<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Monday, January 02, 2012

ரோன் போலின் சுதந்திரவாதம் இனவாதத்தை ஆதரிக்கிறதா?

சுதந்திரவாதமும் வடதுசாரிகளும் பெரும்பாலான சமூகத் தளங்களில் முரண்பட்டும் பொருளாதாரத் தளங்களில் ஒன்றுபட்டும் நிற்பர். ஆனால் யாருக்கு வாக்குப் போடுவது என்று வரும் போது அவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத் தளத்தை அடிப்படையாக வைத்தே தீர்மானிப்பார்கள். இது சுதந்திரவாதத்துக்குள் இருக்கும் ஒரு பெரிய உட்சிக்கல் ஆகும்.

வரும் 2012 ஐக்கிய அமெரிக்க குடியரசுக் கட்சித் தேர்தலுக்கு மக்களாட்சிக் கட்சி சார்பாளர் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக பலர் தீவர வலதுசாரிக் கட்சியான குடியரசுக் கட்சிக்குள் போட்டி போடுகிறார்கள். பொதுவாக இவர்கள் எல்லோரும் மிகவும் கடுமையான மரபுவாதத்தைப் பேணுபவர்கள். கட்டுப்பாடான வரவு செலவை வேண்டுதல், வணிகத்தை எல்லா நிலைகளிலும் ஆதரித்தல், குடிவரவை எதிர்த்தல், கருக்கலைப்பதற்கான பெண்களுக்கான உரிமையை எதிர்த்தல், கிறித்தவ சமய நம்பிக்கையை வெளிப்படுத்தல், ஓருபாலினத்தவர் திருமணத்தை எதிர்த்தல், பெரிய படைத்துறை வரவுசெலவை விரும்புதல், அரச மருத்துவ வசதிகளை எதிர்த்தல், இசுரேலுக்கான கண்மூடிந்த்தனமான ஆதரவு, சூழலியல் சிக்கல்களை மறுத்தல், ஈரானை கட்டுப்படுத்தல், போதைக்கு எதிரான போர் போன்ற நிலைப்பாடுகளை இவர்கள் அனைவரும் வெவ்வேறு தீவரத்தனத்தோடு முன்வைக்கிறார்கள். குடியரசுக் கட்சியின் சுதந்திரவாதப் பிரிவினரால் முன்நிறுத்தப்படும் ரோன் போல் (Ron Paul) இவர்களின் பல கருத்துநிலைகளோடு மாறுபடுகிற போதிலும் சமூகத் தளத்தில் பெரும்பாலும் ஒத்தே போகிறார்.

சுந்திரவாதம் என்பது இயன்றவரை அரசின் அதிகாரமும் பங்கும் குறைவானதாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமைய வேண்டும் என்கிற ஒர் அரசியல் பொருளாதாரக் கோட்பாடு ஆகும். தனியார் சொத்து, தனியார் தெரிவுகள் ஆகியவற்றை இது தீர்க்கமாக வலியுறுத்துகிறது. இந்த கோட்பாட்டு நோக்கில் ரோன் போல் முன்வைக்கும் சில நிலைப்பாடுகள் குடியரசுக் கட்சியில் வேறு யாரும் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார்கள். ரோப் போல் போதைப் பயன்பாட்டை, பாலியல் தொழில்களை குற்றம்மற்றதாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை உலகின் எல்லா இடங்களில் இருந்தும் வெளியேற வேண்டும், யார் நிலத்தையும் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடாது என்ற்கிறார். போர்களை எதிர்க்கிறார். இவர் அமெரிக்க புலனாய்வுத் துறையையும் நடுவண் வங்கியையும் இல்லாமல் செய்தும், அரச விண்வெளி நிறுவனமான நாசாவையும் விடப்போவதாக கூறி உள்ளார். கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும், உலக வணிக அமைப்பில் (WTO) இருந்து ஐக்கிய அமெரிக்கா வெளியேற வேண்டும் என்றும் கூறுகிறார். இவ்வாறு பல கருத்தியல் அடிப்படையிலான நிலைப்பாடுகளை அவர் கொண்டு உள்ள போதிலும் அவர் பல சமூக சிக்கல்கள் தொடர்பாக கிறித்தவ வலதுசாரிக் கொள்கைகளையே முன்னிறுத்துகிறார்.

