<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Sunday, April 24, 2011

ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம் - சிக்கல்களுக்குக்கான முதற் தீர்வு

இது ஒரு வித்தியாசமான கூட்டம். பல்வேறு அரசியல் நிலைப்பாடுகள் உடைய தமிழர் அமைப்புகள், நபர்கள் ஒன்று கூடி கூட்டம் நடத்துவது என்பது இங்கு ஒரு சாதானையே. பல்வேறு கருத்துடையோர் தமது கருத்துக்களைப் பகிர்வதற்கான, அவை பற்றி உரையாடுவதுக்கான தளம் இதுவரை இங்கு இருக்கவில்லை. வழமையாக நடைபெறுவது தமது ஒத்தக்கருத்துடையோர்களுக்கு இடையேயான சந்திப்புக்கள் மட்டுமே. எனவே சனவரி 23, 2011 இல் இசுகார்புரோ சிவிக் மண்டபத்தில் "இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்" தலைப்பில் நடைபெற்ற பல்கட்சிக் கூட்டம் ஒரு நலம்மிக்க முன்னேற்றாம்.

இந்தக் கூட்டம் பற்றி விரிவாகப் கீழே பகிர முன் அவர்கள் எதிர்பார்க்ககூடிய விமர்சனங்கள் பின்வருமாறு. இவர்கள் இன்னுமொரு குடை அமைப்பா. இவர்கள் எல்லா அமைப்புக்களை இணைத்து, தலைமை தாங்கப் போறாங்களா. (இல்லை, இது கருத்துப் பகிர்வதற்கான ஒரு தளம் மட்டுமே என்பதே இவர்களின் பதிலாக இருக்கவேண்டும்.) உங்களுக்கு எங்கு இருந்து நிதி கிடைக்குது. இலங்கை அரசின் ஆக்களா? பல புலி அமைப்புகள் அழைக்கப்பட்டு இருகே. இது ஒரு புதிய புலி அமைப்பா? புலிகள் தமது பிழைகளை எல்லாம் சுய விமர்சனம் செய்ய வேண்டும், ஏற்றுக் கொள்ள் வேண்டும் அதற்கு என்ன செய்யப் போறீங்க? இலங்கை அரசின் போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில தண்டிக்க நீங்க என்ன செய்யப் போறீங்க? அங்க சனம் திண்டாடுது, அதற்கு என்னச் செய்யப் போறீங்க? இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் எங்கே? சும்மா பேசுக் கிளிக்கப் போகினம். உங்கட செயற்திட்டம்தான் என்ன? இப்படி விமர்சனங்கள் வரும். ஒழுங்கைப்பாளர்கள் ஒர் அகேகே (அடிக்கடி கேக்கப்படும் கேள்விகள்) உருவாக்கி பதில் தந்திடல் வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் கனடாவின் பல முக்கிய அமைப்புகளும் சிந்தனையாளர்களும் கலந்து கொண்டு இருந்தார்கள். தமிழ் படைப்பாளிகள் கழகம், கனடியத் தமிழர் தேசிய அவை, மே 18 இயக்கம், நாடு கடந்த தமிழீழ அவை, இடதுசாரிகள், பேரா. சேரன், பேரா. சுல்பிகா, நேரு குணரட்ணம் போன்றோர் கலந்து கொண்டனர். இதில் யார் கலந்து கொள்ளவில்லை என்பதும் இங்கு முக்கியமானது. கனடாவின் இன்னுமொரு முக்கிய தமிழர் அமைப்பான கனடியத் தமிழர் பேரவை இதில் கலந்து கொள்ளவில்லை. ஆங்கில ஊடகங்களுக்கும், கனடிய அரசுக்கும் தாமே தமிழர் பிரதிநிதிகள் போல் காட்டிக்கொள்ளும் இவர்களுக்கு நிச்சியம் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கும். ஆனால் கலந்து கொண்ட வேறு சிலருடன் கருத்து மோதலில் இருப்பதால் இவர்கள் கலந்து கொள்ளவில்லை. இது இவர்களின் முதிர்ச்சியின்மையை, அக்கறையை இமையையே காட்டுகிறது.

