக் காவத் தேவையாகின்றது. தமிழன் என்ற அடையாளமென்பது ஓரிரு தலைமுறைகளுக்கேனும் வெறுமனே விரும்புகிறோமோ இல்லையோ உதறிவிடுவதாக/விடக்கூடியதாக இருக்கப்போவதில்லை.

 
At 11:50 AM, Blogger ச.சங்கர் said...

அழகிய தமிழில் கட்டுரை அமைத்ததற்கு பாராட்டுகள்.
புலம் பெயர்ந்த தமிழர்களுக்குண்டான தேவையை நோக்கும் போது சொல்வது சரிதான்.
ஆயினும் அனைவருக்கும் ஒரு ஆதார தொடர்பு நிலத்துடன் தேவையாகவே இருக்கிறது.
அதற்க்கு மொழி அத்தியாவசியமாகிறது.
அதே சமயம் தம் தாயகம் விட்டு வெளியே செல்ல அவசியம் இல்லாதோர் மீது கல்வியின் பெயரால் பிற மொழி திணிப்பும் அவசியமில்லாதது.

 
At 11:50 AM, Blogger நற்கீரன் said...

This comment has been removed by a blog administrator.

 
At 11:59 AM, Blogger நற்கீரன் said...

பெயரிலி, கருத்துக்களுக்கு நன்றி. பொதுவாக ஒத்து போகின்றேன். ஆனால், தமிழன் என்ற அடையாளத்துக்கு தமிழ் தேவைப்படாது. எப்படி கறுபின மக்களின் அடையாளத்துக்கு ஆபிரிக்க மொழிகள் தேவை படவில்லையோ, அதே போல் தமிழன் என்ற அடையாளத்துக்கு தமிழ் தேவை இல்லை.

நன்றி சங்கர். தாயகத்துடனான தொடர்புக்கு தமிழ் அவசியம் அற்றது என்பது நடைமுறையில் நான் உணர்ந்த உண்மை. கல்வியின் பெயரால் பிற மொழி திணிப்பு என்று எதை குறிக்கின்றீர்கள் என ஊகிக்க முடியவில்லை. ஆனால், ஆங்கில மொழியின் புரிதல் இன்றைய உலகை அறிய முக்கியம் என்பது என் கருத்து.

 
At 1:41 PM, Blogger ஜெயச்சந்திரன் said...

This comment has been removed by a blog administrator.

 
At 1:47 PM, Blogger ஜெயச்சந்திரன் said...

//கறுபின மக்களின் அடையாளத்துக்கு ஆபிரிக்க மொழிகள் தேவை படவில்லையோ, //
இந்த உதாரணம் அபத்தமானது. ஆபிரிக்கர்களுக்கு கறுப்பர்கள் என்பது அவர்களது நிறம் சார்ந்த்து. தமிழர் என்பது மொழி சார்ந்ததாகவே இருக்கிறது. நிறம் சார் குறியீட்டினுள்ளோ அல்லது பிரதேசம் சார் குறியீட்டினுள்ளோ வருவோமானால் ஆசியர் அல்லது தென்னாசியர் எனும் அடையாளபடுத்தலாமெ தவிர கறுப்பர் என்பது போல் நிறம் சார்பில் அடையாளப்படுத்த முடியாது. ஏன் எனில் எமக்கும் தென்னாச்சிய பிற இனங்களுக்கும் பெரிதாக நிற வேறுபாடுகள் இல்லை.
நாம் தமிழர் என்ற அடியாளப்படுத்தலினை கைவிடப்போகிறோம் என்றால் அதன் பின் மொழியறிவும் தேவையற்றது. ஆசியர் அல்லது தென்னாசியர் எனும் வட்டத்துக்குள் கலந்துவிடலாம்.

 
At 2:29 PM, Blogger நற்கீரன் said...

குமிலி, கருத்துக்களுக்கு நன்றி. உங்களின் விளக்கம் சரி என்றே கருதுகின்றேன். குறிப்பாக தமிழர்கள் தெற்காசியா எனும் வட்டடத்துக்குள் கலந்து விடுவார்கள் என்றே கருதுகின்றேன். நிறம், சமயம், கலைகள், சினிமா, உணவு, உடை போன்றவைகள் தெற்காசிய மக்களுக்கு பொது, எனவே அவ் வட்டத்துக்குள் எம்மை அடையாளப்படுத்தவதில் தவறொன்றும் இல்லை. அவ்வாறு அடையாளப்படுத்துவதன் மூலம் தமிழர் என்னும் அடையாளத்தை துலைத்துவிட மாட்டோம். மாறாக, தமிழர் என்ற அடையாளம் அவ்வட்டத்தின் ஒரு பகுதியே.