பொதுவாக சுதந்திரவாதிகள் தனிமனித வாழ்வில் அரசின் தலையீடுகள் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாடு உடையவர்கள். அந்த ஏரணம் பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமைக்கு சார்பாவே அமைக்கிறது. ஆனால் ரோன் போல் கருக்கலைப்பு உரிமையை மறுக்கிறார். ஒருபாலினரின் திருமணத்துக்குக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் எதிராகவே இவர் செயற்படுகிறார். இது சுதந்திரவாத நிலைபாட்டிற்கு முற்றிலும் எதிர்மாறானதாகும். இவர் கிறித்தவ சமயத்தையும் பண்பாட்டையும் பேணுவதற்கான உரிமைகள் வேண்டும் என்று கூறி, அரச சமய பிரிவினையை எதிர்க்கிறார். இது பிற சமயத்தாரின், சமயம் சாரதவர்களின் உரிமைகளுக்கு எதிராகவும், சுதந்திரவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிராகவும் அமைகிறது. குடிவரவை எதிர்ப்பதிலும் இவர் சுந்திரவாத கொள்கைகளில் இருந்து விலகிப் போகிறார்.

கறுப்பு மற்று அனைத்தின மக்களும் ஒரே பொது பாடசாலையில் படிக்க, வேலை வாய்ப்புக்களைப் பெற, பொது இடங்களின் சமமாக நடத்தப்பட உரிமைகள் வழங்கிய 1964 குடி உரிமைகள் சட்டத்துக்கு (Civil Rights Act of 1964) எதிரனான இவரின் நிலைப்பாடு ஒரு கோரமான சறுக்கல் ஆகும். ஒரு விதத்தில் சுதந்திரவாத கோட்பாட்டின் படி இது தனிச்சொத்து, தனிமனிதத் தெரிவுகளை ஆதரிப்பது போன்று தெரிந்தாலும், கறுப்பினத்தவர்களின் அடிப்படையை உரிமைகளை எதிர்ப்பதாக இது அமைகிறது. ஒரு கறுப்பின மாணவர் வெள்ளையர்கள் அதிகம் இருக்கும் ஒர் ஊரில் பாடசாலை செல்ல முடியாத நிலையில் வெள்ளையர்களுக்கு இருக்கும் தெரிவுச் சுதந்திரம் முக்கியமா, அல்லது அந்த கறுப்பின மாணவருக்கும் தான் கல்வி கற்க இருக்கும் தெரிவுச் சுதந்திரம் முக்கியமா என்ற கேள்வி எழுகிறது. இங்கு சுதந்திரவாதக் கோட்பாடு உடைகிறது என்றே படுகிறது.

அரசின் அதிகாரத்துக்கா நாம் பயப்படும் அதே வேளை பிற சமூக அமைப்புகளின் அதிகாரத்தையும் புறக்கணித்து விட முடியாது. சாதி, சமயம், பெரும் வணிகம் என பல்வேறு அதிகார மையங்களை நோக்கியும் நாம் அவதானத்துடம் இருக்க வேண்டும். எங்கு அதிகாரம் இருக்கிறதோ, அது வன்முறையாக தனது இலாபங்களை ஈட்டப் பார்க்கும் என்பதை புரிந்து கொண்டு, அதை கட்டுப்படுத்த தக்க Checks and balances, சட்ட பொருளாதார முறைமைகள் தேவை.

Ron Paul’s quest to undo the party of Lincoln

Why Libertarianism Doesn't Work

Labels: , ,

0கருத்துக்கள்

Post a Comment

<< Home