புலம்பெயர் ஊர் ஒன்றியங்கள்
புலம்பெயர் தமிழ் மக்கள் தாங்கள் வந்த ஊர் அடிப்படையிலும் வாழும் ஊர் அடிப்படையிலும் அமைப்புக்கள் உருவாக்கி செயல்படுகின்றார்கள். இவ் அமைப்புக்கள் பழைய உறவுகளை மீள் கட்டமைப்பதிலும், புதிதாக இணைப்புக்களை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாயகத்தில் இருக்கும் மக்களுடன் தொடர்புகள் பேணுவதிலும், தேவையேற்படின் உதவிகளை பரிமாறி கொள்வதற்க்கும் இவ் ஒன்றியங்கள் வழிசெய்கின்றன. தேசிய பாரிய அமைப்புக்களிலும் பார்க்க ஊர் ஒன்றியங்களின் செயல்பாடுகள் நேரடியான செயல்பாட்டுக்கு வழி செய்கின்றன. இவ் ஊர் ஒன்றியங்களின் செயல்பாட்டில் ஒரு முக்கிய அம்சம் ஊர் ஒன்றுகூடல்கள் ஆகும்.
தோற்றம்
ஆரம்பத்தில் புலம்பெயர் மக்கள் புலம்பெயர் தமிழர் என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள். குறிப்பாக தமிழ் சங்கங்கள் தாங்கள் வசிக்கும் பிரதேசத்தில் இருக்கும் தமிழ் மக்களை இணைக்கும் நோக்கில் செயல்பட்டார்கள். நாளடைவில் மக்கள் செறிவு பெருக்கத்தால் நெருகிய தொடர்பிலான அமைப்புக்கள் தோன்றின. இவற்றுள் தொழில், ஈடுபாடுகள், இலட்ச்சிய, ஊர் அடைப்படையிலான அமைப்புகள் அடங்கும்.
தொலைதொடர்பு வசதிகள், இணையம், போக்குவரத்து வசதிகள் ஆகியவை இவ் ஊர் ஒன்றியங்களின் தோற்றத்துக்கும் பேணலுக்கும் முக்கியம். இவ் தொழிநுட்பங்கள் வளர்ச்சியடையாத காலகட்டங்களில் ஏற்பட்ட புலப்பெயர்வுகள் ஊர் அடிப்படையிலான ஒன்றியங்களை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊர் சார் ஒன்றியங்கள் தமிழ் மக்களுக்கு தனித்துவமானது அல்ல. சீன, யப்பானிய, மற்றும் பிற இன மக்களும் ஊர் அடிப்படையிலான அமைப்புக்களை கொண்டிருக்கின்றார்கள்.
கட்டமைப்பு
ஊர் ஒன்றியம் அவ் ஊர் சார்ந்த குடும்பங்களை, தனி நபர்களை உறுப்பினர்களாக கொண்டடிருக்கின்றன. இவ் உறுப்பினர்களின் பொருளாதார பங்களிப்பின் மூலமே ஒன்றித்தின் செயல் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இவ் ஒன்றியங்கள் ஒரு இலகிய நட்பின் அல்லது உறவின் அடிப்படையிலான கட்டமைப்பையே பேணுகின்றன. எனினும், சில பெரிய ஊர்களின் அல்லது சீரிய செயல்பாட்டு நோக்கங்கள் கொண்டிருக்கும் ஊர் அமைப்புகள் சீரிய அல்லது பலக்கிய கட்டமைப்புகளை பேணுகின்றன. பொதுவாக, தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாளர், தொடர்பாளார்கள், தொண்டர்கள் ஆகியோரை கொண்ட ஒருங்கிணைப்பு மன்றம் ஊர் ஒன்றியத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும்.
செயல்பாடுகள்
ஊர் ஒன்றியங்களின் செயல்பாடுகள் ஆறு முனைகளில் அமைகின்றது எனலாம்:
ஒன்றிய நிர்வாகம்
தாயக உதவி
ஒன்றுகூடல்
தொடர்பாடல்
பொது வாழ்வியல்நீரோட்ட இணைப்பு
பண்பாடு பேணல்
சமூக தாக்கம்
ஊர் ஒன்றியங்கள் வந்த இடத்துக்கும் வாழும் இடத்துக்கும் இருக்கும் இடைவெளியில் இயங்குகின்றன. இவற்றின் செயற்பாடுகள் வந்த இடத்துகான பாலமாக அமைந்தாலும், வாழும் இடத்துடன் இணைப்புக்களை இறுக பேணும் படியாகவும் செயல்படவேண்டும். இவற்றின் தாக்கங்கள் புலம்பெயர்ந்தவர்களையும், ஊர் மக்களையும் சென்றடைகின்றன. பல வழிகளில் புலம்பெயர் ஊர் ஒன்றியங்கள் ஊர் மக்களின் நலன்களுக்கு உதவிகளை அழித்தாலும், புலம்பெயர்ந்தவர்களின் ஆவல்கள் ஊர் மக்களின் நேரடி தேவைகளுடன் ஒன்றியமையாமலும் அமைவதுண்டு, குறிப்பாக அரசியல் நிலைப்பாடுகளில்.