கலந்து கொள்ளதா இன்னுமொரு அமைப்பு "உலகத்தமிழர்" அமைப்பு. இவர்கள் இன்னும் ஒரு இரகசியமான, பொறுப்பாண்மை, வெளிப்படத்தன்மை அற்ற அமைப்பாகவே இருக்கிறது. கலந்து கொள்ளாத அடுத்த முக்கிய அமைப்பு தேடகம். தேடகத்தின் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டு கேள்விகள் கேட்டாலும், ஒர் அமைப்பாக அவர்கள் இதில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. இங்கு நடக்கும் பல இடதுசாரிக் கூட்டங்களை ஒழுங்கு செய்யும் அவர்கள் ஏன் இதில் வெளிப்படையாக் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை. எல்லோருக்கும் நேரம் ஒத்துக்குவதில் சிரமம் இருந்திருக்கலாம். ஆனால் இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பதை ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்து இருக்கலாம். இந்த அரசியல் அமைப்புகளுக்கு அப்பாலும் ஊர் ஒன்றியங்கள், சமூக சேவை நிறுவனங்கள், கோயிகள், ஊடகங்கள், பழைய மாணவர் அமைப்புகள் போன்ற தமிழர் அமைப்புகள் உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பல்வேறு கருத்து நிலை உடையவர்கள் ஒன்று சேர்ந்து உரையாடும் போது, அதற்கான நற்பழக்கவழங்க்கள் எவை, ஒழுக்கப் பிறழ்வுகள் எவை எனபதைத் தீர்மானிப்பது மிக அவசியமானது. ஒழுங்கமைப்பாளர்கள் பேச்சாளர்களுக்கு சராசரியாக 20 நிமிடங்கள் வரை ஒத்துக்கி, பின்னர் நிறைய நேரத்தை கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் ஒதுக்கினார்கள். இத்தகைய கூட்டங்களில் ஒரு முக்கிய பண்ப்டு ஒருவரை ஒருத்தர் இடைநிறுத்தி பேசாமல் இருத்தல். நாம் ஏன் இங்கு வந்திருக்கிறோம். கருத்துப் பகிர்வுக்கு. ஒரு வேளை அவர் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அதைப் பொறுமையாய் செவிமடுத்து அமைதியாக உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதே பண்பாக இருக்க முடியும். இந்தப் பண்பு முழுமையாக இந்தக் கூட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டாதாகக் கூற முடியாது. கடைசியில் முழுக் கூட்டத்தையும் சிதைக்கும் அழவுக்கு ஒரு இருவர் உரத்த குரலில் கத்தி நிகழ்ச்சி நிரலைத் தாம் கடத்திச் சென்றுவிட்டனர். எனவே ஒழுங்கமைப்பாளர்கள் இத்தகைய ஒழுக்கப் பிறழ்வுகள் குறித்து பங்களிப்பாளர்களிடம் விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாக அமைகிறது.

அடுத்தாக பேசப்பட்ட விடயங்களுக்கு வருவோம். பல காலம் மற்றுவர் என்ன நிலைப்பாடு என்ன நேரடியாக பகிர்ந்து கொள்ளக் கூடிய களங்கள் இருக்கவில்லை என்பதால், எல்லோரும் தமது அக்கறைகள் என்ன என்பதைப் பற்றியே விரிவாக பேசினார்கள். முதல் அரங்கில் பேசிய ஈழவேந்தன், தமிழ் நிலங்கள் அபகரிக்கப்படுவது, குடியேற்றம் செய்யப்படுவதே தமிழ் தேசத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் என்று கூறினார். எடுத்த தலைப்பில் திறமையாக பேசியவர் பேரா. சுல்பிகா அவர்களே. சிங்கள பேரினவாத அரசைக் கடந்து நாம் சிங்கள மக்களுடான ஒரு நல்லுறுவை ஏற்படுத்து, அவர்களை விழிப்படையச் செய்வது அவசியம் என்பதை அவர் குறிப்பிட்டார். மேலும் தமிழர்-முசுலீம்கள் உறவு பலவீனப்பட்டு இருப்பதையும், மலையகத் தமிழர்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் சவால்களையும் குறிப்பிட்டு அவர்களை இணைத்து சிறுபான்மையினரின் உரிமைப் போராடாத்தை நகர்த்திச் செல்ல வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டார்.

