<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Tuesday, February 07, 2017

அறிவியல் தமிழின் வியூகி

தமிழ்நாடு அரசு தமிழ் வழிக் கல்வியை திட்டமிட்டு அழிக்கையிலும், உலகமயமாதல் தமிழ் மொழியை மெல்லக் கொல்ல முயற்சி செய்கையிலும், எதிர்க்க முடியும் என்று காட்டிய முன்னோடிகளில் தலையான ஒருவர் மணவை முஸ்தபா.  தமிழின் பெருமை பேசி, அதன் இலக்கியங்களை மட்டும் பேசி, அதன் அறிவுக் கூர்முனையை மழுங்க விட்ட தமிழ் அறிஞர்கள் மத்தியில் அறிவியல் தமிழுக்காச் செயற்பட்டவர்.  பல களங்களில் அவர் தனியே நின்று போராடினார்.  பல களங்களில் பலரை இனைத்துப் போராடினார்.

அவரின் படைப்புக்கள் தமிழின் பெரும் சொத்துக்கள்.  அவரின் சிந்தனைகள் அடுத்த கட்ட செயற்பாடுகளுக்கான வியூகங்கள்.  அவர் எதற்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தாரோ, அந்தப் பணிகளை முன்னெடுப்பதே நாம் அவருக்குச் செய்யும் பெரும் மரியாதையாக இருக்கும். 

Labels: ,

Thursday, March 12, 2015

சமய நஞ்சேறும் தமிழ்ச் சூழல்


இந்து இளைஞர் சேனாவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் பகுத்தறிவு முப்பாட்டன் முருகனுக்கும் என்ன தொடர்பு.  இதுதான் தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் தோன்றி இருக்கும் புதிய சமயக் கூட்டணி.  தாலி பற்றி விவாதம் பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்ற விளம்பரத்தை மட்டும் பார்த்து விட்டு வன்முறையில் இறங்கி விட்டிருக்கிறார்கள் இந்து இளைஞர் சேனா.  பத்திரிகையாளரைத் தாக்கி உள்ளார்கள்.  புதிய தலைமுறை தொ.கா நிறுவனத்துக்கு குண்டு வைத்துள்ளார்கள். 

இந்த இந்து இளைஞர் சேனையை அண்மையில் த.தே.கூ சார்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர்.  இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி எல்லாம் பா.ஜ.க ஏவல் கட்சிகள், ராதாகிருஷ்ணன் பங்கேற்றதைப் புரிந்து கொள்ளலாம்.  ஆனால் ஈழத்து த.தே.கூ சீனித்தம்பி யோகேஸ்வரன் ஏன் பங்கு பற்றினார்.  தனியே சமயப் பண்பாட்டுப் பரிமாற்றமா.  அல்லது இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் நகர்வுகள்தான் என்ன.

ஈழப் போர் முடிந்த கையோடு, தமிழர்களின் அரசியல் வேக்கைகளை சமயத்துக்குள் முடக்கிவிட சிங்கள் அரசுகள் பெரிதும் முயல்கின்றன.  அங்க பாருங்கோ.  காவடி எடுக்கினம்.  திருவிழா கொண்டாடிடன்.  எல்லாம் நல்லாத்தான் இருக்குது என்று காட்டுவது மிக இலகு.  மேலும், தமிழர்களின் ஒற்றுமையை உடைக்கும் ஓர் ஆயுதமாகவும் சமயம் அமையும் என்று அவர்கள் நன்கு உணர்வார்கள்.  ஈழப் போராட்டத்தில் கிறித்தவத்தைச் தமது சமயமாகக் கொண்ட தமிழர்களின் பங்களிப்புக் கணிசமானது.  ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைபு ஒரு இந்து சமயப் பெரும்பானைக் கட்சி போன்று வடிவமைப்படுவதும் வெளிப்படுவது தற்செயலாக என்று கருத முடியாது.  வட மாகாண முதல்வர் அனைத்துல இந்து மாநாட்டில் முதன்மை விருந்துனராகக் கலந்து கொண்டது இங்கும் கவனிக்கத் தக்கது.

பல இசுலாமியச் சமூகங்களில் பூட்டப்பட்டு இருக்கும் கடிவாளம் போன்ற ஒன்றைத் தமிழ்ச் சூழலில் பூட்ட இளைஞர் சேனா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் முனைகின்றன.  இவர்களுக்கு சற்றும் சளைக்காமல் தமிழ்த் தேசியக் கட்சிகள் மருவி வருகின்றன.  கொள்கை நோக்கிலும், செயற்பாட்டு நோக்கிலும் தம்மை எப்பவோ நீத்துப் போய்விடச் செய்துவிட்ட திராவிடக் கட்சிகள் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கின்றன.  எனவே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான இந்தக் கொடிய சூழல் இருந்து விடுபட, மாணவர்களிடம் இருந்தும், முற்போக்கானவர்களிடம் இருந்தும் ஒரு வலுவான பதில் உரையை எதிர்பாத்து தமிழ்ச் சூழல் நிற்கிறது. 


Labels: ,

Saturday, February 28, 2015

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் எல்லையைத் தீர்மானிக்கும் சாதியக் குண்டர்கள்

மீண்டும் ஒரு தமிழ் எழுத்தாளர் தான் எழுதிய நூலுக்காக வன்முறையாகத் தாக்கப்பட்டு இருக்கிறார்.  சீனா போல், பல இசுலாமிய நாடுகள் போல் இது வழமையாக நடைபெறும் செய்தியாக தமிழ்நாட்டில் நிறைவேறி வருகிறது.  நூலைத் தடை செய்.  எழுத்தாளரை மண்டியிட வை.  கைது செய்.  தண்டி என்று சாதிக் கட்சிகளும், சமய வாதக் கட்சிகளும், தமிழ்ச் தேசியக் கட்சிகளும் ஒற்ற குரலில் கோரிவரும் சூழல் தமிழ்நாட்டின், தமிழ்ச் சமூகத்தின் ஒரு இருண்ட காலத்துக்கான தொடக்கமாகவே பார்க்க வேண்டும்.

