<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Thursday, August 08, 2013

திராவிடம் தமிழியம் 2 - வரையறைகள்

தமிழ் கூறும் நல்லுகத்தை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தி ஆண்ட போது, தமிழ் பிற மொழிகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்த போது, தமிழ்ச் சமூகம் சாதியால், மூடநம்பிக்கையால், பெண்ணடிமைத்தனத்தால் கட்டுண்டு துவண்டபோது தமிழ்ச் சமூகத்தில் எதிர்ப்பியக்கங்கள், சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின.  இந்த இயக்கங்கள் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் தமிழர் வாழ்வியல், வரலாறு, பண்பாடு, கலைகள், தொழில்நுட்பம், அறிவியல், சட்டம், அரசமைப்பு ஆகியவற்றில் தமது தனித்துவத்தை, அடையாளத்தை, ஆற்றலைத் தேடினர்.  ஐரோப்பிய அறிவொளிக் கால எண்ணக் கருக்களும், நவீனத்துவமும் இவற்றில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின. 

இச் சூழலில் பிறந்தவைதான் தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்க் கல்வி இயக்கம்.  சமசுகிருத்தத்தின் மேலாதிக்கத்தில் நலிவுற்று இருந்த தமிழை தனித்தமிழ் இயக்கம் மீட்டெடுத்து பலப்படுத்தியது.  தமிழில் பாடுதல் இழிவென்று பழிக்கப்பட்டதை தமிழின் தொன்மையான இசை மரபை மீட்டெடுத்தது தமிழிசை இயக்கம் முறியடித்தது.  ஆங்கிலம் படித்தால்தான் பதவி என்று இருந்த சூழல்தான் தாய்மொழிக் கல்வியை, சுதேசிக் கல்வியை வலுயுறுத்தி தமிழ்க் கல்வி இயக்கம் செயற்பட்டது.  இன்று தமிழ்ச் சூழலில் செல்வாக்குச் செலுத்தும் திராவிடமும் தமிழியமும் இந்தப் பின்புலத்தில் தோற்றமும் வளர்ச்சியும் பெற்றன. 

பெரியார் சுயமரியாதை/திராவிட இயக்கத்தை தோற்றுவித்த போது பகுத்தறிவு, சாதிய எதிர்ப்பு, பெண்கள் உரிமைகள், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, மூடநம்பிக்கைகளை ஒழித்தல், இறைமறுப்பு, திராவிட/தமிழ் அடையாளம், தனித் திராவிட நாடு ஆகியன அதன் அடித்தளக் கொள்கைகளாக இருந்தன.  திராவிடம் என்று பலர் உரையாடும் போது இந்தக் கருத்தியல் நோக்கிலான கோட்பாட்டையே சுட்டுகின்றார்கள்.  ஆனால் அண்ணா அதிகாரத்துக்கு வருவதற்காகவே, வந்தபோதே தனிநாட்டுக் கொள்கையை, பகுத்தறிவு, சமூகச் சீர்திருத்தக் கொள்கைகள் பலவற்றை கைவிட்டுவிட்டார்.  அவர் பின் வந்த பச்சை சந்தர்ப்பவாதிகள் திராவிட இயக்கத்தில் இருந்து அதன் எல்லாப் பெறுமதிவாய்ந்த கருத்தியல்களையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டார்கள். 

ஆக இன்று திராவிடம் என்று எஞ்சி இருப்பது ஆட்சியைப் பிடிப்பதற்காக் கொள்ளப்படும் இலவசத் தொலைக்காட்சி போன்ற பிரபலக் கொள்கைகளும், பன்னாட்டுக் கம்பனிகளுக்கு விலைபோன சிறப்புப் பொருளாதாரக் கொள்கைகளும், தமிழ்க் கல்வியை கொன்றுவிட்டு செத்தமொழி மாநாடுகள் கூட்டி தமது டமில் பற்றை அறிவித்துக் கொள்ளும் பாசாங்குகளுமே.  திராவிடக் கட்சிகளின் நிர்வாகம் குடும்பச் சொத்தாகவும், தனிமனித வழிபாடுகளிலும் சிக்கி சின்னா பின்னமாகப் போனது.  நான் திராவிடத்தை கருத்தியல் திராவிடம் இன்றைய நடைமுறைத் திராவிடம் என்று இரண்டாக வரையறை செய்து கொள்கிறேன். 