மேலும், தமிழர் என்ற அடையாளத்துக்கு மொழியறிவு அவசியமா என்ற விவாதத்திற்க்கு ஆம் என்று சொல்லவே ஆசை, ஆனால் இல்லை என்பதே சரியான பதில். தமிழர் என்பது இறுகிய கட்டமைப்பு கிடையாது. தமிழ் குமுகாயம் தமிழனுக்கு எந்த உத்தரவாதத்தையும் அளிப்பதும் இல்லை, தமிழனுக்கு எந்த கடமைகளையும் கட்டுப்படுத்துவதும் இல்லை. ஆகையால் தமிழ் தெரியாதவர்களும் தங்களை தமிழர் என அடையாளப்படுத்துவதற்க்கு தடைகள் ஏதும் இல்லை. அவ்வாறு செய்பவர்கள் தமிழ் குமுகாயம் வரவேற்குமேயின்றி அன்னியப்படுத்தாது.

 
At 2:50 PM, Blogger ஒரு பொடிச்சி said...

என்னுடைய ஆசிரியரிற்கு 10 இற்கு மேற்பட்ட மொழிகள் தெரியும். அவரொரு scholar. மொழி என்பது தனியே அன்றாட உபயோகத்திற்கான பொருள் எனப் பார்த்தால் ஆங்கிலமே போதும் சர்வதேச மொழியாக!

எஸ்.ராமகிருஷ்ணனன் 'உயிர்மை' இதழில் Sir richard francis burton என்பவரைப் பற்றி எழுதுகிறபோது, அவர் இந்தியாவிலிருந்தபோது குரங்குகளின் பேச்சுமொழியைக் கற்றுக்கொள்ள விரும்பி அவற்றைத் தொடர்ந்து அவதானித்து ஒலிக்குறிப்புக்களை பதிவு செய்திருந்ததாகவும், அவர் ஒரு ஒலி எழுப்பினால் குரங்குகள் பதில் ஒலி எழுப்புவதாகவும் எழுதியிருந்தார். அது extreme ஆ இருந்தாலும், எல்லாமே ஆர்வத்துடன் சம்மந்தப்பட்டது.

மேலும் இன்றைக்கு ஆங்கிலம் என்பது பல்லாயிரக்கணக்கான மனித மொழிகளை -மனிதர்களைக் கொன்றதுபோலவே- கொன்றெழுந்த ஒரு மொழிதானே? அதைக் கற்பது என்பது 'வசதி' கருதித்தானேயொழிய அதன்மீதான காதலில் அல்ல. நீங்கள் கூறுவதுபோல ஸ்பானிஸ், பிரெஞ், இத்தாலியன் இப்படி நிறைய மொழிகள் கற்கலாம், அது தமிழாக இருக்க வேண்டுமென்பதில்லை என்று சொன்னால், அது தமிழாகவும் இருக்கலாம் எனவும் சொல்லலாம்!
கற்கத் தமிழ்
கடினமான மொழியென்றால் சீனம் இன்னமும் கடினமானதாக இருக்கும். இங்கு (கனடாவில்) தமிழ் கற்றலில் பிரதான பிரச்சினை: ஆசிரியர்கள். இலங்கையில் எந்தத் துறையில் degree எடுத்திருந்தாலும் இங்கு தமிழில் படிப்பிக்கலாம் என்று நிலமை. தமிழ் என்றில்லை எந்த மொழியிலுமே மொழி குறித்த அக்கறையற்ற ஆசிரியர்கள் சாபம்தான். எமது ஆசிரியர்கள் சொல்லவேண்டியதில்லை. இங்கே, தமிழ்மொழியை 'இலகுவாக' கற்பிக்ககத் தெரிந்த ஆசிரியர்கள் வரவேண்டும். புதிதாக ஒரு மொழியைக் கற்க மிக அவசியம் இது.

