<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Saturday, August 27, 2011

யக் லேற்ரன் இறப்பும், இசுடீபன் கார்ப்பரின் அரசியல் பண்பும்

யக் லேற்ரன் இறந்த போது, மனம் ஒரு கணம் அதிர்ந்து மீண்டது. கனடாவில், முதல் முறையாக இடதுசாரி புதிய சனநாயக் கட்சியினரை பெரும் வெற்றிக்கு தலைமை தாங்கிய மனிதர். அரசாட்சியை வெல்லவிட்டாலும், அதிகாரபூர்வ எதிர்கட்சியாக அக் கட்சியை வளர்த்தெடுத்திருந்தார். ஒரு முறை புற்று நோயை வென்ற மனிதர், மீண்டும் அந் நோயால் பாதிக்கப்பட்டு, குணமடைவதற்கா சற்று ஒதுங்கி இருப்பதாக ஒரு மாதம் முன்னரே கூறிச் சென்று இருந்தார். அவர் இறந்தா என்பது அதிர்ச்சியாகவே பலருக்கும் அமைந்தது. மிகவும் அணுகக் கூடிய, சிரித்த முகமுடைய மனிதர். பியர் குடிக்க வேண்டும் என்றால், இவரோடுதான் செல்வோம் என்று இவருக்கு வாக்குப் போடாதவர்களும் விரும்பிய மனிதர். எனவே, அப்படிப்பட்ட ஒரு தலைவர் இறந்த போது, முழு நாடே கவலை கொண்டது.

2009 இல் ஒட்டாவில் நின்று தமிழர்கள் உதவி கோரிய போது, கொடியையும், அதன் விளைவுகளையும் பொருட்படுத்தாமல் பாராளுமன்றத்துக்கு வெளியே வந்து ஆதரவு தந்த ஒரே தலைவர் இவரே. தமிழர்கள் எந்த நிகழ்வைக் கூட்டினாலும், இலகுவில் அழைக்கப்படக் கூடியவர் இவர் என்ற சற்று ஒரு வகையில் ஏளனமாகக் கருதப்பட்ட தலைவரும் இவர்தான். ஒருபால் உரிமைகளுக்காகவும், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும், மிதிவண்டி பயன்பாட்டாளர்களுக்காவும், சூழலியல் சிக்கல்களை முன்வைத்தும், வீடு இல்லாதவர்களுக்காவும், பல்லினப் பண்பாட்டுக்காவும், போருக்கு எதிராகவும் இவர் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். எனவே அவர் இறப்பு அடுத்தள மக்கள் எல்லோரையும் உலுக்கியதில் யாரும் ஆச்சரியப்படவில்லை. ஆனால், இவரின் இறப்பை அரசும், பிரதமரான இசுடீபன் கார்ப்பரும் எப்படி அணுகினார்கள் என்பதில் இருந்து அவர்கள் மீது ஒரு மதிப்பு வந்தது.

ஆளுக்கு ஆள் குறிபறிக்கும் ஈழத் தமிழர் அரசியல் ஆகட்டும், ஆட்சி மாறினால் ஆக்களை தூக்கி உள்ளே வைக்கும் தமிழக அரசியல் ஆகட்டும் எமது அரசிலின் நிலைமை, பண்பு மிக மிகக் கேவலமானது. அதனோடு ஒப்பிடும் போது, தற்போது ஆட்சி செய்யும் கட்சியும், அதன் தலைவரும் அவர்களின் அரசியல் எதிரியின் இறப்பை எப்படி மதித்துச் செயற்பாட்டார்கள் என்று எண்ணுகையில் கனடாவுக்காக ஒருமுறை மகிழ்வடைகிறேன். தானும் அவரும் கித்தார் (guitar) jam session சேர்ந்து செய்ய எண்ணியிருந்தாகவும், அந்த வாய்ப்பு இல்லாமல் அவர் இறந்துவிட்டார் என்றும் பிரதமர் வருத்தப்பட்டார். வாழ்கையில் எவை முக்கியம் என்பதை இது உணர்த்துவதாக அவர் கூறினார்.

பொதுவாக பிரதமர்களுக்கும், ஆளுணர்களுக்கும் மட்டும் ஒதுக்கப்படும் அரச இறுதிச் சடங்கை (state funeral) இவர் யக் லேற்ரனுக்கும் ஏற்பாடு செய்தார். யக் லேற்ரனின் பொது வாழ்வுப் பங்களிப்பு ஒட்டு மொத்த கனடாவுக்கும் மிகப் பெறுமதியானது என்றும், மேலும் பல நன்முக கருத்துக்களையும் பகிர்ந்தார். தீவர வடதுசாரிக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, அவரின் அரசியல் துருவ எதிரிக்கும் அவர் செலுத்திய மரியாதை நிச்சியமாக மக்களுக்கு அமைதி தந்தது.

நீ என்னதான் அரசியல் எதிரியாக இருந்தாலும், உன்னை சக மனிதனாக நான், நாம் மதிக்கிறேன் என்பதை கனேடியர்கள் நன்கு உணர்த்தினார்கள். அந்தப் பண்பு எவ்வளவு புனிதமானது என்பது தமிழர்களுக்கும் எனோ புரியாது.

0கருத்துக்கள்

Post a Comment

<< Home