இப்படி தடை, கைது, தண்டி என்று அண்மையில் குதித்து இருப்பது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி.  எழுத்தாளர் புலியூர் முருகேசன் தனது பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு என்ற சிறுகதை நூலுக்காக வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். 

விடுதலைப் புலிகள் ஆனாலும் சரி, இடதிசாரிப் புரட்சிவாதிகள் ஆனாலும் சரி கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்று வந்துவிட்டால், அவர்களுக்கு மட்டுமான கருத்து என்று மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள்.  மற்றவர்கள் கருத்துக்களை மறுக்கிறார்கள், வன்முறையால் அடக்க முனைகிறார்கள்.  இது தமிழ்ச் சமூகத்தின் மிகக் கொடுமையான பண்புகளில் ஒன்று.

தான் எந்த ஆதாரமும் இல்லாத கடவுளை நம்பவில்லை, அறிவியலை நம்புகிறேன் என்று எழுதியதற்காக வங்காளதேச எழுத்தாளர் Avijit Roy அண்மையில் கொல்லப்பட்டார்.  இதே மாதிரியான ஒரு சூழலே தமிழ்ச் சூழலில் உருவாகி வருகிறது. 

விரைவில், பெண்களை முழுக்க மூடி முக்காடு அணிந்து செல்லுங்கள்.  தனியே போகாதீர்கள்.  விளையாடாதீர்கள்.  இசை கேக்காதீர்கள்.  பள்ளி செல்லாதீர்கள்.  வேலைக்குப் போகாதீர்கள்.  என்று தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள் கோரினால் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை.  தூ என்று காறித்துப்பும் வண்ணம் உள்ளது தமிழ்ச் சமூகத்தி முன்னேற்றப் பாச்சல். 

Labels: ,

Friday, January 16, 2015

சவூதி அரேபியா - காட்டுமிராண்டிச் சட்டங்கள், பண்பாடு, சமயம்

பெண்கள் வாகனம் ஓட்ட முடியாது.  வாக்குப் போட முடியாது.  முறைப்படுத்தப்பட்ட விளையாட்டுக்களில் கலந்து கொள்ள முடியாது.  பெண் தான் விரும்பியபடி உடை அணிய முடியாது.  ஆணும் பெண்ணும் கலந்து படிக்க முடியாது, பணி புரியமுடியாது.  ஆண் இல்லாமல் வெளியே செல்ல முடியாது.  தனித்து வாழ முடியாது. 

யாருமே சுன்னி இசுலாமைத் தவிர வேறு சமயத்தை வெளிப்படையாகப் பின்பற்ற முடியாது.  சமயத்தை விமர்சிக்க முடியாது.  சட்டப்படி, இசுலாமிய சமயத்தை நம்பாதவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள். 

காதலர் நாளைக் கொண்டாடுவது தடுக்கப்படுகிறது.  இசை, திரைப்படம் என்று வாழ்வின் கலைகள், இன்பங்கள் பொதுவில் இல்லை. 

மக்களாட்சி இல்லை.  மனித உரிமைகள் மதிக்கப்படுவதில்லை.  கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லை.  அரச குடும்பத்தை யாரும் சற்றேனும் விமர்சித்துவிட்டால், முட்டி தட்டி உள்ளே போட்டு விடுவார்கள். 

கல்லால் எறிவது.  சவுக்கால் அடிப்பது.  கையை வெட்டுவது.  சித்திரவதை செய்வது.  துடிக்க துடிக்க தலையைக் கொய்வது.  இதுதான் 21ம் நூற்றாண்டில் சவூதியில் நிறைவேற்றப்படும் தண்டனைகள்.  இவை அனைத்தும் அனைத்துலக மனித உரிமைகளுக்கு எதிரானவை. 

எந்தவித படைப்பாக்கமும் இல்லாமல், இயற்கையாகக் கிடைத்த எண்ணை வளத்தை விற்று செல்லம் ஈட்ட் ஆட்டிப் படைக்கிறார்கள். 

இதுதான் இசுலாமவாத புனித பூமி, சவூதி அரேபியா. 

சவூதி அரேபிய அரசையையும், தீவர சமய வாதிகளையும் வலைத்தளத்தில் விமர்சித்த ரயிவ் படாவிக்கு (Raif Badawi) $200 000 மேற்பட்ட அபராதம், 1000 சவுக்கு அடிகள், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.  இவரைப் போன்று அரசை விமர்சித்த வலீட் அபுல்கர் (Waleed Abulkhair) இக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்னை.  தன்னை உடல் ரீதியாக தாக்கிய தந்தையிடம் இருந்து தப்பி தனியே வாழ முற்பட்ட சமர் படாவியை (Samar Badawi) கைது செய்தனர், வழக்குகளில் அலக்கழித்தனர்.  என்ன இழிவு. 

என்ன செல்வம்தான் இருந்து என்ன பயன், அடிப்படைச் சுதந்திரங்கள் இல்லாவிடின். 