மற்றப்படி மொழி குறித்த புலம்பல்கள்/அதீத கோசங்கள் என்பதை வெறுக்கிற அதே சமயம் மொழியை கற்றுக்கொள்வதால் நன்மையே என்பது எனது கருத்து. அதிலும் வேலைவாய்ப்புகள் இன்ன பிறவிற்கு ரொறன்ரோவில் பல்மொழி தெரிந்திருத்தல் சிறப்பே. எனக்குத் தெரிந்த மாணவர்களுக்கு ஐரோப்பாவில் பிறந்ததால் ஐரோப்பிய மொழியொன்றும், பின்னர் மொன்றியாலில் வளர்ந்ததால் பிரெஞ்சும் பின்னர் ரொறன்ரோ வந்து ஆங்கிலம் என தமிழும் சோந்து அஃதால் அவர்களுக்கு நஸ்ரமொன்றும் இல்லை.
தமிழ் தெரியாத தமிழ் மாணவர்கள்கள் பிற மொழிகளில் புலமையுடையவர்களாய் இருந்தால் அதுவும் நல்லதுதான்.

பிறகு நற்கீரன் பரதம்/கர்நாடக சங்கீதம் எல்லாம் தமிழர் பாரம்பரிய வடிவங்களா? ;-) அறிய ஆவல்.

புலம்பெயர் சூழலில் குழந்தைகள் மொழி கற்றலென்பது ஒரு பொருளாதாரரீதியான பிரச்சினையும் கூட. கீழ்த்தட்டு, தொழிற்சாலைகளில் வேலை செய்கிற தமிழ் பெற்றோர் இன்னொரு மொழியை பிள்ளைக்கு கற்பிப்பதில் பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கின்றன. படித்த 'யாழ்பபாண' தமிழர்கள் எப்போதும் 'பிரயோசனமற்ற' விடயங்களைப் பிள்ளைகளிற்குக் 'கற்பிக்க' மெனக்கெட மாட்டார்கள். இப்போதுதான் பல்கலைக்கழக நுழைவிற்கான பாடங்களில் அது ஒன்றாக ஆக்கப்பட்டபிறகு கொஞ்சம் தமது மொழியில் கவனம் குவிந்திருக்கிறது. வசதியுடைய அவர்களாலேயே முடியாததை உளைச்சலும் அலைச்சலும் மிகு வேலைகளில் உள்ள பெற்றோரால் முடியுமா என்ன?
'தேவை'களுக்காய் மொழியைக் கற்பது வேறு, 'எனது' மொழி என்பதால் அல்ல, என்னுடைய தொடர்புடைய இனம் என்கிற வகையில், அந்த மக்களை அறிய என... தமிழை பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது ஆங்கிலத்தை கற்காதீர்கள் என்கிற அர்த்த்தில் தமிழ்நாட்டிலும் இல்லை. தமிழ்நாட்டில் வாழுகின்ற ஒருவர் தமிழ் கல்விமொழியாக இருத்தலை எதிர்ப்பாராயின் இது அறியாமையே.
எத்தனையோ பிரச்சினைகளுடைய இலங்கையில்கூட கொழும்பில் (அரசாங்க) பிரபல தமிழ் கல்லூரிகள் எல்லாமும் தமிழில்தான் கற்பிக்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்களில்தான் ஆங்கிலத்திற்கு மாறுகிறது.
மொழிக்கு இங்கே -கற்றலை 'தேவை'யின் பொருட்டு பார்க்கிற ஒரு சமூகத்தில்- ஆயுள் இல்லையென்பது உண்மைதான் ஆனால், அதற்காக தேவை இல்லையென்றில்லை.

 
At 4:17 PM, Blogger நற்கீரன் said...

This comment has been removed by a blog administrator.

 
At 4:21 PM, Blogger நற்கீரன் said...

ஒரு பொடிச்சி அவர்களுக்கு:

தங்களின் விரிவான கருத்துக்களுக்கு நன்றி.

நீங்கள் சுட்டுவது போல மொழி வெறும் தொடர்பாடல்களுக்கான ஆயுதம் இல்லை. அது எமது அடையாளத்துடன், இருப்புடன், இயல்புடன், வரலாற்றுடன், அரசியலுடன் தொடர்புடையது என்பதில் எவ்வித ஐயமும் எனக்கில்லை. இக் கூற்று நோக்கிய கருத்துக்களை நான் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன் (http://www.natkeeran.ca/AJLinks/TMag/tamilzines.html).

