ராஜினி-"இனியும் அழுகைகள் வேண்டாம் சகோதரி"
கொலைகள் மறக்கப்படுவத்தில்லை. ராஜினி புரட்டாதி 21, 1989 அன்று கொல்லப்பட்டதற்க்கு இன்று நீதி கேட்கப்படுகின்றது. "No More Tears Sister"-"இனியும் அழுகைகள் வேண்டாம் சகோதரி" என்ற ராஜி்னியின் கொலையை மையமாக வைத்த விபரண படம் கனேடிய தேசிய திரைப்பட சங்கத்தால் வெளியிடப்படுகின்றது (மேலும் தகவல்களுக்கு: www.nfb.ca). இப்படம் இன்றும் (04/26/2005-09:45 PM) வியாழக்கிழமையும் (04/28/2005-07:30 PM) www.hotdocs.ca விபரண திரைபட விழாவில் திரையிடப்படவிருக்கின்றது. அங்கு விபரணபட குழுவும் சமூகம் தர இருக்கின்றது. இதைப்பற்றிய செய்த்தி குறிப்பு -"A human face on Tiger tragedy" Globe and Mailலும் வெளிவந்திருக்கின்றது.
யாழ் பல்கலைகழக ஆசிரியராக இருந்த ராஜினி ஆரம்ப காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தில் இருந்து இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இயங்கினார். பின்னர் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி, புலிகள், இலங்கை அரசு செய்யும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயற்பட்டார், ஆதாரங்களை திரட்டினார். அவர் பங்களிப்பு செய்த "முறிந்த பனைமரம்"-"The Broken Palmyra" 1983 இருந்து 1989 வரை இடம்பற்ற பல மனித உரிமை மீறல்களையும், வரலாற்றையும் பதிவு செய்தது.
ராஜினியை புலிகளே கொன்றார்கள் என பொதுவாக கருதப்படுகின்றது. அவரது மூத்த சகோதரி இக்கருத்தையே வலுப்படுத்துகின்றார். புலிகளும் என்றும் மறுப்பு தெரிவித்தது கிடையாது.
புலிகளில் ஒருவராயிருந்தவர், பின்னர் மனித உரிமைகளுக்காக இயங்கியவரை புலிகள் ஏன் கொன்றார்கள் என்ற கேள்விக்கு இவ் விபரணப்படம் விளக்கம் தரலாம். போராட்ட வழிமுறைகள் தீவர மீள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இத்தருணத்தில் இவ் விபரணப்படம் வன்முறை தவிர்ந்த மாற்றுவழிகளுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கலாம்.
சட்டத்தை மீறி வன்முறை வழியாக செயற்பட்ட புலிகள் சட்டத்தை உருவாக்கும் சக்தியாக பரிமானித்திருக்கும் இக்காலகட்டத்தில், அவர்களின் சட்டம் ஒரு பொதுமகளுக்கு நீதி தருமா?
வரலாற்றில் நாம் செய்த, பிறர் நமக்கு செய்த கொடுமைகளை மன்னித்து தென் ஆபிரிகா போன்று ஒரு புதிய பாதை தெரிவு செய்வோமையனால், ராஜினியின் ஆத்மா தன் கொலைகாரர்களை மன்னிக்கும்...
மாறி எமக்குள் கொலைகளையும், வன்முறையை பிறக்குவிக்கும் வன்முறையையும் மீண்டும் மீண்டும் தெரிவோமானால், ராஜினி் பேன்றோரின் கொலகள் எம் மன சாட்சிகளை உறித்திகொண்டே இருக்கும்.
4கருத்துக்கள்
என் தளத்திலும் இது பற்றி அறிவித்தலைப் போட்டிருக்கின்றேன். இன்று இரவு 9:45 நான் போகின்றேன். தாங்கள் வருகின்றீர்களா. ரிக்கெட் முடிந்து விட்டதாகவும் றஸ் லைனின் சில வேளைகளில் கிடைக்கக் கூடும் என்றும் எனது நண்பன் சொன்னான். நாங்கள் ஏற்கெனவே எடுத்து விட்டோம்.