Labels: , ,

Thursday, January 15, 2015

எதுவும் புனிதமானது இல்லை ("nothing-is-sacred")

சமயம், இனம், சாதி, வர்க்கம், தேசியம், மொழி, நாடு, பால், பாலமைவு, உணர்வுகள், நம்பிக்கைகள், சடங்குகள், சட்டங்கள், மண்ணாங்கட்டி, கத்தரிக்காய் என்றும் எதுவுக்கும் கட்டுப்பட்டத்தல்ல கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்.  வன்முறையற்று, திணிப்பு அற்று கருத்த்தைக் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் கட்டற்றது.  இச் சுதந்திரத்தின் ஆணிவேரில்தான் அனைத்து சுதந்திரங்களும் உரிமைகளும் கட்டமைக்கப்படுகின்றன.  கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் சிந்தனை உருவாக்கத்துக்கு, பரிமாற்றத்துக்கு, விமர்சனத்துக்கு, திருத்தலுக்கு அவசியமானது. 

மேற்குநாடுகளில், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது கடுமையான போராட்டங்களுக்குப் பின்பு நிலைநிறுத்தப்பட்ட சுதந்திரம், உரிமை.  பிரான்சில், ஐரோப்பிய மறுமலர்ச்சி, பிரெஞ்சுப் புரட்சி, 60 களின் எதிர்ப்புப் புரட்சியில் வளர்த்தெடுக்கப்பட்டதுதான் வளையாத பிரெஞ்சு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்.  உங்கள் கருத்தை மறுதலிக்கிறேன், ஆனால் அதைக் கூறுவதற்கான உங்கள் உரிமையை உயிர் குடுத்தேனும் பாதுகாப்பேன் என்று உரைத்த வோல்ட்டயர் (Voltaire) பிறந்த மண்.  அங்கதம், சித்திரம், வரைகலை அவர்களின் பண்பாட்டில் வேரோடியது.  அங்கே சார்லி ஃஎப்டோ (charlie hebdo) என்ற அங்கத சித்திர பத்திரிகை வெளியிட்ட ஒரு கேலிச் சித்திரத்தை சகிக்க முடியாமல் இசுலாமவாதிகள் அந்தப் பத்திரிகையின் 12 பேரை சுட்டுக் கொன்றுள்ளார்கள். 

பிரான்சியர்கள் போலன்றி, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பாக விழிப்புணர்வோ அக்கறையோ அற்ற சமூகம் தமிழ்ச் சமூகம்.  இந்தத் தமிழ்ச் சமூகம் உருவாக்கிய ஒரு தலை சிறந்த அறிவாளர், எழுத்தாளர் பெருமாள் முருகன்.  அவரின் ஒரு கூரிய படைப்பு மாதொருபாகன் என்ற புதினம்.  இந்தப் புதினத்தை தடைசெய்யக் கோரி இந்துதத்துவாதிகளும் சாதியவாதிகளும் துன்புறுத்தியதால் தான் எழுதுவதையே நிறுத்திக் கொள்வதாகக் கூறி உள்ளார் பெருமாள் முருகன். 

சார்லி ஃஎப்டோ தாக்கப்பட்ட அனுதாப அலையைப் பயன்படுத்தி ஐரோப்பிய இனவாதிகள் இசுலாமியர்களுக்கு எதிரான ஒரு வன்முறையை காட்ட விழைகின்றார்கள்.  இசுலாமவாதிகளும் இனவாதிகளும் இது ஓர் மேற்கு கிழக்குப் போர் என்று சித்தரிக்கப் பாக்கிறார்கள்.  ஆனால் இது காட்டுமிராண்டிகளுக்கும் பகுத்தறிவுவாதிகளுக்குமான போர்.  மன நோயாளிகளுக்கும், பரினாமித்த, வளர்ந்த, முதிர்ச்சி பெற்ற மனிதர்களுக்குமான போர். 

சார்லி ஃஎப்டோ குரல் கொடுக்க பிரான்சு வரலாறு காணாத கூட்டத்தைக் கண்டது.  ஆனால் பெருமாள் முருகன் போன்ற பல எழுத்தாளர்களினதும் பேச்சாளர்களினதும் சாதாரனப் பொது மக்களதும் பேச்சுத் சுதந்திரத்தைப் பாதுகாக்க பத்துப் பேர் கூடக் கூடவில்லை. 

நீத்துப் போன, முதுகெலுப்பு அற்ற திராவிடக் கட்சிகள் மூச்சைக் கூட விடவில்லை.  கபடதாரி (hypocrite) தமிழ்த் தேசியவாதிகள் பேசவில்லை.  இடதுசாரிகள் கூட சமயம் என்று வந்தவுடம் தூர ஓடிப் போய் விடுகிறார்கள். 

எவ்வளவுதான் ஆங்கிலம் ஆக்கிரமிப்புச் செலுத்தினாலும், இலக்கியத்தில் அதிக நோபல் பரிசுகள் பிரெஞ்சு மொழி எழுத்தாளர்களுக்குத்தான் போய் உள்ளன.  கருத்துக்களை சீண்டி, நோண்டிய அவர்களின் மரபினால்தான் இருக்கும்.  அத்தகைய மரபை உருவாக்காமல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பேணாமல் தமிழ்ச் சூழல் உண்மையான எந்த வளர்ச்சியையும் பெற முடியாது.

Labels: , ,

Wednesday, March 12, 2014

எளிய மக்கள் கட்சியின் கொள்கைப் புரட்சி

திராவிடக் கட்சிகளிடம் கொள்கை வறட்சி, தளர்ச்சி, விற்பனை முற்று முழுதாகிவிட்டது.  இவர்களிடம் சமூக நீதி, பகுத்தறிவு, தமிழ் அடையாளம், பெண்கள் உரிமைகள், தன்னாட்சி போன்ற கொள்கைகள் நீத்துவிட்டன.  அறம் தவறி, தலைவர் தொழுகையிலும், குடும்ப அரசியலும், பச்சை ஊழலிலும் திராவிடக் கட்சிகள் நாறுகின்றன. 

