<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Wednesday, October 10, 2012

குடிவரவாளர் அனுபவங்கள் 3 - அக இனவாதம்

இன்றைய நிலையில் இலங்கையைப் போல இனவாதம் கோரமாகவோ, சட்ட மூலமாகவோ இங்கு இல்லை.  ஒப்பீட்டளவில், கனடா, குறிப்பாக ரொறன்ரோ இனவாதம் குறைந்த, பல்லினப் பண்பாட்டை வரவேற்கும் ஒரு சூழலைக் கொண்ட இடம் என்பதை மறுப்பதற்கில்லை.  சமூக நிறுவனங்கள் அனைத்தும் உடனேயே இனவாதம் அற்று மாறிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் தவறானது.  கல்வி, மருத்துவம் போன்று சில தொழில்களில் எவ்வாறு பெண்கள் அதிகமாக இருக்கிறார்களோ அதே போல சில தொழில்களில் சில இனத்தவர்கள் அல்லது புதிய குடிவரவாளர்கள் அதிகமாக இருப்பது எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்றே.  இங்கு புறவயமாக இனவாதம் குறைவு என்றாலும், அக வயமாக இனவாதம் இன்னும் பலரிடமும் உண்டு. 

எனக்கு இனம் x பண்பாட்டுக் கூறுகளைப் பிடிக்கும் என்பதை இனவாதமாக நான் பார்க்கவில்லை.  என் இனத்தின் மீது அல்லது பண்பாட்டின் மீது எனக்குப் பெருமை போன்ற கருத்து நிலைப்பாட்டையும் கூட நான் இனவாதமாகக் கருதவில்லை.  எனது இனம் பிற இனங்களை விடச் சிறந்தது, எனது இனத்தவர்கள் பிற இனத்தவர்களை விட மரபுவழியாகச் அல்லது மரபணுவழியாகச் சிறந்தவர்கள் என்ற நிலைப்பாட்டையும், அது வெளிப்படும் முறைகளையுமே நான் இனவாதமாகப் பார்க்கிறேன். 

மேலோட்டமாக, ரொறன்ரோவில், இனங்களுக்கு இடையே பண்பாட்டு வேறுபாடுகள் மட்டும் இன்றி பொருளாதார அதிகார வேறுபாடுகளும் உண்டு என்பது உண்மையே.  ஆனால் இந்த பொருளாதார அதிகார வேறுபாடுகளுக்கு சூழலியல், அரசியல், வரலாற்றுக் காரணங்கள் உண்டு என்பதை மறுத்து இவற்றை இனங்களின் பண்புகளாக வரையறை செய்வதே இனவாதம்.  எ.கா இங்கு முதற்குடி மக்களில் கணிசமானவர்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களாகவும், அரசியல் செல்வாக்கு இல்லாதவர்களாகவும், பல்வேறு சமூகப் பிரச்சினைகள் உள்ளவர்களாகவும் உள்ளார்கள்.  இதற்கு அவர்களின் இனத்தையோ அல்லது மரபையோ காரணம் சுட்டுவது மடைமைத்தனமாகும்.  ஐரோப்பியர்களின் முதற்குடிமக்கள் இனப்படுகொலைகள், நில அபகரிப்பு., தொடர்ச்சியான அடக்குமுறைகள் முதற்குடிகளின் இன்றைய நிலைக்கு முதன்மைக் காரணம்.  இன்னுமொரு எடுத்துக்காட்டு அதிகமான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களாக கறுப்பின இளைஞர்கள் இருப்பது.  இதற்கு பல நூற்றாண்டு அடிமை வரலாறு, கறுப்பின மக்களின் சமூக கட்டமைப்பில் இருக்கும் தளர்ச்சி எனப் பல காரணங்கள் உள்ளன.  ஆகவே சூழலியல், அரசியல், வரலாற்றுக் காரணங்களைப் பாராமல் நிறை குறைகளை இனப் பண்புகளாகப் பார்ப்பது இனவாததின் ஒரு வடிவமே. 

