<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Thursday, August 25, 2005

சித்தர்கள்

சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரன்பாடான உறவு வைத்திருப்பவர்கள்.


சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்ப்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் (materialists) அல்ல. "மெய்புலன் காண்பது அறிவு" என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.


சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏன் என்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்கும் சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும், தமிழ் சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள்.


சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறய உலக நோக்கு. பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பவன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.


சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுபவர்கள், கலைஞ்ஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்தி பார்க்கலாம். இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும்.

முன்னர் சுட்டியது போல இவர்கள்தான் சித்தர்கள் என்ற தெளிவான வரைமுறை இல்லை. எனினும், தமிழ் மரபில் சித்தர்களாக கணிக்கப்பகூடியவர்களின் (சித்தர் பாடல்கள் என்ற நூலில் உள்ள பட்டியல்) விபரங்கள் பின்வருமாறு:

சிவவாக்கியர்
அவ்வையார்
பட்டினத்தார்
பத்திரகிரியார்
அகப்பேய்ச் சித்தர்
அழுகணி சித்தர்
இடைக்காட்டுச் சித்தர்
கடுவெளிச் சித்தர்
பாம்பாட்டிச் சித்தர்
குதம்பைச் சித்தர்
கொங்கணச் சித்தர்
பீர்முகம்மது
வாலைசாமி
எனாதிச் சித்தர்
காளைச் சித்தர்
நந்தீசுவரர்
இராமதேவர்
கருவூரர்
சேஷயோகியார்
திருவள்ளுவர்
சட்டைமுனி சித்தர்
கணபதி சித்தர்
அகத்திய சித்தர்
உரோமரிசி சித்தர்
திருமூலர்
சுப்பிரமணிய சித்தர்
வால்மீகச் சித்தர்
காகபுசுண்டர்சித்தர்
சூரியானந்த சித்தர்
பட்டினச் சித்தர்
காரைச் சித்தர்

யோகர் சுவாமி
குடைச் சித்தர்

Tuesday, August 09, 2005

10 கட்டற்ற மூலங்கள்

கடந்த வாரம் ஆங்கில ஐரோப்பிய விக்கிபீடியாக்களின் வளர்ச்சியை கொண்டாடுவதற்க்கும், எதிர்கால திட்டங்களை அலசுவதற்க்கும் என முதன்முதலாக விக்கிமேனியா சங்கமம் யேர்மனியில் இடம்பெற்றது. அப்பொழுது விக்கிபீடியாவின் முன்னோடிகளின் ஒருவரான ஜிம்மி வேல்ஸ் (Jimmy Wales) அவர்கள் 10 கட்டற்ற மூலங்கள்களா பரிமானிக்க இருக்கும் உடமைகள் பற்றி அறிவித்து அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார். அவ் 10 கட்டற்ற மூலங்கள் பின்வருவன:

1. கட்டற்ற கலைக்களஞ்சியம் (wikipedia.org, ta.wikipedia.org)
2. கட்டற்ற அகராதி (ta.wiktionary.org)
3. கட்டற்ற பாடத்திட்டங்கள் (MIT OCW, Japan Open Course Ware Allaince)
4. கட்டற்ற இசை
5. கட்டற்ற ஒவியம்
6. கட்டற்ற கோவை நியமங்கள்
7. கட்டற்ற புவியியல் வரைபடங்கள்
8. கட்டற்ற பொருள் அடையாள பட்டைகள்
9. கட்டற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல்கள்
10. கட்டற்ற குமுகாயங்கள் (thzmizmaNam)

இவைதவிர மேலும் 13 பற்றி பின்னர் தெரிவப்பதாக இருக்கின்றது. உணவு, உடை, உறையுள் தேவைகளை பூர்தி செய்துள்ள வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின் மக்கள் சிந்தனையில் இவை எழுந்தன என்றால், இந்தியா, இலங்கை போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் குடிமக்களான நாம் எவற்றை கட்டற்றதாக மாற்றுவோம்.

