<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Monday, December 30, 2013

தான்தோன்றி அறிவர், எமது அறிவியலாளர் கோ. நம்மாழ்வார்

தமிழ்ச் சூழலில் அறிவியலாளர்கள் பலர் தாம் கற்ற அறிவை எம்மோடு, எமது சூழலின் தேவைகளுக்கு, சிக்கல்களுக்கு பகிர்ந்து கொள்வது அரிது.  எம்மோடு இணைந்து, எமது மூலங்களைப் பயன்படுத்தி, தொலைநோக்காகச் சிந்தித்து செயலாற்றிய சிறந்த எடுத்துக்காட்டுக்களில் ஒருவர் கோ. நம்மாழ்வார்.  வெறுமே பேசிக் கொண்டு மட்டும் இருக்காமல், எதிர்த்துக் கொண்டு மட்டும் இருக்காமல் முன்மாதிரிகளை, மாற்றுக்களை உருவாக்கினார்.  தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மையின் தந்தை என்று இவரைக் கூறலாம்.  தமிழ்நாட்டுச் சுற்றுச்சூழல் இயக்கத்தின் ஒரு மூல அமைப்பாளாராக விளங்கினார்.  பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய அரசு, கல்வித்துறை ஆதரித்த பசுமைப் புரட்சியின் குறைபாடுகளை துணிவாக, பல காலம் தனித்து நின்று எதிர்த்தார், அதற்கான மாற்றுக்களை உருவாக்கினார்.

அவர் அறிவியலை கண்மூடித்தனமாக இறக்குமதி செய்யவில்லை.  சுயமாக அறிவை ஆய, உருவாக்க, பயன்படுத்தக் கற்றுக் கொடுத்தார்.  காப்புரிமத்துக்கு விதைகளைப் பறிகொடுக்காமல் இருக்க, நஞ்சுகலந்த வேதிகளுக்கு எமது உணவையும் சூழலையும் பறிகொடுக்காமல் இருக்க, பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை போகாமல் இருக்க அவர் எமக்கு கற்றுக் கொடுத்தார்.  அவரது அறிவை ஆர்வம் உள்ள அனைவருக்கும் கட்டற்று வழங்கினார்.  பெரும் ஆய்வு நிறுவனங்களிலோ, அல்லது பல்கலைக்கழங்களிலோ மறைந்து விடாமல், உழவர்களோடு களம் கண்டார்.  அண்டோனியோ கிராம்சி கூறும் உள்ளார்ந்த அறிவராக (organic intellectual) விளங்கினார்.  இவரின் உந்தலால் ச. கரிகாலன், இரா. ஜெயராமன் என்று பல இயற்கை உழவர்கள், சுற்றுச்சூழல் செயற்ப்பாட்டாளர்கள் உருவாகி உள்ளார்கள்..

கோ. நம்மாழ்வார் இயற்கை எய்தியது கண்டு மனம் கனக்கிறது.  அவர் வழி நின்று அவரது பணியை தொடர்வதே நாம் அவருக்கும் செலுத்தும் அஞ்சலியாக அமையும். 

Labels: , , , ,

0கருத்துக்கள்

Post a Comment

<< Home