<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Thursday, September 29, 2011

சதாவின் கடிதம்: வன்முறைப் போராட்ட வழிமுறையில் சிதைக்கப்பட்டவர்கள்

ஈழப் போராட்டத்தில் 1970 களின் இறுதிகளுக்குப் பின்பு அறவழிப் போராட்ட வழிமுறைகள் எவையும் உறுதியான முறையில் நேர்மையான முறையில் யாராலும் முன்னிறுத்தப்படவில்லை. இயக்கங்களாலும் சரி, அவற்றை வளர்த்த இந்திய உளவு நிறுவனம் ஆனாலும் சரி, அரசியல் கட்சிகள் ஆனாலும் சரி அறவழிப் போராட்ட வழிமுறைகளைப் பொருட்படுத்தவில்லை. இதன் காரணமாக வன்முறைக்குப் பதில் வன்முறை என்று நாம் ஈழத் தமிழர் இனப்படுகொலை வரைக்கும் தள்ளப்பட்டோம்.

அந்த வன்முறைப் போராட்டத்தின் உச்ச வடிவம் விடுதலைப் புலிகளே. விடுதலைப் புலிகளின் அடிப்படைக் கருத்தியல் என்பது வன்முறையிலானது, அதிகாரத்திலானது. அதிகாரத்தால் எதையும் வெல்லாம் என்பதுவே அது. இந்த வன்முறையும், அதிகாரமும் இலங்கை அரசின் கோரத்தை எதிர்த்த போது தமிழ் மக்கள் அவர்களோடு அணி திரண்டார்கள். அதுவே உள்ளே திரும்பிய போது விளைந்ததே சகோதர இயக்கப் படுகொலைகள், சர்வதிகார அடக்குமுறைகள். இந்த வகையில் பெரும்பாலான மற்ற இயக்கங்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளை விட பல மடங்கு மோசமானவர்கள், சற்றும் ஒழுக்கம் அற்றவர்கள்.

இந்த வன்முறைப் போராட்டத்தின் உரமாக 25000 மேற்பட்ட போராளிகளின் உயிர்கள் கொடுக்கப்பட்டன. 11 500 வரையான பேர் இலங்கைப் படைத்துறையிடனரிடம் சரணடைந்தார்கள். இவர்களின் கணிசமானவர்கள் மிகக் கொடுமையான தண்டனைகளுக்குப் பின்பு விடுவிக்கப் பட்டுள்ளார்கள். மேலும் பெருந்தொகையினர் இன்னும் தண்டனை அனுபவிக்கிறார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவது அனுபவிப்பார்கள். விடுவிக்கப் பட்ட போராளிகளை யாழ் தமிழ்ச் சமூகம் மிகக் கேவலமாக நடத்துகிறது. எந்தவொரு நாடோ, எந்தவொரு மக்கள் சமூகமோ தமது போராளிகளை ஒருபோது இழிவுபடுத்தாது. தலைமைகள் எந்தளவு பிழையாக இருந்தாலும், சுத்த போராளிகளை இழிவுபடுத்துவது போல கொடுமை எதுவும் இல்லை. ஒரு வகையில் இந்தப் போராளிகள் மறக்கப்பட வேண்டியவர்களாக, மறைக்கப்படவேண்டியவர்களாக மாறிவிட்டனர்.

சதாவும் இப்படிப் பட்ட ஒரு போராளிதான். ஆனால் இவன் ஈழத்துக்கு அப்பாலேயே செயற்பட்டவன். இங்கு (ரொறன்ரோவில்) தமிழ் இளையோர் அமைப்பின் தலைவராக செயற்பட்டவன். இவனை வலை விரித்து இலங்கை அரசும் ஐ.அ உளவுத்துறையும் கைதுசெய்து 25 ஆண்டுகள் சிறைவைத்துள்ளன. கனடாவில் ஒரு பெரும் தமிழ்ச் சமூகம் இருந்தும், இவனது கைதும் சிறையும் இங்கு யாரையும் உசுப்பவில்லை. அண்மையில் அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் இங்குள்ள "தலைமைகளால்" தான் பயன்படுத்தப் பட்டதாகவும், தமக்குள் வெறுப்பு விதைக்ப் பட்டதாகவும் கூறியுள்ளார். நடந்த பல சந்திப்புக்களில் சுமூகமான எந்த தீர்வுக்கும் இடம் கொடுக்கப் படவில்லை என்றும், வெற்றி என்ற இலக்கைக் காட்டி உணர்வை உசுப்பி இளையவர்களை தலைமைகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் கூறுகிறார். இவரது மதிப்பீடுகள் மிகச் சரி என்றே கருதுகிறேன். மேலும், இளையவர்கள் வன்முறையில் இருந்து விலக வேண்டும் என்றும், விடுதலைப் புலிகளின் கருத்தியலில் இருந்து விலக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார்.