சாதியால், சமயத்தால், நாட்டால் வேறுபட்ட தமிழ் பேசும் சமூகத்தை தமிழ் என்ற இணைப்பின் ஊடான ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி இணைக்கின்ற கோட்பாடே தமிழியம் ஆகும்.  குறிப்பாக ஆதிக்க சக்திகளினாலும், தன் சமூகக் கட்டமைப்புக்களினாலும் மொழி, பண்பாட்டு, சமூக நோக்கில் அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு சமூகம் தளை நீக்கிக் கொள்ள பயன்படுத்திக் கொண்ட உணர்வு, அடையாள அடிப்படையிலான சமூக வலுவூட்டல் (social mobilization) கோட்பாடே தமிழியம் ஆகும்.  "அந்த உணர்வு அரசியலில், சமூகத்தில், பண்பாட்டில் தெரியவரும்.  அதன் அரசியல்ரீதியான வடிவத்தை தமிழ்த் தேசியம் என்று சொல்கிறோம்".  இதனை பேராப்பிரிக்கக் கொள்கை (Pan-Africanism), முதற்குடிமக்கள் இயக்கம் (Pan-Indianism), பேரரபியக் கொள்கை (Pan Arabism) போன்றவற்றுடன் ஒப்பிடலாம்.  அயோத்தி தாசர், மறைமலை அடிகள், பாரதிதாசன், ம. பொ. சிவஞானம், தனிநாயகம் அடிகள், பழ, நெடுமாறன், ச. பொன்னுத்துரை, கோவை ஞானி போன்ற அறிஞர்கள் தமிழ்த் தேசியத்தின் கருத்தியல் கோட்பாட்டாளர்கள் எனலாம்.  திராவிடம் போன்றே தமிழ் அடையாளம், தன்னுரிமைகள், சமூகச் சீர்திருத்தம், சாதிய எதிர்ப்பு, பெண்கள் உரிமைகள் போன்ற கொள்கைகளை கொண்டது. 

ஆனால் இது குறிப்பிட்ட இடங்களில் வேறுபட்டது.  கம்பராமாயணத்தை எரிப்போம் என்றும் திராவிடம் கூறிய போது அதைப் பதிப்போம் என்று தமிழியம் கூறியது.  பிராமணியத்தை/பிராமணரை தமது வரலாற்று எதிரிகளாக திராவிடம் கருதிய போது, தமிழியம் மொழிவழி இன உரிமை பேசியது.  கருத்தியல் திராவிடம் பகுத்தறிவை, இறைமறுப்பை அடிநாதமாக் கொண்ட போது தமிழியம் சமய நம்பிக்கைகளை, மூட நம்பிக்கைகளை, மரபுகளை ஊக்குவித்தது,  தமிழ் அடையாளத்துக்கு தந்த முக்கியத்துவத்தை சமூகச் சீர்திருத்ததுக்கோ, சமூக நீதிக்கோ தமிழியம் வழங்கவில்லை.  மேற்கூறியது கருத்தியல் தமிழியம்.  நடைமுறையில் தமிழியம் மேலும் பல குறைபாடுகளைக் கொண்டது.  ஈழத்தில் அது தமிழ்த் தேசியம் ஆக அரசியல் வலுப் பெற்ற போது மிதவாதிகளை அழித்து அடிப்படைவாதமாக அது மருபியது.  தமிழ் பேசும் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அணைத்துச் செல்லத் தவறியது.  இன்று ப.ம.க போன்ற சாதிக் கட்சிகளினதும், நாம் தமிழர் போன்ற குறுக்குநோக்கு கட்சிகளினதும் அரசியல் பந்தானது,  இதுத்தான் இன்றைய நடைமுறைத் தமிழியம். 

