"இறை உணர்வு" இருக்கின்றதா?
நான் என்ற உணர்வு.
மற்றய மனிதர்களின் உணர்வு.
மிருகங்கள், தாவங்களின் உணர்வு.
கல், மண், கடல், மண், போன்றவற்க்கு இருக்க கூடிய உணர்வு.
"இறை" என்னும் உணர்வு.
மற்றய மனிதர்கள் எப்படி உணர்வார்கள் என்பதை என்னை வைத்து நான் அனுமானிக்க முடியும்.
ஒரு குரங்கு எப்படிபட்ட உணர்வுகளை கொண்டிருக்கும், அதன் உலகை நோக்கிய புரிதல்கள் எப்படி இருக்கும் என்பதை என்னால் அனுமானிக்கமுடியவில்லை. அனால் குரங்கின் வெளி நடத்தைகளை வைத்து குரங்கை பற்றி பல தகவல்கள் அறியலாம். ஆனால் குரங்கின் உணர்வு எப்படி இருக்கும்? குரங்கின் வெளிநடத்தைகளை, அதன் உடல் கூறுகளை ஆய்வு செய்ய முடியும், ஆனால் அதன் உணர்வுகளை எம்மால் ஆய முடியுமா? இச் சிக்கலையே அறம்-புற இருநிலை சிக்கல் என்பர்.
கல், மண், கடல், பூமி போன்றவற்க்கு உணர்வு இருக்கின்றதா? இல்லை என்றே கருதுகின்றேன். ஆனால் அக் கருத்தை தீர்மானமாக சொல்ல முடியாது. அப்படியானால் அவைகளுக்கு இருக்கும் இயல்புகளை எப்படி விளக்குவது.
சடப்பொருளுக்கு இருக்ககூடிய இயல்புக்கும், ஒரு மனிதருக்கு உரிய உணர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை அவதானிக்க. உணர்வு என்பதன் மூலம் "consciousness" என்பதையே குறிக்கின்றேன். மனித உணர்வு தன் இருப்பை உணர்கின்றது. தனக்கு உணர்வு இருக்கின்றது என்பதை உணர்கின்றது. இன்று, இங்கே, இப்படி இருக்கின்றது என்று உணர்கின்றது. ஆனால் சடப்பொருளுக்கு அப்படிப்பட்ட உணர்வு இல்லை என்றே கருதுகின்றேன். (சில வேளைகளில் உணர்வுகளில் பல நிலைகள் இருக்கலாம், அப்படியாயின், சடபொருளின் இயல்புகள் வேறு நிலையில் இருக்கலாம்.)
இதே சிந்தனை ஓட்டத்தில் எழும் கேள்வியே இறை உணர்வு இருக்கின்றதா? (இக் கேள்வியை முன்வைக்கவே சிறு பயம் ஏற்படுகின்றது. அவ் இறை உணர்வு என் சந்தேகத்துக்காக என்ணை தண்டித்து விட்டால்...) என்னை மீறிய, என்ணை தவிர்ந்த அல்லது உள்ளடக்கிய, எனக்கும் மேலானா ஒரு சக்தி வாய்ந்த உணர்வையே இறை அல்லது இறை உணர்வு என்கிறேன். என்ணை ஆளும் சக்தியாக ஒரு இறை இருக்கலாம், அவன்/அவள்/அதுக்கு நான் அடிமை போன்ற ஒரு விலங்காக இருக்கலாம் என்பதை என்னால் ஏற்றுகொள்ள முடியும். காரணம், மனித வாழ்விலேயே பிற மனிதருக்கும், காரணிகளுக்கும் கட்டுபட்டே வாழ்கின்றேன், எனவே என் மீதான இறையின் ஆளுமையை ஏற்றுகொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை. ஆனால், இப்பொழுது இருக்கு அடிப்படை தேடல் இறை உணர்வு இருக்கின்றதா என்பதே?
இறை உணர்வு உண்டு, அவ்வுணர்வோடு நான் தொடர்பாடலாம், உணரலாம் என்கின்றார்கள் சிலர். இவ் இறை உணர்வை நான் உணர்வதன் மூலம் நான் என் இருப்பின் விளக்கத்தை அறியலாம் என்கின்றார்கள். மேலும், இறை உணர்வை அறிவது மனத்திற்க்கு அமைதி, மகிழ்ச்சி போன்ற நிலைகளை அளிக்கும் என்கின்றார்கள். இவ் இறை உணர்வை அறிவதற்க்கு தகுந்த வாழ்வு முறைகளையும், மார்க்கங்களையும் (தியானம், நம்பிக்கை!) போன்றவற்றையும் பரிந்துரைக்கின்றனர்.
இறை உணர்வு எப்படி இருக்கும் என்று கேட்டேன்? நீயே உணர முடியும் என்றனர்.
இறை உணர்வு எதற்க்கு என்று கேட்டேன்? வாழ்க்கையின் தேடல்களுக்கான பல விடைகள் அங்கேதான் கிடைக்கும் என்றனர்.
இறை உணர்வு ஏன் என் உணர்வுகளுக்கு அப்பால் இருக்கின்றது என்று கேட்டேன்? அப்படி இல்லையே உன்னால் நிச்சியம் அவ் உணர்வை உணர முடியும் என்றார்கள்.
இயற்கையிலே, மனித உறவுகள் ஊடாக, என் உணர்வுகள் செயல்கள் ஊடாக இவ் இறை உணர்வை தேடுகின்றேன். இதுதான் இறை என்று நான் எதை எண்ணி உணர? (எண்ணம் இருக்கும் வரை இறை உணர்வு மழுங்கடிக்கப்படும் என்றும் கூறுகின்றார்கள்.)
எது எப்படியோ அன்பே உருவான இறை இருக்கின்றது என்ற நம்பிக்கையிலேயே நான் வாழ்கின்றேன்.
1கருத்துக்கள்
நல்ல பதிவு, தொடர்ந்து மேன்மேலும் பதியுங்கள்!
Post a Comment
<< Home