இரஜினி திரணகம அவர்கள் உண்மையிலேயே மிகச் சிறந்த கல்வியாளரும்,மனிதநேசிப்பாளருமாவார்.இத்தகைய மனிதர்கள் பலர் இருளின்தூதுவர்களால் கொல்லப்பட்டார்கள்.இலங்கை மக்களின் எதிரிகள் யார் யாரென அடையாளங் காட்டிய அற்புதச்சிந்தனையாளர். இவரது சமூகஞ்சார்ந்த செயற்பாடுகளை ஒற்றைவரிகளில் விளக்கிடமுடியாது.தமது இருப்புக்கு ஆபத்தென்றறிந்த இருளின்தூதுவர்கள் இவரையும்போட்டுத்தள்ளித் தமது வர்க்க அரசியலைக் காத்துக்கொண்டார்கள்.ஈழத்தமிழ்பேசும் மக்கள் மத்தியிலுள்ள அநேகமான புத்திஜீவிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.சராசரியாக 80 வீதமான புத்திஜீவிகள் படுகொலை செய்யப்பட்டபின் இப்போது 'ஊரோடு ஒத்தோடும்; கூட்டம'; மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இரஜினியை வெளியுலகுக்குக் காட்டும் படம் நிச்சியம் ஜனநாயகத்துக்கான புதியபோரை ஈழத்தில் புதியவடிவில் தோற்றுவிக்கும்.இதை எந்த ஆயுதங்களாலும் தடுக்கமுடியாது.இரஜினியைக் கொன்றவன் இப்போது செத்து விட்டான்.அவனோடு கூடப்போனவன்(இரஜினியைக் கொல்வதற்கு) இப்போதும் நோர்வேயிலிருக்கிறான்.இரஜினியைக் கொன்றது யாரென்ற கேள்வி இன்னும் பதிலற்ற கேள்வியாக இருப்பினும்,அது யாரென்பது பலருக்கும் தெரியாது.ஆனால் சிலருக்குத் தெரியும்.ஈழவரலாற்றை எழுதும் காலமொன்று கைக்கு வரும்போது நாமிதை மிகத்தெளிவான வடிவில் தொகுப்போம்,அதுவரையும் உயிரோடிருந்தால்.
பிரான்சில் இப்படியொரு அரிய வரலாற்றுத் தொகுப்பை வெளியிட முயன்று தனது உயிரையே இழந்தார் சபாலிங்கம். மார்டின் லூதர் கிங் கூறினார்:'கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும்ம்பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மௌனமாய்ச் சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுறவேண்டும்.'
உண்மைதாம்!
ஈழத்தில் நிலவுகின்ற சமூக எண்ணவோட்டமானது மிகக்கேவலமான சமுதாய உளவிற்றளத்தை உருவாக்கியுள்ளது.இது ஒரு மனிதரைக்கொன்றுவிட்டு,மோசமான காரணங்களைக்காட்டி நியாயப்படுத்தும் கொடுமையான அராஜகத்தைக் கொண்டுள்ள சமூக இயக்கப்போக்காகவேயுள்ளது.இந்தப்போக்கை எந்த நியாயப்படுத்தல்களாலும் சமனஞ் செய்யமுடியாது.இத்தகைய சூழலில்தாம் இரஜினி உயிரைவிட்டாள்,தான் நேசித்த மக்களுக்காக! அந்த மக்களோ அவளை மறந்துபோகும்படி பாரிய குறுந்தேசியவெறிக்குள் முடக்கப்பட இத்தகைய பெரும் தியாகச்சுடர்கள் காற்றடமற்றுக் காணமாற்போன நிலையில், இந்தப் படம் மிக முக்கியமானவொரு சமூகக்கடமையை நிறைவேற்றுமென நாம் எண்ணுகிறோம்.இது மக்கள் சார்ந்த மனித விழுமியங்களை மீளவும் மீட்டுவிடத்துடிக்கும் மனிதநேசிப்பாளர்களால் பெரிதும் மதிக்கப்படும்!
இறுதியாக, பேராசிரியர் என்.சண்முகரெட்னத்தின்(சமுத்திரன்) வார்த்தையிற் சொன்னால்:'ஈழத்தமிழர் போராட்டத்தின் முழுமையான வரலாறு என்றோ எழுதப்படத்தான் போகிறது.அங்கு தமிழ்ப்போராளிகளின் தியாகங்களைப்பற்றிமட்டுமல்ல இயக்கங்களுக்குள்ளே இடம்பெற்ற கொடூரங்கள்-இயக்கங்களுக்கிடையிற் நிகழ்ந்த அழிவுப்போராட்டங்கள் பற்றியும் அத்தியாயங்கள் எழுதப்படும்.இந்த வரலாற்றில் இத்தகைய(இரஜினி,சபாலிங்கம்...)தனிமனிதர்களுக்கும் ஒரு இடம் இருக்கத்தான் போகிறது.'-(தோற்றுத்தான் போவோமா? பக்கம்:10)
விடுதலையின் பெயரால் நசுக்கப்பட்ட ஜனநாயகத்திற்காகவும்,மண்ணின் பெயரால் மறுக்கப்பட்ட மனிதவிழுமியங்களுக்காவும்-இயக்க நலன்களுக்காக மறுக்கப்பட்ட மாற்றுச்சிந்தனைகளுக்காகவும்-மனித சுதந்திரத்துக்காகவும் நாம் கரங்களைக்கோற்போம்.
'மனிதத்தை
துப்பாக்கி முனையில்
நடத்திச் சென்று
புதைகுழி விளிம்பில் வைத்துச் சுட்டுப்
புறங்காலால்
மண்ணைத் தள்ளி மூடிவிட்டு வந்து
தெருவோரச் சுவரில்
குருதியுறைந்து
நியாயம் சொல்கிறார்கள்
நியாயம்!' -கவிஞர் சேரன்.