வரையறைச் சமன்பாடுகள்

கருத்தியல் திராவிடம் = பகுத்தறிவு + பி
ராமணிய/சாதி எதிர்ப்பு +  சமூகச் சீர்திருத்தம்/நீதி + பெண்கள் உரிமைகள் + திராவிட/தமிழ் அடையாளம் + தன்னுரிமைகள்/அரசியல் உரிமைகள் + இறைமறுப்பு/மூடநம்பிக்கை எதிர்ப்பு + நவீனத்துவம்

இன்றைய (நடைமுறைத்) திராவிடம் = குடும்ப/தனிமனித நிர்வாகம் + பிரபலக் கொள்கைகள் + தாராளமய, தனியார்மய வலதுசாரிப் பொருளாதாரம் + சடங்குத் தமிழ் + சடங்குப் பெரியார்

கருத்தியல் தமிழியம் = தமிழ் ஒருமைப்பாடு + தமிழ் அடையாளம் (மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு..) + தன்னுரிமைகள்/அரசியல் உரிமைகள் + சாதி எதிர்ப்பு + பெண்கள் உரிமைகள் + சமூகச் சீர்திருத்தம்/நீதி (குறைந்த முக்கியத்துவம்) + சமய ஏற்பு + மூடநம்பிக்கை/இறை ஏற்பு + தனித்துவம்/மரபு

இன்றைய (நடைமுறைத்) தமிழியம் = தமிழ் அடையாளம் (மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு..) + தன்னுரிமைகள்/அரசியல் உரிமைகள் + தமிழ்/குறுந் தேசியவாதம் + சாதி எதிர்ப்பு + பெண்கள் உரிமைகள் + சமய ஏற்பு + மூடநம்பிக்கை/மரபு/இறை ஏற்பு + இனவாதம் + வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கை

தமிழ்ச் சூழலில் செல்வாக்குப் பெற்ற கோட்பாடுகள் என்னும் போது இடதுசாரிக் கொள்கைளும் முக்கியம் இடம் பெறுகின்றன. அது இந்த அசலலில் இடம்பெறவில்லை.  நடைமுறையில், ஒரு பெரும் விழுக்காடு வலதுசாரியினர்.  காந்தியவாதிகள், எவற்றிலும் பிடிப்பில்லாதவர்கள் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.  இவர்களும் இந்த அலசலில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

திராவிடம் தமிழியம் 1 - பகுத்தறிவு

Labels: , , ,

Monday, August 05, 2013

பணக்கார நாடுகளில் சம்பளம் (ஊதியம்) ஏன் அதிகம்?

இந்தியாவில் பேருந்து ஓட்டும் ஒருவரை விட சுவிட்சர்லாந்தில் பேருந்து ஓட்டும் ஒருவருக்கு 50 மடங்கு சம்மளம் கிடைக்கிறது.  இது எதனால்? சுவிட்சர்லாந்தில் பேரூந்து ஓட்டுபவர் இந்தியாவில் பேருந்து ஓட்டுபவை விட 50 மடங்கு திறமையாக ஓட்டுகிறாரா?  சந்தைப் பொருளாதாரமா, முதலாளித்துவமா இந்த வேறுபாட்டை விளக்கிறது? மேற்கண்ட கேள்வியைக் கேக்கிறார் பொருளியலாளர் ஃக-யூன் சங் (Ha-Joon Chang). 

