<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Sunday, December 29, 2013

சங்கீதா ரிச்சார்ட்- கனடாவின் வீட்டுப் பணியாளர்கள் - தொழிலாளர்களுக்கான திறந்த சந்தை

ஒப்பந்தப் படியோ, அல்லது அமெரிக்க அடிப்படை ஊதியச் சட்டப் படியோ ஊதியம் வழங்கவில்லை, வீட்டுப்பணியாளரை துன்புறுத்தினார் போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக இந்திய இணைத் தூதுவர் தேவயானி கோபர்கடே ஐக்கிய அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக இந்திய அரசியல்வாதிகள் கொதிப்படைந்து உச்சகட்ட அழுத்தத்தை அமெரிக்கா மீது செலுத்தி வருகிறார்கள்.  பிற எந்த நிகழ்வுகளின் போதும் குடுக்காத அழுத்தத்தை இந்தியா இப்பொழுது செய்து வருகிறது.  என்ன உண்மை என்று தெளிவாக அறிய முன்னரே இந்தியா தனது மற்றைய குடிமகளை பலிகொடுத்து தூதரை காப்பாற்றும் முழுமையான முயற்சியில் ஈடுபட்டு இருப்பது, இந்தியாவின் இன்றைய ஏற்றதாழ்வு சூழ்நிலையை நன்கு சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.  இன்றைய இந்தியா தனது வெளிக் காட்சியைப் பற்றி, தனது எசமானிகளைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறது, அதன் தொழிலாளர்களைப் பற்றி அல்ல.

கனடாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் மூன்றாம் உலக ஊழியர்கள் துன்புறுத்தப்படுவது புதிதல்ல, அது வழமையாக நடைபெறும் ஒன்று.  பார்த்தும் பார்க்கதது போல இங்கே உள்ள அரசுகள் நடந்து கொள்கின்றன.  கனடாவில் பல்லாயிரக்கணக்கான வீட்டுத் தொழிலாளர்கள் குடியுரிமை ஆசையைக் காட்டி பிலிப்னைசு, சீனா போன்ற நாடுகளில் இருந்து மேட்டுக்குடி வீடுகளுக்கு வேலைக்கு ஒப்பந்தப்படி அழைக்கப்படுகிறார்கள்.  பிள்ளைப் பார்ப்பது, முதியோரைப் பராமரிப்பது, வீட்டுப் பராமரிப்பு போன்ற வேலைகளை சங்கீதா போன்று மேட்டுக்குடி மக்கள் வீடுகளில் தங்கி இருந்து செய்கிறார்கள்.  கனடாவில் இத் திட்டத்துக்குப் பெயர் Live-In Caregiver Program ஆகும்.  இவர்கள் வீட்டில் தங்கி வேலை செய்ய வேண்டும், வேறு வேலைகள் செய்ய முடியாது.  இவர்களுக்கு இருக்கும் ஒரே விடுதலைப் பாதை, பல ஆண்டுகளுக்குப் பின்பு ஒப்பந்தம் முடிவடைந்து அவர்கள் குடியுரிமை பெறுவது ஆகும்.  அப்படி அவர்கள் தமது பணியை முடித்தாலும், குடியுரிமை தருவதில் கனடிய அரசு பல இழுத்தடிப்புக்களைச் செய்யும். 

திறந்த சந்தை, திறந்த சந்தை என்று உரக்கக் கக்கும் மேற்குலக நாடுகள், தொழிலாளர்களுக்கான திறந்த சந்தையை ஏன் உருவாக்க மறுக்கின்றன.  ஒரு உண்மையான திறந்த சந்தையில் எங்கே இருந்தும் யாரும் ஒரு வேலையை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.  ஆனால் குடிவரவு, தொழிலாளர்களின் சுதந்திரமான நகர்வு என்று வரும்போது வலதுசாரிகளின் திறந்த சந்தைக் கொள்கை புத்துக்குள் போய் ஒளித்துக் கொள்கிறது.  ஆப்பிரிக்காவின், மூறாம் உலகின் உண்மையான வளர்ச்சியில் மேற்கு உலகுக்கு அக்கறை இருக்கும் ஆனால், அங்குள்ள அடிப்படைத் தொழிலாளர்களை சுதந்திரமாக மேற்குலகில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.  இவ்வாறு செய்வதன் மூலம் இன்றைய கொத்தடிமை முறைமையைத் தகர்க்கலாம். 

