<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Thursday, July 28, 2005

எதிர்பார்ப்பு, திறமை, உழைப்பு, பலன்: விரக்தி, பயம்

"காரியங்கள் குழம்பித் தட்டுக் கெட்டுப் போனால், அதற்குரிய காரணத்தை நமக்கு உள்ளேயே தேடிப் பார்க்க வேண்டும். நம்முடைய சுற்றுப்புறத்தை, நாமேதான் உருவாக்கியிருக்கின்றோம். புறத்தே தோன்றுவதெல்லாம் அகத்திலிருந்து கிளம்பியதே அன்றி வேறில்லை. நாம் எப்படியோ, அப்படித்தான் இருக்கும் அகிலமும். சுற்றுச் சூழ்நிலையை ஒழுங்குபடுத்த வேண்டுமாயின், நம்மை நாமே வெளிச்சம் அடித்துப் பார்த்து, நம்முடைய குறைபாடுகளைக் கண்டு களைந்திட முழு முயற்சி செய்ய வேண்டும். செய்தால் மற்றவர்மீது வெறுப்படையமாட்டோம், பிறரைக் குறை கூறவும் மாட்டோம்." - காந்தி

மனிதனுள் இயங்கும், மனிதனை இயக்கும் விளக்கு அவள்/அவன் மனதுனுள் இருந்து எழும் வேண்டுகோள்: "முன்னேறு". இல்லை எனில் அவள்/அவன் அமைதியாகி செயல் இழந்து விடுவார்கள், அவள்/அவன் இறப்பிற்க்கு அது சமம்.

அப்படியாயின், சோம்பலுக்கும், விரக்திக்கும் காரணம் என்ன? விரக்தி உண்டு, சோம்பல் அதன் உருவாக்கமே. மனிதனின் எதிர்பார்புகளுக்கும், திறமைக்கும், உழைப்பிற்க்கும், பலன்களுக்கும் இடையான முரண்பாடுகளால் ஏற்படுவதே விரக்தி.

1. எதிர்பார்ப்புக்கு ஏற்ற உழைப்பின்மை
2. உழைப்பிற்க்கு ஏற்ற திறமையின்மை
3. உழைப்பிற்க்கும் திறமைக்கும் ஏற்ற பலன் இன்மை
4. திறமை, உழைப்பு, பலன்களுக்கு மீறிய எதிர்பார்ப்பு

இவையால் ஏற்படுவதே விரக்தி.

ஏன் மனிதன் இலக்கை நோக்கி உழைக்க தயங்குகின்றான், தேக்க நிலை அடைகின்றான்? பயம். பயத்தின்பால் விளையும் அறியாமை. பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருப்பதால், அவள்/அவன் இருப்பிற்க்கும் செயல்களுக்குமான காரணத்தை அறியாதிருப்பதால், அவளது/அவனது உலகில் நோய், வறுமை, போர், இறத்தல் போன்றவை மலிந்து கிடப்பதால் அவளிடம்/அவனிடம் பயம். யார் என்ன சொல்வாரோ, எப்படி என்னால் முடியும், இப்படித்தான் உலகு போன்ற வேலிகளை பயம் உண்டாக்குகின்றது. உழைப்பு இதனால் தேக்கமடைகின்றது. உழைப்பின்றி திறமை கூர்மை இழக்கின்றது. பலன் குறைகின்றது. எதிர்பார்ப்புக்கள் சிதறுகின்றன.

பயம் முற்றிலும் ஒரு தீயசத்தி இல்லை. அது ஒரு எச்சரிக்கை கருவி. அதை நாம் எமக்கு சாதகமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கருதுகின்றேன். ஆயினும், பயம், பயத்தின்பால் விளையும் அறியாமை, இவையால் கட்டுன்று கிடக்கின்றேன். அதை நான் உணர்கின்றேன். "முன்னேறு" என்ற இயங்கு சக்தி என்னுள் இயங்குவதால் பயத்தை உணர்ந்தும் நான் செயல்பட முயல்கின்றேன். இவ் நிலையில் எனக்கு முன் ஒரு முக்கிய கேள்வி எழுகின்றது. முன்னேற்றத்தின் இறுதி இலக்கு எது?