தமிழ் என்னை சார்ந்த குடும்ப சமூகத்தின் மனப்பதிவுகளின் அலை. ஒரு மனித கூட்டத்தின் தொன்மை, வரலாறு, தொடர் ஆகிவற்றின் சான்று. என்னால் இலகுவில் புரிந்து உணரக்கூடிய அறிவு, உணர்வு. இது தமிழின் மீது எனக்கிருக்கும் தொடர்பை விளக்க என்னால் எனக்குரைக்கப்டும் விளக்கம். அப் பதிலை என் தங்கை தர மாட்டாள். இனி இவர்களிக்கு தமிழ் தேவையில்லை. அவரவர் வாழ்வு பல பல வழிகளில் செல்கின்றது, செல்லும்.

"மொழி குறித்த புலம்பல்கள்/அதீத கோசங்கள்" ஆகிவற்றை நோக்கி எழுந்ததே இந்த பதிவு. மேலே சுட்டியது போல் பல மொழிகளை கற்பதில் உள்ள பயன்களை நான் என்றும் மறுக்கவில்லை.

தமிழ் கற்க கடினமான மொழி என்பது பொதுவான கருத்து. தமிழ் கற்பித்தல் முறைகளும், தமிழ் கற்பித்தலுக்கு உபயோகிக்கப்படும் புராண இது காசங்களும் தமிழ் கடினம் என்ற கருத்துக்கு வலு சேற்கின்றன. எனது அனுபவத்தில் தமிழில் நன்கு புலமை கொண்டவர்களால் கூட பல விதயங்களை தமிழில் வெளிப்படுத்தமுடியாதுள்ளது. எனவே, புலம் பெயர் வாழ்வு சூழலிலுக்கு ஏற்ற மாதிரியான வெளிப்படுதலுக்கு தமிழ் எப்படி பயன்படும் என்பது கேள்வியே?

தமிழ் இசை எது? பரத நாட்டியம் தமிழர் வழி கலையா? எனற கேள்விகளுக்கு விளக்கம் தர என்னால் முடியவில்லை. நான் கூற முனைந்தது தமிழ் வழி கலைகளையே (அப்படி ஏதும் இருந்தால்).

நீங்கள் கடைசி பந்தியில் சுட்டிய மொழி கற்பதலில் உள்ள வர்க்க வேறுபாடுகள் பற்றி என்னால் புரிய இயலவில்லை. தமிழை நோக்கி ஊருக்கு உபதேசம் செய்யும் சிலர், தங்கள் குடும்பங்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவதை அவதானிப்பதில்லை. ஆங்கிலமா, தமிழா என்றால் அங்கிலமே தெரிவு செய்யப்படுதல் நலம் என்பது யாவரும் அறிந்ததது. ஆனால், தெரிவு என்றும் தமிழும் ஆங்கிலமும் என்றே இருக்கின்றது.

மேலும், தேவைகளுக்காக கற்பதில் எவ்வித பிழை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதையே மனிதன் காலம் காலமாக செய்து வருகின்றான். ஆனால், தேவைகளை வெறும் பொருள் தேவைகளாக வரையறுக்காமல், மனிதனின் பூரண தேவைகளுக்குமான கல்வியை கற்க வேண்டும்

 
At 5:22 PM, Blogger NONO said...

ஒருவன் தமிழன் என்றால் அவனுக்கு தமிழ் மொழி அறிவு இருக்கவேண்டும்!!! தமிழ் தெரியாதவன் தமிழன் அல்ல!!!!
தமிழன் ஆக இருக்க விரும்புவது, விரும்பாதது அவர்களைப் பொறுத்து......

 
At 5:26 PM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

நற்கீரன் உங்களுக்கு ஆத்திரமூட்டுவதாக இருந்தாலும் மனதில் பட்டதைச் சொல்கிறேன்.புலத்தில் தமிழ் தேவையில்லை என்பதற்காக நீங்கள் முன்வைக்கும் நியாயங்கள் வெறும் விதண்டாவாதங்களாகத் தான் இருக்கின்றன.யதார்த்தம் என்று என்ணிக்கொண்டு அதீத கற்பனைகளை எழுதுகிறீர்கள்.

நீங்கள் முதலிலே சொன்ன தமிழன் என்று அடையாளப்படுத்துவதற்கு தமிழ் தேவையில்லை என்பதற்கும் பின்னர் பின்னூட்டத்திலே சொல்லும் தமிழ் எனது அடையாளம் இருப்பு என்பதற்கும் அபத்தம் என்பதைத்தான் பதிலாகச் சொல்ல முடியும்.

