<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Thursday, May 19, 2005

சமத்துவம்

சமத்துவம் என்றால் என்ன? சமத்துவம் விரும்பத்தக்கதா? ஏன் விரும்பத்தக்கது? சமத்துவ சமூகம் அடையப்படக்கூடியதா?

இங்கு, சமத்துவத்தை பொருளாதார நோக்கிலேயே அலசுகின்றோம், காரணம் பொருளாதாரம் கொண்டு சாதி, மத, இன, குண குறைபாடுகளை நிவர்த்திசெய்யலாம். உதாரணமாக கீழ்சாதியில் அல்லது சமூக தரத்தில் பிறந்த ஒருத்தி பொருளாதார நிலையில் உயரும் பொழுது அவளது சாதி சமூக தரம் உயரும்.

அனைவரும் அனேகமாக ஒரே பொருளாதார நிலை கொண்டிருத்தல், அதுவா சமத்துவம். இல்லை. சில மனிதர்கள் உலக கூறுகளை துறந்து ஆத்மீக தேடல்களில் ஈடுபடுகின்றார்கள். சிலர் தம் உழைப்பு, திறன் ஒருங்கே குவித்து பொருளாதார மேம்பாட்டை அடைகின்றார்கள். இம் மனிதர்களின் நிலைகள் அவர்களின் தெரிவு. இவர்களிடையே பொருளாதார சமத்துவம் இல்லை. அப்படி வேண்டுவது அவர்களது தனி மனித சுதந்திரத்தை, தெரிவை மறுப்பதாகும்.

ஆகவே, சமத்துவம் சம சந்தர்ப்பந்திற்கான (equal opportunity) கோரிக்கையாகவே எழுகின்றது. இவ் அடிப்படையில்தான் சமத்துவத்தை வலியுறுத்தும் அரச செயல் திட்டங்கள் அமைகின்றன. பின் தங்கிய குழுக்கள் சமன் அற்ற நிலையில் இருப்பதால் சம சந்தர்ப்பத்தை அளிப்பதற்க்காக இட ஒதுக்கீடு, இளகிய தெரிவு வரையறுக்கள் போன்ற திட்டங்கள் அமுலில்படுத்தப்படுகின்றன.

இதுவரை சமத்துவம் என்றால் என்ன என்ற கேள்வியே அலசப்பட்டது. சமத்துவம் விரும்பத்தக்கதா? ஏன்? ஒரு சமூக அமைப்பு (அரசாங்கம், சட்டங்கள், நிறுவனங்கள்) ஒரு மனிதனை உயர்த்தியும் இன்னொரு மனிதனை தாழ்த்தியும் வைக்குமானால் அச் சமூக அமைப்பு விரும்பத்தக்கதல்ல. அதாவது, சமூக கட்டமைப்பின் காரணமாக சில மனிதர்கள் மற்ற மனிதர்களின் செலவில் பயனடைவது. எந்த ஒரு சுதந்திர மனிதனும் இந் நிலையை ஏற்று கொள்ள மாட்டான்.

அப்படியானால், சமூக பொருளாதார-அரசியல் ஏற்ற தாழ்வுகளை எப்படி பார்ப்பது? "சமூக பொருளாதார-அரசியல் ஏற்ற தாழ்வுகள் ஒரு சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பயன் அளித்தாலே, குறிப்பாக தாழ்ந்த அல்லது பின் தங்கியவர்களுக்கு பயன் அளித்தாலே அச் சமூக கட்டமைப்பை நியாயப்படுதலாம்". ("Social and economic inequalities, for example inequalities of wealth and authority, are just only if they result in compensating benefits for everyone, and in particular for the least advantaged members of society."-Locke, J.) இங்கு, ஒரு சமூக கட்டமைப்பு அனைவருக்கு பயன் அளிக்கும் என்றாலும் சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் பயன் அளிக்கலாம். இந் நிலை எழாமல் இருக்க சமூகம் விளிப்புடன் இருப்பத்தோடு, சமூக கட்டமைப்பை இந் நிலை எழாமல் இருக்குமாறு அமைப்பது அவசியம்.

