போராட்டம் சிங்களவர்களுக்கோ, இலங்கைக்கோ எதிரானது அல்ல
சிங்களவர்கள் எமது பக்கத்து வீட்டார், நெடும் வரலாற்றுப் பயணத் தோழர்கள். உறவினர்கள், நண்பர்கள். இலங்கைத் தீவு ஈழத்தமிழர்கள் உட்பட்ட இலங்கையர்களின் தாயகம். இலங்கையோ, சிங்களவர்களோ எமது எதிரிகள் அல்ல. எதிரிகளை உருவாக்குவதோ, சித்தரிப்பதோ எமது போராட்டத்தின் நோக்கமாக அமையாது. மாற்றாக எமது நியாமான அனைத்து மக்களுக்கும் உரித்தான உரிமைகளை நிலைநாட்டுவது, சமூக நீதியைக் கோரிவது ஆகியனவே எமது போராட்டத்தின் இலக்குகளாக அமைய முடியும். ஆகவே இலங்கை, சிங்கள என்ற பொதுப்படையாக விமர்சிப்பதை முன்வைப்பது தவறானது.
ஆயுதப் போராட்டத்தின் போது இயக்கங்கள் கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது மேற்கொண்ட சில வன்முறைகள் சிங்களப் பொதுமக்கள் பலர் ஈழப் போராட்டத்தின் நியாங்களைப் புரிந்து கொள்ள பெரும் தடையாக அமைந்தது. இலங்கை அரசு மேற்கொண்ட, மேற்கொள்ளும் வன்முறையோடு ஒப்புடையில் இவை மிகச் சிறிய அளவில் இருந்தாலும் அவற்றை மறுத்துவிட முடியாது. அதையும் மீறி 1983 இலும் சரி, 2009 இலும் சரி தமிழர்களைப் பாதுகாப்பதிலும், இனப்படுகொலை ஆதரங்களை வெளிக்கொணர்வதிலும், நீதிக்கான போராட்டங்களை முன்னெடுப்பதிலும் சிங்கள மக்கள் பலரின் பங்களிப்பு மிக முக்கியமானது. போராட்டத்தின் உண்மையான வெற்றி சிங்களப் பொதுமக்களிடம் எமது சிக்கல்களைப் புரிந்து கொள்ள வைப்பதில்தான் இருக்கிறது.
இலங்கையின் பேரினவதா அரசு, குழுக்களை அடையாளப்படுத்தி, அவர்களில் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துவதற்கு நாம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் அதே வேளை சிங்களப் பொதுமக்களை நாம் அன்னியப்படுத்தலாகது. பாட்டுக்களிலும் சரி, பாதகைகளிலும் சரி சிங்கள என்று பொதுமையாக விமர்சிப்பது தவறு, எமது இலக்குகளுக்கு எதிரான விளைவையே அது தரும். மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் நாம் கடந்த காலங்களில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருத்தல் முக்கியம்.
Labels: அறப் போராட்டம், ஈழப் போராட்டம்
0கருத்துக்கள்
Post a Comment
<< Home