நிச்சியமாக இது திறமை வேறுபாட்டினால் இல்லை என்கிறார் சங்.  ஏன் என்றால் சுவிட்சர்லாந்து பேருந்து ஓட்டுநர்கள் இந்திய ஓடுநர்களை விட 50 மடங்கு திறமையானவர்களாக இருக்க முடியாது.  மாற்றாக, இந்தியாவில் மிகுந்த வீதி நெருக்கடிக்குள் பேருந்து ஓட்டுபவர்கள் கூடிய திறமை பெற்றவராக இருக்கும் வாய்ப்பு அதிகம். 

அப்படியானால், எப்படி இந்த வேறுபாட்டை விளக்குவது.  இது உலக பொருளாதார அரசியல் அமைப்புச் சார்ந்த ஒரு விடயம்.  இந்தப் பொருளாதார அமைப்பில் சுவிட்சர்லாந்து ஒட்டுமொத்தமாக உயர்ந்த உள்கட்டமைப்பு, வசதிகள் கொண்ட ஒரு நாட்டை உருவாக்கியுள்ளது.  இதில் எந்த ஒரு தனிப்பட்ட பேருந்து ஓட்டுனரின் பங்களிப்பு மிகச் சிறியது.  ஆகவே ஒருவரின் சம்பளம் ஒட்டுமொத்த சமூகம் சார்ந்த விடயம் என்கிறார்.  இது குறைந்த சம்பளக் காரர்களுக்கு மட்டும் இல்லை, பெரும் சம்பளம், பணம் ஈட்டுபவர்களும் சமூகம் சார்ந்தே இருக்கிறார்கள். 

தீவர சந்தைப் பொருளாதார, முதலாளித்துவ ஆதரவாளர்கள் இந்த உண்மையை மறுத்து ஒருவரின் சம்பளம் ஒருவரின் திறமைக்கு மட்டும் சந்தையால் தரப்படும் வெகுமதி என்று வாதிடுகிறார்கள்.  சங்கின் எடுத்துக்காட்டு இந்தக் கூற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.  மேலும் சங், அறிவியல் பூர்வமாக நிறுவக்கூடிய திறந்த சந்தை என்று ஒன்று இல்லை.  எல்லா திறந்த சந்தைகளுமே அரசியல் பொருளாதார சூழலியல் விதிகளுக்கு (regulation) உட்பட்டவை.  எடுத்துக்காட்டாக சுவிட்சர்லாந்தில் தாராள குடிவரவு இருந்தால் அங்கு பேரூந்து ஓட்டுவதற்கு கூடிய போட்டி இருக்கும், ஆகவே ஒட்டுநர்களுக்கு 50 மடங்கு சம்பளம் கிடைப்பதற்கு வாய்ப்புக் குறைவு என்கிறார்.

திறந்த சந்தையில் சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படும் சிங்கப்பூரில் 85% வீடுகள் அரச நிறுவனத்தினால் வழங்கப்படுகிறது.  டென்மார்க்கில் உழவர் கூட்டுறவுகள் மிக முக்கிய பங்களிப்புச் செய்கின்றன.  அமெரிக்காவில் பெரும்பான்மையான அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகள் அரசினாலேயே செய்யப்படுகிறது.  இவை எதை எடுத்துக் காட்டுகின்றன என்றால் தூய திறந்த சந்தை என்ற வாதம் தூய பொதுவுடமை என்றதைப் போன்று தவறானது.

எடுத்துக்காட்டாக ரொறன்ரோ நகரில் உணவு வண்டி (Food Truck) விடுவதை எடுத்துக்கொள்வோம்.  அண்மைவரை இது முற்றாகத் தடை செய்யப்பட்டு இருந்தது.  பெரும்பாலும் உணவங்களின் வேண்டுதலினால்.  முதலில் உணவு வண்டி விடுவது என்று தீர்மானித்தது போது அது தொடர்பாக பல விதிகள் கொண்டுவரப்பட்டன.  எ.கா என்ன வகையான உணவுகள் விற்கப்படலாம், உணவுகளை நலப் பரிசோதனைக்கு உட்படுத்தல், எங்கே உணவு வண்டிகள் தரிக்கலாம், எத்தனை உணவு வண்டிகளை விடலாம், என்ன வரி போன்ற பல விதிகள்.  அதன் பின் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டம் தோல்வியில் அடைந்தது.  இப்பொழுது இன்னுமொரு முன்னோடித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  ஆக இந்தச் சிறிய எடுத்துக் காட்டில் இருந்து ஒரு பொருளாதாரச் செயற்பாடு எந்தளவுக்கு அரசியலுடன் அல்லது சமூகத்துடம் ஊடாடுகிறது என்பதை உணர முடியும். 