1. மாசு இல்லாத காற்று
2. கட்டற்ற தண்ணீர்
3. பசியை போக்க உணவு
4. இருக்க படுக்க விதைக்க நிலம், வீடு
5. நோயை போக்க மருந்து
6. அறியாமை போக்க கல்வி
7. கட்டற்ற காடு/இயற்கை
8. கட்டற்ற கடல்
9. எழுத,பேச, வெளிப்படுத்த சுதந்திரம்
10. வன்முறை இல்லாமல் மறுந்துரைக்க, விமர்சிக்க, முறைப்படி எதிர்க்க சுதந்திரம்
11. வன்முறை இல்லாமல் கூட்டம் கூட, செயல்பட சுதந்திரம்
12. சாதி, மத, பெண்ணடிமை மடமை கட்டுபாடுகளில் இருந்து விடுதலை

இப்படியொரு சூழலை, குமுகாயத்தை எம்மால் கட்ட முடியுமா, அல்லது இது வெறும் கோசலக் கனவுதானா?

Saturday, August 06, 2005

ஊர் ஒன்றுகூடல்கள்-மரபின் தோற்றம் (ஒரு குறிப்பு)

கோடைகாலம் என்றால் ஊர் ஒன்றுகூடல்கள் கனடாவில் வழக்கமாகி விட்டன. வெகு விரைவில் ஒன்றுகூடல்கள் தமிழ் குமுகாயத்துக்குள்ளேயே ஒரு வித சமூக அந்தஸ்து போட்டியாக பரிமானிக்க கூடிய சாத்தியமும் உண்டு. இன்று ஒன்றுகூடல்கள் பெரும்பாலும் ஒரு திறந்த, அனைவரையும் உள்வாங்கும் மன பண்போடுதான் நடைபெறுகின்றன. ஆனாலும், அங்காங்கே சாதிய, பொருளாதார, சமய பிரிவினைகளின் கோடுகளையும் அடையாளம் காணலாம். அதாவது, ஒரு ஊர் கூடினால் அவ்வூர் என்று தம்மை கருதினாலும் "மேல் வர்க்கமாக" தம்மை கருதுவோர் சமூகம் தரமாட்டார். அல்லது, ஊரில் ஒடுக்கப்பட்டோர் இங்கும் வந்தும் கலந்து கொள்வதற்க்கு ஒரு வித எழுதப்படாத தடை அல்லது தயக்கம் இருக்கும்.

ஒரு ஊரின் அல்லது ஊர் மக்களின் வளர்ச்சி அவ் ஊர் மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் வெளிப்படும் எனலாம். பொருளாதார வளம், திட்டமிடல், ஒருங்கினைப்பு, அனுபவ - செயற்பாட்டு அறிவு, செயல்பாட்டாளர்கள் என பல கூறுகள் ஒன்றுகூடித்தான் ஒரு ஒன்றுகூடல் அமைகின்றது. அதனால்தான் ஒன்றுகூடல்கள் சமூக அளவுகோலாக செய்ல்பட்டு போட்டி விரோத மனப்பான்மைக்கு கூட இட்டு செல்லலாம். இன்னொரு பார்வையில் இது ஒற்றுமையையும் தொடர்புகளையும் பேணி முன்னேற்றத்துக்கும் வழி செய்யலாம்.

இப்படியான ஒன்றுகூடல்கள் ஊர் அடிப்படையில் மாத்திம் அல்லாமல் பழைய மாணவர் சங்கங்கள், தமிழ் சங்கங்கள், கோயில்கள், தொழில் குழுக்கள், வானொலி நேயர்ககள், வலைப்பதிவர்கள் (:-)) என்று பல ஒருங்கிணைப்பு ரீதியிலே நடைபெறுகின்றன. இது ஈழத்தில் திருவிழா, பாத யாத்திரை, கொண்டாட்டங்களுக்கு பதிலாக அல்லது அவை போன்று இங்கு தமிழர்கள் தொடர்புகளை பேணி கொள்ள மேற்கொள்ளும் முனைவுகள்தான். இது தமிழர்கள் மத்தியில் மட்டும் இல்லை, இப்படிப்பட்ட ஒன்றுகூடல்கள் கிரேக்க, இத்தாலிய, ஸ்கோற்ரிஸ், யூதர்கள் என எல்லா இன ஊர் மக்களுக்கிடையேயும் வேறுபட்ட மரபுகளுடன் இடம்பெறுகின்றன; உ+ம்:
http://www.jewishtorontoonline.net
http://web.ripnet.com/~nimmos/highland_games.html
http://www.tallahasseecelticfestival.com/

உத்தரவாதமும் கடமைகளும் அற்ற தமிழ் குமுகாய அமைப்பில் ஊர் ஒன்றுகூடல்கள் புலர் வாழ்வின் ஒரு படி நிலையா அல்லது ஒரு மரபாக அமையுமா? இன்றைய நிலையை நோக்கும் போது, சிறுவர்களின் பங்களிப்புக்களும், இளைஞ்ஞர்கள் ஒன்றுகூடலை ஒருங்கிணைப்பதும் இது ஒரு மரபின், ஒரு வாழ்முறையின் தோற்றம் எனலாம்.

