நாம் அழிந்துபோனவர்கள்
வரலாறே இதை பதிவு செய். நாம் அழிந்துபோனவர்கள். உள்ளிருந்தும் வெளியிருந்தும் அழிக்கப்பட்டவர்கள்.
எமக்கு தெரிவுகள் இல்லாமல் எம்மேல் திணிக்கப்பட்டது சிங்கள பெளத்த அரச பேரினவாதம். நாம் பிறக்கும் முன்பே போருக்குள் பிறந்தோம். அறவழியில் போராடினோம். ஆயுதவழியில் போராடினோம். இரண்டிலும் நாம் தோற்றோம்.
நாம் கேட்டது என்ன. எம் நிலங்களை வீடுகளைக் கேட்டோம். எம் மொழியைக் கேட்டோம். எம் கல்வியைக் கேட்டோம். எம் நம்பிக்கைகளை, பண்பாட்டை மதிக்கக் கேட்டோம். இந்த நியாயங்கள் எல்லாம் பொய்யானவை. சும்மா. சுத்துமாத்துக்கள் என்று எம்மை அழித்து விட்டார்கள்.
யார் எம்மைக் கொன்றார்கள். சக இயக்கப் படுகொலைகளாய் நாம் எம்மை அழித்துக்கொண்டோம். எம்மை காட்டிக் கொடுத்த காக்கைவன்னியர்களால் கொல்லப்பட்டோம். எம் முன்னோர் தேசம் எம்மை வளர்த்துக் கொன்றது. சீனா, உருசியா என்று இடதுசாரி கொள்கை போதித்தவர்கள் கொன்றார்கள். ஈரான், பாகிசுத்தான் என்று சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்ட நாடுகள் எம் கொலைகளுக்கு உதவி செய்தன. அமெரிக்க பேரசு சேர்ந்தியங்கி கொன்றது. இறுதியாக சிங்கள பெளத்த பேரினவாத அரசு கொன்றது.
எம்மேல் குற்றங்கள் உண்டு. அதற்காக நாம் எல்லோரு ஒட்டுமொத்த தண்டனையாக இந்த அழிவை ஏற்றுக் கொள்கிறோம்.
தமிழர் என்ற சமூகம் இறந்துவிட்டது. நாம் சமூகமாக, இயக்கமாக செயற்பட்ட காலம் முடிந்துவிட்டது. எம்மில் பலர் எப்போதும் இயங்கியது போல, நாம் இனி தனிகளாக, தன்னலமே தலைமையாக அலைவோம். வரலாறே பதிவு செய். ஈழத் தமிழ்ச் சமூகம் இறந்து போனது எண்டு என்று.
0கருத்துக்கள்
Post a Comment
<< Home