ரொறன்ரோ தமிழியல் மாநாடு, எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும்
வரும் யூலை மாதம் 13-14 திகதிகளில் ரொறன்ரோவில் தமிழியல் மாநாடு நடைபெறவிருக்கிறது. மேற்குநாடுகளில் அதிக தமிழர்கள் வாழும் நகரமான ரொறன்ரோவில் கனடாவின் இரு பெரும் பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் தமிழியல் மாநாடு நடைபெறுவது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகத் தெரியலாம். ஆனால் தமிழ் மொழிக்கோ, தமிழ் மொழி மாணவர்களுக்கோ இந்த தமிழியல் மாநாட்டால் குறிப்பிடத்தக்க பயன் ஏதும் இருக்குமா என்றால், இல்லை என்றே தோன்றுகிறது.
தமிழியல் துறையின் அல்லது தமிழியல் மாநாடுகளின் முதன்மை நோக்கமாக தமிழ் மொழியைப் பேணுதலும், வளர்ப்பதும், கற்பித்தலுமே இருக்க முடியும். தமிழ்ச் சூழலின் இன்றைய தேவைகளையும், சிக்கல்களையும் கருத்தில் எடுப்பதும் தமிழியல் துறையை நடைமுறைக்குப் பயன்படும் துறையாக திசைவதில் முக்கியம் பெறுகிறது. ஆனால் இந்த முதன்மை இலக்குகளுக்கு ரொறன்ரோ தமிழியல் மாநாடு சற்றேனும் உதவுவதாக இல்லை.
தமிழியல் மாநாடு முழுவதும் அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடக்கும். அதில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளும், வெளியிடப்பட்டும் மாநாட்டு மலர்களும் ஆங்கிலத்திலேயே இருக்கும். அவர்களின் வலைத்தளத்தில் தற்போது தமிழில் ஒரு வசனம் கூட இல்லை. இங்கு தமிழ் வகுப்புகளுக்கு போகும் மாணவர்களை நோக்கி இவர்கள் எந்த செயற்திட்டத்தையும் முன்வைக்கவில்லை. இங்கு தமிழ் வகுப்புகளுக்கு வந்து அழைப்பு விடுக்கவும் இல்லை. தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் இசுகார்புரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் வகுப்புகள் நிறுத்தப்பட்ட போது இவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுத்தாகவும் அறியமுடியவில்லை. எனவே இவர்களின் அக்கறை அல்லது ஈடுபாடுதான் என்ன என்று நீங்கள் எண்ணலாம்.
இவர்களின் அக்கறை பெரும்பாலும் ஒரு கல்விக்களம் சார் நடவடிக்கையாகவே இருக்கிறது. பல தேவைகளுக்காக தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை பல மேற்குநாட்டினர் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம் பலர் இங்கு இருப்பதால் எம்மைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. எவ்வாறு காலனித்துவ காலத்தில் அவர்களுக்கு எம்மைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருந்ததோ, அது போலவே. எவ்வாறு இசுலாமியர்களை, சீனர்களை இவர்கள் புரிந்து கொள்ள விரும்புகிறார்களோ, அது போலவே. இந்த மாநாட்டுக்கு ஆதரவு வழங்கும் அமைப்புக்களை நோக்கினாலே அதைப் புரிந்து கொள்ளலாம். Munk School of Global Affairs இக்கு தமிழ் மொழி மீது, தமிழ் மக்கள் மீது எப்படி அக்கறை வந்தது. மற்றயது Center For South Asian Studies - Asian Institute, இது காலனித்துவ இந்தியவியல், ஆசியவில் துறையின் இன்றைய உருவம், பொதுவாக Areas Studies கீழே வருகிறது. இவர்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்த மாநாடு ஓரளவு உதவுகிறது.
அடுத்தது இது முழுமையாக ஒரு நுண்புல, புலமைசார் நிகழ்வு. இவர்கள் எடுத்துக் கொள்ளும் தலைப்புகளுக்கும் இன்றைய தமிழ் மொழிக்கு எந்தத் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுகிறார்கள். அல்லது தற்போது தமிழ்ச் சூழலில் தமிழர்கள் பேசவேண்டிய தலைப்புக்களையும் இவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. அவை சவால் மிக்கவை. பொதுவாக ஆய்வு மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் தமது ஆய்வுக் கட்டுரைகளை மாநாடுகளில் சமர்ப்பிக்க வேண்டிய பணித் தேவை இருக்கிறது. அதை நிறைவு செய்யக்கூடிய ஒரு களமாகவே இது இருக்கிறது.
ஆங்கிலத்தில் எழுதி வைத்து தமிழ் பாட்டுப் படிப்பவர்கள் போல, ஆங்கிலத்தில் துணை உரை பார்த்து தமிழ்த் திரைப்படம் பார்ப்பவர்கள் போல, தமிழ் லிட்ரிச்சர் பற்றி ஆங்கிலத்தில் விவாதிப்பர்கள் போல இந்த தமிழியல் மாநாடும் தமிழ் இலாமல், தமிழ் அக்கறைகள் இல்லாமல் நடக்கும். அதிலை எந்தவிதப் பிரச்சினையும் இல்லை, ஆனால் அதற்கு தமிழியல் என்று பெயர் வைக்காமல் இருந்திருக்கலாம். இந்த மொழிக்கா இத்தனை பேர் செத்தவை, முட்டாள்கள்.