திராவிடக் கட்சிகளும் சரி, இடதுசாரி, தமிழ்த் தேசிய அமைப்புகளானாலும் சரி குறுகிய சில விடயங்கள் தவிர பல முக்கிய களங்களைப் பற்றி எதுவும் உரையாடுவதில்லை.  அப்படிச் சிந்திக்கிறார்களா என்று கூடச் சந்தேகம்.  தமிழ்ச் சூழலில் இருக்கும் இடதுசாரிகள் தமது இயக்கத்தில் இருக்கும் பிரிவுகளைக் கூட அறிந்திரார்.  அரச முதன்மை மும்மூர்த்திகள் (மார்க்சு, லெனன்/இசுராலின், மாவோ), வர்க்கப் போராட்டம், புரட்சி, தொழிலாளர் சர்வதிகாரம் ஆகியனவே இவர்களின் தாரக மந்திரம்.  தமிழ்த் தேசியவாத அமைப்புகள் பொருளியல், சூழலியல், அரசின் தன்மை, பன்மைத்துவம் என்று எதிவும் பற்றி விரிவாகப் பேசுவதில்லை.  உசுப்பும் குறும் தேசியம் தவிர்த்து மேலெழுந்து சிந்திக்க முடியதாவர்களாகவே உள்ளன.

இவர்களுக்கு எல்லாம் மாற்றாய் ஒரு சிறு மாற்றம் அண்மையில் உருவாகி உள்ளது.  டில்லியில் தொடங்கிய அந்த மாற்றம் இப்பொழுது தமிழ்நாட்டுக்கும் வந்துள்ளது.  அதுதான் ஆம் ஆத்மி கட்சி.  தமிழ்நாட்டில் அணு உலைக்கு எதிராக மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்தை முன்னெடுத்த சு. ப. உதயகுமார் தலைமையில் எளிய மக்கள் கட்சியாக உருவாகி உள்ளது. 

ஆனால் அண்மையில் சுருக்கமாக ஒரு கொள்கை அறிக்கையை அவர்கள் "எளிய மக்கள் கட்சி (எ.ம.க.)...எமக்கான கொள்கை" என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார்கள்.  இது ஒரு விரிவான கொள்கை அறிக்கை இல்லை.  எனினும், இவர்கள் இதில் முன்வைக்கும் எண்ணங்கள், அண்மையில் தமிழ் அரசியலில் அலசப்படும் விடயங்களை விட கனதியானது. 

தமிழ்நிலம் தமிழ்நிலம் என்று கத்துவோர்கள் அதன் சூழலைப் பற்றி அவ்வளவு யோசிப்பதில்லை.  சூழலியல் அறிவு...சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவர்களின் ஒரு முக்கிய கொள்கையாக அமைகிறது.  அரசின் தீமைகளைப் பற்றி விரிவாக  அறிவோம்.  ஆனால் அதற்கான தீர்வுகளைப் பற்றி சிந்திப்பதில்லை.  அதிகாரப் பரவல்...பங்கேற்பு மக்களாட்சி, மையப்படுத்தப்படாமை, கூட்டுறவு அமைப்புகள் போன்றவையை எ.ம.க முன்வைக்கிறது.  மாற்றத்துக்கான வழிமுறையாக அறவழியை, மென்முறையை முன்னிறுத்துகிறது.  சமூக நீதி, சம வாய்ப்பு, பெண்கள் விடுதலை, பன்மைத்துவம் போன்ற சமூக அசைவுக்கான, அமைதிக்கான, வளர்ச்சிக்கான வழிகளைக் கூறுகிறது. 

அயல்நாட்டு முதலீடு, பெரும் நிறுவனங்கள், உலக வங்கிக் கடன் என்று முன்னெடுக்கப்படும் பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றாக, இயற்கை வேளாண்மை, மாற்று எரிசக்தி கொள்கை, சிறு நடுத்தரத் தொழில்கள், மாற்றுத் தொழில்நுட்பங்கள், பேண்தகு வளர்ச்சி என்று இன்னும் அதிகம் கவனம் பெறாத பொருளாதர முறைகளை எ.ம.க யின் கொள்கை எடுத்துரைக்கிறது. 

"பசுமை மார்க்சியம், காந்தியம், தமிழ்த் தேசியம்" என்று தலைப்பு இட்டதன் மூலம், இதுவரை முரண்களைக் கொண்ட கொள்கைகளாகப் பார்க்கப்பட்ட கொள்கைகளை இணைத்துப் பார்க்கிறார்கள். 

எ.ம.க முன்வைக்கும் எண்ணங்கள், தீர்வுகள் பற்றி எல்லோரும் உடன்படப்போவதில்லை..  "பசுமை மார்க்சியம்" என்றால்தான் என்னை.  ஒரு சலசலப்பு சொல்லாடலா.  தமது முற்போக்கு இடதுசாரி சார்புநிலையை எடுத்துரைப்பதற்கான குறியீடா.  அல்லது மார்சியத்தின் கடந்த நூற்றாண்டு போதாமைகளை, அதன் படுதோல்விகளை, சர்வதிகாரத் தன்மைகளை, அரச முதன்மை வாதத்தை புரிந்து, அதற்கான விடைகளைத் தேடி முன்மொழியப்படும் ஒரு கொள்கையா.  தெரியவில்லை.

கல்வி, நலம், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் அவர்களின் நிலைப்பாடுதான் என்ன.  இவற்றை அரசு வழங்க வேண்டுமா?  எப்படி வழங்குவது, விரிவுபடுத்துவது.  இது போன்ற பல விடயங்களை இந்தச் சுருக்கமான கொள்கை அறிவித்தல் தொடவில்லை.

