<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Tuesday, December 31, 2013

நேரடி மக்களாட்சியும் ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியும்

ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வந்தும், தாம் மக்களிடம் கருத்துக் கோர வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிய போது மக்களின் தெரிவைப் புறக்கணிக்கிறார்கள், தேவையற்ற நாடகம் போன்று பல்வேறு வழிகளில் விமர்சிக்கப்பட்டது.  அவர்கள் மக்கள் கருத்தை அறிய முயன்ற முறையில் போதாமைகள் இருக்கலாம், ஆனால் அவர்களின் செயற்பாடு தவறானதா?  அக் கட்சியின் ஒரு முக்கிய கொள்கையான அதிகாரப் பரவலாக்கல் (Decentralization), நேரடி மக்களாட்சி (Direct Democracy) வரவேற்கப்பட வேண்டிய ஒன்றா?

சார்பாண்மை மக்களாட்சியின் (Representative Democracy) படிவளர்ச்சியாகக் கருதப்படுவையே நேரடி மக்களாட்சி (Direct Democracy), பங்களிப்பு மக்களாட்சி (Participatory Democracy) ஆகியவை.  நேரடி மக்களாட்சி என்பது மக்களின் சார்ப்பாளர்கள் அல்லது பிரதிநிதிகள் அல்லாமல் மக்களே நேராக முக்கிய முடிவுகளை எடுத்தலில் பங்கெடுப்பது ஆகும்.  பங்களிப்பு மக்களாட்சி என்பது அரசின் செயற்பாடுகளில் மக்கள் பங்களிக்க கூடிய வாய்ப்புக்களை வழங்கக்கூடிய கட்டமைக்களைக் கொண்டிருப்பது ஆகும்.  பல்வேறு விடயங்களில் பொது வாக்கெடுப்பு (Referendum) நேரடி/பங்களிப்பு மக்களாட்சியின் ஒரு முதன்மைக் கருவி (mechanism) ஆகும்.  அரசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை திருப்பி அழைப்பதற்கான உரிமையும் (right to recall) வாய்ப்பும் இதன் ஒரு நீட்சி ஆகும். 

ஆம் ஆத்மி கட்சி அதிகாரப் பரவலாக்கலை, நேரடி மக்களாட்சியை பலமான உள்ளூர் அலகுகள் கொண்டு நிறைவேற்றவுள்ளதாகக் கூறி உள்ளது.  தேர்வு செய்யப்பட்ட ஒருவரை திருப்பி அழைப்பதற்கான சட்டத்தையும் இயற்றவுள்ளதாகக் கூறி உள்ளது.  மேலும் கட்சி சார்பற்ற ஊழல் குறைகேள் அதிகாரிகளை (ombudsmen) நியமிக்கவும் உறுதி தந்துள்ளது.  இந்த வகையில் இந்தியாவில் நேரடி/பங்களிப்பு மக்களாட்சியை முன்னெடுக்கும் ஒரு முன்னோடிக் கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உள்ளது.

நேரடி மக்களாட்சி அல்லது பங்களிப்பு மக்களாட்சி என்பது பெரும்பான்மையினரின் சர்வதிகாரமாக மாறும் என்றும், நடைமுறையில் நிறைவேற்ற முடியாதது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  இதில் முதலாவது குற்றச்சாட்டு முக்கியமானது, மிகப் பாதகமானது.  நேரடி மக்களாட்சி மட்டும் இல்லை, பொதுவாக எந்தவொரு மக்களாட்சியிலுமே பெரும்பான்மையினரின் சர்வதிகாரம் உருவாதற்கு நிறைய வாய்புக்கள் உண்டு.  இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இலங்கை ஆகும்.  இதைத் தடுக்கும் வண்ணம் அதிகாரப் பிரிவினையும், அதிகாரப் பரவலாக்கமும் முக்கியம் ஆகும்.  கனடாவில் கியூபெக் போல் உள்ளூர் மக்கள் கட்டுப்படுத்தும் மக்களாட்சி இலங்கையில் தோன்றி இருந்தால் ஈழப்போர் வெடித்து இருக்காமல் இருந்திருக்கலாம்.  இலங்கைப் பிரச்சினை பெரும்பான்மை சர்வதிகாரம் என்பதிலும் பார்க்க அதிகாரக் குவியலினால் எழுந்தது.  இன்றும் கூட தமிழ் மக்களின் விருப்பங்கள் தொடர்பாகவோ, அல்லது காசுமீர் மக்களின் விருப்பங்கள் தொடர்பாகவோ ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தும் முதிர்ச்சி இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ இல்லை.  ஆனால் டில்லி தேர்தல் முடிவுகள் அந்த முதிர்ச்சி நோக்கி இந்தியா ஒரு படி பயணித்து உள்ளது என்றுதான் கூறவேண்டும். 