இந்தக் கருத்துக்களை சங் "முதலாளித்துவம் பற்றி அவர்கள் உங்களுக்கு தெரிவிக்காத 23 விடயங்கள்" ("23 Things They Don't Tell You About Capitalism") என்ற நூலில் விரிவாகக் கூறியுள்ளார்.  இந்த நூலை இன்னும் படிக்கவில்லை, ஆனால் படிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.

http://www.youtube.com/watch?v=56RndDFRnH4
http://www.youtube.com/watch?v=AuhKRgBwDgU
http://www.youtube.com/watch?v=wlXbnuS6adc
 

Labels: , ,

Saturday, August 03, 2013

உத்தமத்தின் 2013 வலைத்தளம் தமிழில் ஏன் இல்லை?

கணினியில் தமிழை, இணையத்தில் தமிழை ஏதுவாக்க, வளர்க்க, ஊக்குவிக்கவென நிறுவப்பட்ட அமைப்பே உத்தமம்.  தமிழிலும் நுட்பத்திலும் சிறந்த வல்லுனர்களைக் கொண்ட அமைப்பாக அது தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது.  தமிழ்நாடு அரசு, ஒருங்கிறி அமைப்பு போன்ற அனைத்துலக அமைப்புகளுக்களோடும், பல பல்கலைக்கழகங்கள், தமிழ் அமைப்புகளோடும் ஊடாடும் அமைப்பாக உத்தமம் விளங்குகிறது. அவர்கள் செய்யும் முதன்மைப் பணி, பல ஆண்டுகளில் ஒரே தலையாப் பணி மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்வது ஆகும்.  2013 தமிழ் இணைய மாநாடு மலேசியாவில் ஆகத்து 15-18 ஆம் திகதிகள் நடைபெறவுள்ளது.  2013 ஆம் ஆண்டு மாநாட்டு வலைத்தளம் (http://ti2013.infitt.org/my/) பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது.  ஆனால் அவை எவையும் தமிழில் இல்லை, தமிழிலும் இல்லை.  இது ஏன்?

வேர்ட்டில் தமிழில் தட்டச்சு செய்து படமாக்கி வலையில் ஏற்றியது ஒரு காலம்.  இன்று டுரூப்பல் (Drupal), வேர்ட்பிரசு(Wordpress) போன்ற உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியங்களைப் (Content Management Systems) பயன்படுத்தி சில மணி நேரத்தில் அழகான பன்மொழி வலைத்தளத்தை உருவாக்கிவிட முடியும். சிறந்த நுட்பர்களைக் கொண்ட உத்தமத்துக்கு, குறிப்பாக தமிழ்க் கணினியின் முன்னோடி அமைப்பான உத்தமத்துக்கு தமிழில் வலைத்தளம் அமைப்பது ஒரு நுட்பச் சிக்கலாக இருக்க முடியாது.  ஆனால் அவர்களின் வலைத்தளம் தமிழில் இல்லை.  இது ஏன்?