ஒன்றுகூடலை நடத்துவதற்த்துக்கு அல்லது ஊர் சங்கத்துக்கு என ஒரு நிதி பங்களிப்பு கோரப்படும். ஒன்றுகூடலுக்கான இடம்/காலம் வெகுசன ஊடகங்கள் மூலமும் நேரடியாகவும் பகிரங்கப்படுத்தப்படும். ஒன்றுகூடல் நாள் காலை 10-11 மணியளவில் மக்கள் குடும்பங்களாகவோ, அல்லது குழுக்களாகவோ குறிப்பிட்ட இடத்துக்கு வருவர். கோடை காலம் என்ற படியாலும், விளையாட்டு போட்டிகள் பல இருப்பதாலும் அரைகாற்ச்சட்டை, முற்கால் காற்ச்சட்டைகளையே பலர் அணிந்து வருவர். முதிய பெண்கள் (அம்மம்மாக்கள்) ஒரு சிலரை தவிர பலர் சேலை உடுத்தே வருவர். ஒருங்கிணைப்போர் உணவு தாயாரிப்பு, விருந்தோம்பல், விளையாட்டு போட்டி ஒழுங்குபடுத்தல்களில் ஈடுபட்டிருப்பர். அறிமுகங்கள், சந்திப்புக்கள், விசாரிப்புக்கள், ஊர் செய்திகள், வம்பளத்தல்கள், எடைபோடுதல்கள், உரையாடல்கள் என மக்கள் கலந்துவிடுவார்கள்.

ஊர்களும் மக்களும் வேறுபட்டாலும் ஒன்றுகூடல்களில் இடம்பெறும் நிகழ்வுகள் பல ஒன்றுதான். பின்வருவன ஒரு ஒன்றுகூடலில் நிகழவிட்டாலும், இடம்பெறும் நிகழ்வுகளின் ஒரு சிறு தொகுப்பு.

ஆரம்பம்
கனடா கொடியேற்றம்-கனேடிய தேசிய கீதம் குழந்தைகளால் பாடப்படல்
(தாயக கொடியேற்றம்-கொடியேறு பாடல்)
(தமிழ் வாழ்த்து)

விளையாட்டு போட்டிகள்
ஒட்டம்
சிறுவர் தடை மீறி ஓட்டம்
எலுமிச்சம் பழ ஓட்டம்
நீளம் பாய்தல்
உயரம் பாய்தல்
குண்டு எறிதல்

பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்
கம்பம் ஏறல்
கிளிதட்டு
முட்டி உடைத்தல்
கயிறு இழத்தல்
சங்கீத கதிரை
சிறந்த தம்பதிகள்
சீட்டு விளையாட்டு
சொல் அமையுங்கள்

குழு விளையாட்டுக்கள்
கால்பந்து
கை பந்து
பூ பந்து

இசை (மேளம், பறை) ?
நடனம் (கூத்து, குழு நடனங்கள்) ?
(எல்லா ஒன்றுகூடல்களின் இசைக்கும், மக்கள் கலந்துகொள்ளும் நடன நிகழ்வுகளுக்கும் ஒரு முக்கிய பங்கு இன்று இல்லை என்பது குறித்தல் அவசியம்.)
நகைச்சுவை நிகழ்வுகள்

உணவு முறைகள்
கூழ்
விசேட கறி
பாபிகியூ
மரபு உணவுகள் (பிரியாணி, இடியப்ப கொத்து, புட்டு கொத்து)
சிற்றுண்டிகள்
விசேட பானங்கள்

ஒன்றுகூடல் ஒருங்கிணைப்பு சங்கம் தெரிவு
பரிசளிப்பு
அனைவரும் பங்களித்து துப்பரவு செய்தல்


