<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Monday, July 25, 2005

பின்புலம் அறுந்த உருவகங்கள்

நிறம், இனம், மதம், மொழி, நாடு, வீடு, மரபுகள், கலாச்சாரங்கள் ஒருவனின் பின்புலம்கள் எனலாம். பிறக்கும் பொழுது ஒருவன் தன் பின்புலங்களை தெரிவுசெய்வதில்லை. எமக்கு உணர்த்தப்படும் இவ் அடியாளங்கள், பிரிவினைகள் சில எம்மால் மாற்றமுடியாதவை, ஆனால் பலவற்றை மாற்ற முடியும்.

புலம் பெயர் நிகழ்வு ஒருவனை தன் பின்புலம்களில் இருந்து விலகி நிற்க, அல்லது விலகி நின்று அலச உந்துகின்றது. புலம் பெயர்வு அவனுக்கு புதிய அடையாளத்தை தேட, கட்டமைக்க சந்தர்ப்பம் அழிக்கின்றது.

ஒரு நிலையில் புலம் பெயர்தல் ஒரு வித மீள்பிறப்புத்தான். இப்பிடியான ஒரு வாழ் நிகழ்வை வெவ்வேறு மார்க்கத்தில் அணுகலாம். சிலர் புலம் பெயர்ந்த பின் இயன்றவரை தம் முந்தைய பின்புலங்களை தேடி தம்மை மீழ் பிணைத்து கொள்வார்கள். சிலர் முந்தைய பின்புலங்களை இயன்றவரை துறந்து புதிய பின்புலங்களை தேடி கொள்வார்கள். சிலர் முந்தைய புகுந்த பின்புலகளை ஆய்ந்து தேர்ந்து ஒரு புதிய கட்டமைப்பை ஏற்படுத்திகொள்வார்கள்.

ஈழத்தமிழர்களின் மேற்குலக புலப்பெயர்வு, இரு துருவ (இட, சமூக, நுட்ப, பொருளாதார) விரிசல்களுக்கிடையேயானது. பெரும்பாலும் கிராமிய சுழல், எளிமையான பொருளாதாரம், இறுகிய உறவு பின்னல்கள், இந்திய கலாச்சாரம் ஆகிய கூறுகளால் அமைக்கப்பட்ட பின்புலத்தில் இருந்து நகர சூழல், சிக்கலான பொருளாதாரம், இழகிய உறவு பின்னல்கள் கொண்ட மேற்கத்தைய புலத்துக்கு ஈழ தமிழர்கள் புலர்ந்தார்கள்.

இவ் நிகழ்வு எமக்கு மனித வாழ்வின் தேவைகள், தெரிவுகள் குறித்து ஒரு பரந்த பார்வையை தந்தததோடு மட்டுமல்லாமல், ஒரு புதிய பின்புலத்தை கட்டவும் நிர்ப்பந்தித்தது. அனைத்து தெரிவுகளும் எமக்குமுன் இல்லை. புலம்பெயர்வு எமது பின்புலங்களுடான முற்றிலுமான இறுதியான பிரிவு இல்லை. ஆனாலும், ஒரு மாறுபட்ட பின்புல கட்டுமானத்துக்கு புலப்பெயர்வு எம்மை அனுமதித்து, நிர்ப்ந்தித்தது.

இந் நிலையில்தான் எம் பின்புலங்களை நாம் அவதானத்துடன் அலச ஆரம்பித்தோம். தாயகம், தமிழ், சமயம், சாதி பின்னல்கள், பெண் உரிமை, குடும்ப அமைப்பு, உறவு பின்னல்கள், தொழில், பொருளாதார தேவைகள், கல்வி, கலைகள், சமூகம் என பல கூறுகளை நாம் அவதானித்தோம். அவ் அவதானிப்புக்களில் இருந்தும், எமது புலர்ந்த சூழல் தேவகளுக்கு எற்ற முறையிலும் நாம் எமது புதிய பின்புலத்தை புனைய முயல்கின்றோம்.