இரண்டாவது அரங்கில் மோகன் உரையாடும் போது தமிழர்களுக்கும் நடக்கும் இனப்படுகொலையை இனப்படுகொலையாக (Genocide) வெளிக்கொணர்வது அவசியம் என்று உரையாடினார். மேலும் தாம் ஒரு விரிவான செயற்திட்டத்தை உருவாக்கி வருவதகாகவும் தெரிவித்தார். அடுத்து சேரன் பேசும் போது ஈழத்தமிழர்களின் அரசியலை அங்கு இருப்பவர்கள் மட்டுமே நிர்மானிக்க முடியும் என்றும், புலத்தில் இருப்போர் உணர்வு ஒருமைப்பாடு மட்டுமே வழங்க முடியும் என்று கூறினார். அதே வேளை அங்கு தான் சென்று பேச முடியாது என்றும், அங்கிருப்போருக்கு எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் இல்லை என்பதையும் சுட்டினார். தமிழ் என்ற அடையாளம் விரிவு பெற வேண்டும் என்றும், கணினித்-தொலைத்தொடர்புகள் நாடு கடந்த செயற்பாடுகளை ஏதுவாக்கி உள்ளன என்றும் கூறினார். அடுத்தாக பேசிய ரகுமான்கான் தமிழர்கள் ஒரு தேசம், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்வது தீர்வுக்கான அடிப்படை என்று கூறினார். 2009 போரின் இறுதிக் கட்டத்தில் எவ்வாறு கனிமொழி உட்பட்ட கருணாநிதிக் குடும்பம் 2-G ஊழலை நிகழ்த்துவதில் ஈடுபட்டு இருந்தனர் என்றும், அவர்கள் உண்ணாவிரதம், பதவித்துறப்பு நடத்தியது எல்லாம் நாடகம் என்று கூறினார். ஈழத் தமிழர்கள் தம்மை அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளும் தொல்மா திருமாவளவன், சீமான், வைக்கோ, கருணா குடும்பம், செயலலிதா போன்றோரிடம் தமது அரசியலலைத் தொலைத்து, மீண்டும் பகடக்காய் ஆகக் கூடாது என்று கூறினார்.

மூன்றாவது அரங்கில் நாடு கடந்த தமிழீழ அவை சார்பாக பேசிய பால்ராசன் சர்வதேச அரங்கில் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் சார்பில் பேசுவதற்கான ஒரு நியாமான அமைப்புத் தேவை என்பதை வலியுறுத்தினார். இவர்கள் பொருளாதார விருத்தி, போர் குற்றங்கள், இராசதந்திரம் போன்றவை தொடர்பாக செயற்பட்டு வருவதாக் கூறினார். அடுத்துப் பேசிய நேரு இன்றைய உலகமயப் புறச் சூழலில் மாறிவரும் அரசியல்-பொருளாதார சமநிலைகளைக் கருத்தில் கொண்டு திட்ட வரைபடம் தேவை என்று கூறினார். படைப்பாளிகள் கழகம் சார்பில் பேசிய நக்கீரன் ஐயா தாயகம், தமிழகம், புலம் ஆகிய மூன்றும் ஈழ விடுதலைப் போராட்டத்து அவசியம் என்று சுட்டுக்காட்டினார். தாயகத்தில் இயங்கி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பாடுகள் பற்றி விளக்கினார். ஒவ்வொரு அரங்கின் முடிவிலும் கேள்விகள், பதில்கள், கருத்துரைகள் நிகழ்ந்தன.

இது முதல் கூட்டம். இத்தனை நாள் பேசாம இருந்த நாங்க, இத்தனை நாள் என்ன செய்யவேண்டும் என்று வெளிப்படையாச் சிந்திக்காம இருந்த நாங்கள் அது பற்றி சிந்திக்க தொடங்கி இருப்பதே ஒரு பெரிய முன்னேற்றமாக நான் கருதுகிறேன். எனவே முன்வைக்கப்பட்ட தீர்வுகளின் போதாமைகள் பற்றி விமர்சனத்தை முன்வைக்காமல் எனது உடனடிச் சிந்தனைகள் சிலவற்றை கீழே பகிர விழைகிறேன்.