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
கறுப்பி அவர்களுக்கு
இன்று செல்வதாக இருந்தேன், உங்களின் தகவல் சற்று வருத்தம் அளிக்கின்றது. அடுத்த காட்ச்சிக்கு முயற்ச்சி செய்ய போகின்றேன். நன்றி.
ப.வி.ஸ்ரீரங்கன் அவர்களுக்கு:
உங்களின் நீண்ட விளக்கமான பின்னூட்டத்திற்க்கு நன்றி. "இருளின் தூதுவர்கள்" என்று நீங்கள் புலிகளைதான் குறிப்பிகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். நீங்கள் நேரடியாக சுட்டி காட்டாமல் விட்டது உங்களின் எழுத்து நடையின் நயம் என்றே எடுத்துகொள்கின்றேன்.
எண்பது வீதமான "புத்திஜீவிகள்" கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற உங்களின் ஆதங்க கணிப்பு பிளையானது என்றே கருதுகின்றேன்; அவர்கள் விலகி போய்விட்டார்கள். பலர் மீண்டும் புனரமைப்பு மீள்கட்டுமானம் போன்ற வழிமுறைகளால் உதவ முயல்கின்றார்கள்.
சபாலிங்கத்தை பற்றி இன்றுதான் கேள்விபடுகின்றேன்.
அரசியல் விடயங்களில் இருந்து முடிந்தவரை விலகி இருக்கவே முயல்கின்றேன், ஆயினும் நீங்கள் சுட்டிய மாட்டின் லூதர் போன்றோரின் கருத்துகளையும் தட்டிக்களிக்க முடியவில்லை.
"ஈழத்தில் நிலவுகின்ற சமூக எண்ணவோட்டமானது மிகக்கேவலமான சமுதாய உளவிற்றளத்தை உருவாக்கியுள்ளது.இது ஒரு மனிதரைக்கொன்றுவிட்டு,மோசமான காரணங்களைக்காட்டி நியாயப்படுத்தும் கொடுமையான அராஜகத்தைக் கொண்டுள்ள சமூக இயக்கப்போக்காகவேயுள்ளது."
உங்களின் மேல்சுட்டிய கூற்று உண்மை என்றே உணர்கின்றேன். உயிர்களை உச்சமாக மதிக்கும் கலாச்சாரங்களும் உலகில் உண்டு என்பதை புலம்பெயர் தமிழர் நன்கு உணர்வர்.
மேலும், தமிழர்கள் போராட துடங்கிய காரணங்கள் இன்னும் அப்பிடியே இருக்கின்றன என்பதையும், சிங்களவர் மத்தியில் இன்னும் வன்முறை தொடர்பான பரவலான விளிப்புணர்வு, புரிந்துணர்வுக்கான ஆர்வம் இல்லை என்பதையும் நாம் நினைவில்கொள்வது நல்லது.
நக்கீரன் நான் தவறான தகவலைத் தந்து விட்டேனோ என்று இப்போது சற்றுக் குற்ற உணர்வாக இருக்கின்றது. நேற்றுப் பலர் வந்து ரிக்கெட் எடுத்தார்கள். முதலிலேயே புக் பண்ணிய பலர் வராத காரணத்தால் ரிக்கெட் எடுக்கக் கூடியதாக இருந்தது. வியாழக்கிழமை கட்டாயம் சென்று பாருங்கள். மிகவும் நன்றாக இருந்தது. திரையரங்கு நிறைந்த காட்சி.
ராஜினியைக் கொன்றது விடுதலைப்புலிகள் தான் என்று அவரின் சகோதரி நிர்மாலா மிகத் தெளிவாகக் கூறுகின்றார் சிறீரங்கன். காட்சி முடிவில் நடந்த கேள்வி பதிலுக்காக நிர்மலா வந்திருந்தார். பலரால் பல கேள்விகள் வைக்கப்பட்டன. தெளிவாகப் பதிலளித்தார் நிர்மலா. கனேடியப் பத்திரிகைகள் வந்திருந்தன. இனிமேல் அவர்கள் கட்டுரைகள் எழுதலாம். அமைதியாக எல்லாமே நடந்து நிறைவு பெற்றது. இனிமேல்தான் நான் எனது நண்பர்களுடன் காட்சி பற்றிக் கலந்துரையாட வேண்டும். எனக்கு இது பற்றி ஆழமான அறிவு இல்லை. தரப்பட்ட தகவல்கள் சரியானதா? எங்காவது விட்டுக்கொடுப்பு நிகழ்ந்திருக்கின்றதா என்பதை அந்தக் காலகட்டத்தில் இருந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளல் வேண்டும். தாங்களும் பார்க்கக் கிடைத்தால் பாருங்கள்.
Post a Comment
<< Home