<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Thursday, August 08, 2013

திராவிடம் தமிழியம் 2 - வரையறைகள்

தமிழ் கூறும் நல்லுகத்தை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தி ஆண்ட போது, தமிழ் பிற மொழிகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்த போது, தமிழ்ச் சமூகம் சாதியால், மூடநம்பிக்கையால், பெண்ணடிமைத்தனத்தால் கட்டுண்டு துவண்டபோது தமிழ்ச் சமூகத்தில் எதிர்ப்பியக்கங்கள், சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின.  இந்த இயக்கங்கள் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் தமிழர் வாழ்வியல், வரலாறு, பண்பாடு, கலைகள், தொழில்நுட்பம், அறிவியல், சட்டம், அரசமைப்பு ஆகியவற்றில் தமது தனித்துவத்தை, அடையாளத்தை, ஆற்றலைத் தேடினர்.  ஐரோப்பிய அறிவொளிக் கால எண்ணக் கருக்களும், நவீனத்துவமும் இவற்றில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின. 

இச் சூழலில் பிறந்தவைதான் தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்க் கல்வி இயக்கம்.  சமசுகிருத்தத்தின் மேலாதிக்கத்தில் நலிவுற்று இருந்த தமிழை தனித்தமிழ் இயக்கம் மீட்டெடுத்து பலப்படுத்தியது.  தமிழில் பாடுதல் இழிவென்று பழிக்கப்பட்டதை தமிழின் தொன்மையான இசை மரபை மீட்டெடுத்தது தமிழிசை இயக்கம் முறியடித்தது.  ஆங்கிலம் படித்தால்தான் பதவி என்று இருந்த சூழல்தான் தாய்மொழிக் கல்வியை, சுதேசிக் கல்வியை வலுயுறுத்தி தமிழ்க் கல்வி இயக்கம் செயற்பட்டது.  இன்று தமிழ்ச் சூழலில் செல்வாக்குச் செலுத்தும் திராவிடமும் தமிழியமும் இந்தப் பின்புலத்தில் தோற்றமும் வளர்ச்சியும் பெற்றன. 

பெரியார் சுயமரியாதை/திராவிட இயக்கத்தை தோற்றுவித்த போது பகுத்தறிவு, சாதிய எதிர்ப்பு, பெண்கள் உரிமைகள், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, மூடநம்பிக்கைகளை ஒழித்தல், இறைமறுப்பு, திராவிட/தமிழ் அடையாளம், தனித் திராவிட நாடு ஆகியன அதன் அடித்தளக் கொள்கைகளாக இருந்தன.  திராவிடம் என்று பலர் உரையாடும் போது இந்தக் கருத்தியல் நோக்கிலான கோட்பாட்டையே சுட்டுகின்றார்கள்.  ஆனால் அண்ணா அதிகாரத்துக்கு வருவதற்காகவே, வந்தபோதே தனிநாட்டுக் கொள்கையை, பகுத்தறிவு, சமூகச் சீர்திருத்தக் கொள்கைகள் பலவற்றை கைவிட்டுவிட்டார்.  அவர் பின் வந்த பச்சை சந்தர்ப்பவாதிகள் திராவிட இயக்கத்தில் இருந்து அதன் எல்லாப் பெறுமதிவாய்ந்த கருத்தியல்களையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டார்கள். 

ஆக இன்று திராவிடம் என்று எஞ்சி இருப்பது ஆட்சியைப் பிடிப்பதற்காக் கொள்ளப்படும் இலவசத் தொலைக்காட்சி போன்ற பிரபலக் கொள்கைகளும், பன்னாட்டுக் கம்பனிகளுக்கு விலைபோன சிறப்புப் பொருளாதாரக் கொள்கைகளும், தமிழ்க் கல்வியை கொன்றுவிட்டு செத்தமொழி மாநாடுகள் கூட்டி தமது டமில் பற்றை அறிவித்துக் கொள்ளும் பாசாங்குகளுமே.  திராவிடக் கட்சிகளின் நிர்வாகம் குடும்பச் சொத்தாகவும், தனிமனித வழிபாடுகளிலும் சிக்கி சின்னா பின்னமாகப் போனது.  நான் திராவிடத்தை கருத்தியல் திராவிடம் இன்றைய நடைமுறைத் திராவிடம் என்று இரண்டாக வரையறை செய்து கொள்கிறேன். 

