<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, April 15, 2011

தமிழர் வாக்கு யாருக்கு?

கனடாவில் நடுவண் அரசுக்கான தேர்தல் வரும் யூலை 2, 2011 ம் திகதி வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் இது நான்காவது தேர்தல். மூன்று முறை ஆட்சி செய்த லிபிரல் கட்சி 2006தோல்வியைச் சந்தித்தது. அதன் பின்னர் 2006, 2008 இலும் கனடாவின் பழமைவாதக் கட்சி சிறுபான்மை அரசாக ஆட்சி செய்தது. மார்ச் 2011 இல் அவர்கள் நாடுளுமன்ற ஆதரவை இழந்ததால் மீண்டும் தேர்தல் வந்தது.

பழமைவாதக் கட்சிக்கு பெரும்பான்மை அரசு அமைக்க இன்னும் பதின்ரெண்டு (155/308) இடங்களே தேவை. முந்தியதை விட அவர்களுக்கு ஆதரவு கூடியே வருகிறது. எனவே அவர்கள் பெரும்பான்மை அரசு அமைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

பொதுவாகத் தமிழர்கள் பழமைவாதக் கட்சிக்கு வாக்களிப்பதில்லை. அதற்கு எளிமையான காரணம் உண்டு. பழமைவாதைக் கட்சி தீவர வலதுசாரிக் கட்சி. வரிகளைக் குறைப்பது, வணிகங்களை ஆதரிப்பது, பலமான படைத்துறை, கடுமையான குற்றவியல் சட்டங்கள், கனேடிய மரபுத் (வெள்ளைத்) தேசியவாதம், "குடும்ப" விழுமியங்கள் இதுவே இவர்களின் சார்புக் கொள்கைகள் எனலாம். அரச சேவைகளை வெட்டுவதே இவர்களின் தாரக மந்திரம். இவர்கள் குடிவரவாளர்கள் பற்றி பெரிய அக்கறை காட்டுவதில்லை. எ.கா குடிவரவாளர்கள் குடியமர்த்தல் சேவைகள், குடும்ப மீளிணைவு, குடிவரவுக் கட்டுப்பாடுகள் என எல்லாவற்றிலும் அவர்கள் கடும் போக்காணவர்கள். இயன்றவரை அவற்றை எல்லாம் வெட்டி விடுவார்கள். பல்லினப் பண்பாடு, பன்மொழிக் கொள்கை போன்ற பெரும்பாலான கனேடியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளைக் கூட வெட்டிவீழ்த்தப் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள். எனவே தமிழர்கள் மட்டும் அல்லாமல் குடிவரவாளர்கள் பெரும்பாலும் இவர்களுக்கு வாக்குப் போடுவதில்லை.

ஆனால் இவர்கள் பெரும்பான்மை பெற இருக்கும் இடைவெளி சிறிது என்றதை உணர்ந்து, அதற்காக குடிவரவாளர்களின் வாக்குகளை இலக்கு வைக்கலானார்கள். சமூக விடயங்களில் குடிவரவாளர்கள் பழமைவாதிகள் என்பதை பயன்படுத்தி, தமது பரப்புரையைச் செய்தார்கள். அதாவது தற்பால் சேர்க்கை, சமய நம்பிக்கைகள் போன்ற கொள்கைகளில் குடிவரவாளர்கள் பழமைவாதிகளுடன் ஒத்துப் போகிறார்கள். பின்னர் குடிவரவாளர்களில் பொருளாதார முன்னேற்றம் கண்ட பகுதி தமக்கு ஆதரவு தருவார்கள் என்று கணக்குப் போடுகிறார்கள். சிரமங்களைச் சமாளித்து தமது வசதிகளைப் பொருக்கிக் கொண்டவர்களுகு தேவை வரிக் குறைவு, வணிக உதவி. எனவே பழமைவாதிகளின் வியூகத்தில் இவர்கள் இலகுவாக விழுந்து விடுகிறார்கள்.

