<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Saturday, August 03, 2013

"மட்ராஸ் கபே" படத்தை தடை செய்யக் கோராதீர்கள்

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்று அடிக்குரலில் கத்திவிட்டு, மறுகணமே ஒரு திரைப்படத்தை தடை செய்யக் கோருவது கோலிக்குரியது.  கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பாக இவ்வாறு முரண்பாடு கொண்ட நிலைப்பாடுகளை எடுப்பது தமிழ்ச் சூழலில் எல்லாத் தரப்புக்களும் செய்யும் ஒரு அடவாடித்தனம்.  இடதுசாரிகள், திராவிடக் கட்சிகள், தமிழிய அமைப்புகள், சமயக் கட்சிகள், சாதிக் கட்சிகள், ஈழத்து இயக்கங்கள் என்று எல்லோரும் கருத்துக்களை தடை, தணிக்கை, தண்டிக்க செய்வதன் பின் ஒளித்துக் கொள்கிறார்கள்.  துண்டறிக்கை, சுவரொட்டி, கட்டுரை, இதழ், நாளிதழ், நூல், திரைப்படம், இசைத்தட்டு, நாடகம், நிகழ்த்தல் என எல்லா வெளிகளிலும் கருத்தை தடை செய்ய முனைகிறார்கள்.  கருத்தை கருத்தால் எதிர்க்க திரணியற்றவர்கள், எதிர்க்க ஆற்றல் இல்லாதவர்கள் அல்லது விருப்பாதவர்கள் எடுக்கும் குறுக்குவழிகளே இவை. 

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமே பிற அனைத்து உரிமைகளுக்கும் அடித்தளமான ஒர் அடிப்படை மனித உரிமை.  மக்களாட்சிக்கு, நல்லாட்சிக்கு, சமூக மாற்றத்துக்கு, தன்மதிப்புக்கு, படைப்பாக்கத்துக்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியம்.  சிறுவர் ஆபாசம், ஆபத்தான விளம்பரம், நேரடியாக பாதிப்பை தரக் கூடிய வெறுப்புப் பேச்சு, பாதுகாப்பு போன்று மிகக் குறுகிய எல்லைகளைத் தவிர கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படல் ஆகாது.  தமிழ்நாடும், இந்தியாவும் அடிப்படை மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பாக சீரிய அக்கறை அற்றவை.  அதனால் யார் ஒரு படைப்புக்கு எதிராக ஒரு சிறு கலக்கம் செய்தாலும் மிக உச்சகட்டமான முடிவாக அந்தப் படைப்பை தடை செய்து விடுவார்கள்.  இலங்கையைப் பற்றிக் கேக்கத் தேவை இல்லை.

"மீண்டெழும் பாண்டியர் வரலாறு" என்ற தமிழ் நூல் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டது, பல திரைப்படங்கள் தடை, தணிக்கைக்கைக்கு உட்பட்டது, பேசியதற்காக பலரை சிறைக்கு அனுப்பயது, இதுதான் இன்றைய தமிழ்நாடு, இந்தியா.  இதில் இருந்து மீள்வது என்றால் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உறுதியாக எல்லோருக்கும் வழங்க வேண்டும்.  குறிப்பாக எமக்கு பிடிக்காத, நாம் ஏற்றுக் கொள்ளாத கருத்துக்களைத் தாங்கி படைப்புகள் வெளிவரும் போது. அவற்றுக்கு எதிராக நாம் மறுப்பு நூல் எழுதலாம், விமர்சிக்கலாம், புறக்கணிக்கலாம், ஆனால் அவற்றை தடை செய்யக் கூடாது, தணிக்கை செய்யக் கூடாது, தண்டிக்கக் கூடாது. 

ஆகவேதான் நான் பார்க்காத, பார்க்கப் போகாத "மட்ராஸ் கபே" படத்தைத் தடைசெய்ய சிலர் கோருவதை கண்டிக்கிறேன்.  உங்களுக்குப் படம் பிடிக்கவில்லையா பார்க்காதீர்கள்.  படத்தில் தவறாக தீங்காக கருத்துக் கூறப்பட்டுள்ளதா.  புறகணியுங்கள்.  பிறரை புறக்கணிக்கக் கோருங்கள், தூண்டுங்கள்.  ஆனால் தடை செய்ய, தணிக்கை செய்யக் கோராதீர்கள்.  அவ்வாறு கோருவது, எமக்கு எல்லோருக்கும் தேவையான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதிக்கும்.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பாக நான் முன்னர் செய்ய ஒரு நிகழ்த்தல் (presentation)
https://docs.google.com/file/d/17Q0yyHwHPQhVZ0qkr-CAENmRofGymUg1MnkhI3xhrMJU4YwqiCLluGuHKpYk/edit?usp=sharing

 

Labels: , ,

1கருத்துக்கள்

At 3:30 PM, Anonymous Anonymous said...

உண்மைகளை தாங்கிக் கொள்ள இயலாத கோழைகளே தடை கோரும் கூட்டம், பிடிக்கவில்லை எனில் புறக்கணிக்கலாம், மறுப்புப் பதியலாம், வேறு எவ்வளவோ வழிகள் உள்ள போதும் அடாவடியாக தடைக் கோருவதும், வன்முறைகளில் இறங்குவதும் முதுகெலும்பற்ற செயலாகும்.

 

Post a Comment

<< Home