<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Monday, December 05, 2011

கனடாவின் அவமானம்: முதற்குடி நாடுகளின் அவலநிலை

உலகின் வளங்கள் மிக்க, செல்வம்மிக்க, ஆற்றல் மிக்க, முதலாம் உலக நாடுகளில் ஒன்று கனடா. இங்கு பல மக்கள் குமுகங்கள் குடிக்க தூய்மையான தண்ணீர் இன்றி. அடிப்படை கழிவகற்றும் தொகுதிகள் இன்றி, கடும் குளில் சூடேற்றும் வழிகள் இன்றி, முறையான வீடுகள், கல்வி, நல அமைப்புகள் இன்றி உள்ளனவென்றால், அது ஏன்.

கனடாவிற்கு ஐரோப்பியர்கள் வர முன்னர், கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ என்று நவீன நாடுகள் எழும் முன்னர் இங்கு நூற்றுக்கணக்கான நாடுகள் இருந்தன. அந்த நாடுகள் ஒவ்வொன்றும் தமக்கான மொழியை, பண்பாட்டை, வாழ்முறைகளை, பொருளாதார அரசியல் முறைமைகளைக் கொண்டு இருந்தன. அவர்களுக்கு இடையேயும் சண்டைகள் இருந்தன. எனினும் இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இயற்கையோடு இசைந்த, இந்தக் கண்டத்தின் பல்வேறு தீவர சூழ்நிலைகளிலும் வாழும் முறைகளைக் கற்று இருந்தார்கள். ஐரோப்பியர்கள் முதலில் இங்கு வந்த போது, அவர்கள் தப்பிப் பிழைக்க, இங்கு வாழ கற்றுக் கொடுத்தவர்கள் இவர்களே. ஆனால் ஐரோப்பியர்கள் இவர்களை ஏமாற்றினார்கள், அழித்தொழித்தார்கள், அடிமைப்படுத்தினார்கள். பல முதற்குடி நாடுகள் தீர்க்கமாக எதிர்த்தன. அதன் காரணமாக நவீன கனடாவும், நவீன ஐக்கிய அமெரிக்க நாடுகளும் இவர்களோடு சில ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்த ஒப்பந்தங்களின் காரணமாக எஞ்சியவர்கள் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் வாழும் படியான ரிசேர்வ் (reserve) முறையை ஏற்படுத்தினார்கள். இந்த ரிசேர்கள் முதற்குடிமக்களின் நாடுகளை பிரித்தன, சிதைத்தன. அவர்களின் மரபுவழியான தொழில்நுட்பங்களை, வாழ்முறைகளை, பொருளாதாரத்தைத் சிதைத்தன. இதற்கு முன்னர் அலைந்துவாழும், வேட்டையாடு குமுகங்களாக இருந்த இவர்கள் இப்போது ஒரே இடத்தில் இருக்கும், நவீன பொருளாதாரத்தில் அல்லது அரசின் தயவில் தங்கி இருக்க வேண்டியவர்களாக ஆக்கப்பட்டார்கள். இந்த பிரதேசங்களை நடுவண் அரசுகள் நேரடியாகக் கட்டுப்படுத்தின. இந்தப் பிரதேசங்களின் குமுகங்கள் தான் இன்று அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றன.

முதற்குடி நாடுகள் பல சொத்து என்ற கருத்துருவைக் கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு நிலம் எப்போதும் பொதுவில் தான் இருந்தது. அவர்கள் வேட்டையாடி வாழ்ந்த போது, நிலம் எங்கும் எல்லோருக்கும் என்று இருந்த போது இது சிக்கலாக இருக்கவில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் வந்து இவர்களை ஏமாற்றி நிலத்தை தமது சொத்தாக பெற்றுக் கொண்ட பிறகு இவர்களுக்கான நிலம் சுருங்கியது. அவர்களில் நிலங்கள் முன்னர் சுட்டியபடி ரிசேர்வ்களாக மட்டுப்படுத்தப்பட்டன. இன்றுவரை இந்த ரிசேர்வ்களில் யாருக்கும் தனி நிலங்கள் கிடையாது. இதுவே நவீன பொருளாதார முறையில் இவர்களுக்குப் பாதமாகவும் அமைந்துவிடுகிறது. தனிக் குடும்பங்கள் அல்லது மனிதர்கள் தமது நிலத்தை வீட்டை அடமானம் வைக்கவோ, அல்லது அதில் இருந்து வருமானம் பெறவோ முடியாத நிலையில் அதை முன்னேற்றும் உந்தல் இல்லாமல் போகிறது. இவர்கள் ரிசேர்களில் வணிகம் செய்வதற்கான உரிமைகளும் மட்டுப்படுத்தப்பட்டவை ஆகும். தமது மரபு வழித் தொழில்களையும் செய்யவும் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இவ்வாறு இவர்கள் பொருளாதார முறையில் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.