அவரின் கடிதத்தின் கனத்தை, அதன் பின் இருக்கும் வலியை உணர முடிகிறது. ஆனால் ஒரு முக்கிய இடத்தில் வேறுபடுகிறேன். இந்தக் கடிதத்தில் அடிமைகள் பயன்படுத்திய வன்முறையைப் பற்றி மட்டும் குறிப்படுகிறார், அடக்குமுறையாளர்கள் பயன்படுத்திய, பயன்படுத்தும் வன்முறையையும், கருத்தியலையும், வெறுப்பையும் பற்றிக் குறிப்பிடவில்லை. "சமதானமும் இணக்கப்பாடும்" சமாதானமும் அபிவிருத்தியும் என்ற இலங்கையின் தற்போதைய அரசியல் கோசங்களைக் குறிப்பிடுகிறார், ஆனால் உண்மை, உரிமைகள், விடுதலை பற்றிக் குறிப்பிடவில்லை. உண்மை இல்லாத இணக்கப்பாடு என்பது போலியானது. விடுதலை, தமிழ் மக்களின் நியாமான உரிமைகள் என்பவை விடுதலைப் புலிகளோடு முடிந்துவிடுபவை அல்ல. தோற்றவர்கள் மீது, பாதிக்கப்பட்டவர்கள் மீது எல்லா குற்றங்களையும் சுமத்துவது என்பது தீர்வு அல்ல. தமிழ் மக்களின் போராட்டங்களுக்கான காரணங்கள் அனைத்தும் இன்றும் நிலைத்து நிற்பவை. இலங்கைப் பத்திரிகைகளில் சில தமிழ் மக்களின் கருத்துமாற்றங்கள் பற்றி நேர்காணல்கள் முன்வைக்கும் சிங்கள பேரினவாதப் பத்திரிகைகள் எவைதானும் ஒரு சிங்களப் போரினவாதியின் கருத்துமாற்றம் பற்றியும் இன்னும் ஒரு நேர்காணலைத்தானும் வெளியிடவில்லை.

நாம் சதாவின் கடிதத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். வெறுப்பு எமக்குத் தேவையில்லை. வன்முறை எமக்குத் தேவையில்லை. நாம் சிந்தித்து
செயற்படவேண்டும்.

எமது கடந்த காலத்தை ஆய்வுக்கு உட்படுத்தி ஒரு நேர்மையான போராட்ட வழிமுறையை நாம் கட்டமைக்க வேண்டும். வன்முறையற்ற, மனித உரிமைகளை மதிக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப அந்த விழுமியங்களின் அடிப்படையிலான போராட்ட வழிமுறைகளே எமக்குத் தேவை.

சதா படித்த பள்ளியில் நான் இரண்டு ஆண்டுகள் கல்வி கற்றவன். அவன் ஒரு சிறந்த உதைப்பந்தாட்ட வீரன். நன்றாக கணக்குச் செய்வான். தமிழ் மீது அவனுக்கு ஒர் ஈர்ப்பு. இவ்வாறுதான் அவனைப் பற்றிய நினைவுகள் என்னிடம் உள்ளன. அவன் தனது இளமையை சிறையில் துலைப்பது என்பது என்னை இடிக்கும் ஒரு நிலைமை.

ஒடுக்குமுறைக்கும், அடிமைத்தனதுக்கு எதிராக போராட்டாமல் இருப்பதை விட எந்த வழியாலும் எதிர்ப்பது நன்று. ஆனால் அறவழிப் போராட்டமே மனித இனத்துக்கு சார்பானது. அறவழிப் போராட்டம் என்றால் இலகுவானது, வேகமானது, இழப்புகள் இல்லாதது என்பது பொய். அங்கேயேயும் இழப்புக்களும் அர்ப்பணிப்புக்களும் அதிகம் தேவைப்படும். ஆனால் நாம் எட்ட நினைக்கும் இலக்குகளுக்கும் அதற்கான வழிமுறைகளுக்கும் அங்கே முரண்ப்பாடு இருக்காது. அவ்வாறு என்றும் இருக்கக் கூடாது.

Labels: , ,

0கருத்துக்கள்

Post a Comment

<< Home