கனடாவில் வேகமாகச் சாகும் தமிழ்
புகலிடச் சூழலில் தமிழ் மொழி பேணுதலின் வரலாறு வெற்றிகளையும் தோல்விகளையும் கொண்டதாக இருக்கிறது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்களில் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் மொழி பேணுதல் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. ஆனால் தென்னாப்பிரிக்காவில், மொரிசியசில், சீசெல்சில், மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளில் தமிழ் மொழி பேணுதல் தோல்வி கண்டது. காலனித்துவ முறைமையின் வேறுபாடுகள், தூரம், தொழில்நுட்ப வசதிகள் போன்றவை இந்த வேறுபாட்டை விளக்கலாம். இந்த வரலாற்றுப் பின்னணியில் 1980 களுக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்க, ஐரொப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் தமிழ் மொழிப் பேணலையும் பார்க்கலாம்.
கனடாவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் வசிக்கும் தமிழர்கள் தமிழ் மொழிப் பேணுதல் பற்றிச் சற்றும் அக்கறை கொண்டு செயற்படவில்லை. இது ஆங்கில மயச் சூழலின் காரணமாகத் தோற்றம் தந்தாலும், அனைத்து பிற வசதிகளைக் கொண்டிருந்தும் இவர்கள் ஏன் முயற்சிக்கவில்லை என்பதை நாம் நோக்க வேண்டும். வசதிகள் இருந்தும் இங்குள்ள தமிழ் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களின் விழுக்காடு 20-25% தாண்டாது. தனிப்பட்ட அனுபவத்தில் இங்கு பிறந்த சிறுவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு தமிழில் பேச, வாசிக்க, எழுதத் தெரியாது. இவர்களே பெரும்பான்மை. சிலருக்கு தமிழ் விளங்கும் ஆனால் கதைக்க சிரமப்படுவார்கள். மேலும் சிலர் பேசுவார்கள் ஆனால் எழுதவோ வாசிக்கவோ தெரியாது. தமிழ் வகுப்புகளுக்குப் போறவர்களுக்கு தமிழ் எழுத்துக்களை அடையாளம் காணத் தெரியலாம், ஆனால் சில விதி விலக்குகளைத் தவிர தமிழ் மொழி அவர்களின் அறிவிற்கு எந்தப் பங்களிப்பையும் செய்வதில்லை.
இப்போது எல்லாம் தமிழ்த் திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் கீழே ஆங்கில எழுத்தில் உரையாடல்களைப் போடுவதால், அந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் போகிறது. அம்மாக்கள், அப்பப்பாக்கள் இருப்போரும் கூடச் சிறுவயதில் தமிழ் பேசிவிட்டு, பின்னர் மறந்து விடுகிறார்கள். பல அம்மாக்கள் அவர்களுக்கு தமிழ் சொல்லித் தர வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தாலும், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு குழந்தைகள் அவர்களோடு தமிழில் தொடர்பாட முடியாமல் போய்விடுகிறது.
அவருக்கு தமிழ் தெரியும், அவர் படிக்க வேண்டியதில்லை. அவருக்கு பிரெஞ்சு, வயலின், கரத்தோ என்று நிறைய வகுப்புகள் உள்ளன, தமிழையும் சேற்பது தேவையற்ற சுமை. சிறுவயதில் தமிழைப் பேசினா, பிள்ளை பள்ளியில் சிரமப்படுவான். தமிழைப் படிச்சு என்ன செய்வது? இவைதான் பெற்றோர்களின் காரணங்களகாக இருக்கின்றன.
தமிழ் வீட்டு மொழியாக ஒரு காலம் வரை இருந்தாலும், பிள்ளைகள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள கொள்ள வீட்டு மொழி ஆங்கிலத்திற்கு தாவி விடும். சில தீவர சமயப் பற்றுப் பெற்றோர்கள் தேவாரங்களையும், சமசுகிருத மந்திரங்களையும் பிள்ளைகளுக்கு மனப்பாடம் செய்வித்து விடுவர். பிள்ளைகளைப் பொறுத்த வரையில் இரண்டுக்கும் ஒரே அளவு புரிதல் நிலைதான். தற்போது கிறித்தவ வழிபாடுகளும் தமிழில் அருகி வருகின்றன. உறவினர்களோடு ஊடாடும் போதும் காலப் போக்கில் ஆங்கிலப் பயன்பாடே அதிகரிக்கிறது. ஆங்கிலத்தில பேசிறது இங்கேயும் ஒரு வர்க்கத் தரத்தை வெளிப்படுத்துவாதக கருதப்படுகிறது.
இதே நிலை பிரான்சிலோ, நோர்வேயிலோ, யேர்மனியிலோ இல்லை. அண்மையில் பிரான்சில் 4000 மாணவர்கள் ஒரே சமயத்தில் தமிழ் மொழித் தேர்வு எழுதினார்கள். பெற்றோர்கள் மாணவர்களை கொண்டு வந்து காத்து இருந்து கூட்டிச் சென்றார்கள். நேர்வேயில் தமிழ் தாய் மொழி மாநாடு ஒன்றை அவர்கள் நடத்தினார்கள். யேர்மனியில் பெரும்பான்மைப் பிள்ளைகள் தூரத் தூர இருந்தும் தமிழ் வகுப்புகளுக்குச் செல்கிறார்கள். ஐக்கிய இராச்சியம் தவிர்த்து பிற ஐரோப்பிய நாடுகளில் இந்த நிலைமை இருக்கிறது எனலாம்.
எல்லாத்தையும் ஆங்கிலத்தில் பெற முடியும் என்ற நினைப்பிலோ என்னவோ, இங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் மொழி பெறுமதி அற்ற ஒன்றாக மாறி வருகிறது. எதனால் நாம் புலம்பெயர்ந்தோம் என்ற நினைவு அழிந்துபோய்விட்டது. தமிழ் மொழியின் பெறுமதியை, மதிப்பை, பயன்பாட்டை உணர்த்த வேண்டும், உயர்த்த வேண்டும். தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிப் பேண வேண்டும். தமிழ் கற்பித்தல் தொடர்பாக புத்தாக்கங்கள் செய்யவேண்டும். வீட்டில் தமிழ், தமிழர் நிகழ்வில் தமிழ் என்பதை உரக்கப் பரப்ப வேண்டும். தமிழ் மொழி ஒரு மொழி மட்டும் அல்ல, அது ஒரு உறவு, உணர்வு, அறிவு, வரலாறு. ஆனால் கனடாவைப் பொறுத்த வரையில் தமிழின் உறவை நாம் துண்டித்து அவர்களைத் தொலைத்துவிடுகிறோம். தமிழ் இங்கு மெல்லச் சாகவில்லை, வேகமாக நாங்களே சாகடித்துக் கொண்டிருக்கிறோம்.
Labels: தமிழ்
1கருத்துக்கள்
நற்கீரன்,
தமிழ்மொழிக்கான சங்கீதம் என்று ‘எந்துரோ மகானுபவலு’ சொல்லிக்கொடுத்துப் பிள்ளைகளைப் பாடவைத்துக் கேட்டுமகிழ்கிறவர்கள் இருக்கிறார்கள். இங்கே மொழிப்பற்று என்பதெல்லாம் வெறும் படம்காட்டலே
Post a Comment
<< Home