முதற்குடிமக்களின் நாடுகள் கனடாவை ஓர் அதிகார சக்தியாகவே, ஒரு காலனித்துவ நாடாகவே இன்று வரை பார்க்கின்றன. அப்படியே கனடா அவர்களை இன்றுவரை நடத்துகின்றது. ஒவ்வொரு முதற்குடி அல்லாத கனடியருக்கும் கிடைக்கும் கல்வி, நலம், பாதுகாப்பு இவர்களுக்கு இல்லை. இவர்களின் கல்வி நிலை படு மோசமானது, இவர்கள் வாழ்நாள் எதிர்பார்ப்பு குறைவானது, தற்கொலை விகிதம் அதிகமானது, குடி-போதை-ஏழ்மை மிக அதிகம். இந்த சிக்கல்கள் எல்லாவற்றுக்கும் முதற்குடிமக்களே காரணம், அவர்களின் அரசியல் முறை அல்லது மேலாண்மை முறை காரணம் என்பது தற்போது அரசாங்கம் கூறும் சாட்டு ஆகும். அது ஒரு முக்கிய காரணம் ஆக இருந்தாலும் அடிப்படைக் காரணம் என்பது இந்த முதற்குடி நாடுகளில் தன்னாட்சி உரிமை பற்றியது,அவர்கள் தமது அரசியல் பொருளாதார முடிவுகளை கட்டுப்படுத்துவதற்கான உரிமைகள் பற்றியது. இது திட்டமிட்டு இவர்களுக்கு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

இன்று கனடா ஒரு செல்வ நாடாக இருக்கின்றது என்றால், அது முதற்குடிமக்களின், அவர்களின் வளங்களின் சுரண்டலில் அமைந்தது என்றால் அது மிகை ஆகாது. அந்தச் சுரண்டல் தொடர வேண்டும் என்றால், அவர்கள் இன்னும் பலம் இல்லாதவர்கள் ஆக தொடர்வது அவசியம் ஆகிறது. அதனால் தான் அந்தக் குமுகங்கள் வளர்வதைப் பற்றி கனடிய அரசுகள் அக்கறை காட்டுவதில்லை.

கனடாவின் அதிகாரப் படிநிலையில் அடிநிலையில் இந்த மக்கள் இருக்கிறார்கள். அண்மையில் குடியேறிய தமிழர்கள் போன்றோரின் சராசரி வாழ்கைத் தரம் கூட இவர்களின் வாழ்கைத் தரத்தை விட பல மடங்குகள் உயர்ந்தது. நாம் கனடா எவ்வளவு ஒரு பல்லினப் பண்பாட்டு சொர்க்கம் ஆக காட்ட முயன்றாலும், இந்த அதிகாரப் படிநிலை உள்ளது என்பது உண்மை. உயர்வில் யூதர்கள், பிரித்தானிய வெள்ளையர்கள், பிரெஞ்சுக் காரர்கள், இடையில் பிற ஐரோப்பியர்கள், அதன் பின் ஆசியர்கள், கறுப்பர்கள், முதற்குடிமக்கள். குடிவரவாளர்களைப் பொறுத்த வரையில் நாம் இதை ஏற்றுக் கொள்கிறோம். படித்தால், உழைத்தால் உயராலாம் என்ற நம்பிக்கை, அதற்கான வாய்ப்புக்கள் எமக்கு உள்ளன. ஆனால் முதற்குடிமக்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. இது அவர்களின் தேசம், அவர்களின் வளங்கள். ஆனால் பிறர் எல்லோரையும் விட வசதிகளும் வாய்ப்புக்களும் அற்றவர்களாக முதற்குடி நாடுகள் உள்ளன.

ஒரு நாடு, அல்லது நாடுகள் தமது மொழியை, பண்பாட்டை, பொருளாதார அரசியல் முறைமைகளை இழக்கும் போது அவர்களுக்கு கிட்டும் துன்பத்தை, அவலத்தை வட தென் ஆப்பிரிக்க உருசிய சீன முதற்குடிமக்களையும், ஈழத் தமிழர்களையும் பார்த்து நாம் உணர முடியும். இவர்களுக்கு நாம் உணர்வுத் தோழமையை, ஆதரவுவை வழங்க வேண்டும். அவர்களின் உரிமைகள் மதிக்கப்படும் வண்ணம், வாழ்நிலைகள் உயரும் வண்ணம் நாம் செயற்பட வேண்டும்.

Labels: , ,

0கருத்துக்கள்

Post a Comment

<< Home