<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Wednesday, July 24, 2013

திராவிடம் தமிழியம் 1 - பகுத்தறிவு

தொடக்கத்தில் திராவிடத்தின் அடிப்படைக் கொள்கையாக, முக்கிய கருவியாக பகுத்தறிவு இருந்தது.  மூடநம்பிக்கைகளை, சாதியத்தை, பெண் அடிமைத்தனத்தை, சமயத்தின் மூடத்தனத்தை அறுக்கப் பயன்படும் ஆயுதம் பகுத்தறிவு.  ஒரு கோட்பாட்டை தானே பரிசோதித்து, கோள்வி கேட்டு, விமர்சித்து, கூர்ப்படையப் பயன்படும் கருவி பகுத்தறிவு.  வெறுமே வேதம்/சமயம் என்றும், அதிகாரம் கூறியது என்றும் ஏற்றுக் கொள்ளாமல் எமது பகுத்தறிவின் ஊடாக நிரூபித்து கண்டறியும் அறிவியல் முறையே உண்மையை அறிய மனிதர்களுக்கு இதுவரை இருக்கும் சிறந்த வழி. 

தமிழ்ச் சூழலில் பகுத்தறிவை விதைத்தவர் பெரியார்தான்.  அவர் கூறுகிறார் "என்னுடைய அபிப்பிராயங்களையும் நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தான் அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன்.  ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் யாவரும் அடிமைகளே!...நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மையென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்." என்று. 

ஆனால் இன்றைய திராவிடக் கட்சிகள் பகுத்தறிவை கருவறையில் வைத்து வழிபாடு செய்கிறார்களே ஒளிய கொள்கையாகவோ, கருவியாகவோ பயன்படுத்தவில்லை.  பெரியாருக்கே மாலை போடுவது, பூசை செய்வது.  சாமியார்களின் கால்களில் போய் விழுவது.  கல்வியின்றி, நலமின்றி தவிக்கும் மக்களுக்கு இலவச தொலைக்காட்சிகளை வழங்குவது.  புள்ளிவிபர, ஆய்வடிப்படையில் கொள்கை அமைக்காமல் எக் கொள்கை பிரபலமானதோ அக் கொள்கையைக் கொள்வது.  குடும்ப அரசியலை செய்து குடும்பத்தை வளர்ப்பது, சமூகத்தை கொலை செய்வது.  இதுதான் இன்றைய திராவிடம்.  இதில் எங்கே பகுத்தறிவு இருக்கிறது.  பெரியார், அண்ணா ஆகியோரின் மறைவுக்கு பின்னரே நேர் எதிர்மாறான கொள்கைகளை அது ஏற்றுக் கொண்டுவிட்டது.

திராவிடம் போன்றே கலக்கத்திலும் எதிர்ப்பிலும் தமிழியம் தோன்றியது.  ஆனால் பகுத்தறிவு பற்றி தமிழியம் என்றும் விரிவாகப் பேசியது இல்லை.  தமிழியத்தின் தோற்றுவாயகக் கருதப்படும் தனித்தமிழ் இயக்கம், தமிழ்த் தேசியம் ஆகிய இரண்டும் உணர்ச்சி அடிப்படையில் மக்களைத் திரட்டும் இயக்கங்கள்.  இவை தொழில் உத்திகை அணுகுமுறையை (technocratic approach) மிகுந்து கையாண்டாலும், பகுத்தறிவு பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.  தமிழியம் என்றும் சமயத்தை, கடவுளை எதிர்க்க துணிந்தது இல்லை.  ஒரு வகையில் இவர்களின் அடித்தளம் ஐக்கிய அமெரிக்காவின் 6000 ஆண்டு உலகை நம்பும், படிவளர்ச்சியை எதிர்க்கும் சமய அடிப்படைவாதிகளை ஒத்தது.

ஆக, தமிழ்ச் சூழலில் இன்று செல்வாக்குப் பெற்று இருக்கும் இரண்டு கோட்பாடுகளுமே பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் தரவில்லை.  பகுத்தறிவை கருவாகக் கொள்ளாத எந்தக் கோட்பாடுமே தொலைநோக்கில் நிலைத்து நிற்க வாய்ப்பு இல்லை.

Labels: , ,

2கருத்துக்கள்

At 9:58 PM, Anonymous Anonymous said...

மிக முக்கியமான கருத்தியலை எடுத்து வைத்துள்ளீர்கள். பெரியார் உட்பட ஆரம்பகால பகுத்தறிவு இயக்கங்கள் பின்னாளில் அண்ணா, முக, எம்ஜீஆர், ஜெயா என நீர்த்துவிடச் செய்து விட்டார்கள். அரசியல், அதிகார நலன்களுக்காக அனைத்தையும் உதறி விட்டார்கள். சம்பிரதாயத்துக்கு மட்டுமே பெரியாரியம் உள்ளது. அதை விட மோசம் தமிழியம், தமிழியத் தொடக்கத்தில் தமிழ் மொழி சீரமைப்பை முன் வைத்தாலும் பின்னாளில் உணர்ச்சிக் கூட்டங்கள், விடுதலைப் புலி ஆதரவு என திசை திரும்பி நீர்த்துவிட்டது. புதிய தமிழியத்தை முன் வைக்கும் சீமான் போன்றோரின் செயற்பாடுகள் மேலும் கேலிக்குள்ளாகியும் விட்டது. ம்ம்ம்

 
At 6:13 AM, Blogger நற்கீரன் said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. அண்ணா ஒரு மிதவாதியாகவே செயற்பட்டார். ஆனால் எம்.ஜி.ஆர், முக, ஜெயா ஆகியோர் சுயநலவாதிகளாக, populists ஆக மட்டுமே செயற்பட்டார்கள், செயற்படுகிறார்கள். தமிழியத்துக்கான தேவை இருக்கிறது, ஆனால் அதற்கான வலுவான அடித்தளம் இல்லை.

 

Post a Comment

<< Home