<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Wednesday, March 12, 2014

எளிய மக்கள் கட்சியின் கொள்கைப் புரட்சி

திராவிடக் கட்சிகளிடம் கொள்கை வறட்சி, தளர்ச்சி, விற்பனை முற்று முழுதாகிவிட்டது.  இவர்களிடம் சமூக நீதி, பகுத்தறிவு, தமிழ் அடையாளம், பெண்கள் உரிமைகள், தன்னாட்சி போன்ற கொள்கைகள் நீத்துவிட்டன.  அறம் தவறி, தலைவர் தொழுகையிலும், குடும்ப அரசியலும், பச்சை ஊழலிலும் திராவிடக் கட்சிகள் நாறுகின்றன. 

திராவிடக் கட்சிகளும் சரி, இடதுசாரி, தமிழ்த் தேசிய அமைப்புகளானாலும் சரி குறுகிய சில விடயங்கள் தவிர பல முக்கிய களங்களைப் பற்றி எதுவும் உரையாடுவதில்லை.  அப்படிச் சிந்திக்கிறார்களா என்று கூடச் சந்தேகம்.  தமிழ்ச் சூழலில் இருக்கும் இடதுசாரிகள் தமது இயக்கத்தில் இருக்கும் பிரிவுகளைக் கூட அறிந்திரார்.  அரச முதன்மை மும்மூர்த்திகள் (மார்க்சு, லெனன்/இசுராலின், மாவோ), வர்க்கப் போராட்டம், புரட்சி, தொழிலாளர் சர்வதிகாரம் ஆகியனவே இவர்களின் தாரக மந்திரம்.  தமிழ்த் தேசியவாத அமைப்புகள் பொருளியல், சூழலியல், அரசின் தன்மை, பன்மைத்துவம் என்று எதிவும் பற்றி விரிவாகப் பேசுவதில்லை.  உசுப்பும் குறும் தேசியம் தவிர்த்து மேலெழுந்து சிந்திக்க முடியதாவர்களாகவே உள்ளன.

இவர்களுக்கு எல்லாம் மாற்றாய் ஒரு சிறு மாற்றம் அண்மையில் உருவாகி உள்ளது.  டில்லியில் தொடங்கிய அந்த மாற்றம் இப்பொழுது தமிழ்நாட்டுக்கும் வந்துள்ளது.  அதுதான் ஆம் ஆத்மி கட்சி.  தமிழ்நாட்டில் அணு உலைக்கு எதிராக மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்தை முன்னெடுத்த சு. ப. உதயகுமார் தலைமையில் எளிய மக்கள் கட்சியாக உருவாகி உள்ளது. 

ஆனால் அண்மையில் சுருக்கமாக ஒரு கொள்கை அறிக்கையை அவர்கள் "எளிய மக்கள் கட்சி (எ.ம.க.)...எமக்கான கொள்கை" என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார்கள்.  இது ஒரு விரிவான கொள்கை அறிக்கை இல்லை.  எனினும், இவர்கள் இதில் முன்வைக்கும் எண்ணங்கள், அண்மையில் தமிழ் அரசியலில் அலசப்படும் விடயங்களை விட கனதியானது. 

தமிழ்நிலம் தமிழ்நிலம் என்று கத்துவோர்கள் அதன் சூழலைப் பற்றி அவ்வளவு யோசிப்பதில்லை.  சூழலியல் அறிவு...சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவர்களின் ஒரு முக்கிய கொள்கையாக அமைகிறது.  அரசின் தீமைகளைப் பற்றி விரிவாக  அறிவோம்.  ஆனால் அதற்கான தீர்வுகளைப் பற்றி சிந்திப்பதில்லை.  அதிகாரப் பரவல்...பங்கேற்பு மக்களாட்சி, மையப்படுத்தப்படாமை, கூட்டுறவு அமைப்புகள் போன்றவையை எ.ம.க முன்வைக்கிறது.  மாற்றத்துக்கான வழிமுறையாக அறவழியை, மென்முறையை முன்னிறுத்துகிறது.  சமூக நீதி, சம வாய்ப்பு, பெண்கள் விடுதலை, பன்மைத்துவம் போன்ற சமூக அசைவுக்கான, அமைதிக்கான, வளர்ச்சிக்கான வழிகளைக் கூறுகிறது. 

