<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Saturday, October 08, 2005

பண்பாடு என்ற திறந்த மூலம்

பண்பாடு ஒரு திறந்த மூலம். அதன் கூறுகளை யாரும் பயன்படுத்தி பயன்பெறலாம், பணம் பண்ணலாம். அதுவே திறந்த மூலம் என்பதன் அடிப்படை. ஆனால், அனைவரும் பண்பாட்டை மேன்படுத்தவே முயல்வர் என்பதும் திறந்த மூலத்தின் இன்னுமொரு அடிப்படை அனுமானம்.

அரசியல் இயக்கங்கள், சினிமா, சமயங்கள் ஆகியவை தமிழ் பண்பாட்டை தமது இலக்குகளுக்கு பயன்படுத்தியது யாரும் அறிந்ததே. அப்படி பயன்பட்டு நிற்பதே தமிழ் பண்பாட்டு இருப்பின் நோக்கமும் ஆகும். தமிழ் மொழியை தி.க பயன்படுத்தியது, பாதுகாத்தது. தமிழ் கலைகளை சினிமா பயன்படுத்துகின்றது. "சைவமும் தமிழும்", தமிழ் மூலம் மதம் பரம்பல் போன்றவற்றுக்கு தமிழ் பயன்பட்டது, பயனும் பெற்றது. புலிகளின் ஈழ தேசிய கோரிக்கைகளும் தமிழ் தேசியம் ஆகின.

பண்பாடு என்ற கருப்பொருளுடன் இணைந்துருப்பது முன்னேற்றம். பண்பு பெற்று இருப்பதுவே பண்பாடு ஆகும். எமது அறிவு வளர, எமது பார்வைகள் விரிய எமது பண்பாட்டை மேன்மைபடுத்தி செல்வதே இயல்பாக வேண்டும். பண்பாட்டை ஒரு பரிணாம வளர்ச்சி பார்வையில் பார்ப்பதே சரி. தனி மனித உரிமைகளிற்க்கு மதிப்பளிப்பது, மனித உரிமைகளை பாதுகாப்பது, பொது நலன்களை பேணுவது ஆகியவை பண்பாட்டின் கூறுகளே தவிர பண்பாட்டுடன் போட்டி போடும் கருப்பொருள்கள் இல்லை.

தமிழ் பண்பாட்டில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆணின் அருவருடியாகவும், தன்னை பாதுகாக்க முடியாதவளாகவும், இயல்பில் பலன், அறிவு அற்றவளாகவும் முன்பொரு காலம் தமிழ் பண்பாட்டில் பெண்கள் கருதப்பட்டு வந்தார்கள் என்பது உண்மையே. ஆனால் இன்றைய நிலமை அதுவல்ல. அப்படி யாரும் கருதுவேயானார்களானால் அது தனி பெண்களின் குறைபாடே இன்றி தமிழ் பண்பாட்டின் குறைபாடு இல்லை. பெண்கள் ஆண்களுக்கு எவ் வகையிலு நிகர் ஆனவர்களே என்பது நடமுறையிலும், சட்டத்திலும், தமிழ் பண்பாட்டிலும் நிரூபிக்கப்பட்ட ஒரு நிலை.

பண்பாடு ஒரு திறந்த மூலம் ஆகினும் அதில் அதிகார வர்க்கத்தின் ஆழுமை அதிகம் இருப்பது எதிர்பார்த்த ஒன்றே. அவர்கள் பண்பாடு இதுவே என்று வரையறை செய்து எளிய மக்களின் வாழ்வியல் முறைகளை வரையறை செய்ய முயல்வது ஒன்றும் புதிதல்ல. இன்றைய ஒரு அதிகார வர்க்கம் சினிமா. அவர்களில் சிலருக்கு ஒழுக்கத்துக்கும் பண்பாட்டு பழமைக்கும் வித்தியாசம் காண முடியாமல், ஒரே முடிச்சு போட்டு தூக்கி எறிவது அவர்களின் குறைபாடேயாகும். அவ் வித்தியாசங்களை அலசாமல், முற்போக்கு என்ற கருதி அவ் சிலரின் நிலைப்பாட்டை ஆதரிப்போர் தவறுதலான புரிதல் கொண்டிருக்கின்றார்கள்.

ஒழுக்க மீறல்களையும் பண்பாடு என்ற வரையறைக்குள் கொண்டுவர முனைவது, பண்பாடு என்ற சொல்லின் அர்த்தத்தை சிதைக்கின்றது. பண்பாட்டின் ஒரு உயர் கோட்பாடான தனி மனித சுதந்திரத்தை கருத்தில் கொண்டு ஒழுக்க மீறல்களை அனுமதிக்கலாம், ஆனால் அதை பண்பாடு என்று ஏற்றுகொள்ள முடியாது.