உங்கள் தேவை என்பதையே சமன்பாடாக வைத்துப் பார்த்தால் உலகில் ஆங்கிலம் மட்டும்தான் எஞ்சும்.ஈழத்திலும் இந்தியாவிலும் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் ஆகவே நீங்கள் சொல்லும் பிரெஞ்சும் ஸ்பானிசும் இரண்டாவது மொழியாகக் கற்கும் தேவையும் வேலை மினக்கெடலும் தேவையற்றதாகிவிடுகின்றன.

எவ்வளவுதான் ஆங்கிலப்புலமை இருந்தாலும் உங்களால் ஜப்பானிலும் சீனாவிலும் வசிப்பது கடினமாகத் தான் இருக்கும் அவர்கள் கனடாவில் மூன்று தலைமுறைக்கு மேல் வாழ்ந்தாலும் இன்றுவரை தங்களின் தொடர்ச்சிக்கும் தாய் நாட்டின் மீதான பிடிப்புக்கும் தங்கள் தாய்மொழியையே வழியாக வைத்துள்ளார்கள்.
இதுவே ஈழத்தமிழர்களினது மூன்றாவது தலைமுறை கனடாவில் பிறந்து வளர்ந்தாலும் தனது உறவினர்களுடன் ஊடாடுவதற்கு தமிழ் என்னும் வேலை மினக்கெட்ட மொழியைக் கற்றுத்தான் ஆகவேண்டியிருக்கும்.

காசு செலவு நேரம் அதிகம் என்று கனக்குப் பார்த்தால் எதுதான் எஞ்சும்

 
At 5:28 PM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

இரண்டாவது மொழி பற்றி பொடிச்சி நன்றாகக் கூறியுள்ளார் சீனமோ ஸ்பானிசோ இரண்டாவது மொழியாகக் கற்க முடிந்த ஒருவருக்கு தமிழை இரண்டாவது மொழியாகக் கற்க முடியாது இம்மூன்று மொழிகளும் ஒரேயளவு சிரமத்தை உடையவைதான்.அதிலும் வீட்டில் தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைக்கு தமிழ் இன்னும் இலகு.வீட்டிலும் தமிழ் பேசுதல் நாகரீகம் இல்லை எனக் கருதும் அடிமைக் குடும்பத்துப் பிள்ளைக்கு கடினமாகத்தான் இருக்கும் அவர்களை என்ன செய்ய

 
At 5:49 PM, Blogger Shakthi said...

புலம் பெயர் வாழ்வில் தமிழ் தேவையா? இல்லையா?....... நீங்கள் எடுத்து வந்த காரணங்கள் ஒரளவுக்கு சரியாகத்தான் தெரிகிறது. ஆனாலும் சைவமும், தமிழும், தமிழ் மக்களும், தமிழ்ப்பண்பாடுகளும் வாழ வளர தமிழ் மொழி அவசியமாகிறது என்பது எனது கருத்து.

 
At 6:09 PM, Blogger நற்கீரன் said...

னொனொ, கருத்துக்களுக்கு நன்றி.
உங்களுடைய நோக்கை நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது.
இதை பற்றிய எனது கருத்து மேலெ கூறியதுதான்.

ஈழநாதன், கருத்துக்களுக்கு நன்றி.
நான் அனைத்து வாதங்களையும் முன்வைக்க முயன்றுள்ளேன் என்பது சரிதான். அம் முயற்ச்சியில் சில "விதண்டாவாதங்களாகவும்" தோற்றம் பெற்றிருக்கலாம்.

நான் எனது தனி முடிவிற்க்கும், சமூகத்தின் அல்லது பிற மனிதர்களின் முடிவுகளுக்கும் வித்தியாசம் பேணுகின்றேன். தனிப்பட்ட நிலையில் தமிழ் எனக்கு தேவைதான். ஆனால், பெரும்பான்மை புலம் பெயர்ந்தவர்களுக்கு அத் தேவை அற்று போகின்றது என்ற என் பார்வையையே முன்வைக்கின்றேன்.