பெரும் நகரத்தில் பிளவுபட்டு தொடர்பற்று வாழும் பலருக்கு ஒன்றுகூடல்கள் ஒரு குமுகாய உணர்வை வளர்க்கின்றன. இது ஆரோக்கியமானதாக தொடருமா என்பதை மாறும் அரசியல், பொருளாதார சூழ்நிலைகள் தீர்மானிக்ககூடும். இப்படிப்பட்ட ஒன்றுகூடல்கள் தமிழ்ர்களை கனேடிய பொது வாழ்க்கை நீரோட்டத்தில் கலப்பதற்க்கு தடையாக அமையுமா என்ற கேள்விக்கும் தெளிவான பதில் இல்லை. கோடை காலத்தில் சரி, ஆனால் குளிர்காலத்தை எப்படி நாம் அனுபவித்து மருவ போகின்றோம் என்பதில்தான் எமது அடுத்த பயணங்கள் அமையபோகின்றன.

தமிழ்மணம், வலைப்பதிவு, வாசிப்பு - மீள்பதிப்பு

தமிழ்மணம் தமிழில் ஒரு புரட்ச்சி, மைல்கல் என்றால் அது மிகைப்படுத்தல் இல்லை. உலக பார்வையோடு, அழகிய வடிமைப்போடு, செழுமையான நுட்ப நிர்வாக கட்டமைப்போடு தமிழ்மணம் செயல்படுகின்றது. எளிமை, சுதந்திரம், திறமை ஆகிய பண்புகளை தமிழ்மணம் வெளிப்படுத்துகின்றது. தமிழ்மணத்தில் மனங்களை திறந்து மனிதர்கள் பேசுவது கேட்கின்றது. நகைச்சுவை, மகிழ்ச்சி பரவிகிடக்கின்றது. தகவல்கள் பரிமாடப்படுகின்றன. தேடல்கள், புரிதல்கள் நிகழுகின்றன. விமர்சனமும், எதிர் கருத்துக்களும் ஆரோக்கியமாக முன்வைக்கபடுகின்றன. தமிழ்மணம் யார் சொல்கின்றார்கள் என்பதை விட என்ன சொல்லபடுகின்றது என்பது வெளிவர களமாயிருக்கின்றது. தமிழர் பண்பாடு இதுவல்லவா என்பதற்க்கு தமிழ்மணம் ஒரு எடுத்துகாட்டு. இடையிடையே சிலர் வந்து தொந்தரவு செய்தாலும், அது தமிழ்மணத்தின் பண்பு இல்லை என்பதில் தமிழ்மணம் உறிதியுடன் நிற்க்கின்றது.

சமீபகாலமாக தமிழ்மணத்தை மேலும் மேன்படுத்தல், வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் மாற்றியமைத்தல், தமிழ்மணத்தின் எதிர்காலம் பற்றி பல உரையாடல்கள் நடக்கின்றன; அவற்றுள் பின்வருவன சில:

நவன் பகவதி-"வலைப்பதிவுகளில் வகைபிரித்தல்"
பத்ரி-"தமிழ்மணம் திரட்டியின் எதிர்காலம்"
செல்வராஜ்-"தமிழ்மணம்/வலைப்பதிவு குறித்த தொடர் சிந்தனைகள்"
"பொறுக்கி"-"தமிழ் வலைப்பதிவு குறித்து"
அருணா சீனிவாசன்-"வலைப்பதிவில் அவதூறு - தொடர்ச்சி..."

தமிழ்மணம் வகைபிரித்தும் திரட்ட வேண்டும் என்பது பதிவுகள் பெருக நிச்சியம் முக்கியமாகும். நவன் பகவதியின் முனைப்புக்கள் இதற்க்கு உதவ கூடும்.

மேலும் புதிதாக வலைப்பதிய வருகின்றவர்களாவது பின்வரும் வசதிகளை மென்பொருள் தெரிவில் வேண்டுவது நன்று.

1. வகைப்படுத்தல் வசதி
2. பொருள் விளங்கி தேடக்கூடிய வசதி
3. கருத்துரைத்தல் வசதி
4. பட, ஒலி. ஒளி கோப்புக்களை இலகுவில் வலையேறுதலுக்கான வசதி
5. செய்தியோடை வசதி
6. தமிழில் நேரடியாக கருத்துரைக்க வசதி (இதற்க்கு மேலதிக நிரல்கள் தேவைப்படும்)
7. புள்ளி விபர வசதி (விரும்பினால்)

தமிழ்மணம், வலைப்பதிவு நுட்பம் என்பவற்றில் பலர் சிந்தித்து செயலாற்றுகின்றார்கள். மகிழ்ச்சி. அதைப்பற்றி நிறுத்தி. நான் ஏன் வலைப்பதிகின்றேன், படிக்கின்றேன் என்பதை சிறிது பகிர்கின்றேன்.