(இப் பதிப்பு தமிழ்மணத்தில் சமீபத்தில் அலசப்பட்டு வருகின்ற உரையாடல்களின் உந்தலால் பதியப்பட்ட ஒன்றே.)

2கருத்துக்கள்

At 10:20 AM, Blogger மு. மயூரன் said...

பண்பாடு திறந்த மூலமாக இருக்குமானால் எல்லாருக்கும் மகிழ்ச்சியே.
ஆனால் அது அப்படி இல்லை.
"பண்பாட்டின் காவலர்"களாக தம்மை வரித்துக்கொண்டவர்கள் எப்போதுமே அதில் மாற்றங்கள் செய்ய அனுமதிப்பதில்லை.
நீங்கள் பரிந்துரைக்கும் மாற்றங்கள், அவர்களது அதிகார நலன்களுக்கு ஏற்புடையதல்லவெனில், அது நிராகரிக்கப்படுவதோடு உங்களுக்கு தண்டனையும் கிடைக்கும்.

தமிழர் பண்பாடு, சிங்களப்பண்பாடு என்பதையஎல்லாம் தெளிவாக வையறுத்து யாரும் வைக்கவில்லை.
ஆளாளுக்கு ஒவ்வொரு மூலத்தை வைத்துக்கொண்டு அலைகிறார்கள்.
(பண்பாட்டு ஆணைமூலத்துக்கு காம்பைலர்கள் எதுவும் இருந்தால் தெளிவான எல்லைகள் கிடைக்கலாம்)

so called தமிழர் பண்பாடு இன்னமும் அதிகாரவர்க்கத்தின், ஆண்களின் கைகளில், அவர்களுக்கு சார்பாகவே இருக்கிறது.
தனித்தனியாக தமிழ் பெண்கள் உரிமைகள், உரிமை பற்றிய பிரக்ஞை கொண்டிருக்கலாம். அவர்கள் எண்ணிக்கையிலும் அதிகம் என்று வைத்துக்கொள்வோமே.

பண்பாடு எப்போது அத்தகைய உரிமை பெறலையும் விடுதலையையும் அங்கீகரிக்கவில்லை.
அங்கீகரிக்கப்போவதுமில்லை.

பண்பாடு என்றைக்கும் திறந்தமூலம் இல்லை.
அது மிக இறுக்கமாக, அதிகாரிகளின் கைகளில் உள்ள மூடிய மூலம்.

நீங்கள் அதை விலகி, எதிர்த்து எதிர் பண்பாட்டை உருவாக்கி, சில வேளைகளில் வாழ்கிறீர்கள் அவ்வளவே.

பண்பாடு ஒரு freeare. அதிலும் மேலாக ஒரு malware.

 
At 11:07 AM, Blogger நற்கீரன் said...

மு. க. கஜனி காம்கி கருத்துக்கு நன்றி.

மயூரன்:
பண்பாட்டின் காவலர்கள் யார், பயனாளர்கள் யார், உருவாக்குபவர்கள் யார்? நீங்களே, நாங்களே. இயக்கங்கள், கட்சிகள், சினிமா கலைஞர்கள், எழுத்தாளர்கள், நாட்டார் கலைஞர்கள், அறிவிலாளர்கள், வியாபாரிகள், தொழிலாழிகள் என அனைவரும் பண்பாட்டுடன் தொடர்பு கொண்டிருக்கின்றார்கள். எமது இருப்பின் ஒரு அங்கமே பண்பாடு.

தமிழர் பண்பாடு இதுதான் என்ற ஒரு இறுகிய வரையறை கிடையாது, அனால் அதற்கான ஒரு தத்துவம், போக்கு உண்டு. எப்படி தமிழ் சிங்கள மொழியிலிருந்து வேறுபட்டு நிற்கின்றதோ, அதேபோல் தமிழர் பண்பாடு வேறுபட்டு நிற்கின்றது. வேறுபாடு மேலான்மையையோ, அல்லது அடிமைத்தனத்தையோ இங்கு சுட்டவில்லை.

தமிழ் பண்பாடு வரலாற்றில் இன்று இருக்கின்றது. நாளை அது மருவி, மாறி போகலாம், பிற பண்பாடுகளோடு கலந்து போகலாம், தன்னை தானே அழித்தும் போகலாம். அது அப் பண்பாட்டில் தங்களை அடையாளம் கொள்பவர்களின் தெரிவில் இருக்கின்றது.

மயூரன்:
யார் பண்பாட்டின் காவலர்கள்?
என்ன மாற்றம் செய்ய விரும்புகின்றீர்கள்?
எந்த அதிகாரிகளின் கையில் பண்பாடு இருப்பதாக உணர்கின்றீர்கள்?

 

Post a Comment

<< Home