ஒரு கல்வியாளர் சித்தித்து, யாதார்த்தை, தடைகளை, இடர்களை, பக்க விளைவுகளைச் சிந்திக்காமல், கற்பனையில் கக்கிய கொள்கைகள் போல் இவை இருந்தாலும், இவை பற்றி ஒரு குறைந்த பட்ச உரையாடல் நடைபெற்றால் கூட அது பல நல்ல விளைவுகளைத் தரும்.

மேற்கோளுக்கா, அவர்களின் கொள்கை அறிவித்தல் கீழே:

எளிய மக்கள் கட்சி (எ.ம.க.)...எமக்கான கொள்கை:
பசுமை மார்க்சியம், காந்தியம், தமிழ்த் தேசியம்

சூழலியல் அறிவு...சுற்றுச்சூழல் பாதுகாப்பு
அதிகாரப் பரவல்...பங்கேற்பு சனநாயகம்
சமூக நீதி...சம வாய்ப்பு
அறவழி...மென்முறை
மையப்படுத்தப்படாமை
பெண் விடுதலை
வேற்றுமை போற்றல்
தனிமனித, ஒட்டுமொத்த பொறுப்புணர்வு
வருங்காலச் சிந்தனை

கூட்டுறவு போற்றும் சமூகம் சார்ந்த மாற்றுப் பொருளியல்
இயற்கையை அழிக்காத வளங்குன்றா வளர்ச்சி முறை
மாசு படுத்தாத தொழில்-வேளாண் கொள்கை
சிறு நடுத்தரத் தொழில்கள்
இயற்கை வேளாண்மை
மாற்று எரிசக்தி கொள்கை
மாற்று தொழில்நுட்பங்கள்
நீடித்த நிலைத்த வளர்ச்சி

தேசிய இனச் சமூக மாற்றுக் கொள்கைகள்
மரபு சார்ந்த மக்கள் அமைப்புக்கள்
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி
உலகமயப் பொருளியலுக்கு எதிராக தேசியங்களின் பொருளியல்
உலகமயம் திணிக்கும் ஒற்றைத்தன்மைக்கு எதிராக தேசியங்களின் பன்மை
தமிழர் அறம் சார்ந்த அரசியல், வாழ்வியல்:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
யாதும் ஊரே, யாவரும் கேளிர்

பயன்பட்டக் கட்டுரையும், நூலும்:
[1] கி. வெங்கட்ராமன், “பசுமை மார்க்சியம், காந்தியம், தமிழ்த் தேசியம்,” தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், பொங்கல் மலர் 2014. பக். 12-23.
[2] S. P. Udayakumar, _Green Politics in India_. Nagercoil, India: Transcend South Asia, 2008. pp. 15-17.


https://www.facebook.com/eliyamakkalkatchi

Labels: , , , ,

Tuesday, December 31, 2013

நேரடி மக்களாட்சியும் ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியும்

ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வந்தும், தாம் மக்களிடம் கருத்துக் கோர வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிய போது மக்களின் தெரிவைப் புறக்கணிக்கிறார்கள், தேவையற்ற நாடகம் போன்று பல்வேறு வழிகளில் விமர்சிக்கப்பட்டது.  அவர்கள் மக்கள் கருத்தை அறிய முயன்ற முறையில் போதாமைகள் இருக்கலாம், ஆனால் அவர்களின் செயற்பாடு தவறானதா?  அக் கட்சியின் ஒரு முக்கிய கொள்கையான அதிகாரப் பரவலாக்கல் (Decentralization), நேரடி மக்களாட்சி (Direct Democracy) வரவேற்கப்பட வேண்டிய ஒன்றா?

சார்பாண்மை மக்களாட்சியின் (Representative Democracy) படிவளர்ச்சியாகக் கருதப்படுவையே நேரடி மக்களாட்சி (Direct Democracy), பங்களிப்பு மக்களாட்சி (Participatory Democracy) ஆகியவை.  நேரடி மக்களாட்சி என்பது மக்களின் சார்ப்பாளர்கள் அல்லது பிரதிநிதிகள் அல்லாமல் மக்களே நேராக முக்கிய முடிவுகளை எடுத்தலில் பங்கெடுப்பது ஆகும்.  பங்களிப்பு மக்களாட்சி என்பது அரசின் செயற்பாடுகளில் மக்கள் பங்களிக்க கூடிய வாய்ப்புக்களை வழங்கக்கூடிய கட்டமைக்களைக் கொண்டிருப்பது ஆகும்.  பல்வேறு விடயங்களில் பொது வாக்கெடுப்பு (Referendum) நேரடி/பங்களிப்பு மக்களாட்சியின் ஒரு முதன்மைக் கருவி (mechanism) ஆகும்.  அரசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை திருப்பி அழைப்பதற்கான உரிமையும் (right to recall) வாய்ப்பும் இதன் ஒரு நீட்சி ஆகும். 

ஆம் ஆத்மி கட்சி அதிகாரப் பரவலாக்கலை, நேரடி மக்களாட்சியை பலமான உள்ளூர் அலகுகள் கொண்டு நிறைவேற்றவுள்ளதாகக் கூறி உள்ளது.  தேர்வு செய்யப்பட்ட ஒருவரை திருப்பி அழைப்பதற்கான சட்டத்தையும் இயற்றவுள்ளதாகக் கூறி உள்ளது.  மேலும் கட்சி சார்பற்ற ஊழல் குறைகேள் அதிகாரிகளை (ombudsmen) நியமிக்கவும் உறுதி தந்துள்ளது.  இந்த வகையில் இந்தியாவில் நேரடி/பங்களிப்பு மக்களாட்சியை முன்னெடுக்கும் ஒரு முன்னோடிக் கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உள்ளது.