8கருத்துக்கள்
unmai than. kedpaar yaarumillai. senru vanthu emanthavarkalil naanum oruthi.
அ.ராமசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர்,திருநெல்வேலி
தமிழியல் ஆய்வுகள் என்பன எப்போதும், எங்கும் நமக்காக நடந்ததில்லை; நடப்பதில்லை என்பதுதான் கடந்த காலமும் நிகழ்காலமும் சொல்லும் உண்மை. நிதியுதவியாளர்களின் மறைமுக விருப்பங்களுக்கான - நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே எப்போதும் நடக்கின்றன.
தமிழியல் மாநாடு என்பது சகல குறைபாடுகளுக்குமான சகலரோக நிவாரணியென நாம் எண்ணும்போது ஏற்படும் குழப்பம் இது. ஒற்றைத் துறைசார்ந்த முயற்சியில் தமிழின், தமிழரின் முழு குறை நிறைகளையும் அலசிவிட முடியுமென்பது அசாத்தியம். அசாத்தியங்களை நாம் எதிர்பார்க்கிற வேளையில் ஏற்படும் ஏமாற்றங்கள் நம்மை குழப்ப நிலைக்குத்; தள்ளுவது தவிர்க்க முடியாதது. வேறு முயற்சிகள் நமக்குத் தேவை. கருத்துரீதியாக உங்கள் மொழியில் இந்தக் குறையில் அல்லது என் மொழியில் இந்தப் போதாமையில் எனக்கு உடன்பாடே.
தேவகாந்தன்
இந்த மாநாட்டுக்கு பின்புலத்தில் உள்ள தமிழர்கள், தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்கள். அதனாலும் தமிழ்மக்கள் மத்தியில் இதனை கொண்டுபோய்ச் சேர்க்க முடியவில்லை.
திருமுருகவேந்தன்
This comment has been removed by the author.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. பல்கலைக்கழகத்தில் தெற்காசியவியல், சமூகவியல், தொல்பொருளியல், மானிடவியல் போன்ற துறை மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோருக்காக இந்த மாநாடு என்று கூறப்படுகிறது. அது நலம்மிக்கதே. ஆனால் தமிழ் மொழி, தமிழ் மொழிக் கல்வி பற்றி அக்கறை கொண்ட துறையான "தமிழியல்" மாநாடு என்று பிம்பம் உருவாக்குவதே தவறாகப் படுகிறது. இல்லை நாங்கள் தமிழர்களைப் பற்றி பல்வேறு சூழ்நிலைகளில், பல்வேறு துறைசார்ந்து ஆய்கிறோம் என்றால் பண்டைத் தமிழரியல் மாநாடு அல்லது இந்தியவியல் மாநாடு என்று இதனை அழைக்கலாம். தமிழ் மொழி பற்றி அக்கறை இல்லாமல், தமிழ் பேசுபவர்களோடும், தமிழ் மொழி கற்பவகளோடும் தொடர்புகள் இல்லாமல் தமிழியல் மாநாடு நடப்பதையே ஏமாற்றம் என்று கூறுகிறேன்.
"இந்த மொழிக்கா இத்தனை பேர் செத்தவை, முட்டாள்கள்."
உங்கள் மன உளைச்சல் விளங்குது. ஆனால் மேற்கூறிய வசனம் என்னவோ எனக்கு தமிழ் மொழியை நீங்கள் குற்றம் சொல்வதாகவோ அல்லது குறைந்தபட்சம் நொந்து கொள்வதாகவோ எனக்குப்படுகிறது. யாரோ ஒருவன் ஏதோ மகாநாடு நடத்துறதுக்கு தமிழ்மொழி என்ன செய்யட்டும்? எவன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் என் தமிழுக்கு இருக்கும் அழகும் இனிமையும் வேறெந்த மொழிக்கும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. அந்த அழகும் இனிமையும் தான் தமிழ் மொழியை ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழவைத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் பல பத்தாயிரம் ஆண்டுகள் அது வாழும் என்பதில் அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு.
தாய்மொழி, தமிழ்மொழி என்று உங்களைப் போன்றே சக உணர்வுகளைப் பகிர்கிறேன். அதே வேளை எமது மொழி தொன்மையானது, இனிமையானது என்று குந்தி இருப்பதில் ஒத்தில்லை. ஈழத்தில் தமிழ் தப்பிப் பிழைக்கிறது. புலத்தில் தமிழ் அமிழ்ந்து மூழ்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் தற்கொலை செய்கிறது. இதுதான் நிலைமை. தமிழ் மொழியை பேண, வளர்க்க நாம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க விலை என்றால் நாம் தமிழை இழப்போம். சும்மா மந்திரம் அல்லது தேவாரம் போல கோயிலை அல்லது ஒரு இரு தளங்களில தமிழ் தப்பிப் பிழைத்தால் சரி என்றால், அதை விட தமிழை முற்றிலும் விட்டுவிட்டு சீனத்துக்கோ, ஆங்கிலத்துக்கோ, எசுபானியத்துக்கோ முற்றிலும் மாறி விடுவதே சரி. இந்த மாதிரி மாநாடுகளில தமிழுக்கு கொடுக்கப்படுற மரியாதை, எமது சமூகத்துகே ஒரு இழுக்கு.
Post a Comment
<< Home