<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, December 31, 2004

வெறுமை

"போனதெல்லாம் கனவினைப்போற்
புதைந்தழிந்தே போனதனால்
நானோர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ" - பாரதி


அழகிய இயற்கையே
உன்னில் தங்கி, உன்னில் ஒன்றாகியவர் நாம்.
ஏன் இப்படி சித்ரவதை செய்கிறாய்?

நான் ஒரு மடையன்.
உனக்கு உணர்வு உள்ளது போல்
உனக்கு செவிகள் உள்ளது போல்
உன்னிடம் கேட்கின்றேன்.

உனக்குள் அழகை வைத்த நாம்
உனக்குள் அறிவை பார்த்த நாம்
உனக்குள் அழிவை பார்க்க தவறிவிட்டோம்.

கடலே, புயலே, பூமியே
எமக்குள் வாழ்ந்த எம்மை அலறவைத்தாய்
உனக்கும் இது ஒரு நாள் நிச்சியம் என்று உணரவைத்தாய்
ஆயினும்...
வார்த்தையால் ஓர் அஞ்சலி
சுயநலத்தில் சிறு உதவி
சிந்தனையில் சில கேள்விகள்
என்றுவிட்டு நான் எனக்குள் திரும்ப நினைக்கையிலே

ஐயோ
வெறுமை
மனக்காட்டில் வெறுமை

மனிதரில் வெல்பவரை கண்டு பொறாமை கொண்டதுண்டு,
மனிதரில் செத்தவரில் என்னைக் கண்டு வெறுமை.

வெறுமைக்குள் ஒரு பயம்.
நான் அல்லவா அவர்கள்.
அலையில் அமிழ்ந்தது நான்
குழியில் நான்
உற்றாரை இழந்து தவிப்பது நான்
நான் அல்லவா அவர்கள்.

வெறுமைக்குள் ஒரு பலம்.
மாய்ந்த மனித குழுவின் பிரதிகள் நாங்கள்
அவர்கள் ஆசைகள், திட்டங்கள், செயல்கள் எம்முடையவை
உயிர்க்க மரிக்கும் மனிதர் நாம்

வெறுமைக்குள் இருந்து மறுவாழ்வை அமைத்துடுவோம் நாம்.

0கருத்துக்கள்

Post a Comment

<< Home