நேரடி மக்களாட்சி அல்லது பங்களிப்பு மக்களாட்சி என்பது பெரும்பான்மையினரின் சர்வதிகாரமாக மாறும் என்றும், நடைமுறையில் நிறைவேற்ற முடியாதது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  இதில் முதலாவது குற்றச்சாட்டு முக்கியமானது, மிகப் பாதகமானது.  நேரடி மக்களாட்சி மட்டும் இல்லை, பொதுவாக எந்தவொரு மக்களாட்சியிலுமே பெரும்பான்மையினரின் சர்வதிகாரம் உருவாதற்கு நிறைய வாய்புக்கள் உண்டு.  இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இலங்கை ஆகும்.  இதைத் தடுக்கும் வண்ணம் அதிகாரப் பிரிவினையும், அதிகாரப் பரவலாக்கமும் முக்கியம் ஆகும்.  கனடாவில் கியூபெக் போல் உள்ளூர் மக்கள் கட்டுப்படுத்தும் மக்களாட்சி இலங்கையில் தோன்றி இருந்தால் ஈழப்போர் வெடித்து இருக்காமல் இருந்திருக்கலாம்.  இலங்கைப் பிரச்சினை பெரும்பான்மை சர்வதிகாரம் என்பதிலும் பார்க்க அதிகாரக் குவியலினால் எழுந்தது.  இன்றும் கூட தமிழ் மக்களின் விருப்பங்கள் தொடர்பாகவோ, அல்லது காசுமீர் மக்களின் விருப்பங்கள் தொடர்பாகவோ ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தும் முதிர்ச்சி இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ இல்லை.  ஆனால் டில்லி தேர்தல் முடிவுகள் அந்த முதிர்ச்சி நோக்கி இந்தியா ஒரு படி பயணித்து உள்ளது என்றுதான் கூறவேண்டும். 

மக்களுக்காக நாம் முடிவெடுப்போம் என்று இடதிலும் வலதிலும் இருந்து கோருவோர் நேரடி மக்களாட்சியை நடைமுறைச் சாத்தியம் இல்லை என்று கோருகின்றனர்.  ஆனால்  இணையம், நகர்பேசி உட்பட்ட புதிய தகவல்-தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் பரந்த நேரடிப் பங்களிப்பை நகரப்புறங்களில் கூட சாத்தியப் படுத்தி உள்ளன.  உள்ளூர் உணவு (Local Food), உள்ளூர் பொருளாதாரம் (Local Economy), Hyperlocal, குமுகம் கட்டுதல் (community building) என்ற இன்றைய போக்குக்களுடன் நேரடி மக்களாட்சி ஒரு பொருத்தமான முன்னேற்றமே.

ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியால் அதிகார மையத்தினரும், பெரும் வணிக நிறுவனங்களும் பெரிதும் பயப்படுகின்றன.  அதிகாரப் பரவலாக்கலால், நேரடி மக்களாட்சியால் பாதிக்கப்படப்போவர்கள் இவர்களே.  இந்திய வலதுசாரி வலைத்தளமான ஃபெசுபோசுடில் (Firstpost) நேரடி மக்களாட்சியையும் ஆம் ஆத்மி கட்சியையும் விமர்சித்து  Perils of direct democracy: AAP may be on the wrong track என்ற ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.  மக்களுக்கு தமக்கு எது பொதுநலம் என்று தெரியும் என்பது உண்மை இல்லை ("It is simply not true that people know best or that they act in the greater common good.") என்று கூறி பழங்குடி மக்கள் அவர்களின் நிலங்களில் இருந்து வேதி எடுத்தலை எதிர்த்தது, அன்னிய முதலீட்டை எதிர்த்தது போன்றவற்றை சுட்டிக் காட்சி மக்களுக்கு அவர்களுக்கு எது பொது நலம் என்று தெரியாது என்று வாதிட்டிருக்கின்றனர்.  இந்தக் குற்றச்சாட்டு நேரடி மக்களாட்சிக்கு மட்டும் இல்லை மக்களாட்சிக்கும் பொருந்தும்.  அவர்கள் சுட்டிய எடுத்துக்காட்டுக்கள் பெரும்பாலும் பெரும் வணிக நிறுவனங்களின் நலன்களைப் பாதிக்கும் என்பதே அவர்களின் கவலையாக இருக்கின்றது, குறிப்பாக வோல்மார்ட்.

உண்மையான சிக்கல் உள்ளூரில் இருக்கும் சாதிய, சமய, செல்வந்த அதிகாரக் கட்டமைப்புக்களிடம் சிக்காமல் நேரடி மக்களாட்சி அனைத்து மக்களின் பங்களைப்பை பெற்று அமைய வேண்டும் என்பதே.  சுருக்கமாக, ஆம் ஆத்மி கட்சி கொள்கையும் அரசமைப்பும் ஒரு நல்ல முன்னேற்றமாகவே அமைந்துள்ளது.  தமிழ்நாட்டில் பகுத்தறிவு, பெண்கள் உரிமைகள், சமத்துவம், சமூகவுடைமை, தமிழ் போன்ற கொள்கைகளுடன் திமுக முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது போல.  காலம்தான் சொல்லும் திமுக போல் அரசியல் சாக்கடையில் விலைபோய் துலைந்து விடுவார்களா அல்லது துடிப்புடன் அவர்களின் கொள்கைகளை நிலைநாட்டச் செயற்படுவார்களா என்று. 

