<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Thursday, March 12, 2015

சமய நஞ்சேறும் தமிழ்ச் சூழல்


இந்து இளைஞர் சேனாவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் பகுத்தறிவு முப்பாட்டன் முருகனுக்கும் என்ன தொடர்பு.  இதுதான் தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் தோன்றி இருக்கும் புதிய சமயக் கூட்டணி.  தாலி பற்றி விவாதம் பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்ற விளம்பரத்தை மட்டும் பார்த்து விட்டு வன்முறையில் இறங்கி விட்டிருக்கிறார்கள் இந்து இளைஞர் சேனா.  பத்திரிகையாளரைத் தாக்கி உள்ளார்கள்.  புதிய தலைமுறை தொ.கா நிறுவனத்துக்கு குண்டு வைத்துள்ளார்கள். 

இந்த இந்து இளைஞர் சேனையை அண்மையில் த.தே.கூ சார்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர்.  இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி எல்லாம் பா.ஜ.க ஏவல் கட்சிகள், ராதாகிருஷ்ணன் பங்கேற்றதைப் புரிந்து கொள்ளலாம்.  ஆனால் ஈழத்து த.தே.கூ சீனித்தம்பி யோகேஸ்வரன் ஏன் பங்கு பற்றினார்.  தனியே சமயப் பண்பாட்டுப் பரிமாற்றமா.  அல்லது இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் நகர்வுகள்தான் என்ன.

ஈழப் போர் முடிந்த கையோடு, தமிழர்களின் அரசியல் வேக்கைகளை சமயத்துக்குள் முடக்கிவிட சிங்கள் அரசுகள் பெரிதும் முயல்கின்றன.  அங்க பாருங்கோ.  காவடி எடுக்கினம்.  திருவிழா கொண்டாடிடன்.  எல்லாம் நல்லாத்தான் இருக்குது என்று காட்டுவது மிக இலகு.  மேலும், தமிழர்களின் ஒற்றுமையை உடைக்கும் ஓர் ஆயுதமாகவும் சமயம் அமையும் என்று அவர்கள் நன்கு உணர்வார்கள்.  ஈழப் போராட்டத்தில் கிறித்தவத்தைச் தமது சமயமாகக் கொண்ட தமிழர்களின் பங்களிப்புக் கணிசமானது.  ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைபு ஒரு இந்து சமயப் பெரும்பானைக் கட்சி போன்று வடிவமைப்படுவதும் வெளிப்படுவது தற்செயலாக என்று கருத முடியாது.  வட மாகாண முதல்வர் அனைத்துல இந்து மாநாட்டில் முதன்மை விருந்துனராகக் கலந்து கொண்டது இங்கும் கவனிக்கத் தக்கது.

பல இசுலாமியச் சமூகங்களில் பூட்டப்பட்டு இருக்கும் கடிவாளம் போன்ற ஒன்றைத் தமிழ்ச் சூழலில் பூட்ட இளைஞர் சேனா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் முனைகின்றன.  இவர்களுக்கு சற்றும் சளைக்காமல் தமிழ்த் தேசியக் கட்சிகள் மருவி வருகின்றன.  கொள்கை நோக்கிலும், செயற்பாட்டு நோக்கிலும் தம்மை எப்பவோ நீத்துப் போய்விடச் செய்துவிட்ட திராவிடக் கட்சிகள் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கின்றன.  எனவே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான இந்தக் கொடிய சூழல் இருந்து விடுபட, மாணவர்களிடம் இருந்தும், முற்போக்கானவர்களிடம் இருந்தும் ஒரு வலுவான பதில் உரையை எதிர்பாத்து தமிழ்ச் சூழல் நிற்கிறது. 


Labels: ,

0கருத்துக்கள்

Post a Comment

<< Home