பல் கலாச்சார, உலகமயமாக்க, தேசிய சக்திகளின் மத்தியில் ஊர் ஒன்றியங்கள் கீழே இருந்து மேலே நோக்கும் அமைப்புக்களாக இயங்குகின்றன. இவற்றின் செயல்பாடுகள் பரந்த அமைப்புகளுக்கு கிடைக்ககூடிய வலுவை அல்லது ஆதரவை சிதைக்ககூடிய போக்குக்களையும் கொண்டுள்ளன. அதேவேளை பரந்த அமைப்புக்களுடன் கூட்டாக கூடிய செயல்வலுவுடன் இணைந்து செயலாற்றும் தன்மையையும் கொண்டுள்ளன.
2கருத்துக்கள்
நல்ல ஆய்வு நற்கீரன். இயங்கும் பல மன்றங்களைப்பற்றி எனக்கு மிகுந்த வருத்தமுண்டு. என் அனுபவம்(என்னைப்பொறுத்தவரையில்)நகைப்புக்கிடமாயிருப்பினும் மனங்களும் நோக்குகளும் குறுகுவதன் வெளிப்படுத்தல் தான் அது என்பது போல எனக்குத் தோன்றுகிறது.
பொதுவான (ஏதோ) ஒன்றின் (ஊர், மொழி இன்ன பிற) நிமித்தம் உருவாக்கப்படும் இந்த ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டு சில ஆண்டுகளின் பின்னரும் தாம் உருவாகக் காரணமாயிருந்த ஒற்றுமையைத் தம் அடித்தளமாக கொண்டுள்ளனவா? ஐம்பது பேர் சேர்ந்து தொடங்கும் ஒரு தமிழ் மன்றமோ நற்பணி மன்றமோ இருவரிடையே எழும் கருத்து வேறுபாடுகளால், அவற்றைப் பேசித்தீர்த்து சுமுகமா கொண்டு நடத்தப்படாதவிடத்து "உன் சங்கம்தானா இருக்கென்று நினைக்கிறாய், நானும் தொடங்குகிறேன் பார்" என்கிற ரீதியில் இன்னொன்றையும் தொடங்கி இரண்டுபடுவது எமக்குப் புதிதல்லவே. இவை பண்பாடு கலாச்சாரம் என்ற பெயரில் நடத்தும் கூத்துகளும் காலத்துக்கேற்ப மாற்றங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்து பிள்ளைகளில் திணிப்பவையும் என்ன விதத்தில் அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரியாக அமைந்து சரியான வழியை, தேவையான மாற்றங்களை வாழ்விலே கொண்டிணைத்துச் செல்லவும் கற்றுக் கொடுக்கும்? ஒன்றிலிருந்து பிரிந்ததில் இப்போது இருக்கும் இரண்டு (ஏதோ)சங்கத்தில் ஒரு பிள்ளையைக் கேளுங்கள்..நீங்க ஏன் மற்றச்சங்கத்துக்குப் போறதில்ல? பிள்ளைக்கு பெரியவர்களின் கருத்துவேறுபாடு பறித்தெரியுமா அல்லது அவர்களது அரசியல்தான் புரியுமா? "இல்ல அப்பா-அம்மா சொல்லியிருக்கிறாங்க!".இதுதான் அநேகமாகக் கிடைக்கக் கூடிய பதில். வளரும் பிள்ளைக்கு எதைச் சொல்லிக்கொடுக்கிறோம்?
எல்லாமே இப்படியானவை அல்ல என்பது எனக்குத் தெரியும், ஆனாலும் பெரும்பாலானவை (சமூக, சமய, அரசியல்) நிலைப்பாடுகளால் அவற்றின் அரசியலால் பிளவுபட்டு எண்ணிக்கையில் மட்டும் பெருகுவனவாகவே அமைகின்றன. இது ஆரோக்கியமானதல்ல என்பது தெளிவு. கருத்துக்கள் வேறுபடலாம். வேறுபடவும் வேண்டும். அப்பத்தான் தெளிவு வரும். ஆனால் தீர்வு காண்பதை விடுத்து இன்னொன்றைத் தொடங்குவது பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆர்வம்/இயல்பு இல்லையென்பதையே சுட்டி நிற்கிறது என்று நான் கருதுகிறேன்.
'மழை' ஷ்ரோயா, கருத்துகளுக்கு நன்றி.