Labels: , , , ,

Monday, December 30, 2013

தான்தோன்றி அறிவர், எமது அறிவியலாளர் கோ. நம்மாழ்வார்

தமிழ்ச் சூழலில் அறிவியலாளர்கள் பலர் தாம் கற்ற அறிவை எம்மோடு, எமது சூழலின் தேவைகளுக்கு, சிக்கல்களுக்கு பகிர்ந்து கொள்வது அரிது.  எம்மோடு இணைந்து, எமது மூலங்களைப் பயன்படுத்தி, தொலைநோக்காகச் சிந்தித்து செயலாற்றிய சிறந்த எடுத்துக்காட்டுக்களில் ஒருவர் கோ. நம்மாழ்வார்.  வெறுமே பேசிக் கொண்டு மட்டும் இருக்காமல், எதிர்த்துக் கொண்டு மட்டும் இருக்காமல் முன்மாதிரிகளை, மாற்றுக்களை உருவாக்கினார்.  தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மையின் தந்தை என்று இவரைக் கூறலாம்.  தமிழ்நாட்டுச் சுற்றுச்சூழல் இயக்கத்தின் ஒரு மூல அமைப்பாளாராக விளங்கினார்.  பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய அரசு, கல்வித்துறை ஆதரித்த பசுமைப் புரட்சியின் குறைபாடுகளை துணிவாக, பல காலம் தனித்து நின்று எதிர்த்தார், அதற்கான மாற்றுக்களை உருவாக்கினார்.

அவர் அறிவியலை கண்மூடித்தனமாக இறக்குமதி செய்யவில்லை.  சுயமாக அறிவை ஆய, உருவாக்க, பயன்படுத்தக் கற்றுக் கொடுத்தார்.  காப்புரிமத்துக்கு விதைகளைப் பறிகொடுக்காமல் இருக்க, நஞ்சுகலந்த வேதிகளுக்கு எமது உணவையும் சூழலையும் பறிகொடுக்காமல் இருக்க, பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை போகாமல் இருக்க அவர் எமக்கு கற்றுக் கொடுத்தார்.  அவரது அறிவை ஆர்வம் உள்ள அனைவருக்கும் கட்டற்று வழங்கினார்.  பெரும் ஆய்வு நிறுவனங்களிலோ, அல்லது பல்கலைக்கழங்களிலோ மறைந்து விடாமல், உழவர்களோடு களம் கண்டார்.  அண்டோனியோ கிராம்சி கூறும் உள்ளார்ந்த அறிவராக (organic intellectual) விளங்கினார்.  இவரின் உந்தலால் ச. கரிகாலன், இரா. ஜெயராமன் என்று பல இயற்கை உழவர்கள், சுற்றுச்சூழல் செயற்ப்பாட்டாளர்கள் உருவாகி உள்ளார்கள்..

கோ. நம்மாழ்வார் இயற்கை எய்தியது கண்டு மனம் கனக்கிறது.  அவர் வழி நின்று அவரது பணியை தொடர்வதே நாம் அவருக்கும் செலுத்தும் அஞ்சலியாக அமையும். 

Labels: , , , ,

Sunday, December 29, 2013

சங்கீதா ரிச்சார்ட்- கனடாவின் வீட்டுப் பணியாளர்கள் - தொழிலாளர்களுக்கான திறந்த சந்தை

ஒப்பந்தப் படியோ, அல்லது அமெரிக்க அடிப்படை ஊதியச் சட்டப் படியோ ஊதியம் வழங்கவில்லை, வீட்டுப்பணியாளரை துன்புறுத்தினார் போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக இந்திய இணைத் தூதுவர் தேவயானி கோபர்கடே ஐக்கிய அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக இந்திய அரசியல்வாதிகள் கொதிப்படைந்து உச்சகட்ட அழுத்தத்தை அமெரிக்கா மீது செலுத்தி வருகிறார்கள்.  பிற எந்த நிகழ்வுகளின் போதும் குடுக்காத அழுத்தத்தை இந்தியா இப்பொழுது செய்து வருகிறது.  என்ன உண்மை என்று தெளிவாக அறிய முன்னரே இந்தியா தனது மற்றைய குடிமகளை பலிகொடுத்து தூதரை காப்பாற்றும் முழுமையான முயற்சியில் ஈடுபட்டு இருப்பது, இந்தியாவின் இன்றைய ஏற்றதாழ்வு சூழ்நிலையை நன்கு சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.  இன்றைய இந்தியா தனது வெளிக் காட்சியைப் பற்றி, தனது எசமானிகளைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறது, அதன் தொழிலாளர்களைப் பற்றி அல்ல.

கனடாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் மூன்றாம் உலக ஊழியர்கள் துன்புறுத்தப்படுவது புதிதல்ல, அது வழமையாக நடைபெறும் ஒன்று.  பார்த்தும் பார்க்கதது போல இங்கே உள்ள அரசுகள் நடந்து கொள்கின்றன.  கனடாவில் பல்லாயிரக்கணக்கான வீட்டுத் தொழிலாளர்கள் குடியுரிமை ஆசையைக் காட்டி பிலிப்னைசு, சீனா போன்ற நாடுகளில் இருந்து மேட்டுக்குடி வீடுகளுக்கு வேலைக்கு ஒப்பந்தப்படி அழைக்கப்படுகிறார்கள்.  பிள்ளைப் பார்ப்பது, முதியோரைப் பராமரிப்பது, வீட்டுப் பராமரிப்பு போன்ற வேலைகளை சங்கீதா போன்று மேட்டுக்குடி மக்கள் வீடுகளில் தங்கி இருந்து செய்கிறார்கள்.  கனடாவில் இத் திட்டத்துக்குப் பெயர் Live-In Caregiver Program ஆகும்.  இவர்கள் வீட்டில் தங்கி வேலை செய்ய வேண்டும், வேறு வேலைகள் செய்ய முடியாது.  இவர்களுக்கு இருக்கும் ஒரே விடுதலைப் பாதை, பல ஆண்டுகளுக்குப் பின்பு ஒப்பந்தம் முடிவடைந்து அவர்கள் குடியுரிமை பெறுவது ஆகும்.  அப்படி அவர்கள் தமது பணியை முடித்தாலும், குடியுரிமை தருவதில் கனடிய அரசு பல இழுத்தடிப்புக்களைச் செய்யும். 

