<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Saturday, June 18, 2011

தமிழ் அமைப்புகளிற்கு நடப்பு மொழியின் முக்கியத்துவம்

ஒரு மொழி பேணப்பட, வளர அது பயன்படுத்தப்படும் களங்கள் (domains), பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள், அமைப்புசார் ஆதரவு, மதிப்பு, பேச்சுச் சமூகம், மொழி வளம் ஆகியவை முக்கியம். வீடு, உறவுகள், இலக்கியம், கலைகள், ஊடகம், அரசாட்சி, உயர் கல்வி, அறிவியல், வணிகம், சமயம் என பல்துறைகளில் ஒரு மொழி பயன்படுத்தப்படும் மொழுதுதான் அது உயிர்ப்புடனும் திறனாகவும் இருக்கும். ஆனால் தற்போது தமிழ் மொழி பல களங்களில் தனது செல்வாக்கை இழந்து வருவது கவலைக்கு உரியது. இதற்கு மிக மோசமான முன்மாதிரிகளாக தமிழ் மொழியை பேணுவதற்காக வளர்ப்பதற்காக செயற்படும் அமைப்புகள் கூடத் தமது நடப்பு மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதான்.

இந்த செயற்பாட்டின் கேடுதல் பற்றி மொழியியலாளர் யோசுவா ஃபிசர்மன் அவர்கள் விரிவாகக் கருத்துக்கள் கூறி உள்ளார். நவோயோ மொழிப் பேணலில் ஈடுபட்டிருக்கும் பாடசலைகள் பற்றி பின்வரும் கருத்தைக் கூறுகிறார். "Compounding the problem from language revitalisation perspectives, most school-based Navajo language and literacy programmes treat Najvajo as supplemental education, thereby reinforcing English as the 'real' language of the school." மொழிப் புத்துயிர்ப்பு கண்ணோட்டத்தில், நவயோ மொழிக் கல்வி நவோயோவை ஒரு துணைப் பகுதியாகவே நடத்துகின்றது, அதனால் ஆங்கிலமே 'உண்மையான' மொழி என்பதை வலுவூட்டுகின்றன என்கிறார் அவர். இது தமிழுக்கும் பொருந்தும். தமிழ் மொழியைப் பேண, வளர்க்க முற்படும் அமைப்புகள் தமிழை தமது நடப்பு மொழியாகக் கொள்ளாதது ஆங்கிலமே 'உண்மையான' மொழி என்பதையே வலியூட்டும். அத்தகைய விளைவு அந்த அமைப்புகளின் இலக்குகளுக்கு முரணானது. நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும் என்றால் அதை மீறிச் செயற்படுவதையே அவர்கள் ஒரு இலக்கா, பணியாகக் கொள்ளலாம்.

ஒர் அமைப்பின் நடப்பு மொழி என்றால், அந்த அமைப்பின் அன்றாட செயற்பாடுகளில் பயன்படுத்தப்படும் மொழி அல்லது மொழிகள் ஆகும். இன்று தமிழியல், தமிழ் இலக்கியம், தமிழ்க் கணிமை, தமிழர் சமூக அரசியல் அமைப்புகள், ஊடகங்கள் பலவினது நடப்பு மொழியாக ஆங்கிலம் அதி வேகமாக வேரூன்றி வருகிறது. விசய் தொலைக்காட்சியில் பாடல் போட்டி நிகழ்ச்சியின் தலைப்புத் தொடக்கம் உரையாடகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமையும். பாடல்கள் மட்டும் பெரும்பான்மையாகத் தமிழில் அமையும். இந்த நிலைமையை தமிழ் தொலைக்காட்சிகளே ஏற்படுத்தின.