அயல்நாட்டு முதலீடு, பெரும் நிறுவனங்கள், உலக வங்கிக் கடன் என்று முன்னெடுக்கப்படும் பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றாக, இயற்கை வேளாண்மை, மாற்று எரிசக்தி கொள்கை, சிறு நடுத்தரத் தொழில்கள், மாற்றுத் தொழில்நுட்பங்கள், பேண்தகு வளர்ச்சி என்று இன்னும் அதிகம் கவனம் பெறாத பொருளாதர முறைகளை எ.ம.க யின் கொள்கை எடுத்துரைக்கிறது. 

"பசுமை மார்க்சியம், காந்தியம், தமிழ்த் தேசியம்" என்று தலைப்பு இட்டதன் மூலம், இதுவரை முரண்களைக் கொண்ட கொள்கைகளாகப் பார்க்கப்பட்ட கொள்கைகளை இணைத்துப் பார்க்கிறார்கள். 

எ.ம.க முன்வைக்கும் எண்ணங்கள், தீர்வுகள் பற்றி எல்லோரும் உடன்படப்போவதில்லை..  "பசுமை மார்க்சியம்" என்றால்தான் என்னை.  ஒரு சலசலப்பு சொல்லாடலா.  தமது முற்போக்கு இடதுசாரி சார்புநிலையை எடுத்துரைப்பதற்கான குறியீடா.  அல்லது மார்சியத்தின் கடந்த நூற்றாண்டு போதாமைகளை, அதன் படுதோல்விகளை, சர்வதிகாரத் தன்மைகளை, அரச முதன்மை வாதத்தை புரிந்து, அதற்கான விடைகளைத் தேடி முன்மொழியப்படும் ஒரு கொள்கையா.  தெரியவில்லை.

கல்வி, நலம், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் அவர்களின் நிலைப்பாடுதான் என்ன.  இவற்றை அரசு வழங்க வேண்டுமா?  எப்படி வழங்குவது, விரிவுபடுத்துவது.  இது போன்ற பல விடயங்களை இந்தச் சுருக்கமான கொள்கை அறிவித்தல் தொடவில்லை.

ஒரு கல்வியாளர் சித்தித்து, யாதார்த்தை, தடைகளை, இடர்களை, பக்க விளைவுகளைச் சிந்திக்காமல், கற்பனையில் கக்கிய கொள்கைகள் போல் இவை இருந்தாலும், இவை பற்றி ஒரு குறைந்த பட்ச உரையாடல் நடைபெற்றால் கூட அது பல நல்ல விளைவுகளைத் தரும்.

மேற்கோளுக்கா, அவர்களின் கொள்கை அறிவித்தல் கீழே:

எளிய மக்கள் கட்சி (எ.ம.க.)...எமக்கான கொள்கை:
பசுமை மார்க்சியம், காந்தியம், தமிழ்த் தேசியம்

சூழலியல் அறிவு...சுற்றுச்சூழல் பாதுகாப்பு
அதிகாரப் பரவல்...பங்கேற்பு சனநாயகம்
சமூக நீதி...சம வாய்ப்பு
அறவழி...மென்முறை
மையப்படுத்தப்படாமை
பெண் விடுதலை
வேற்றுமை போற்றல்
தனிமனித, ஒட்டுமொத்த பொறுப்புணர்வு
வருங்காலச் சிந்தனை

கூட்டுறவு போற்றும் சமூகம் சார்ந்த மாற்றுப் பொருளியல்
இயற்கையை அழிக்காத வளங்குன்றா வளர்ச்சி முறை
மாசு படுத்தாத தொழில்-வேளாண் கொள்கை
சிறு நடுத்தரத் தொழில்கள்
இயற்கை வேளாண்மை
மாற்று எரிசக்தி கொள்கை
மாற்று தொழில்நுட்பங்கள்
நீடித்த நிலைத்த வளர்ச்சி

தேசிய இனச் சமூக மாற்றுக் கொள்கைகள்
மரபு சார்ந்த மக்கள் அமைப்புக்கள்
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி
உலகமயப் பொருளியலுக்கு எதிராக தேசியங்களின் பொருளியல்
உலகமயம் திணிக்கும் ஒற்றைத்தன்மைக்கு எதிராக தேசியங்களின் பன்மை
தமிழர் அறம் சார்ந்த அரசியல், வாழ்வியல்:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
யாதும் ஊரே, யாவரும் கேளிர்