திறந்த சந்தை, திறந்த சந்தை என்று உரக்கக் கக்கும் மேற்குலக நாடுகள், தொழிலாளர்களுக்கான திறந்த சந்தையை ஏன் உருவாக்க மறுக்கின்றன.  ஒரு உண்மையான திறந்த சந்தையில் எங்கே இருந்தும் யாரும் ஒரு வேலையை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.  ஆனால் குடிவரவு, தொழிலாளர்களின் சுதந்திரமான நகர்வு என்று வரும்போது வலதுசாரிகளின் திறந்த சந்தைக் கொள்கை புத்துக்குள் போய் ஒளித்துக் கொள்கிறது.  ஆப்பிரிக்காவின், மூறாம் உலகின் உண்மையான வளர்ச்சியில் மேற்கு உலகுக்கு அக்கறை இருக்கும் ஆனால், அங்குள்ள அடிப்படைத் தொழிலாளர்களை சுதந்திரமாக மேற்குலகில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.  இவ்வாறு செய்வதன் மூலம் இன்றைய கொத்தடிமை முறைமையைத் தகர்க்கலாம். 

Labels: , , , ,

Sunday, September 01, 2013

தமிழ் தாய் சிலைச் சூழ்ச்சி

தமிழுக்கு செத்தமொழி மாநாடு நடத்தியது திமுக.  அதற்கு தாம் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்ட தமிழ் தாய் சிலை வைக்கிறார்களாம் அதிமுக.  வேடிக்கை காட்டி வேட்டியை உருவிய கதைகளே இவை. 

தமிழின் அனைத்து ஆற்றல்களையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திராவிடம் தமிழை அழிவு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.  ஆட்சி மொழியாம் தமிழ், ஆனால் நிர்வாகமோ ஆங்கிலத்தில்.  தமிழ்நாட்டில் விற்கப்படும் மருந்துகள் பற்றிய விபரங்கள் கூட தமிழில் இல்லை.  அரச திணைக்களங்களின் வலைத்தளங்கள் கூட தமிழில் இல்லை.

கல்வி மொழியாகத் தமிழை ஆக்குவோம் என்று உரத்துக் கத்தியவர்கள்.  பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரை ஆங்கில வழிக் கல்வி வளர உதவி உள்ளார்கள்.  தற்கால மருத்துவக் கல்வியை தமிழில் 1850 களிலேயே யாழ்ப்பாணத்தில் வழங்கினார்கள்.  தமிழ்நாடு அரசு 1950 களில் மருத்துவக் கல்வியை தமிழில் வழங்குவதற்கு என ஒரு குழு அமைத்தது.  ஆனால் 2012 அதிமுக அரசு பள்ளிக் கல்வியைக் கூட ஆங்கில வழிக்கு மாற்ற பரிசோதனை செய்கிறது. 

இவர்களின் ஆட்சியில்தான் தமிழ் பேச்சு மொழியாகக் கூட அருகி வருகிறது.  எந்த உருப்படியான ஆய்வுகள், செயற்திட்டங்களையும் செய்யவில்லை. 1800 களில் பல தமிழ் அறிஞர்கள் தனியாக நின்று 2000 ஆண்டுகளாக வெளிவந்த அரிய தமிழ் நூல்களை அச்சேற்றினர். ஆனால் திராவிட அரசுகளால் அந்த அந்த ஆண்டு வெளிவந்த நூல்களைக் கூட பாதுகாக்க முடியவில்லை, அவற்றைப் பற்றிய தகவல்களை திரட்ட முடியவில்லை, பகிர முடியவில்லை.  ஈழத்தில் தமிழ் எரிந்த போது, படுகொலை செய்யப்பட்ட போது நாடக பதவி துறப்புகளும் (யாரும் பதவி துறக்கவில்லை.) கபட உண்ணாநோம்புகளும் (காலையில் இருந்து மத்தியானம் வரை) தவிர வேறு என்ன செய்தார்கள்?

தமிழுக்கு நன்மை தரக்கூடிய அனைத்து களங்களில் இருந்தும் அதனை மெல்ல மெல்ல அகற்றிவிட்டு. சிலை எடுப்பதன் பொருள் என்ன. இது ஒருவித ஏமாற்று வேலைதானே, சூழ்ச்சிதானே.  உணவில்லாமல், கல்வியில்லாமல், நலமில்லாமல் இருக்கும் ஒருவருக்கு தொலைக்காட்சி கொடுத்த கதைத்தானே. 

யாருக்கு சிலை வைப்பார்கள்.  கடவுள்களுக்கு, அல்லது செத்த பெரியவர்களுக்கு.  தமிழ் தாய் என்ற உருவகப்படுத்தல் இலக்கிய நயகமாக இருக்கலாம்.  ஆனால் அப்படி என்ற ஒன்று இல்லை.  கடவுள் சிலைகளை எல்லாம் எரித்த திராவிட இயக்கத்தினர் தமிழை கடவுளாக உருவகப்படுத்துவது ஏன்.  மக்களை ஏமாற்றும் சமயப் புரளிகளோடு இவர்களும் சேர்ந்துவிட்டார்கள் என்பதால் தான். அல்லது இவர்கள் தமிழ் செத்துவிட்டது.  அதற்கு சிலை வைக்கலாம் என்று எண்ணி இருப்பார்கள். 

தமிழுக்கு சிலை வேண்டாம்.  அதை வழிபட வேண்டாம்.  தமிழை கல்வி மொழியாக்கி அறிவைத் தாருங்கள்.  அதுபோதும் தமிழ் வாழ. 

 

Labels: , ,