தாயகம்:
நாம் எங்கிருந்து வந்தோம்? இக் கேள்வி என்றும் எம்முடன் இருக்கும். தெற்கு ஆசியா, இந்தியா, இலங்கை, ஈழம், ஈழத்தில் ஓர் ஊர் என்று தெளிவான பதில் எம்மிடம் உண்டு. ஆனால், தனி மனித நிலைமைகளை பொறுத்து தாயகத்துடனான எம் உறவு மாறலாம். புலத்தில் முழு அரசியல் உரிமை உடையோர், குடும்ப உறவினர்களோடு புலத்தில் உள்வர்கள் அகியோரின் தாயக தொடர்பு தளரலாம். சிலருக்கு தாயகம் உல்லாச இலக்காவும் மாறலாம். மிக சிலர் தாயகத்துடன் ஆத்ம தொடர்பை பேணி, மீண்டும் அங்கு சொல்ல காத்தும் இருப்பர்.

தமிழ்:
தமிழருக்கு தமிழ்தான் அடையாளம். பல் கலாச்சார சூழலில் எமது முக்கிய அடையாளமன தமிழை முன்நிறுத்த பலரும் முனைகின்றார்கள். ஆயினும் ஆங்கில சூழலில் இளையவர்கள் தம்மிடையே தமிழில் பேசுவது அரிது. எனினும், பலர் ஒரு பண்டித, பண்பாட்டு நோக்கில் தமிழை தெரிந்துவைக்க உந்தப்படுவார்கள் என்றும் நினைக்கின்றேன்.

இனம்:
தமிழ்ர்கள் "தனித்தமிழ்" என்ற வட்டத்தில் இங்கு இயங்க முடியாது. இலங்கையிலேயே சில தமிழ் குடும்பங்கள் சிங்கள, முஸ்லீம் உறுப்பினர்களை உள்வாங்கி அல்லது உறவாடி வருகின்றன. இந் நிலை இங்கு விரிந்து பல இன குடும்ப தொடர்புகள் நிகழும்.

சாதி:
பிறப்பு அடிப்படையிலான, தொழில் முறையிலான சாதியின் அர்த்தம் இன்மையை புலர்ந்தவர்கள் நன்கு புரிந்துவிட்டார்கள். அங்கு உயர் சாதி என்று தம்மை கருதியோர் புலர்ந்த நாட்டில் அடிமட்டத்துக்கு வந்த அனுபவ நினைவு என்றும் நிலைக்கும். உழைப்பால், படிப்பால் அங்கு ஒதுக்கப்பட்டோர் புலர்ந்த நாட்டில் எளிர்ச்சி அடைந்ததும் சாதியின் மாயை உடைத்தது. மேலும் புலர்ந்த நாட்டில் தமிழர் என்ற அடையாளமும் ஒற்றுமையும் முன்நிறுத்தப்படுகையில் சாதி அர்த்தமற்று போகின்றது. இங்கு நாம் எல்லோரும் "மண் நிற" சாதி. நிற ரீதியான வரையறைகளை, துன்புறுத்தல்களை பொது கனேடிய குமுகாயத்தில் எதிர்க்கு நாம் "வர்ண சாதி" அமைப்பை எம்முள் வைத்திருப்பது மடமை என்பதை அனைவரும் உணர தலைப்பட்டுள்ளார்கள். ஆயினும் சாதியின் கூறுகளை ஐயரின் பூனூலும், சடங்குகளிலும் அவதானிக்க முடியும்.