உத்தமம் தமிழில் தகவல்களைப் பகிர வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் தரவில்லை.  அதனால் யாரும் சிறப்பாகப் பயனடையவார்கள் என்று அவர்கள் கருதவில்லை.  உத்தமத்தில் பங்கு கொள்ளும் அனேகருக்கு ஆங்கிலம் தெரிந்து இருக்கும் தானே என்பது அவர்கள் கணிப்பு.  அப்படி இல்லாவிடினும் அவர்கள் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.  இது அமைப்பின் கொள்கை தொடர்பானது. வேறு பல டமில் அமைப்புக்கள் இந்த மனப்பான்மையக் கொண்டு இருக்கின்றன, ஆனால் அவை பற்றி அவ்வளவு அக்கறை கொள்ளத் தேவை இல்லை.  ஆனால் கணினியில் தமிழை, இணையத்தில் தமிழை வளர்க்கவென நிறுவப்பட்ட அமைப்பு.  இவர்களே இந்த நிலை என்றால் வேறு அமைப்புகளுக்கு இவர்கள் போய் தமிழில் செய்யலாம் செய்யவேண்டும் என்று கூறுவதில் என்ன பயன் இருக்கிறது.

தமிழில் தகவல்களைப் பகிர்வதை அவர்கள் மதிப்புக் குறைவாக, அல்லது இழிவாகக் கருதி இருக்கலாம்.  ஏன் என்றால் கல்விசார் கொன்பிரன்சு என்றால் ஆங்கிலத்தில் நடத்தினால்தானே மதிப்பு.  தமிழில் செய்வது வழமை இல்லைத் தானே.

இறுதியாக, உத்தமம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இயங்குவதால் உள்ளடக்கத்தை மொழிபெயர்க்க, தமிழில் வலையேற்ற கூடிய ஆற்றல் செலுத்த வேண்டி இருக்கலாம்.  இந்தக் கூடிய ஆற்றலை இவர்கள் செலுத்தத் தயாரில்லை. இதுதான் நான் பங்களிக்கும் சில அமைப்புக்கள் உட்பட்டவற்றின் நிலை.  தமிழில் உற்பத்தியைத் தரகிறார்கள், ஆனால் தமிழிலும் இயங்க முற்படுவதில்லை.  இது என்னத்தை உணர்த்துகிறது.  தமிழ் அன்றாடா இயக்கத்து ஏற்ற மொழி இல்லை.  அது சமசுகிருதம் போன்று சில தளங்களில் பூசைக்குப் பயன்படும் மொழி என்று அல்லவா. ஆக, உத்தமம் தமது இலக்குகளுக்கு எதிராகத் தாமே இயங்குகிறார்கள்.

உத்தமம் ஒருங்குறியில் விட்ட தவறைப் போன்ற ஒரு பெரும் தவறாகவே இதை நான் கருதுகிறேன்.  இதை எதோ யாரும் கவனிக்காமல் விட்ட தவறாக எடுத்துக் கொள முடியாது.  அமைப்பின் கொள்கையில், நடைமுறையில் ஊறிய ஒரு சூழமைவின் வெளிப்பாடு.

தமிழின் ஆக்க முனைகளிலேயே இந்த நிலை எனில், தமிழ்நாடு அரசு போன்ற அமைப்புக்களிடம் அதன் தகவல்களை தமிழிலும் தர வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க முடியுமோ. 

Labels: ,

"மட்ராஸ் கபே" படத்தை தடை செய்யக் கோராதீர்கள்

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்று அடிக்குரலில் கத்திவிட்டு, மறுகணமே ஒரு திரைப்படத்தை தடை செய்யக் கோருவது கோலிக்குரியது.  கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பாக இவ்வாறு முரண்பாடு கொண்ட நிலைப்பாடுகளை எடுப்பது தமிழ்ச் சூழலில் எல்லாத் தரப்புக்களும் செய்யும் ஒரு அடவாடித்தனம்.  இடதுசாரிகள், திராவிடக் கட்சிகள், தமிழிய அமைப்புகள், சமயக் கட்சிகள், சாதிக் கட்சிகள், ஈழத்து இயக்கங்கள் என்று எல்லோரும் கருத்துக்களை தடை, தணிக்கை, தண்டிக்க செய்வதன் பின் ஒளித்துக் கொள்கிறார்கள்.  துண்டறிக்கை, சுவரொட்டி, கட்டுரை, இதழ், நாளிதழ், நூல், திரைப்படம், இசைத்தட்டு, நாடகம், நிகழ்த்தல் என எல்லா வெளிகளிலும் கருத்தை தடை செய்ய முனைகிறார்கள்.  கருத்தை கருத்தால் எதிர்க்க திரணியற்றவர்கள், எதிர்க்க ஆற்றல் இல்லாதவர்கள் அல்லது விருப்பாதவர்கள் எடுக்கும் குறுக்குவழிகளே இவை. 