தமிழ் தொலைக்காட்சிகளின், அவற்றின் தொகுப்பாளர்களின் தமில் பற்றி எதிர்பார்ப்புக்கள் வைத்திருக்க வேண்டாம் என்றால், தமிழ் மொழியின் கூரிய முனையாக கருதப்படும் தமிழ் இலக்கிய அமைப்புகளிலும் தமிழ் நடப்பு மொழியாக இல்லாமல் இருப்பது மிகவும் கவலைக்கு உரியது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் எழுத்தாளர்களுக்கான விருது விழா அறிமுகம், நிகழ்ச்சித் தொகுப்புகள், மற்றும் நன்றியுரை ஆகியன ஆங்கிலத்தில் மட்டுமே அமைந்திருந்தன. நூல்கள் பற்றிய குறிப்புகளும், எழுத்தாளர்களின் உரைகளும் தமிழில் அமைந்திருந்தன. அடேங்கப்பா இதையாவது தமிழில் வைத்தார்களே என்று பலர் மகிழ்ந்து கொண்டார்கள். ஆனால் ஏன் நிகழ்ச்சித் தொகுப்பை ஆங்கிலத்தில் மட்டும் வைத்தார்கள்? தமிழ் தொகுப்பாளர்கள் கிடைக்கவில்லையா. இது காரணம் இல்லை. ஏன் என்றால் அந்த நிகழ்விலேயே ஐந்து இளையோராவது தமிழில் படைப்புக்களை சிறப்பாக அறிமுகம் செய்தார்கள். ஆங்கிலம் பிற இனத்தவர்களுக்கு விளங்கும். அங்கு வந்தவர்களில் 99% தமிழர்கள். ஆங்கிலம் இளையவர்களுக்கு விளங்கும். இது நாங்களே ஏற்படுத்திக் கொண்ட ஒரு நிலைமை. பேச்சுத் தமிழ் இவர்களுக்கு விளங்கவில்லை என்று கூறுவது ஒரு சாட்டு. ஆங்கிலப் பயன்பாட்டிற்கு ஒரு முக்கிய காரணம் ஆங்கிலம் இங்கேயும் வர்க்கச் செல்வாக்கை அல்லது சமூக நிலையை அறைகூவப் பயன்படுத்தப்படுகிறது என்பது. தமிழ் கணிமைக்கான உத்தமம் அமைப்பிலும் நடப்பு மொழியாக ஆங்கிலமே பெரிதும் இருக்கிறது. தமிழர் தமிழர் என்று துடிக்கும் சமூக அரசியல் அமைப்புகளும் தமிழ் மொழியை தமது நடப்பு மொழியாகக் கொள்வது அருகி வருகிறது.

தமிழை நடப்பு மொழியாக கொள்வது முடியாதது ஒன்றுமில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் தொடக்க கட்டத்தில் தமிழில் கட்டுரைகள் எழுதிவிட்டு உரையாடல் பக்கத்தில் ஆங்கிலத்திலேயே உரையாடல்கள் நடக்கும். நாம் என்ன செய்ய நினைக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை ஒருமுறை எண்ணிப் பார்த்தோம். நாம் தமிழிலேயே உரையாடல்களையும் வைத்துக் கொள்ளவது நல்லது என்று முடிவுசெய்தோம். கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லா உரையாடல்களும், கையேடுகளும், கொள்கைகளும் தமிழிலேயே இருக்கின்றன.

தமிழை நடப்பு மொழியாக கொள்வதே நீங்கள் தமிழுக்கு செய்யும் ஒரு பெரும் பணியாக இருக்கும். அதை விடுத்து எங்களை அன்னியப்படுத்தார்கள். பிற மொழித் தொடர்பாடல் அவசியம் என்றால், அந்த மொழிகளிலும் செய்யலாம். ஆனால் தமிழ் கட்டாயம் நடப்பு மொழியாக தமிழ் மொழி அமைப்புகளில் இருத்தல் வேண்டும். அப்படி இல்லாத தமிழ் மொழி அமைப்புகள் எல்லாம் போலி, உயிர்ப்பு அற்றவை.

Labels: ,

0கருத்துக்கள்

Post a Comment

<< Home