<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Thursday, January 15, 2015

எதுவும் புனிதமானது இல்லை ("nothing-is-sacred")

சமயம், இனம், சாதி, வர்க்கம், தேசியம், மொழி, நாடு, பால், பாலமைவு, உணர்வுகள், நம்பிக்கைகள், சடங்குகள், சட்டங்கள், மண்ணாங்கட்டி, கத்தரிக்காய் என்றும் எதுவுக்கும் கட்டுப்பட்டத்தல்ல கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்.  வன்முறையற்று, திணிப்பு அற்று கருத்த்தைக் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் கட்டற்றது.  இச் சுதந்திரத்தின் ஆணிவேரில்தான் அனைத்து சுதந்திரங்களும் உரிமைகளும் கட்டமைக்கப்படுகின்றன.  கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் சிந்தனை உருவாக்கத்துக்கு, பரிமாற்றத்துக்கு, விமர்சனத்துக்கு, திருத்தலுக்கு அவசியமானது. 

மேற்குநாடுகளில், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது கடுமையான போராட்டங்களுக்குப் பின்பு நிலைநிறுத்தப்பட்ட சுதந்திரம், உரிமை.  பிரான்சில், ஐரோப்பிய மறுமலர்ச்சி, பிரெஞ்சுப் புரட்சி, 60 களின் எதிர்ப்புப் புரட்சியில் வளர்த்தெடுக்கப்பட்டதுதான் வளையாத பிரெஞ்சு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்.  உங்கள் கருத்தை மறுதலிக்கிறேன், ஆனால் அதைக் கூறுவதற்கான உங்கள் உரிமையை உயிர் குடுத்தேனும் பாதுகாப்பேன் என்று உரைத்த வோல்ட்டயர் (Voltaire) பிறந்த மண்.  அங்கதம், சித்திரம், வரைகலை அவர்களின் பண்பாட்டில் வேரோடியது.  அங்கே சார்லி ஃஎப்டோ (charlie hebdo) என்ற அங்கத சித்திர பத்திரிகை வெளியிட்ட ஒரு கேலிச் சித்திரத்தை சகிக்க முடியாமல் இசுலாமவாதிகள் அந்தப் பத்திரிகையின் 12 பேரை சுட்டுக் கொன்றுள்ளார்கள். 

பிரான்சியர்கள் போலன்றி, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பாக விழிப்புணர்வோ அக்கறையோ அற்ற சமூகம் தமிழ்ச் சமூகம்.  இந்தத் தமிழ்ச் சமூகம் உருவாக்கிய ஒரு தலை சிறந்த அறிவாளர், எழுத்தாளர் பெருமாள் முருகன்.  அவரின் ஒரு கூரிய படைப்பு மாதொருபாகன் என்ற புதினம்.  இந்தப் புதினத்தை தடைசெய்யக் கோரி இந்துதத்துவாதிகளும் சாதியவாதிகளும் துன்புறுத்தியதால் தான் எழுதுவதையே நிறுத்திக் கொள்வதாகக் கூறி உள்ளார் பெருமாள் முருகன். 

சார்லி ஃஎப்டோ தாக்கப்பட்ட அனுதாப அலையைப் பயன்படுத்தி ஐரோப்பிய இனவாதிகள் இசுலாமியர்களுக்கு எதிரான ஒரு வன்முறையை காட்ட விழைகின்றார்கள்.  இசுலாமவாதிகளும் இனவாதிகளும் இது ஓர் மேற்கு கிழக்குப் போர் என்று சித்தரிக்கப் பாக்கிறார்கள்.  ஆனால் இது காட்டுமிராண்டிகளுக்கும் பகுத்தறிவுவாதிகளுக்குமான போர்.  மன நோயாளிகளுக்கும், பரினாமித்த, வளர்ந்த, முதிர்ச்சி பெற்ற மனிதர்களுக்குமான போர். 

சார்லி ஃஎப்டோ குரல் கொடுக்க பிரான்சு வரலாறு காணாத கூட்டத்தைக் கண்டது.  ஆனால் பெருமாள் முருகன் போன்ற பல எழுத்தாளர்களினதும் பேச்சாளர்களினதும் சாதாரனப் பொது மக்களதும் பேச்சுத் சுதந்திரத்தைப் பாதுகாக்க பத்துப் பேர் கூடக் கூடவில்லை. 

நீத்துப் போன, முதுகெலுப்பு அற்ற திராவிடக் கட்சிகள் மூச்சைக் கூட விடவில்லை.  கபடதாரி (hypocrite) தமிழ்த் தேசியவாதிகள் பேசவில்லை.  இடதுசாரிகள் கூட சமயம் என்று வந்தவுடம் தூர ஓடிப் போய் விடுகிறார்கள். 

எவ்வளவுதான் ஆங்கிலம் ஆக்கிரமிப்புச் செலுத்தினாலும், இலக்கியத்தில் அதிக நோபல் பரிசுகள் பிரெஞ்சு மொழி எழுத்தாளர்களுக்குத்தான் போய் உள்ளன.  கருத்துக்களை சீண்டி, நோண்டிய அவர்களின் மரபினால்தான் இருக்கும்.  அத்தகைய மரபை உருவாக்காமல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பேணாமல் தமிழ்ச் சூழல் உண்மையான எந்த வளர்ச்சியையும் பெற முடியாது.

Labels: , ,

0கருத்துக்கள்

Post a Comment

<< Home