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமே பிற அனைத்து உரிமைகளுக்கும் அடித்தளமான ஒர் அடிப்படை மனித உரிமை.  மக்களாட்சிக்கு, நல்லாட்சிக்கு, சமூக மாற்றத்துக்கு, தன்மதிப்புக்கு, படைப்பாக்கத்துக்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியம்.  சிறுவர் ஆபாசம், ஆபத்தான விளம்பரம், நேரடியாக பாதிப்பை தரக் கூடிய வெறுப்புப் பேச்சு, பாதுகாப்பு போன்று மிகக் குறுகிய எல்லைகளைத் தவிர கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படல் ஆகாது.  தமிழ்நாடும், இந்தியாவும் அடிப்படை மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பாக சீரிய அக்கறை அற்றவை.  அதனால் யார் ஒரு படைப்புக்கு எதிராக ஒரு சிறு கலக்கம் செய்தாலும் மிக உச்சகட்டமான முடிவாக அந்தப் படைப்பை தடை செய்து விடுவார்கள்.  இலங்கையைப் பற்றிக் கேக்கத் தேவை இல்லை.

"மீண்டெழும் பாண்டியர் வரலாறு" என்ற தமிழ் நூல் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டது, பல திரைப்படங்கள் தடை, தணிக்கைக்கைக்கு உட்பட்டது, பேசியதற்காக பலரை சிறைக்கு அனுப்பயது, இதுதான் இன்றைய தமிழ்நாடு, இந்தியா.  இதில் இருந்து மீள்வது என்றால் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உறுதியாக எல்லோருக்கும் வழங்க வேண்டும்.  குறிப்பாக எமக்கு பிடிக்காத, நாம் ஏற்றுக் கொள்ளாத கருத்துக்களைத் தாங்கி படைப்புகள் வெளிவரும் போது. அவற்றுக்கு எதிராக நாம் மறுப்பு நூல் எழுதலாம், விமர்சிக்கலாம், புறக்கணிக்கலாம், ஆனால் அவற்றை தடை செய்யக் கூடாது, தணிக்கை செய்யக் கூடாது, தண்டிக்கக் கூடாது. 

ஆகவேதான் நான் பார்க்காத, பார்க்கப் போகாத "மட்ராஸ் கபே" படத்தைத் தடைசெய்ய சிலர் கோருவதை கண்டிக்கிறேன்.  உங்களுக்குப் படம் பிடிக்கவில்லையா பார்க்காதீர்கள்.  படத்தில் தவறாக தீங்காக கருத்துக் கூறப்பட்டுள்ளதா.  புறகணியுங்கள்.  பிறரை புறக்கணிக்கக் கோருங்கள், தூண்டுங்கள்.  ஆனால் தடை செய்ய, தணிக்கை செய்யக் கோராதீர்கள்.  அவ்வாறு கோருவது, எமக்கு எல்லோருக்கும் தேவையான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதிக்கும்.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பாக நான் முன்னர் செய்ய ஒரு நிகழ்த்தல் (presentation)
https://docs.google.com/file/d/17Q0yyHwHPQhVZ0qkr-CAENmRofGymUg1MnkhI3xhrMJU4YwqiCLluGuHKpYk/edit?usp=sharing

 

Labels: , ,