ஒரு நாள் என் வேலையில் கறுப்பின மக்கள் விளையாட்டில் வீரர்களாக உள்ளார்கள் என்று தொடங்கிய ஒரு உரையாடல் கறுப்பின மக்கள் அறிவில் மத்திமமாக இருப்பார்கள் என்று சில வெள்ளை/யூத இனத்தவர்கள் கருத்துக் கூறலாயினர்.  கறுப்பின மக்கள் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றார்கள் என்பது மரபணு மட்டும் சார்ந்த ஒரு விடயம் இல்லை.  ஏன் என்றால் கறுப்பின மக்கள் நிறைந்து இருக்கும் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மிகச் சிலரே ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளனர்.  ஐக்கிய அமெரிக்காவில் விளையாட்டே இனவாதம் குறைந்த, திறமைகளை மட்டும் முதன்மையாக கருத்தில் எடுக்கும் ஒரு துறையாக இருப்பதால் வாழ்க்கையில் வெற்றிபெற பெரும்தொகை கறுப்பின இளைஞர்கள் அத் துறையில் ஈடுபடுகின்றனர்.  ஒரு நாட்டின் குடிமக்கள் குறிப்பிட்ட துறையில் சிறப்புப் பெறுகிறார்கள் எனில் அந்த நாடு வழங்கும் வசதிகளும், சூழலியல் காரணங்களும் முக்கியம் பெறுகின்றன.  அடிமையாக இருந்த போது கறுப்பினத்தவர்கள் கல்வி பெறுவது கடும் தண்டனைக்கு உரிய குற்றமாக இருந்ததும், கல்விக் கட்டமைப்புகள் வெள்ளையர்களின் பண்பாட்டு படிமங்களைப் பின்பற்றுவதும் அவர்கள் கல்வியில் இணையான வளர்ச்சியைப் பெற பெரும் தடைகள் ஆகும். 

இன்று கல்வித்துறையிலும் வணிகத் துறையிலும் யூத இனத்தவர்கள் பெரும் செல்வாக்குச் செலுத்துகிறார்கள் என்பது உண்மையே.  அவர்களில் சிலர் இது அவர்களின் மரபணு, அல்லது மரபியல் காரணங்களால் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாகவே உள்ளனர்.  ஆனால் இத் துறைகளில் அவர்கள் செல்வாக்குச் செலுத்த ஐரோப்பியச் சூழல் ஒரு காரணம் ஆகும்.  யூதர்கள் நிலம் வைத்திருக்க முடியாது என்ற சட்டமும், இவர்களே வட்டிக்கு பணம் குடுக்க முடியும் என்ற சூழலும் முக்கிய காரணிகளாக இருந்திருக்கலாம்.  இவர்களின் சமூக அமைப்பு ஒருவருக்கொருவர் உதவி செய்யப் பல கட்டமைப்புக்களைக் கொண்டது.  அதுவும் ஒரு முக்கிய காரணம் ஆக இருந்திருக்கலாம்.  எனவே இதை இனம் சார்ந்த ஒரு பண்பாக எடுக்க முடியாது.

ஒரு மக்கள் குழுவின் வெற்றி என்பது இனவின் மரபணுவில் இல்லை என்பதற்கு வட தென் கொரியாக்கள் சிறந்த உதாரணம் ஆகும்.  தென் கொரியா இன்றைய நவீன நாடுகளில் ஒன்று.  சராசரி தனிநபர் வருமானம் அ$23,749 ஆகும்.  வட கொரியா நலிவான நாடுகளில் ஒன்று.  சராசரி தனிநபர் வருமானம் அ$1,800 ஆகும்.  ஒரே மொழி, பண்பாட்டு, இன அடையாளம் கொண்டவர்கள் மிக வேறுபட்ட வாழ்வு நிலையைக் கொண்டிருப்பதற்கு வரலாறும் அரசியலுமே முக்கிய காரணங்கள் ஆகும். 

முதற்குடிகளோ, கறுப்பினமக்களோ, பிற இனத்தவோரோ பண்பாட்டு, அரசியல், பொருளாதார முன்னேற்றம் காண அவர்களின் இனத்துவ அடையாளம் ஒரு வளமாக அமைகிறது.  மொழி, கலைகள், தொழிற்கலைகள், வரலாறு, சமூக உதவி அமைப்புகள் சார்ந்த இந்த வளங்கள் மொத்த சமூகத்தையுமே மேம்படுத்துகின்றன.  ஆனால் இன அடிப்படையிலான ஏற்ற தாழ்வு மனப்பான்மை, மனிதர்களை மனிதர்களாப் பார்க்க, பழக, நடக்க தடையாக அமைந்திவிடும்.  இத்தகைய உறைந்த இனவாதம் இங்கேயும் பரவி உள்ளது.  நாம் எம்மை அறியாமலே சில முன்முடிவுகளை செய்துவிடுகிறேம்.  விழுப்புணர்வுடன் நாம் இருப்பதும், உறைந்த இனவாதம் தலைதூக்கும் போதெல்லாம் சுட்டிக் காட்டி, எதிர்ப்புத் தெரிவுத்து கூடிய புரிதலை ஏற்படுத்துவதும் எமது மனிதபிமானக் கடமை ஆகும். 

0கருத்துக்கள்

Post a Comment

<< Home