<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Sunday, October 16, 2011

அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 4 - நிதித்துறை, நிதிமயமாக்கம், சூதாட்டம்

முதலாளித்துவத்துக்கும் சந்தைப் பொருளாதாரத்துக்கும் அடிப்படையான ஒரு முறைமை வங்கிகளும் நிதித்துறையும் ஆகும். பண்டமாற்ற்றில் இருந்து பணத்துக்கு மாறியதே நிதிமயமாக்கத்தின் முதல் கட்டம் எனலாம். பணமும், வங்கிகளும் பணத்தின் ஊடான பண்டமாற்றை, பொருட் பாதுகாப்பை, முதலீட்டை ஏதுவாக்கின. பாதுகாப்புக்காக/காப்புறுதிக்காக, பண்டமாற்று வசதிக்காக மக்கள்/வணிகங்கள் வங்கிகளிடம் பணத்தைக் கொண்டு இருப்புச் செய்கிறார்கள். இருப்புச் செய்த எல்லோரும் ஒரே சமயத்தில் தமது பணத்தை கேக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வங்கிகள் உற்பத்தியாளர்களுக்கு, புத்தாக்கர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுக்கிறார்கள். இந்த வட்டியே வங்கிகள் பெறும் வருமானத்தில் ஒரு முக்கிய பகுதி.

நவீன சமூகத்துக்கு வணிகத்துக்கு வங்கிகளும் நிதித்துறையும் அடிப்படையானது. ஆனால் சில வங்கிகளும் வணிகங்களும் இந்த முறைமையை தமக்கு பெரும் இலாபம் ஈட்டுவதற்கு வகையான முறையில் அமைத்துக் கொண்டனர்.

நிதிமயமாக்கத்தின் ஒரு ஆபத்தான பகுதி இருப்பை மிகையாக நெம்பவைத்தல் (overleverage) ஆகும். 1000 ரூபாய் முதல் வைத்திருக்கும் ஒரு வங்கியில் 10000 ரூபாய்களை 100 பேர் இருப்பு வைத்தால், அந்த நூறு பேரில் பத்துப் பேர் 1000 வரை ஒரே நேரத்தில் கேக்கலாம் என்று எதிர் பார்த்து, மிகுதி 9000 யை கடனாகக் கொடுக்கலாம். வங்கிகள் 9000 என்பதை விட அதைவிட பல 5-10 மடங்கு வரை இருப்பை முதலாக நெம்பு வைத்து பணத்தை கடன் கொடுக்கும். இவ்வாறு நெம்புவைத்து பெரும் இலாபம் ஈட்டு நோக்கில் இந்த வங்கிகள் மிக மோசமான கடன்களையும் வழிப்பொருட்களையும் (derivatives) வழங்கின அல்லது வாங்கின. பொருளாதாரம் சரிந்த போது இந்த வங்கிகள் கடன்களை திருப்ப முடியாத நிலைக்குப் போகின. இதனால் இருப்பு வைத்தவர்களின் நிலையும் சிக்கலானது. இவ்வாறு இருப்பு வைத்த பொது மக்களும், கடன்களை முதலீடாக தேவைப்படும் வணிகங்களும் பணம் பெற முடியாமல் போன போது ஐக்கிய அமெரிக்க அரசு அத்தகைய சில வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் பிணை எடுத்தல் அவசியமானது. 2008 இருந்து இப்போது தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு வங்கிகள் மிகையாக நெம்புவைத்தது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சந்தையில் ஒரு முக்கிய சேவையைச் செய்கின்றன, எனினும் ஒரு பொருளாதாரத்தின் அடிப்படை உற்பத்தி ஆகும். ஆனால் ஐக்கிய அமெரிக்காவிலும் உலகென்கும் இந்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இலாபம் ஈட்டும் முதன்மை வழிகளாக மாறிவிட்டன. நிதி நிறுவனங்கள் பல்வேறு நிதிக் கருவிகளை உற்பத்தி செய்துள்ளன. கடன், வட்டி, பங்கு மட்டுமல்ல futures, options, swaps, Asset-backed security என்று பல வகைக் கருவிகள். 1970 களில் ஐ.அ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொ.உ.உ)13.1% வீதமாக இருந்த பங்குச் சந்தை 2000 களில் 140% மேல் ஆனது.

அடிப்படையில் அமெரிக்க முதலாளித்துவம் ஒரு சூதாட்டம் ஆக மாறிவிட்டது என்பது விமர்சகர்களின் கருத்து. அரசை அவர்கள் கட்டுப்படுத்துவதன் மூலம் அரசும் அதற்கு உடந்தையாக அமைந்துவிட்டது என்கிறார்கள்.

Labels:

0கருத்துக்கள்

Post a Comment

<< Home