சமயம்:
சமயத்தின் பிடி தளர்ந்துள்ளது. கோயில்கள் சமூகத்தின் மையமாக இயங்கிய நிலை மாறி கோயில்களும் வியாபார - நுகர்வு நிலையங்களாக இயங்கும் நிலை இங்குள்ளது. கோயில்களின் தோற்றம், நோக்கம், பரப்புரைகள் புலம் பெயர் மக்கள் நன்கு அவதானித்தார்கள். "புனிதம்" உருவாக்கப்படும் முறைகள், சடங்குகளின் வெற்றுமை தன்மைகள், குருமார்களின் போட்டிகள் ஆகியவற்றை அவதானித்தார்கள். "அரிச்சினை 50% ஏல விற்பனையில்", "கோயிலில் விழா எடுப்பதற்க்கு இடங்களை பதிய முந்துங்கள்" போன்ற கூச்சல்கள் புலம்பெயர் மக்களின் உள்ளங்களை சோதனை செய்தது.

மேலும், கிறீஸ்தவ பிரிவுகள் எப்படி தம்மிடையே சண்டைபிடித்துகொண்டு பல தந்திரங்களை (பணம், தொழில், வசதிகள், பயப்படுத்தல்), மூளைச்சலவைகள் மூலம் மதம் மாற்ற முயன்றார்கள் என்பதை புலம் பெயர்ந்தவர்கள் அவதானித்தார்கள். "அவரை முட்டுகாலில் வைத்து கதற வைத்து விட்டேன்" என்று மதம்மாற்றிகள் சிறுபிள்ளைதனமாக தம்முள் தம்பட்டம் அடித்துகொள்வதையும் அவதானித்தார்கள். மனத்தை மாற்ற முயலாமல் மதத்தை மட்டும் மாற்றி குடும்ப ஒற்றுமையை குலைத்த மதமாற்றிகளையும் புலர்ந்தவர்கள் அவதானித்தார்கள்.

இவ் அவதானிப்புக்கள் புலர்ந்தவர்களின் சமய பிடிக்குள் இருந்து சற்று விடுவித்தது. ஒரு மன ரீதியான, ஆத்மீக தேடலுக்கும் இது உந்துவித்து எனலாம்.

உறவு பின்னல்கள்:
கூட்டு குடும்பம், இறுகிய உறவு பின்னல்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புலர்ந்தவர்கள் சிதறினார்கள். சிதறியவர்கள் தங்களை தன்நிலைப்படுத்த நிர்பந்திக்கப்பட்டார்கள். சார்ந்து வாழாமல் சுதந்திரமாக வாழ கற்றுகொண்டார்கள். உதவிக்கு அரசும், உழைப்புக்கு தொழிற்சாலையும், ஊடலுக்கு நுகர்வு அங்காடிகளும் இருக்கையில் இறுகிய இரத்த உறவு பின்னல்களின் தேவை, தொடர்பு அரிதாகவே பயன்பட்டது. ஒரு "தனி குடும்ப" உறுப்பினர்கள் கூட ஒவொரு மனிதனும் தன் காலின் பலத்தில் என்ற அமெரிக்க தத்துவத்தை ஏற்று படிப்பு, தொழில், பிற தொடர்புகள் என்று தம்மை நிலை நிறுத்த முயல்கின்றார்கள்.

ஒரு நிலையில் இம் மாற்றம் விடுதலையானதே, குறிப்பாக பெண்களுக்கு. பெண் என்பவள் தகப்பனையும், தமையனையும், கணவனையும் தங்கி வாழும் நிலையில் இருந்து விடுதலையாகி, அவளுக்கொன்றேரு வாழ்க்கை என்பது நிஜமாகியது. குறுகிய வட்டத்தில் வாழ்ந்து பழகிய தமிழர் ஒரு பரந்த வட்டத்தில் பல தொடர்பு பின்னல்களுடன் வாழ இவ் விடுதலை உந்தியது.

ஆயினும், இருத்த உறவு பின்னல்களின் தேவை என்றும் புலர்ந்தவர்களுக்கு உண்டு. ஒன்றுகூடல்கள், சடங்குகளின் முக்கியதுவம், இளையவர்களின் உறவு தேடல்கள் இவற்றையே சுட்டுகின்றன. ஆனால், இவ் புதிய பின்னல்கள் சார்பு நிலையில் அமையாமல், ஒரு வித சம பங்காளர்களின் பின்னலாக அமைகின்றது.