சாதியால், சமயத்தால், நாட்டால் வேறுபட்ட தமிழ் பேசும் சமூகத்தை தமிழ் என்ற இணைப்பின் ஊடான ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி இணைக்கின்ற கோட்பாடே தமிழியம் ஆகும்.  குறிப்பாக ஆதிக்க சக்திகளினாலும், தன் சமூகக் கட்டமைப்புக்களினாலும் மொழி, பண்பாட்டு, சமூக நோக்கில் அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு சமூகம் தளை நீக்கிக் கொள்ள பயன்படுத்திக் கொண்ட உணர்வு, அடையாள அடிப்படையிலான சமூக வலுவூட்டல் (social mobilization) கோட்பாடே தமிழியம் ஆகும்.  "அந்த உணர்வு அரசியலில், சமூகத்தில், பண்பாட்டில் தெரியவரும்.  அதன் அரசியல்ரீதியான வடிவத்தை தமிழ்த் தேசியம் என்று சொல்கிறோம்".  இதனை பேராப்பிரிக்கக் கொள்கை (Pan-Africanism), முதற்குடிமக்கள் இயக்கம் (Pan-Indianism), பேரரபியக் கொள்கை (Pan Arabism) போன்றவற்றுடன் ஒப்பிடலாம்.  அயோத்தி தாசர், மறைமலை அடிகள், பாரதிதாசன், ம. பொ. சிவஞானம், தனிநாயகம் அடிகள், பழ, நெடுமாறன், ச. பொன்னுத்துரை, கோவை ஞானி போன்ற அறிஞர்கள் தமிழ்த் தேசியத்தின் கருத்தியல் கோட்பாட்டாளர்கள் எனலாம்.  திராவிடம் போன்றே தமிழ் அடையாளம், தன்னுரிமைகள், சமூகச் சீர்திருத்தம், சாதிய எதிர்ப்பு, பெண்கள் உரிமைகள் போன்ற கொள்கைகளை கொண்டது. 

ஆனால் இது குறிப்பிட்ட இடங்களில் வேறுபட்டது.  கம்பராமாயணத்தை எரிப்போம் என்றும் திராவிடம் கூறிய போது அதைப் பதிப்போம் என்று தமிழியம் கூறியது.  பிராமணியத்தை/பிராமணரை தமது வரலாற்று எதிரிகளாக திராவிடம் கருதிய போது, தமிழியம் மொழிவழி இன உரிமை பேசியது.  கருத்தியல் திராவிடம் பகுத்தறிவை, இறைமறுப்பை அடிநாதமாக் கொண்ட போது தமிழியம் சமய நம்பிக்கைகளை, மூட நம்பிக்கைகளை, மரபுகளை ஊக்குவித்தது,  தமிழ் அடையாளத்துக்கு தந்த முக்கியத்துவத்தை சமூகச் சீர்திருத்ததுக்கோ, சமூக நீதிக்கோ தமிழியம் வழங்கவில்லை.  மேற்கூறியது கருத்தியல் தமிழியம்.  நடைமுறையில் தமிழியம் மேலும் பல குறைபாடுகளைக் கொண்டது.  ஈழத்தில் அது தமிழ்த் தேசியம் ஆக அரசியல் வலுப் பெற்ற போது மிதவாதிகளை அழித்து அடிப்படைவாதமாக அது மருபியது.  தமிழ் பேசும் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அணைத்துச் செல்லத் தவறியது.  இன்று ப.ம.க போன்ற சாதிக் கட்சிகளினதும், நாம் தமிழர் போன்ற குறுக்குநோக்கு கட்சிகளினதும் அரசியல் பந்தானது,  இதுத்தான் இன்றைய நடைமுறைத் தமிழியம். 

வரையறைச் சமன்பாடுகள்

கருத்தியல் திராவிடம் = பகுத்தறிவு + பி
ராமணிய/சாதி எதிர்ப்பு +  சமூகச் சீர்திருத்தம்/நீதி + பெண்கள் உரிமைகள் + திராவிட/தமிழ் அடையாளம் + தன்னுரிமைகள்/அரசியல் உரிமைகள் + இறைமறுப்பு/மூடநம்பிக்கை எதிர்ப்பு + நவீனத்துவம்

இன்றைய (நடைமுறைத்) திராவிடம் = குடும்ப/தனிமனித நிர்வாகம் + பிரபலக் கொள்கைகள் + தாராளமய, தனியார்மய வலதுசாரிப் பொருளாதாரம் + சடங்குத் தமிழ் + சடங்குப் பெரியார்

கருத்தியல் தமிழியம் = தமிழ் ஒருமைப்பாடு + தமிழ் அடையாளம் (மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு..) + தன்னுரிமைகள்/அரசியல் உரிமைகள் + சாதி எதிர்ப்பு + பெண்கள் உரிமைகள் + சமூகச் சீர்திருத்தம்/நீதி (குறைந்த முக்கியத்துவம்) + சமய ஏற்பு + மூடநம்பிக்கை/இறை ஏற்பு + தனித்துவம்/மரபு

இன்றைய (நடைமுறைத்) தமிழியம் = தமிழ் அடையாளம் (மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு..) + தன்னுரிமைகள்/அரசியல் உரிமைகள் + தமிழ்/குறுந் தேசியவாதம் + சாதி எதிர்ப்பு + பெண்கள் உரிமைகள் + சமய ஏற்பு + மூடநம்பிக்கை/மரபு/இறை ஏற்பு + இனவாதம் + வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கை

தமிழ்ச் சூழலில் செல்வாக்குப் பெற்ற கோட்பாடுகள் என்னும் போது இடதுசாரிக் கொள்கைளும் முக்கியம் இடம் பெறுகின்றன. அது இந்த அசலலில் இடம்பெறவில்லை.  நடைமுறையில், ஒரு பெரும் விழுக்காடு வலதுசாரியினர்.  காந்தியவாதிகள், எவற்றிலும் பிடிப்பில்லாதவர்கள் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.  இவர்களும் இந்த அலசலில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

திராவிடம் தமிழியம் 1 - பகுத்தறிவு

Labels: , , ,

0கருத்துக்கள்

Post a Comment

<< Home