Labels: , , , ,

Monday, July 29, 2013

டிட்ராயிட்டின் (detroit) வீழ்ச்சியும் ஏழை கறுப்பின மக்களும்

ஐக்கிய அமெரிக்காவின் எந்திர நகரம் (Motor City) என்று அறியப்பட்ட பெரும் நகரங்களின் ஒன்றான டிட்ராயிட் (Detroit) அண்மையில் கடன் நொடிக்கு (bankruptcy) தள்ளப்பட்டுள்ளது.  இன்றுவரை, கடன் நொடிக்கு தள்ளப்பட்ட மிகப் பெரும் நகரம் இதுவே ஆகும். அமெரிக்காவின் முப்பெரும் தானுந்து நிறுவங்கள் (GM, Ford, Chrysler) இங்கேயே தலைமைபீடம் கொண்டுள்ளன.  நெடுங்காலமாக தானுந்துக்கள் உற்பத்தி பெருமளவு இங்கேயே நடைபெற்றது. ஆனால் இன்று 12 தொழிற்சாலைகளில் இருந்து வீழ்ந்து இரண்டு தொழிற்சாலைகள் மட்டுமே இங்கு உள்ளன.  1950 களில் இங்கு 296,000 உயர் சம்பளம் கொண்ட உற்பத்தி வேலைகள் இருந்தன, இன்று 27,000 வேலைகள் மட்டுமே உள்ளன. 

1960 களில் 1.6 மில்லியன் மக்கள் வாழ்ந்த டிட்ராயிட் நகரத்தில் இன்று 700,000 மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். இதில் 83% ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், 11% வெள்ளையர்கள், 6% பிறர்.  கடந்த சில பத்தாண்டுகளாக "வெள்ளையர் வெளியேற்றம்" (white flight) நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.  குறிப்பாக இவர்கள் புற நகரப் பகுதிகளுக்கு நகர்ந்துள்ளார்கள்.  டிட்ராயிட் வீழ்ச்சி பெறத் தொடங்கியதில் இருந்து வேலையின்மை கூடியுள்ளது, நகர சேவைகள் பல செயலிழந்து போயுள்ளன, குற்றச் செயல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.  டிட்ராயிட்டின் வீழ்ச்சியும் வெள்ளையர் வெளியேற்றம் ஒரே நேரம் நிகழ்ந்துள்ளது.  இதனை சுட்டிக் காட்டி பல தேர்ந்த ஆய்வாளர்கள் கூட டிட்ராயிட்டின் வீழ்ச்சி வெள்ளையர் வெளியேற்றத்தாலேயே நிகழ்ந்துள்ளது என்று வாதிட்டுள்ளார்கள்.

இவ் இரண்டு நிகழ்வுகளுக்கு இடையே ஒரு பலவீனமான ஒட்டுறவு (weak correlation) நிலை இருக்கலாம்.  ஆனால் வெள்ளையர் வெளியேற்றமே டிட்ராயிட்டின் வீழ்ச்சிக்கு காரணமாக (causes) அமைந்தது என்பதற்கு வலுவான சான்றுகளும் இல்லை.  டிட்ராயிட் பொருளாதாரத்தில் ஏற்ற முகத்தில் இருந்த போது வேலை வாய்ப்புக்கள் தேடி ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்கள் பெருந் தொகையில் டிட்ராயிட்டுக்கு வந்தார்கள்.  அவர்களும் வெள்ளை உழைக்கும் மக்களும் ஒரே வர்க்கமாக இருந்தாலும், அவர்கள் கடும் இனவாதத்தை எதிர்நோக்கினார்கள். வெள்ளையர்களின் மிகக் கோரமான ஒடுக்குமுறைகளும், அதற்கு எதிராக வலுவான எதிர்ப்புப் போராட்டங்களும் இந்த நகரத்தில் நடந்தன.  இந்த ஒடுக்குமுறைகளும் இனவாதக் கட்டமைப்புக்களும் கறுப்பின மக்களை தொடர்ந்து பெருமளவு பொருளாதார கல்வி அரசியல் நோக்கில் பாதித்து வந்தன.  இவர்களின் ஒரே இணக்கப் பாலமாக இருந்த தொழிற் சங்கங்களும் இவர்களை அரசியல் நோக்கில் இணைப்பதில் வெற்றி கொள்ளவில்லை. 