தமிழர்களைப் பொருத்த வரையில் அவர்களுக்கு கூடிய ஆதரவு தரம் கட்சி புதிய சனநாயக கட்சி ஆகும். ஆனால் அவர்கள் அரசு அமைப்பதற்கான வாய்ப்பு அரிது என்ற படியால், தமிழர்கள் லிபிரல் கட்சிக்கு வாக்களிப்பதே வழமையாக இருந்தது. ஆனால் பழமைவாதிகள் தமிழர்கள் உட்பட "இனக்குழுமங்கள்" (ethnic communities) மீது ஊடுருவல் செய்து, அவர்களின் வாக்குக்களைப் பெறுவதற்கான பல நடவடிக்கைகளைச் செய்துள்ளார்கள். இதன் உச்சமாக Tamil Vision தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்த ஒருவரை வேட்பாளராக நியமித்து உள்ளார்கள். சில தமிழர்கள் இவர்களுக்கு வாக்களித்தால் இலங்கைப் பிரச்சினையில் தமக்கு சாதகமான முடிவுகளை இவர்கள் எடுப்பார்கள் என்ற நப்பாசையும் இருக்கிறது.

ஆபத்து என்னவென்றால், இவர்கள் தீவர வடதுசாரிகள். இவர்கள் பெரும்பான்மை அதிகாரத்திற்கு வந்தால் பெரும்பான்மை தமிழர்களுக்கு, குடிவரவாளர்களுக்கு, அடித்தள மக்களுக்கு கொட்ட காலம். நலம், கல்வி, சூழல், சமூக சேவைகள் என எல்லாவற்றையும் வெட்டுத்தள்ளி விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. கண்மூடித்தனமாக பணத்தைக் கொண்ட படைத்துறைக்கு சிறைகளை கட்டவும் கொட்டி விட்டு மருத்துவம் கல்வி போன்றவற்றுக்கு காசு இல்லை என்பார்கள். மருத்துவ வசதிகளுக்கு காசு கொடுக்க வேண்டும், அல்லது மருத்துவக் காப்பீடு தேவை என்று வந்த பிறகுதான் எமக்கு உறைக்கும் என்றால் ஒன்றும் செய்ய இயலாது. கனடாவில எப்பவும் அண்டவிய மருத்துவ வசதி, முதியோருக்கான ஓய்வூதியம் போன்றவை இருக்கவில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதிய சனநாயகக் கட்சியின் உந்துதலால் கொண்டுவரப்பட்டவை தான் அவை. இன்று இருக்கு, நாளை இல்லாமல் போகலாம். பேணுவதும், துலைப்பதும் எமது தெரிவுகளில்தான் இருக்கு.

என்னைப் பொருத வரையில நாம் பொதுவாக் என்.டி.பி (புதிய சனநாயக் கட்சிக்கு) வாக்களிப்பவன். அவர்களின் பொருளாதரக் கொள்கைகள் பலவற்றுடன் ஒத்துப் போகாவிட்டாலும், பெரும்பாலான சமூகக் கொள்கைகளுக்காக அப்படி வாக்களிப்பவன். இந்த முறை எமது இடத்துக்கு ஒரு தமிழ் பெண் (www.rathika.ca) கேட்கிறார். எனவே நிச்சியமாக அவருக்கே வாக்கு. மேற்குறிப்பிட்ட இருவர் மட்டுமே தேர்தலில் பங்குபெறும் தமிழர்கள். 25% நிறமுடையோர் இருக்கும் கனடாவில் இன்னும் 90%+ அரசியல்வாதிகள் வெள்ளைக் காரரே. அது இயல்பாக மாற வேண்டும்.

மக்களாட்சி என்பது திறமையானவர்களைத் தேர்தெடுப்பது மட்டும் அல்ல. அது எமது சார்பாளர்களைத் தேர்தெடுப்பது ஆகும். பொதுவாக இனம், சமயம், நிறம் போன்றவை இதில் பொருட்படக்கூடாது, கொள்கைகள், செயற்திட்டங்கள், திறமைகளே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது சரியே. எனினும் எமது பின்புலத்தை உடையவர்களும், எமது பிரச்சினைகளை அறிந்தவர்களும், எமது நிறத்தவர்களும் சட்டமன்றத்துக்கு தேர்தலுக்கு நிற்பதும், தேர்தெடுக்கப்படுவதும் நியாமானதே. ஆனால் அவர்கள் எம்மைப் போல இருக்கிறார்கள் என்பதற்காக மட்டும் நாம் வாக்குப் போடுவது பெரும் தவறு, அவர்கள் எமக்கும், பிறருக்கும் நன்மை செய்வாரா என்று வாக்குப் போடுவதே அவசியம்.

1கருத்துக்கள்

At 9:27 PM, Blogger அருண்மொழிவர்மன் said...

காலத்திற்குத் தேவையான முக்கியமான பதிவு. உடன்படுகின்றேன்

 

Post a Comment

<< Home