பயன்பட்டக் கட்டுரையும், நூலும்:
[1] கி. வெங்கட்ராமன், “பசுமை மார்க்சியம், காந்தியம், தமிழ்த் தேசியம்,” தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், பொங்கல் மலர் 2014. பக். 12-23.
[2] S. P. Udayakumar, _Green Politics in India_. Nagercoil, India: Transcend South Asia, 2008. pp. 15-17.


https://www.facebook.com/eliyamakkalkatchi

Labels: , , , ,

Tuesday, December 31, 2013

நேரடி மக்களாட்சியும் ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியும்

ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வந்தும், தாம் மக்களிடம் கருத்துக் கோர வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிய போது மக்களின் தெரிவைப் புறக்கணிக்கிறார்கள், தேவையற்ற நாடகம் போன்று பல்வேறு வழிகளில் விமர்சிக்கப்பட்டது.  அவர்கள் மக்கள் கருத்தை அறிய முயன்ற முறையில் போதாமைகள் இருக்கலாம், ஆனால் அவர்களின் செயற்பாடு தவறானதா?  அக் கட்சியின் ஒரு முக்கிய கொள்கையான அதிகாரப் பரவலாக்கல் (Decentralization), நேரடி மக்களாட்சி (Direct Democracy) வரவேற்கப்பட வேண்டிய ஒன்றா?

சார்பாண்மை மக்களாட்சியின் (Representative Democracy) படிவளர்ச்சியாகக் கருதப்படுவையே நேரடி மக்களாட்சி (Direct Democracy), பங்களிப்பு மக்களாட்சி (Participatory Democracy) ஆகியவை.  நேரடி மக்களாட்சி என்பது மக்களின் சார்ப்பாளர்கள் அல்லது பிரதிநிதிகள் அல்லாமல் மக்களே நேராக முக்கிய முடிவுகளை எடுத்தலில் பங்கெடுப்பது ஆகும்.  பங்களிப்பு மக்களாட்சி என்பது அரசின் செயற்பாடுகளில் மக்கள் பங்களிக்க கூடிய வாய்ப்புக்களை வழங்கக்கூடிய கட்டமைக்களைக் கொண்டிருப்பது ஆகும்.  பல்வேறு விடயங்களில் பொது வாக்கெடுப்பு (Referendum) நேரடி/பங்களிப்பு மக்களாட்சியின் ஒரு முதன்மைக் கருவி (mechanism) ஆகும்.  அரசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை திருப்பி அழைப்பதற்கான உரிமையும் (right to recall) வாய்ப்பும் இதன் ஒரு நீட்சி ஆகும். 

ஆம் ஆத்மி கட்சி அதிகாரப் பரவலாக்கலை, நேரடி மக்களாட்சியை பலமான உள்ளூர் அலகுகள் கொண்டு நிறைவேற்றவுள்ளதாகக் கூறி உள்ளது.  தேர்வு செய்யப்பட்ட ஒருவரை திருப்பி அழைப்பதற்கான சட்டத்தையும் இயற்றவுள்ளதாகக் கூறி உள்ளது.  மேலும் கட்சி சார்பற்ற ஊழல் குறைகேள் அதிகாரிகளை (ombudsmen) நியமிக்கவும் உறுதி தந்துள்ளது.  இந்த வகையில் இந்தியாவில் நேரடி/பங்களிப்பு மக்களாட்சியை முன்னெடுக்கும் ஒரு முன்னோடிக் கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உள்ளது.

நேரடி மக்களாட்சி அல்லது பங்களிப்பு மக்களாட்சி என்பது பெரும்பான்மையினரின் சர்வதிகாரமாக மாறும் என்றும், நடைமுறையில் நிறைவேற்ற முடியாதது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  இதில் முதலாவது குற்றச்சாட்டு முக்கியமானது, மிகப் பாதகமானது.  நேரடி மக்களாட்சி மட்டும் இல்லை, பொதுவாக எந்தவொரு மக்களாட்சியிலுமே பெரும்பான்மையினரின் சர்வதிகாரம் உருவாதற்கு நிறைய வாய்புக்கள் உண்டு.  இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இலங்கை ஆகும்.  இதைத் தடுக்கும் வண்ணம் அதிகாரப் பிரிவினையும், அதிகாரப் பரவலாக்கமும் முக்கியம் ஆகும்.  கனடாவில் கியூபெக் போல் உள்ளூர் மக்கள் கட்டுப்படுத்தும் மக்களாட்சி இலங்கையில் தோன்றி இருந்தால் ஈழப்போர் வெடித்து இருக்காமல் இருந்திருக்கலாம்.  இலங்கைப் பிரச்சினை பெரும்பான்மை சர்வதிகாரம் என்பதிலும் பார்க்க அதிகாரக் குவியலினால் எழுந்தது.  இன்றும் கூட தமிழ் மக்களின் விருப்பங்கள் தொடர்பாகவோ, அல்லது காசுமீர் மக்களின் விருப்பங்கள் தொடர்பாகவோ ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தும் முதிர்ச்சி இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ இல்லை.  ஆனால் டில்லி தேர்தல் முடிவுகள் அந்த முதிர்ச்சி நோக்கி இந்தியா ஒரு படி பயணித்து உள்ளது என்றுதான் கூறவேண்டும். 

