<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Monday, October 25, 2010

இடதுசாரிகள் மட்டுமா மக்கள் சார்பானவர்கள்

மக்கள் சார்பான கொள்கைகள் எல்லாம் இடதுசாரிக் கொள்கைகள் எனப்படுகிறது. அப்படி என்றால் இடதுசாரித்துவம் உலகின் மிகச் சிறந்த தத்துவம். உலகின் இயங்கியல் பற்றிய பூரண உண்மையை இடதுசாரித்துவம் தருகிறது. மற்றவர்கள் எல்லோரும் தமது மக்கள் விரோத கொள்கைகளை விடுத்து முழுமையாக இடதுசாரித்துவத்தில் சங்கமித்து விடவேண்டும் என்பது சிலரின் வாதமாக இருக்கிறது. இது ஒரு குறுகிய, வட்ட ஓட்டத் தர்க்கமே.

இல்லை, இல்லை இடதுசாரிக் கொள்கைகளிலும் பாதகமான கூறுகள் உள்ளன. பிற கொள்கைகளிலும் நல்ல அல்லது மக்கள் சார்பான கொள்கைகள் உள்ளன என்று சுட்டிக் காட்டினால், அதை மொழி விளையாட்டுக் காட்டி மறுத்து விடுகின்றனர். இடதுசாரிக் கொள்கைகள் தோற்றுப் போகையில் அவை இடதுசாரிக் கொள்கையாக இல்லாமல் போகின்றன. மற்றக் கொள்கைகள் நல்லதாக அல்லது மக்கள் சார்பாக அமைந்தால், அவை மேலோட்டமாகத்தான் அப்படி உள்ளன, உண்மையில் அவை "ஆதிக்க" சக்திகளுக்கே துணை போவதாக கூறப்படுகிறது.

இடதுசாரித்துவத்தின் பெரும் வெற்றியாக கருதப்படும் சோவியத் ஒன்றியம் ஒரு சர்வதிகார படைத்துறை அமைப்பாக இருந்தது. வட கொரியாவில், சீனாவில், வியட்நாமில், கியூபாவில் என்று நீண்டகாலமாக பொதுவுடமை நாடுகள் ஒன்றிலும் அடிப்படை மனித உரிமைகள் இல்லை, மக்கள் ஆட்சி இல்லை. இதுவா மக்கள் சார்பு இடதுசாரித்துவம்.

மக்கள் என்றால் யார், தனிமனிதர்களைக் கொண்ட கூட்டுத் தானே. அப்படி என்றால் தனிமனிதருக்கான சுதந்திரங்களை, உரிமைகளை மறுத்து, மக்களை மாந்தைகளாகப் பார்ப்பதும் சில இடதுசாரி கொள்கைளின் கூறுகளாக உள்ளது. மூட நம்பிக்கைகள் என்றாலும், பிறருக்கு தீங்கு வராத வரை நம்பிக்கைகளை வைத்திருப்பது மனிதர்களின் சுதந்திரம். சொத்துரிமை என்பதும் ஒர் அடிப்படை தனிமனித உரிமையே.

மனிதருக்கு இருக்கும் அடிப்படைத் தெரிவுகளில் ஒன்று என்ன தொழில் செய்வது, என்ன வாங்குவது, யாரிடம் வாங்குவது போன்ற பொருளாதாரத் தெரிவுகள் ஆகும். வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு விருப்பு வெறுப்புகள் இருக்கும். அந்த பல கோடி சிறிய சிறிய தெரிவுகளை ஒரு பெரிய கூட்டம் போட்டு மத்திய குழு தீர்மானிப்பது மக்கள் சார்பு கொள்கை வகுப்பா. எனக்கு இன்னும் வேணும் என்று போட்டி போட்டு உழைப்பவனை, இல்லை இந்தளவுதான், சமமாக இரும் என்று சொல்வது நியாமானதா. ரோபோர்ட் நோசிக்கின் கூற்றை இங்கு நினைவு கூறுவது நன்று: "From each as they chose, to each as they are chosen". சமனான வாய்புக்களை உருவாக்கிக் கொடுப்பது நன்று, ஆனால் சமனான முடிவுகளை எதிர்பார்ப்பது நியாமன்று.

இடதுசாரி கொள்கையின் ஒரு நோக்கம், அதிகாரத்தை கைப்பற்றி, தொழிலாளர்கள் அதிகாரத்தை அமைப்பது ஆகும். அப்படி என்றால் இந்த அதிகாரத்தை தக்க வைக்க இடதுசாரித்தத்துவம் ஒரு கட்டத்தில் பயன்படும், பயன்படுகிறது. இதை அரசின்மைவாதிகள் சுட்டிக் காட்டி உள்ளார்கள். அதிகாரம் புரட்சிவாதிகளையும், எல்லோரயும் மாசுபடுத்தும் என்றும், யார் அரசுக்கு வந்தாலும் அவர்கள் ஆதிக்க இயல்புகளைப் பெறுவார்கள் என்ற விமர்சனத்திற்கு பதில் இல்லை.

இடது வலது என்ற இருமைக் கொள்கைத் துருவ முனைகளும் பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. சில தளங்களில் பொதுவுடமை, சேர்ந்தியங்கல் பயன் தருகிறது. சில இடங்களில் போட்டி, முனைப்பாக்கம் பயன்தருகிறது. அதிகாரத்தை கேள்விகுட்படுத்தல், எதிர்த்து நின்றல் அவசியமானது. சமூகத்தின் பலவீனமானவர்களுக்கு உதவுதல் அவசியமானது. ஆனால் ஒற்றைப் பரிமாண தத்துவங்கள் எந்தளவு பயன் மிக்கவை என்பது மேலும் ஆயப்பட வேண்டும்.

0கருத்துக்கள்

Post a Comment

<< Home