நான் ஆங்கிலத்துக்கு ஆதரவு தேடவில்லை. பிற மொழிகளையோ, தமிழையோ இகழவும் இல்லை. எது தேவை என்பதை தீர்மானிக்க எமக்கு வலு இருப்பதாகவே நான் உணர்கின்றேன்.

உறவாடலுக்கோ தொடர்பாடலுக்கோ தமிழ் தேவையா என்றால்? இல்லை என்பதுவே அனுபவ பதில். இளையவர் பலருக்கு ஆங்கில்த்தில் மாத்திரமே முழுமையாக தங்களை வெளிப்படுத்த முடியும் என்பது இன்றைய நிலை. இதை நான் வெறும் வாதத்திற்காக கூறவில்லை.

எங்கள் வீட்டில் தமிழில்தான் பொதுவாக உரையாடுவோம். ஆனால், ஆங்கிலத்தில் கற்ற பாடங்களை பற்றியோ அல்லது ஆங்கிலத்தில் எமக்கு பரிச்சியமான கருக்களை பற்றி பேசுகையிலோ ஆங்கிலமே இலகுவாக படுகின்றது. இதில் தவறு இருப்பதாககவும் நான் கருதவில்லை.

 
At 6:14 PM, Blogger நற்கீரன் said...

சக்தி, கருத்துக்கு நன்றி. உங்களின் கருத்தும் சரிதான்.

 
At 7:14 PM, Blogger வன்னியன் said...

ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

பெடியன்கள் இங்கே சொன்னதுக்கும் உங்கள் பதிவுக்கும் அவ்வளவு வித்தியாசமிருப்பதாகப் படவில்லை. அனால் பின்னூட்டங்களில் ஓரளவு சரியான பாதைக்கு வந்துள்ளீர்கள். மொழி தனியே தொடர்பாடலுக்கு மட்டுந்தான் என்றால் பெடியன்கள் சொல்வது சிறந்து ஒரு தீர்வு தான். பிறகேன் ஈழத்தில் தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்த போராட்டம் வந்தது? (எல்லாம் மறந்துவிட்டு சிங்களவனோடு சேர்ந்து வாழலாம் என்று தீர்வு சொல்லும் உங்களோடு இதுபற்றிக் கதைக்கமுடியாதென்றே நினைக்கிறேன்.)

குறைந்த பட்சம் சுற்றுலாவுக்காக தாயகம் போபவர்கள்கூட தமிழ் அறிந்திருக்கு வேண்டிய தேவையில்தான் இருக்கிறார்கள். கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சுற்றுலாவுக்குச் சென்ற குடும்பமொன்றின் இரு பிள்ளைகளும் தமிழ் சுத்தமாகத் தெரியாத ஒரே காரணத்தால் மட்டுமே தாய் தந்தையரை விட்டுவிட்டு இரண்டு நாட்களிலேயே கொழும்பு திரும்பி விட்டார்கள். இரண்டாம் முறை இலங்கை வந்தபோது பிள்ளைகள் தாம் வரவில்லையெனச் சொல்லிவிட்டார்கள். தாய் தந்தையர் மட்டுமே யாழ்ப்பாணம் வந்து போனார்கள்.

மொழி தெரியாத ஒருவரால் என்னதான் யார்தான் மொழிபெயர்த்துச் சொன்னாலும் யாழ்ப்பாணத்தோடோ வன்னியோடோ ஒட்டவே முடியாது. குறிப்பாகக் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் மனஅழுத்தத்தைத் தருகிறது.

தமிழ் சுத்தமாகத் தெரியாவிட்டாலும், தமிழ்ப்பெற்றோருக்குப் பிறந்ததால் தமிழராகவேஅறியப்படுவர். ஆனால் தொடர்புகள் இழக்கப்பட்ட மூன்றாந்தலைமுறை எப்படி அழைக்கப்படும்?

எதற்காக ஒவ்வொரு காரணங்களுக்கும் கீழ் மற்ற மொழிகளையும் ஒப்பிட்டீர்களோ தெரியவிலலை. தமிழர் எனச் சொல்லப்படுபவர் தமிழ் கற்பதையும் மற்ற மொழிகளைக் கற்பதையும் ஒரே தராசில் வைப்பதை என்னவென்று எடுத்துக்கொள்வது?

 
At 9:03 PM, Blogger நற்கீரன் said...

வன்னியன் அவர்களுக்கு:

கருத்துக்கும் சுட்டிக்கும் நன்றி.