மக்களுக்காக நாம் முடிவெடுப்போம் என்று இடதிலும் வலதிலும் இருந்து கோருவோர் நேரடி மக்களாட்சியை நடைமுறைச் சாத்தியம் இல்லை என்று கோருகின்றனர்.  ஆனால்  இணையம், நகர்பேசி உட்பட்ட புதிய தகவல்-தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் பரந்த நேரடிப் பங்களிப்பை நகரப்புறங்களில் கூட சாத்தியப் படுத்தி உள்ளன.  உள்ளூர் உணவு (Local Food), உள்ளூர் பொருளாதாரம் (Local Economy), Hyperlocal, குமுகம் கட்டுதல் (community building) என்ற இன்றைய போக்குக்களுடன் நேரடி மக்களாட்சி ஒரு பொருத்தமான முன்னேற்றமே.

ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியால் அதிகார மையத்தினரும், பெரும் வணிக நிறுவனங்களும் பெரிதும் பயப்படுகின்றன.  அதிகாரப் பரவலாக்கலால், நேரடி மக்களாட்சியால் பாதிக்கப்படப்போவர்கள் இவர்களே.  இந்திய வலதுசாரி வலைத்தளமான ஃபெசுபோசுடில் (Firstpost) நேரடி மக்களாட்சியையும் ஆம் ஆத்மி கட்சியையும் விமர்சித்து  Perils of direct democracy: AAP may be on the wrong track என்ற ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.  மக்களுக்கு தமக்கு எது பொதுநலம் என்று தெரியும் என்பது உண்மை இல்லை ("It is simply not true that people know best or that they act in the greater common good.") என்று கூறி பழங்குடி மக்கள் அவர்களின் நிலங்களில் இருந்து வேதி எடுத்தலை எதிர்த்தது, அன்னிய முதலீட்டை எதிர்த்தது போன்றவற்றை சுட்டிக் காட்சி மக்களுக்கு அவர்களுக்கு எது பொது நலம் என்று தெரியாது என்று வாதிட்டிருக்கின்றனர்.  இந்தக் குற்றச்சாட்டு நேரடி மக்களாட்சிக்கு மட்டும் இல்லை மக்களாட்சிக்கும் பொருந்தும்.  அவர்கள் சுட்டிய எடுத்துக்காட்டுக்கள் பெரும்பாலும் பெரும் வணிக நிறுவனங்களின் நலன்களைப் பாதிக்கும் என்பதே அவர்களின் கவலையாக இருக்கின்றது, குறிப்பாக வோல்மார்ட்.

உண்மையான சிக்கல் உள்ளூரில் இருக்கும் சாதிய, சமய, செல்வந்த அதிகாரக் கட்டமைப்புக்களிடம் சிக்காமல் நேரடி மக்களாட்சி அனைத்து மக்களின் பங்களைப்பை பெற்று அமைய வேண்டும் என்பதே.  சுருக்கமாக, ஆம் ஆத்மி கட்சி கொள்கையும் அரசமைப்பும் ஒரு நல்ல முன்னேற்றமாகவே அமைந்துள்ளது.  தமிழ்நாட்டில் பகுத்தறிவு, பெண்கள் உரிமைகள், சமத்துவம், சமூகவுடைமை, தமிழ் போன்ற கொள்கைகளுடன் திமுக முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது போல.  காலம்தான் சொல்லும் திமுக போல் அரசியல் சாக்கடையில் விலைபோய் துலைந்து விடுவார்களா அல்லது துடிப்புடன் அவர்களின் கொள்கைகளை நிலைநாட்டச் செயற்படுவார்களா என்று. 

Labels: , , , ,

0கருத்துக்கள்

Post a Comment

<< Home