முன்னேற்றத்தின் இறுதி இலக்கு எது? அடிப்படை வாழ்வியல் வசதிகளை அடையும் நிலையில், முன்னேற்றத்தின் இறுதி இலக்கு எது? சமயங்கள் பதில் சொல்ல முனைகின்றன. சம்சாரத்தில் இருந்து விடுதலை (இந்து சமயம்), நிர்வானம் (புத்தம்), தேவ மீட்ச்சி-தேவலோக வாழ்வு (கிறீஸ்தவம், இஸ்லாம்) என்பவற்றை குறிப்பிடலாம். விஞ்ஞானம் விரியும் பிரபஞ்சத்தை நோக்கி சுட்டி விட்டு முன்னேற்றம் மனித உலக செயல்பாட்டின் இயல்பு என்கின்றது. என்னை மட்டில் இப் பதில்களில் தெளிவு இல்லை.

முன்னேற்றத்தின் இறுதி இலக்கு எனக்கு தெரிய வில்லை. ஆனால், நான் இருக்கும் இடத்தில் இருந்து முன்னேற்றம் என்ற ஒரு திசை அல்லது வழி தெரிகின்றது. அத் திசை, வழி மூலமே என் பயனத்தை நான் தொடர்கின்றேன்.

6கருத்துக்கள்

At 1:46 PM, Blogger கிஸோக்கண்ணன் said...

எதிர்பார்ப்புக்கு ஏற்ற உழைப்பின்மையால் விரக்தி வருமா? அது சோம்பேறித்தனமில்லையா?

 
At 6:40 PM, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

This comment has been removed by a blog administrator.

 
At 6:41 PM, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

நான்கு கருத்துகளுமே விரக்தியை உருவாக்கும் என்பது என்னால் ஒத்துக் கொள்ள முடியமுடியவில்லை. எதிர்பார்ப்புக்கு ஏற்ற உழைப்பின்மை கிசோ சொல்வது போல சோம்பேறித்தனமும் ஆக இருக்கலாம். எதிர்பார்ப்புக்களுக்கேற்ற உழைப்புத்தான் வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருக்கும் வரை ஏமாற்றமே மிஞ்சும்
இரண்டாவதாகச் சொன்ன உழைப்புக்கேற்ற திறமையின்மை - தகுதியின்மை. இது விரக்தியை வரவழைப்பது நியாயமற்றது. முயற்சி இருக்க வேண்டும்- உழைப்புக்குத் தேவையான திறமையை வளர்த்து/உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
3ம் 4ம் சரியாகப் படுகிறது. தன்னை/ தன் திறமையை அறிந்து கொள்ளுதலும் தகுதிக்கு மீறிய எதிபார்ப்புகள் களைவதுமே இதற்கு ஒரு தீர்வாக முடியும்.

 
At 10:42 AM, Blogger நற்கீரன் said...

கிஸோகண்ணன் நீங்கள் சொல்வதும் சரியென்றே தோன்றுகின்றது.

எதிர்பார்ப்புக்கு ஏற்ற உழைப்பின்மையால் விரக்தி ஏற்பட்டு, அதனால் சோம்பல் வரும்!!!!

ஷ்ரேயா aka Shreya கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன. உங்களின் தீர்ப்பும் சரியாக படுகின்றது.

 
At 6:42 PM, Blogger காசி (Kasi) said...

நற்கீரன். நட்சத்திரமாக மிளிர்ந்துகொண்டிருப்பதற்கு வாழ்த்துக்கள். அடுத்த பதிவில் மறுமொழி எழுதமுடியாததால் இங்கே எழுதுகிறேன்.

மயூரநாதன் சொன்னதுபோலவே இன்னும் விக்கிப்பீடியாவுக்கு நம் அனைவரின் பங்களிப்பு அதிகரிக்கவேண்டும், அதிகரிக்கும் என்ரு நம்புகிறேன். செவ்விக்கு நன்றி.

உங்கள் வாரம் பெரிதும் கனமான பொருட்களிலேயே எழுதப்படுவதுபோல ஒரு தோற்றம். இடையிடையே இலகுவானவற்றையும் தொடலாமே!

அன்புடன்,
-காசி

 
At 8:53 PM, Blogger வசந்தன்(Vasanthan) said...

இதற்கு அடுத்தபதிவுக்கு பின்னூட்டமிட முடியாமலுள்ளது.
நல்ல பதிவு. நன்றிகள்.

 

Post a Comment

<< Home