அமெரிக்க தானுந்து தொழிற்துறை தமது உற்பத்தியை மிகுந்து மலிவான உற்பத்தி வழிகளைத் தேடி மெக்சிக்கொ, இந்தியா, சீனா என்று தமது தொழிற்சாலைகளை நகர்த்தின.  இந்த நகர்வால் பெருமளவு உயர் ஊதியம் வழங்கும் தொழிகள் இல்லாமல் போயின.  இந்த வீழ்ச்சியை பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் இருந்த வெள்ளையின மக்களாலும், அப்பொதுதே சற்று மேலெழுந்து வந்த கறுப்பின நடுத்த மக்களாலும் எதிர்கொள்ள முடிந்தது.  அவர்கள் நகரத்தை விட்டு வெளியேறினார்கள்.  வேறு ஒரு வழியில் கூறுவதாயின் நடுத்தர வகுப்பினர் வெளியேறினார்கள். இந்த வகுப்பில் வெள்ளையினரே பெரும்பான்மையினராக இருந்தால் இதை வெள்ளையர் வெளியேற்றம் என்று சிலர் தவறாகக் கருதினர்.  வெள்ளையர்கள் தமது அரசியல் செல்வாகினால் புற நகர்ப் பகுதிகளுக்கு பல சேவைகளைப் பெற்றுக் கொள்ளத் தக்கதாக இருந்ததும் இந்த நகர்வை ஏதுவாக்கியது.

அடிமைத்தனத்தையும், ஒடுக்குமுறையும் எதிர்கொண்ட கறுப்பின மக்களிடம் பொருளாதார மூலங்கள் மிகச் சொற்பமாகவே இருந்தன. நிதி, கல்வி, அரசியல் செல்வாக்கு இவர்களிடம் பெருமளவில் இருக்கவில்லை.  ஆகவே பொருளாதார ஆற்றல் கொண்ட நடுத்தர மக்கள் வெளியேறிய போது பொருளாதார ஆற்றல் நலிந்த மக்களால் டிட்ராயிட்டை திருப்பி நிற்க வைக்க முடியவில்லை. 

டிட்ராயிட் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளின் இனவாதம், ஊழல், மடைமைத்தனம் நிறைந்த நிர்வாகம் ஒரு முக்கிய காரணம்.  தனியே தானுந்து தொழிற்துறையை மட்டும் நம்பி இருந்தது, அந்த துறை வீழ்ந்த போது வேகமாக மாற்றுக்களைக் கண்டடையாதது, இனங்களுக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாதது என்று பல நிர்வாகக் குறைபாடுகள் உண்டு.

இறுதியாக, டிட்ராயிட்டின் வீழ்ச்சிக்கு உலகமயமாதாலாலும், கம்பனிகள் அதிக இலாப தேடியதால் தானுந்து தொழிற்சாலைகளை இழந்தது, அதனால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, அரசியல்வாதிகளின் இனவாத, ஊழல்நிறைந்த, தொலைநோக்கற்ற, நிதிப் பொறுப்பாண்மையற்ற இடதுசாரி நிர்வாகம், இனவாத, இன ஒடுக்குமுறைச் சூழல் ஆகியன டிட்ராயிட்டை வீழ்த்தின.  இதனால் நடுத்தர மக்கள் வெளியேறினார்கள்.  அதில் பெரும்பான்மையினராக வெள்ளையினர் இருந்தனர். 