தமிழ் நோக்கிய என் கருத்துககளை முன்னைய பதிவுகளிலும் (http://www.natkeeran.ca/AJLinks/TMag/tamilzines.html), இப் பதிவிலும் தெளிவாக்க முயன்றுள்ளேன். இப்பதிவில் நான் கூற முயல்வது யாதெனில் புலர்ந்த இளம் தலைமுறை தமிழர்கள் தமிழில் பேசுவதில்லை காரணம் தமிழ் தெரியாமை, தமிழில் தம்மை முழுமையாக வெளிப்படுத்தமுடியாமை. ஆங்கிலம் இத் தொடர்பாற்றலை நிவர்த்தி செய்கின்றது என்றால் தமிழ் இச் செயற்பாட்டில் பயன் இழந்து போகின்றது, தேவை இழந்து போகின்றது என்றுதானே கூறமுடியும்.

தொடர்பாடலுக்கே மொழி் முக்கிய தேவை என்றாலும், அது பன்முக தேவைகளை பூர்த்தி செய்கின்றது என்பதை நான் ஏற்று கொள்கின்றேன். ஆயினும், அத் தேவைகளுக்கும் பலருக்கு புலம் பெயர் சூழலில் தமிழ் தேவையற்று போகின்றது என்பதையே சுட்ட முனைகின்றேன்.

நீங்கள் தமிழில் சற்று சமாளிக்க தெரிந்தாலே போது என்று கருதுகின்றீர்களோ என்று எண்ண தோன்றுகின்றது. அதை இங்கு பெரும்பாலனவர்கள் செய்வார்கள். தமிழில் பேச, வாசிக்க, எழுத அடிப்படை புலமை என்பது அப்படிப்பட்ட சமாளிப்பில் அடங்காது. தமிழ் தெரிவது என்பது அப்படிப்பட்ட புலமையையே நான் குறிக்கின்றேன்.

புலம் பெயர் சூழலில் இரண்டாம் மொழியாக தமிழையா பிற மொழி ஒன்றையா கற்பது என்ற தெரிவு தேவை ஏற்படுகின்றது. அந் நோக்கில்தான் பிற மொழிகளை ஒப்பிட்டேன்.

 
At 9:19 PM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

//யாதெனில் புலர்ந்த இளம் தலைமுறை தமிழர்கள் தமிழில் பேசுவதில்லை காரணம்//

நீங்கள் சொல்லும் காரணம் அல்ல இப்படி தமிழ் படிப்பது இலாபமா நட்டமா என்று கணக்குப் பார்த்தல்தான்.உங்கள் பதிவிலும் நீங்கள் இலாப நட்டக் கணக்குத்தான் பார்க்கிறீர்களே ஒழிய தமிழ் படிக்கவேண்டியதன் தேவையை வலியுறுத்தவில்லை.தமிழனாக இருக்க ஆக்க்குறைந்தது தமிழாவது பேசத் தெரிந்திருக்கவேண்டும்.

ஆப்பிரிக்கர்களை உதாரணம் காட்டினீர்களே நான் படித்த ஜேம்ஸ் நூகி வா தியாங்கோ தன் நூல்களில் ஆங்கில மோகத்துக்கு அடிமையாகி சொந்த மொழியாகிய கிகியூவை மறந்தவர்களை சாடுகிறார் இன்று அவர்கள் தாய்மொழியில் படிப்போம் தாய்மொழியில் எழுதுவோம் என்று இயக்கம் ஆரம்பித்திருப்பது ஆப்பிரிக்காவில் இல்லை புலம்பெயர்ந்திருக்கும் ஐரோப்பாவில்.இப்படி பலதேசத்தவர்களும் உதாரணமாகச் சொன்னால் சீனர்கள் புலத்தில் தங்கள் மொழி அழிந்துவிடாதிருக்க உணர்வு பூர்வமாகச் செயற்படும்போது அறிவுபூர்வமாக இலாபநட்டக் கணக்குப் பார்ப்பது கனடா போயும் நாங்கள் எங்கள் குனங்களை இழக்கவில்லை என்பதைக் காட்டுகிறது

 
At 9:43 PM, Blogger elilan said...