மக்களுக்காக நாம் முடிவெடுப்போம் என்று இடதிலும் வலதிலும் இருந்து கோருவோர் நேரடி மக்களாட்சியை நடைமுறைச் சாத்தியம் இல்லை என்று கோருகின்றனர்.  ஆனால்  இணையம், நகர்பேசி உட்பட்ட புதிய தகவல்-தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் பரந்த நேரடிப் பங்களிப்பை நகரப்புறங்களில் கூட சாத்தியப் படுத்தி உள்ளன.  உள்ளூர் உணவு (Local Food), உள்ளூர் பொருளாதாரம் (Local Economy), Hyperlocal, குமுகம் கட்டுதல் (community building) என்ற இன்றைய போக்குக்களுடன் நேரடி மக்களாட்சி ஒரு பொருத்தமான முன்னேற்றமே.

ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியால் அதிகார மையத்தினரும், பெரும் வணிக நிறுவனங்களும் பெரிதும் பயப்படுகின்றன.  அதிகாரப் பரவலாக்கலால், நேரடி மக்களாட்சியால் பாதிக்கப்படப்போவர்கள் இவர்களே.  இந்திய வலதுசாரி வலைத்தளமான ஃபெசுபோசுடில் (Firstpost) நேரடி மக்களாட்சியையும் ஆம் ஆத்மி கட்சியையும் விமர்சித்து  Perils of direct democracy: AAP may be on the wrong track என்ற ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.  மக்களுக்கு தமக்கு எது பொதுநலம் என்று தெரியும் என்பது உண்மை இல்லை ("It is simply not true that people know best or that they act in the greater common good.") என்று கூறி பழங்குடி மக்கள் அவர்களின் நிலங்களில் இருந்து வேதி எடுத்தலை எதிர்த்தது, அன்னிய முதலீட்டை எதிர்த்தது போன்றவற்றை சுட்டிக் காட்சி மக்களுக்கு அவர்களுக்கு எது பொது நலம் என்று தெரியாது என்று வாதிட்டிருக்கின்றனர்.  இந்தக் குற்றச்சாட்டு நேரடி மக்களாட்சிக்கு மட்டும் இல்லை மக்களாட்சிக்கும் பொருந்தும்.  அவர்கள் சுட்டிய எடுத்துக்காட்டுக்கள் பெரும்பாலும் பெரும் வணிக நிறுவனங்களின் நலன்களைப் பாதிக்கும் என்பதே அவர்களின் கவலையாக இருக்கின்றது, குறிப்பாக வோல்மார்ட்.

உண்மையான சிக்கல் உள்ளூரில் இருக்கும் சாதிய, சமய, செல்வந்த அதிகாரக் கட்டமைப்புக்களிடம் சிக்காமல் நேரடி மக்களாட்சி அனைத்து மக்களின் பங்களைப்பை பெற்று அமைய வேண்டும் என்பதே.  சுருக்கமாக, ஆம் ஆத்மி கட்சி கொள்கையும் அரசமைப்பும் ஒரு நல்ல முன்னேற்றமாகவே அமைந்துள்ளது.  தமிழ்நாட்டில் பகுத்தறிவு, பெண்கள் உரிமைகள், சமத்துவம், சமூகவுடைமை, தமிழ் போன்ற கொள்கைகளுடன் திமுக முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது போல.  காலம்தான் சொல்லும் திமுக போல் அரசியல் சாக்கடையில் விலைபோய் துலைந்து விடுவார்களா அல்லது துடிப்புடன் அவர்களின் கொள்கைகளை நிலைநாட்டச் செயற்படுவார்களா என்று. 

Labels: , , , ,