எந்த ஒரு நகரமும் ஊரும் பன்மைத்துவத்தைப் பேணுவது அதன் பொருளாதார நலனுக்கு நல்லதே. ஆகவே வெள்ளையினர் அல்லது மக்கள் பெருந்தொகையில் வெளியேறியது டிட்ரொயிட்டை கணிசமாகப் பாதித்து இருக்கும்.  ஆனால் இது சிலர் சிலர் சொல்லாமல் குறிப்பிடுவது போன்று வெள்ளையர்கள் நிர்வாக பொருளாதார அரசியல் மேன்மைத்துவத்தினால் அல்ல.  அவ்வாறான வாதங்கள் இனவாதமே.


 

Labels: , ,

Monday, January 02, 2012

ரோன் போலின் சுதந்திரவாதம் இனவாதத்தை ஆதரிக்கிறதா?

சுதந்திரவாதமும் வடதுசாரிகளும் பெரும்பாலான சமூகத் தளங்களில் முரண்பட்டும் பொருளாதாரத் தளங்களில் ஒன்றுபட்டும் நிற்பர். ஆனால் யாருக்கு வாக்குப் போடுவது என்று வரும் போது அவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத் தளத்தை அடிப்படையாக வைத்தே தீர்மானிப்பார்கள். இது சுதந்திரவாதத்துக்குள் இருக்கும் ஒரு பெரிய உட்சிக்கல் ஆகும்.

வரும் 2012 ஐக்கிய அமெரிக்க குடியரசுக் கட்சித் தேர்தலுக்கு மக்களாட்சிக் கட்சி சார்பாளர் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக பலர் தீவர வலதுசாரிக் கட்சியான குடியரசுக் கட்சிக்குள் போட்டி போடுகிறார்கள். பொதுவாக இவர்கள் எல்லோரும் மிகவும் கடுமையான மரபுவாதத்தைப் பேணுபவர்கள். கட்டுப்பாடான வரவு செலவை வேண்டுதல், வணிகத்தை எல்லா நிலைகளிலும் ஆதரித்தல், குடிவரவை எதிர்த்தல், கருக்கலைப்பதற்கான பெண்களுக்கான உரிமையை எதிர்த்தல், கிறித்தவ சமய நம்பிக்கையை வெளிப்படுத்தல், ஓருபாலினத்தவர் திருமணத்தை எதிர்த்தல், பெரிய படைத்துறை வரவுசெலவை விரும்புதல், அரச மருத்துவ வசதிகளை எதிர்த்தல், இசுரேலுக்கான கண்மூடிந்த்தனமான ஆதரவு, சூழலியல் சிக்கல்களை மறுத்தல், ஈரானை கட்டுப்படுத்தல், போதைக்கு எதிரான போர் போன்ற நிலைப்பாடுகளை இவர்கள் அனைவரும் வெவ்வேறு தீவரத்தனத்தோடு முன்வைக்கிறார்கள். குடியரசுக் கட்சியின் சுதந்திரவாதப் பிரிவினரால் முன்நிறுத்தப்படும் ரோன் போல் (Ron Paul) இவர்களின் பல கருத்துநிலைகளோடு மாறுபடுகிற போதிலும் சமூகத் தளத்தில் பெரும்பாலும் ஒத்தே போகிறார்.

சுந்திரவாதம் என்பது இயன்றவரை அரசின் அதிகாரமும் பங்கும் குறைவானதாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமைய வேண்டும் என்கிற ஒர் அரசியல் பொருளாதாரக் கோட்பாடு ஆகும். தனியார் சொத்து, தனியார் தெரிவுகள் ஆகியவற்றை இது தீர்க்கமாக வலியுறுத்துகிறது. இந்த கோட்பாட்டு நோக்கில் ரோன் போல் முன்வைக்கும் சில நிலைப்பாடுகள் குடியரசுக் கட்சியில் வேறு யாரும் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார்கள். ரோப் போல் போதைப் பயன்பாட்டை, பாலியல் தொழில்களை குற்றம்மற்றதாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை உலகின் எல்லா இடங்களில் இருந்தும் வெளியேற வேண்டும், யார் நிலத்தையும் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடாது என்ற்கிறார். போர்களை எதிர்க்கிறார். இவர் அமெரிக்க புலனாய்வுத் துறையையும் நடுவண் வங்கியையும் இல்லாமல் செய்தும், அரச விண்வெளி நிறுவனமான நாசாவையும் விடப்போவதாக கூறி உள்ளார். கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும், உலக வணிக அமைப்பில் (WTO) இருந்து ஐக்கிய அமெரிக்கா வெளியேற வேண்டும் என்றும் கூறுகிறார். இவ்வாறு பல கருத்தியல் அடிப்படையிலான நிலைப்பாடுகளை அவர் கொண்டு உள்ள போதிலும் அவர் பல சமூக சிக்கல்கள் தொடர்பாக கிறித்தவ வலதுசாரிக் கொள்கைகளையே முன்னிறுத்துகிறார்.