சமத்துவம் என்ற அடிப்படை கோட்பாட்டில்தான் நவீன சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. நீதியான, சுதந்திரமான, அமைதியான சமூகத்திற்க்கு சமத்துவம் அடிப்படை. சமூகம் சமத்துவத்தை பேண தவறும் நிலையில் ஏகாபத்தியம், வன்முறை, வாழ்நிலை சீர்கேடுகள் எழும். ஆகையால், சமத்துவம் விரும்பத்தக்கது.

சமத்துவ சமூகம் அடையப்படக்கூடியதா? இக் கேள்வி நோக்கி விளக்கம் தேவை. பொருளாதார நோக்கில் இல்லாமல் சம சந்தர்ப்பம் என்ற நோக்கில்தான் இக் கேள்வியை எழுப்ப வேண்டும். மேலை நாடுகளை நோக்குகையில் அடிப்படை வாழ்வின் தேவைகளை அடைவத்ற்க்கும், உழைப்பு-திறன் கொண்டு மேலும் வழங்களை பெறுவதற்க்கு சம சந்தர்ப்பம் இருப்பதாகவே மக்கள் உணருகின்றார்கள். அனைவருக்கும் பொதுவான கல்வி, வைத்திய வசதி, பாதுகாப்பு மூலமும், இட ஒதுக்கீடுகள், தெளிவான சட்டமைப்பு முறைகள், தொழிலாளர்கள் உரிமைகளை பாதுகாக்கும் சட்டமைப்புக்கள் போன்ற வழிமுறைகள் மூலமும் சமத்துத்தை பேண மேலைநாடுகள் முயல்கின்றன. அமெரிக்க கனவு இச் சம சந்தர்ப்பத்தின் அடிப்படையில்தான் அமைந்தது எனலாம்.

எனினும், ஒரு காலத்தில் தன்னை மத்திய வர்க்க நாடா பெருமைப்பட்டு கொண்ட அமெரிக்கா, இன்று அந் நிலையில் இருந்து விலகி ஒரு பிரபுத்துவ நாடாக பரிமானிப்பதும், அந் நாட்டில் எழும் பல சமூக பிரச்சினைகளுக்கும் உள்ள தொடர்பை நாம் கவனித்தல் வேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை மக்களாட்ச்சி, கட்டமைச்சட்டம் போன்றவை சமத்துவத்தை பேணுகின்றன. ஆனால், சாதி அமைப்பு சமத்துவத்துக்கு எதிரான மிவவும் கொடிய கட்டமைப்பாக செயல்படுகின்றது. கல்வி, பொருளாதார உயர்வு, அரசியல், நேரடி போராட்டம் மூலமாக சாதி அமைப்பை வலுவிழ்க்க செய்யும் தறுவாயில்தான் இந்தியா சமத்துவ சமூகமாக பரிமாணிக்கும்.

ஈழதிலும் சாதி சமத்துவத்துக்கு எதிராண காரணிதான். ஆனால், ஈழப்போர் அதன் பல கோர பற்களை வலு இழக்க செய்துள்ளது எனலாம். எனினும், புலம் பெயர்ந்த குடும்பங்களின் பொருளாதார எழிச்சியும், அதற்க்கு வசதி அற்ற குடும்பங்களின் நிலையும் ஒரு புதிய சமத்துவத்வமற்ற சூழ்நிலையை தோற்றுவித்துள்ளன. இந்நிலையில் கூட வடக்கு ஈழத்துக்கும், கிழக்கு ஈழத்துக்கும் உள்ள பிரச்சினைகளை ஆராயலாம்.

இறுதியாக, சமத்துவம் சமூகத்துக்கு அடிபடை, அது வெறும் அரசியல் கூச்சல் அல்ல. சமத்துவதை பேணுவது சமூக நல் வாழ்வுக்கு அவசியம்.

(இது ஒரு மேலோட்டமான பார்வை மட்டுமே. சமத்துவம் ஒரு பல நிலை கருதுகோள். ஆகவே மேற்கூறியவற்றில் பல தவறுகள், தர்க்க பிழைகளை நீங்கள் காணலாம். முடிந்தால் சுட்டவும்.)

0கருத்துக்கள்

Post a Comment

<< Home