சமீபத்தைய அனுபவங்கள், அவதானிப்புகள், மற்றும் கூகிள் இவற்றைவைத்தே இந்த பதிவை எழுதுனேன். சில வேளைகளில், உண்மையில் என்ன இருக்கின்றது என்பதை உண்மையில் என்ன இருந்தால் நன்று என்ற உள் வேட்கை மீறிவிடும்.
ஊர் ஒன்றியங்கள் ஒற்றுமையை குலைக்கின்றனவா, ஒன்றுகூடலுக்கு வழி சமைக்கின்றனவா? சிக்கலான கேள்வி. எனது குறுகிய (கடந்த கோடை) அனுபவங்கள் நன்றாகவே அமைந்ததால், நான் ஒரு சார்வு பார்வையை இவ் விடயத்தில் கொண்டிருக்கலாம். மத, சாதிய நிலைகளை மீறி ஒரு இணைவு நடந்தது எனலாம். பொதுவாக, அனைவரும் பொருளாதார நிலையில் கிட்டதட்ட ஒரே நிலையில் இருப்பதால், அது ஒரு கூறாக இருக்கவில்லை.
ஊர் ஒன்றியங்களில் சாதிய, மத, பொருளாதார வேறுபாடுகள் இருப்பது இப்பொழுது நன்கு புலனாகின்றது. இவ் ஒன்றியங்களின் தேவை இளையவர்களை விட முதியவர்களுக்கும், ஊரில் குறிப்பிடத்தக்க காலம் இருந்தவர்களுக்குத்தான் முக்கியம். அனாலும், அவர்கள் சிறுவர்களை அழைத்துவந்து ஒரு தொடர்பை ஏற்படுத்தி விடுகின்றார்கள். எனவே பெரியவர்கள் என்ன நிலைப்பாடோடு தொடர்பை ஏற்படுதினார்கள் என்பது சிறுவர்களுக்கு தேவையில்லாத ஒன்று, அவர்களை ஈர்பது விளையாட்டு என்றுதான் நினைக்கின்றேன்.
புலம்பெயர் வாழ்வின் தன்மைகள் மிக வேகமாக எம்மிடையே மாறி வருகின்றன, எனவே இவ் ஊர் ஒன்றியங்கள் தொடர்ந்து ஒரு பங்கு வகிக்குமா, அல்லது வேறு பாதையில் மருவுமா என்பது தெளிவு இல்லை. நீங்கள் சுட்டியது போல ஆரம்பத்தில் ஒன்றியமாகியதன் நோக்கம் பின்னர் மருவிவிடுவதை இவ் நிலையிலேயே நோக்குகின்றேன். காலப்போக்கில், இலங்கை அரசியல், தமிழ் போன்றவை இன்று வகிக்கும் முக்கித்துவம் பெறா என்பது என் ஊகம்.
"ஒன்றிய அரசியல்" - இதை பற்றி நீங்கள் கூறிய பின் தான் யோசித்தேன். பொதுவாக, சிறு கிராமங்களில் இருந்து வந்தவர்களுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை என்பது என் குறுகிய அவதானிப்பு. ஒன்றிய மன்ற உறுப்பினர்கள் கூடிய வரை ஆர்வ அடிப்படையிலும், ஜனநாயக பண்பை மதித்தும் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பதுவே என் அனுபவம்.
"ஒன்றிய அரசியல்" நோக்கி சில ஒன்றியங்கள் நல்ல நடைமுறைகளை கொண்டுள்ளன:
1. ஒன்றிய மன்ற உறுப்பினர்களை அல்லது கடமைகளை ஒவ்வொரு வருடமும் கட்டாயமாக மாற்றுவது.
2. ஒன்றிய மன்ற உறுப்பினர் தேர்தல்களை ஒவ்வொரு வருடமும் நிகழ்த்துவது.
3. இளைஞர்களுக்கு முன்னுருமை தருவது.
4. ஒன்றிய மன்ற செயல்பாடுகளை தெளிவாக, நுணுக்கமாக ஆவணப்படுத்துவது. (வரவுசெலவு திட்டம், உறுப்பினர் தொடர்பு தகவல்கள், செயல்திட்ட விளக்கங்கள், இணையம்தளம்)
நீங்கள் கூறியபடியும் "ஒன்றிய அரசியல்" பல பிரச்சினைகளுக்கும் சச்சரவுகளுக்கும் உள்ளாகின்றன என்பதும் தெளிவு.
இப் பொருளில் தமிழ் விக்கியில் ஒரு பதிவை (மேலே தரப்பட்ட பதிவுதான்) இட்டுள்ளேன். விரிவாக்க உங்கள் கருத்துகள் மிகவும் உதவும். நன்றி.
Post a Comment
<< Home