எமது மக்கள் சந்திக்கும் இன்றைய பொருளாதார-வாழ்வியல் சவால்களை நாம் உடனடியாக சந்திக்க வேண்டும். எனவே இந்தக் கூட்டத்தில் அதிகம் கதைக்கப்பாடாத அபிவிருத்தியை நாம் தனி நபர்களாக, ஊர் ஒன்றியங்கள், இதர இலாப நோக்கமற்ற அமைப்புகள் ஊடாக விரிவுபடுத்துவதற்கான ஒரு வியூகம் தேவை. இது முதலாவது.

அடுத்தது இன்று இலங்கைக்கான ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதகாக அரசியல் அழுத்தங்களை, செயற்பாடுகளைச் செய்ய வேண்டும். இலங்கையில் நடந்த மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்களை, பாலியல் வன்முறையை, இனப்படுகொலையை வெளிக் கொணர்ந்து உண்மையை அறிந்து, நீதி நிலைநாட்டுவது எந்தவித ஒரு இணக்கப்பாட்டுக்கும் அடிப்படையாக அமைய முடியும்.

தமிழரிடையே ஒரு குறைந்தபட்ட புரிந்துணர்வு (Common Minimum Program) ஏற்படுத்துக் கொள்வது அவசியம், இது அடிப்படை. எம்மிடையே நடந்த குற்றங்களை வெளிக் கொணர்ந்து, பொறுப்பேற்று, ஒர் இணக்கப்பாட்டு நோக்கி நகர்வது முக்கியம். இதைப் பொறுப்பான்மை மிக்க சமூக ஊழியர்களாலேயே நிறைவேற்ற முடியும். காழ்புணர்வும், பழியுணர்வும், சந்திப்பர்வாதமும் கொண்டு நிறைவேற்ற முடியாது.

அடுத்தது இலங்கையில் ஒரு அரசியல் தீர்வை நிலைநாட்டுவதற்கான பல ஆண்டுத் திட்டத்தை வரைந்து முன்னெடுக்க வேண்டும். இதுவே பெரிய பணி, சிக்கலான பணி.

தமிழர்கள் இனி ஒரு உலக இனக்குழுமம். உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைப்பது, அங்காங்கு தமிழ் மொழியை, தமிழர் கலைகளை பேணுவது ஆகியவை பற்றி ஒரு செயற்திட்டம் தேவை. அரசியல் பொருளாதாரத் தளங்களில் ஒன்றிணைந்து செயற்படுவற்கான பொறுமுறைகளை உருவாக்குவதும் அவசியாகிறது. இந்தப் "பின் தளத்தை" பலப்படுத்துவதும் பேணுவது எமது கூட்டுத் தேவைகளை தீர்ப்பதற்கு வளம் சேர்ப்பதாகிறது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் பிற எல்லாச் சுதந்திரங்களுக்கும் அடிக்கல்கள் போன்று அமைபவை. பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து, மோத விட்டு, அவற்றின் நிறை குறைகளை ஆய்ந்து, கருத்துக்களை கடன் வாங்கி, களை நீக்கி உருவாக்கப்படும் கருத்தியலே வலுவானதாக இருக்கும். பிற கருத்துடையோடைரைச் செவிமடுத்து, அவர்களுடன் பேசி விவாதித்தே அத்தகைய ஒரு கருத்தியலை உருவாக்க முடியும். அதற்கான நேரடிக் களங்கள் ஒரு சமூகத்தின் உயிர் நாடி போன்றவை. அத்தகைய களங்கள் உருவாக்கிப் பேணுவதே, இலங்கைத் தமிழர்களின், உலகத் தமிழர்களின் பல்வேறு சிக்கல்களுக்கு முதற் தீர்வாக இருக்கும்.

0கருத்துக்கள்

Post a Comment

<< Home