கல்வி, தொழில், பொருளாதார மீட்சி:
ஆரம்பத்தில் (80 களில்) புலர்ந்த இளைஞ்ஞர்கள் பலர் சூழ்நிலை காரணமாக தகுந்த கல்வியை தொழிலை பெற முடியாமல் இருந்தது. ஆனால், 90 களில் புலர்ந்தவர்கள் குறைந்த பட்சம் கல்லூரி கல்வியோ, பல்கலைகழக கல்வியோ பெற்றார்கள். எனினும் எதிர்பார்புக்கள் மாறி விட்டன. "டிக்றி" முடிப்பது வாழ்வியலின் ஒரு படி ஆகிவிட்டது. எது எப்படியாகினும் கல்வியே எமக்கு தாயகத்திலும் புலத்திலும் இருக்கும் முக்கிய மூலதானம், அத்திவாரம். அவ் அத்திவாரத்தில் இருந்து எப்படி எப்படி மேல் நோக்கி சுழல்வோம் என்பது தனிமனித முயற்சி மற்றும் சூழலை பொறுத்தது.

இறுதியாக, புலம் பெயர்ந்தலால் எமக்கு கிடைத்த விரிவடைந்த பார்வையை, அனுபவங்களை துணைகொண்டு ஒரு மறு மலர்ச்சி பின்புலர்த்தை இங்கு புனைய முனைகின்றோம். அக் கட்டுமானத்தில் தனி மனித தேர்வுகள் நிச்சியம் வேறுபடும்.

பல் கலாச்சார சூழலை அனுசரித்து, எமது தமிழ் அடையாளத்தின் அழகிய, வலுவான அம்சங்களை பேணி, சாதிய நிற பெண் உரிமை கட்டுபாடுகளை எதிர்த்து, உண்மையான ஆத்மீக தேடல்களுடன், சுயமான பொருளாதார வலுவுடன், வலுவான உறவு பின்ணிகளுடன் சீரிய சிந்தனைக்கு உட்படுத்தப்பட்ட உறுதியான மறுமலர்ச்சி பின்புலம் அமைக்கப்படல் வேண்டும்.

இம் முயற்ச்சி இலகுவானதல்ல. பல சோதனைகளையும் பின்னடைவுகளையும் நித்தியம் இம் முயற்ச்சி சந்திக்கும். ஆனாலும், உறுதியுடன் எம் முயற்ச்சி முன்னோக்கி செல்ல வேண்டு. ஏன் என்றால் எம் பின்புலங்களில் எமது இருப்பும் நோக்கும் தங்கியுள்ளது.

5கருத்துக்கள்

At 12:31 PM, Blogger -/பெயரிலி. said...

நக்கீரன்,
நன்றாக எல்லையிட்டுப் பெட்டிபோட்டுச் சொல்லமுனைந்திருக்கின்றீர்கள். மேலும் ஆய அவசியமான பிரிவாக்கம்.

 
At 12:29 AM, Blogger Chandravathanaa said...

நற்கீரன்
நல்ல ஆய்வு.
முடிந்தால் இன்னும் ஆழமாய் இவ்விடயங்களை எழுதுங்கள்.

 
At 6:37 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

very good post Natkeeran.

do write elaborately.

-Mathy

 
At 9:00 AM, Blogger வானம்பாடி said...

ஆழ்ந்த அணுகல். நன்று!

 
At 4:02 PM, Blogger நற்கீரன் said...

-/பெயரிலி, Chandravathanaa, eswara prasadh, மதி, சுதர்சன் அகியோரின் கருத்துக்களுக்கு நன்றி.

eswara prasadh எனக்கு பிரேஞ்சு தெரியாது, ஆகவே உங்கள் கருத்தை புரிய முடியவில்லை.

இவ் கருப்பொருளின் உங்களின் எண்ணங்களையும் அனுபவங்களையும் உங்கள் பதிவுகளில் விரிவாக தெரியபடுத்தினால் நன்று.

 

Post a Comment

<< Home