குப்பை இதழ்களை நான் வாசிப்பேன்
தமிழ்ச் சமூகத்தில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்ற கருத்துரு எவ்வளவு குறுகிய வரையறையோடு விளங்கிக் கொள்ளப்படுகிறது என்பதை நேற்று அறிய முடிந்தது. நேற்று ஒர் இலக்கிய/அரசிய கூட்டத்துக்குப் போய் இருந்தேன். வந்திருந்தவர்களில் பெரும்பாலனவர்கள் இடதுசாரிப் பார்வை கொண்டவர்கள், படைப்பாளிகள். எல்லோரும் பல விடயங்களில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை, பேச்சுச் சுதந்திரத்தை, படைப்புச் சுந்ததிரத்தை பற்றி உரக்கப் பேசுபவர்கள். அப்படிப் பேசுக் கொண்டிருக்கையில், இலங்கையில் தமிழ்நாட்டு வணிக இதழ்கள் தடைசெய்யப்பட்டிருப்பது, அல்லது அதற்கான வாய்ப்புகள் பற்றி ஒருவர் குறிப்பிட்டார். எந்தவித தயக்கமும் இல்லாமல், அது நல்ல விசயம் தான். ஏன் என்றால் 70 களில் அப்படித் தடை செய்யப்பட்ட போதுத்தான் உள்ளூர் சஞ்சிகைகள் வளர்ந்தன என்று இன்னொருவர் ஆணித்தரமாக கூறினார். அங்கிருந்த பலரும் இந்தக் கருத்தை ஆதரித்தது போல்தான் தெரிகிறது.
ஆக இவர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரமாக, அல்லது அதற்கான சூழலாக மட்டும் வரையறை செய்வதாகவே தெரிகிறது. குப்பை இதழ்கள் எவை என்று யார் தீர்மானிப்பது. இலங்கை அரசையா அந்த தீர்மானத்தைச் செய்ய விடுவது. அல்லது யார் அதிகாரத்தில் இருக்கின்றனரோ, அவர்கள் தீர்மானிப்பதா. அதை வாசகரிடம் அல்லவா விடவேண்டும்.
இன்னுமொரு இடத்தில், வெளியிடப்படும் இதழ்கள், நூல்களைத் ஆவணப்படுத்தும் பணித் திட்டம் ஒன்றில், சில பத்திரிகைகள், இதழ்களைச் சேர்க்க வேண்டாம், அவை வியாபாரத்திற்காக எழுதுகிறவர்கள். அதில் எந்தப் பிரியோசனமான படைப்புகளில் வராது என்று சிலர் வேண்டினர். ஒரு பொது ஆவணக் காப்பகத்தின் பணி, எந்தப் படைப்பு பெறுமதி வாய்ந்தது என்று தீர்மானிப்பது அல்ல. அப்படித் புறவயமாகத் தீர்மானிப்பது ஒரு குறிப்பிட்ட சூழலில் சாத்தியமானதும் அல்ல. அந்தப் பொறுப்பு வாசகரை, அல்லது ஆய்வாளரைச் சார்ந்தது. அது வரலாற்று நோக்கில் நிறுவப்பட வேண்டியது.
குப்பை இதழ்கள் என்று சில எழுத்தாளர்கள் குறிப்பிடும் இதழ்களைத் தான் பல மில்லியன் மக்கள் வாசிக்கிறார்கள். அவர்கள் அவற்றை வாசிப்பதற்கான உரிமை, அடிப்படை மனித உரிமை. அவர்கள் அதில் எதோ பொறுமதியைப் பெறுகிறார்கள் என்பதை, அவர்கள் பணம் கொடுத்து அவற்றைப் பெற்று வாசிப்பதில் இருந்து அறிய முடிகிறது. எனவே அவற்றை அலட்சியாமாக புறக்கணிக்கக் கூடாது. அவற்றின் உரிமைகளை மறுக்கக் கூடாது. அப்படி மறுப்பது ஒரு சர்வதிகாரச் சிந்தனையாக, ஒரு ஒடுக்குமுறைச் சிந்தனையாகவே அமையும்.
சிறிய குறுகிய சில எல்லைகளைத் தவிர கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதை சற்றும் விட்டுக் கொடுத்தல் ஆகாது. அதிலேயே வெளிப்படைத்தன்மை மிக்க, பொறுப்பாண்மை மிக்க, படைப்பாக்கம் மிக்க தனி மனிதர்களையும், சமூகத்தையும் கட்டமைப்பதற்கான ஆதாரம் உள்ளது.
0கருத்துக்கள்
Post a Comment
<< Home