<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Thursday, November 01, 2012

தமிழரல்லாதவருக்கு தமிழ் கற்பித்தல் அனுபவங்கள் - 1

ரொறன்ரோவின் ஒரு சிறப்பியல்பு அதன் பல்லினப் பண்பாடுதான்.  பிற நகரங்களிலும் பார்க்க உணவைக் கடந்து ஒரு பண்பாட்டைப் புரிந்துகொள்ள, பங்கெடுக்க, ஆராய ரொறன்ரோ பல வாய்ப்புக்களைத் தருகிறது.  அவ்வாறு, திறன் பகிர்வகம் ஊடாக ஒரு சீன நாட்டவரும் நானும் இருவருக்கும் அவரவருக்குத் தெரிந்த மொழிகளைக் (சீனம் - தமிழ்) கற்றுக்கொடுப்பது என்று உடன்பட்டோம்.  இவ்வாறு தொடங்கியதுதான் எனது தமிழரல்லாதவருக்கு தமிழ் கற்பித்தல் வகுப்புகள். 

எனது சீன நண்பர் ஒர் ஆவணப்பட பதிவாளர்.  பல சமூக அக்கறை உள்ள விடயங்களைப் பற்றி ஆவணப்படங்களும், குறுந் திரைப்படங்களும் எடுத்துள்ளார்.  இந்த ஆவணப்பட ஈடுபாடுகளினால் அவருக்கு தமிழ்நாட்டிலும் சில தொடர்புகள் உண்டு.  அதன் நீட்சியாகவும், ஓர் இந்திய மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாகவும் அவருக்கு தமிழ் கற்கும் ஆர்வம் ஏற்பட்டது.  எமது முதல் வகுப்பில் தமிழ் மொழியைப் பற்றிய ஒரு பொதுவான அறிமுகத்தை வழங்கினேன்.  தமிழ் எங்கு எங்கு எல்லாம் பேசப்படுகிறது, எத்தனை பேரால் பேசப்படுகிறது, அதனைப் படிப்பதால் கிடைக்கும் பயன்கள், அதன் தற்போதைய, எதிர்கால நிலை போன்ற விடயங்களை எடுத்துரைத்தேன்.  தமிழின் தொன்மை, தொடர்ச்சி, பரவல் பற்றி அவர் அவ்வளவு அறிந்திருக்கவில்லை.  எனவே தமிழ் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவை உறுத்திப்படுத்தின.

நானே முறையாகத் தமிழ் கற்காதவன்.  அந்த வகையில் தமிழை கற்பிப்பது தொடர்பாக பாடத் திட்டம் எதுவும் என்னிடம் இருக்கவில்லை.  இவர் ஒரு முதிர்த்த, பலத்த கல்விப் பின்புலம் உள்ள மாணவர்.  பிற மொழிகளைக் கற்ற அனுபவமும், மொழியல் கூறுகளைப் பற்றிய ஒரு விரிவான புரிதலும் கொண்டவர்.  எனவே இவருக்கு தமிழ் கற்பிக்கும் முறை நிச்சியமாக பிற சூழ்நிலைகளில் இருந்து வேறுபடுகிறது.  குறிப்பாக தமிழ் மரபுவழி மாணவர்கள் ஓரளவாவது தமிழை கேட்டிருப்பார்கள், சில சொற்களை அறிந்திருப்பார்கள், அவர்களுக்கு தமிழ் பேச வாய்ப்புக்கள் அதிகம், எனவே அவர்களின் சூழலில் இருந்தும் இவரின் நிலை மாறுபடுகிறது.

எனினும் எனது தமிழ்ப் பாடங்களையும் தமிழ் அரிச்சுவடியில் இருதே தொடங்கினேன்.  ப, ட, ச போன்ற சில எளிமையான எழுத்துக்களில் இருந்தும், பட்டம் போன்ற சில எளிமையான சொற்களில் இருந்தும் தமிழ் எழுத்துக்களைத் கற்பிக்கத் தொடங்கலாம் என்பது சிலரின் கருத்து.  எனினும் நான் உயிர் எழுத்துக்களையும், பின்னர் ஒவ்வொரு வரிசையாக மெய், உயிர்மெய் எழுத்துக்களையும் கற்றுக்கொடுப்பது என்றே முடிவுசெய்தேன்.  தமிழ் உயிர் எழுத்துக்கள் ஆங்கில உயிர் எழுத்துக்களோடு ஒப்பிட்டும், குறில் நெடில் வேறுபாடுகளைச் சுட்டியும் விபரித்தேன்.  இதில் அவருக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை.  அடுத்து உயிர் எழுத்துக்கள்களும், மெய் எழுத்துக்களும் சேர்ந்து எவ்வாறு உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன என்று விபரித்து ஒவ்வொரு வரிசையாகப் படித்தோம்.  இவ்வாறு விளக்கியபின் அவருக்கு 247 எழுத்துக்கள் என்று இருந்த பயம் சற்றுக் குறைந்தது.  ஒவ்வொரு வரிசைகளை எழுதப் பயன்படும் எழுத்து வடிவங்களையும், தோரணத்தில் உள்ள விதிவிலக்குகளையும் படித்தோம்.  ஒவ்வொரு வரிசை படித்த முடித்த பின்பும் அந்த எழுத்துக்களைப் பயன்படுத்தும் பின்னரும் சில எளிய சொற்களையும் கற்றுக் கொடுத்தேன்.

இந்த எழுத்துக்களை கற்றுக் கொடுக்கும் போதுதான் எனக்கு ஒரு விடயம் புரிந்தது.  அவரைப் பொருத்த வரையில் அனைத்து எழுத்துக்களும் ஒரே பயன்பாடு கொண்டவை.  அதாவது தமிழில் மிக அரிதாகப் பயன்படுத்தப்படும் எழுத்துக்களையும் ஒரே முக்கியத்துவம் கொடுத்து நினைவில் வைத்துக் கொள்ள முயற்சித்தார்.  இது தேவையற்றது என்று எடுத்துரைத்துன்.  எ.கா ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙௌ, ஞௌ, டௌ, ணௌ போன்றவை. 

தமிழ் ஆங்கிலம் போலே எழுத்துக் கூட்டலுக்கும் உச்சரிப்பிற்கும் பெரிய வேறுபாடுகள் கொண்ட மொழி அன்று.  ஆனால் ஒரே எழுத்து ஒரு சொல்லில் எங்கே வருகிறது என்பதில் இருந்து அந்த எழுத்தின் உச்சரிப்பு சில சொற்களுக்கு வேறுபடுகிறது.  இதை நான் கவனிக்கவில்லை.  எ.கா காகம் என்ற சொல்லை உச்சரிக்கும் போது  நாம் காஹம் என்றே உச்சரிக்கிறோம்.  இதை அவர் இலகுவாகக் கவனித்துவிடுகிறார்.  உச்சரிப்பில் மறைந்திருக்கும் இத்தகைய எழுத்துக்கள் பற்றி எனக்குப் போதிய விளக்கம் இல்லாதது ஒரு தடையாக இருந்தது.

எழுத்துக்கள் வகுப்புக்களின் இறுதியில் பயன்பாட்டில் உள்ள ஸ், ஹ, ஜ ஆகிய கிரந்த எழுத்துக்களையும் அவருக்கு கற்றுக் கொடுத்தேன். 

(தொடரும்)

Labels: ,

0கருத்துக்கள்

Post a Comment

<< Home