பொதுவாக சுதந்திரவாதிகள் தனிமனித வாழ்வில் அரசின் தலையீடுகள் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாடு உடையவர்கள். அந்த ஏரணம் பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமைக்கு சார்பாவே அமைக்கிறது. ஆனால் ரோன் போல் கருக்கலைப்பு உரிமையை மறுக்கிறார். ஒருபாலினரின் திருமணத்துக்குக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் எதிராகவே இவர் செயற்படுகிறார். இது சுதந்திரவாத நிலைபாட்டிற்கு முற்றிலும் எதிர்மாறானதாகும். இவர் கிறித்தவ சமயத்தையும் பண்பாட்டையும் பேணுவதற்கான உரிமைகள் வேண்டும் என்று கூறி, அரச சமய பிரிவினையை எதிர்க்கிறார். இது பிற சமயத்தாரின், சமயம் சாரதவர்களின் உரிமைகளுக்கு எதிராகவும், சுதந்திரவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிராகவும் அமைகிறது. குடிவரவை எதிர்ப்பதிலும் இவர் சுந்திரவாத கொள்கைகளில் இருந்து விலகிப் போகிறார்.

கறுப்பு மற்று அனைத்தின மக்களும் ஒரே பொது பாடசாலையில் படிக்க, வேலை வாய்ப்புக்களைப் பெற, பொது இடங்களின் சமமாக நடத்தப்பட உரிமைகள் வழங்கிய 1964 குடி உரிமைகள் சட்டத்துக்கு (Civil Rights Act of 1964) எதிரனான இவரின் நிலைப்பாடு ஒரு கோரமான சறுக்கல் ஆகும். ஒரு விதத்தில் சுதந்திரவாத கோட்பாட்டின் படி இது தனிச்சொத்து, தனிமனிதத் தெரிவுகளை ஆதரிப்பது போன்று தெரிந்தாலும், கறுப்பினத்தவர்களின் அடிப்படையை உரிமைகளை எதிர்ப்பதாக இது அமைகிறது. ஒரு கறுப்பின மாணவர் வெள்ளையர்கள் அதிகம் இருக்கும் ஒர் ஊரில் பாடசாலை செல்ல முடியாத நிலையில் வெள்ளையர்களுக்கு இருக்கும் தெரிவுச் சுதந்திரம் முக்கியமா, அல்லது அந்த கறுப்பின மாணவருக்கும் தான் கல்வி கற்க இருக்கும் தெரிவுச் சுதந்திரம் முக்கியமா என்ற கேள்வி எழுகிறது. இங்கு சுதந்திரவாதக் கோட்பாடு உடைகிறது என்றே படுகிறது.

அரசின் அதிகாரத்துக்கா நாம் பயப்படும் அதே வேளை பிற சமூக அமைப்புகளின் அதிகாரத்தையும் புறக்கணித்து விட முடியாது. சாதி, சமயம், பெரும் வணிகம் என பல்வேறு அதிகார மையங்களை நோக்கியும் நாம் அவதானத்துடம் இருக்க வேண்டும். எங்கு அதிகாரம் இருக்கிறதோ, அது வன்முறையாக தனது இலாபங்களை ஈட்டப் பார்க்கும் என்பதை புரிந்து கொண்டு, அதை கட்டுப்படுத்த தக்க Checks and balances, சட்ட பொருளாதார முறைமைகள் தேவை.

Ron Paul’s quest to undo the party of Lincoln

Why Libertarianism Doesn't Work

Labels: , ,