//:தமிழை உபயோகித்து, தமிழர் என்ற குழு நிலை மனப்பாட்டை பேணி இலாபம் அடைய முனையும் அரசியல், சமய, ஊடக சக்திகள் தமிழின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தியும், பிம்மபடுத்தியும், புனிதப்படுத்தியும் காட்டுகின்றனர். அவர்களின் இலாபமும், அடையாளமும் இதில் தங்கி இருப்பதால் இச் செயற்பாட்டில் ஆச்சிரியப்பட ஏதும் இல்லை. இவர்கள் தங்களை ஏமாற்றி கொள்கின்றார்களா, பிறரை ஏமாற்றுகின்றார்களா, அல்லது தமிழின் மீது கொண்ட அன்பின் ஒரு வித வெளிப்பாடா என புரியவில்லை? ://

இங்கே யாரும் தமிழால் இலாபம் அடைவதை நான் காண வில்லை.யாரும் தமிழ் கற்பதை எதிர்கவும் இல்லை.கனடா அரசு அனைத்து மொழிகளையும் கற்க ஊக்குவிக்கின்றது. உன்களுக்கு கூடதமிழ் தெரியாவிட்டால் என்களோடு இப்போது கதைக்க முடியாமல் போய் இருக்கும்.

நன்றி

 
At 9:46 PM, Blogger நற்கீரன் said...

ஈழநாதன்:

இலாப நட்ட கணக்குகளை பார்ப்பது அடிப்படை மனித இயல்பு. அதை ஏன் பிழை என்று கருதுகின்றீர்கள்?

தாய் மொழி இழப்பை நோக்கி பலர் வருந்துகின்றார்கள் என்பது உண்மைதான், ஆனால் பலர் அதை பற்றி அலட்டி கொள்வது இல்லை என்பதும் கண்கூடு.

சீனர்கள் புலத்தில் தங்கள் பின்புலத்தை நிலை நிறுத்துவதில் வல்லவர்கள்தான். இந்தியர்கள் தங்கள் தாயகத்திலேயே தங்கள் பின்புலத்தை இழப்பதை என்ன என்று சொல்வது. நான் சொல்ல முனைவது யாதெனில் தனி மனிதர்களும், மனித குழுக்களும் வெவ்வேறு முறைகளில் தங்கள் வழிகளை தேடும். பல புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழின் தேவை அரிதாகி வருகின்றது என்ற என் அவதானிப்பின் குறிப்பே இந்த பதிவு. இவ் அவதானிப்பில் நான் பிழையானால், எனக்கு மகிழ்ச்சியே.

 
At 10:01 PM, Blogger நற்கீரன் said...

எழிலன்:

தங்கள் கருக்களுக்கு நன்றிகள், அவற்றை குறிப்பெடுத்துகொள்கின்றேன்.

 
At 1:06 AM, Blogger போலிஅப்பாவி said...

எல்லாரும் ரொம்ப வெவரமா இருக்கீங்க! நா ஒரு சேதி செல்லுதேன்..போனமாசம் ஊர்லேந்து முறுக்கு பொட்டலம் வந்துச்சு..முறுக்கு தீந்துபோச்சு..! முறுக்கு மடிச்ச தாளு இன்னும் இருக்கு. யார் வந்தாலும் அத ஒரு பெரட்டு பெரட்டிட்டுதான் மத்த பேச்சு. வேற மொழிக்காரனும் பாத்துட்டு என்னான்னு கேட்டான்..தெரியலன்னு சொன்னா நல்லாயிருக்குமா? படிச்சு சொன்னேன்..அதயுஞ்சொல்லிப்புட்டேன்.

 
At 3:46 PM, Blogger பத்மா அர்விந்த் said...

நற்கீரன்
வெகுநாட்களாக எழுத எண்ணி இருந்தேன். அல்ஷிமர் நோய் வந்தால் இடையில் கற்ற மொழி மறந்துவிடும். இதனால் வயதான்வர்களுக்கு தாய்மொழியில் பேச உதவ பயிற்சி தரப்படுகிறது. CDCஇணையதளத்தில் அமெரிக்க அரசு சேர்ந்தவர்கள் சில தீவிரவாதம் பற்றி தமிழிலும் எழுதி இருக்கிறார்கள். தமிழ் தெரிந்த மருத்துவர், நர்ஸ் இவர்களுக்கு தேவை அதிகமாகி இருக்கிறது. ஒரு மொழி வழக்கொழிந்து போகாது. விரிவாக எழுத தோன்றுகிறது.

 

Post a Comment

<< Home