மற்ற மனிதர்கள் என்ன செய்கின்றார்கள், எப்படி வாழ்கின்றார்கள், சிந்திக்கின்றார்கள், அனுபவிக்கின்றார்கள் என அறிய அனைவருக்கும் ஈடுபாடு உண்டு. இவ் ஈடுபாடே வலைப்பதிவின் அடிப்படை உந்திகளில் ஒன்று. மேலும், பல்வேறுபட்ட மனிதர்களோடு தொடர்புகளை தேடி நின்றாலும், எமது பின்புலத்தோடு, சிந்தனையோட்டத்தோடு, "அலைவரிசையோடு" தொடர்புடையவர்களோடு உரையாட முற்படுவது இயல்பே. ஆகையால்தான் தமிழ்மணம் நாடி நிற்க்கின்றேன்.

அனுபவ பகிர்வு, தகவல் பகிர்வு, சுட்டி பகிர்வு, சீரிய கட்டுரைகள், "இலக்கியம்", துணுக்குகள், உரையாடல்கள், நகைச்சுவை, ஆள்மாறாட்டம், புத்தக மீமீ என பல தரப்பட்ட பதிவுகள் பதியப்படுகின்றன. அவற்றை ரசிக்கின்றேன். நூற்கள், சஞ்சிகைகளிலும் பார்க்க பதிபவருக்கும் வாசிப்பவருக்கும் இருக்கும் இடைவெளி குறைவு, அது வாசகனை உற்சாகபடுத்துகின்றது. வலைப்பதிவர்கள் பலர் நான் தான் சரி என்ற மனப்பான்மையில் எழுதாமல், ஒரு வித திறந்த மன பண்போடுதான் எழுதுகின்றார்கள். தான் பிழை, அல்லது தான் நோக்கிய விதத்தை தவிர மாற்று பார்வைகள் உண்டு என்பதை சுட்டும் பொழுது ஏற்கும் பக்குவம் பலருக்கும் இருக்கின்றது.

சில கருபொருள்களே மீண்டும் மீண்டும் சர்க்கையாக்க படுகின்றன என்று நான் நினைக்கின்றேன். ஆகையால், வலைப்பதிவுகளில் சில கருபொருள்களுக்கு தடை போட்டால் நன்று :-)

1. தமிழ்
2. பிராமணியம்...ஆஆஆஆ
3. சாதி
4. ஈழம் (சார்பு, எதிர், நடுநிலை எல்லாவித கருத்துக்களுக்கும்)
5. அந்நியன், சந்திரமுகி
6. கட்சி சண்டைகள் (பா.ம.க, தி.மு.க, அ.தி.மு.க, தலித், ...)
7. எழுத்தாளர்கள் (சுஜதா, ஜெயகாந்தன், ...)
8. ஜோர்ச் புஸ்
9. பெண் உரிமை, பெண்ணியம்
10. ஒன்று கூடல்கள்

("சும்மா" தான் சொன்னேன், அப்புறம் எல்லாரும் வண்டி கட்ட வேண்டியதுதான்.)

ரொரன்ரோவில் வலைப்பதிவாளர்கள் ஒன்று கூடிய பொழுது யார் யாரை படிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. நான் வலை வலம் வரும் பொழுது தலைப்பு ஈர்ப்பாக இருந்தால் அப் பதிவை படிப்பேன் என்றேன். ஒருவரின் சில படைப்புக்கள் கவர்ந்து விட்டால் அவரின் முந்தய படைப்புக்களையும் படிப்பது வழக்கம். எனினும் சில பதிப்புக்கள், வலைப்பதிவாளர்கள் உடனடியாக யாபகம் வருகின்றன.

மயுலாடு துறை சிவா அவர்கள் எழுதிய "பாட்டிக்கு ஒர் கடிதம்" நான் எழுதாத ஒரு கடுதம் போல் இன்றும் மனதினுள் நிற்க்கின்றது.

ஒன்பது தொட்டு தொண்ணூறு தொள்ளாயிரம் என்ற குளப்பத்தை முன்நிறுத்திய முத்து.

மயூரன் எழுதும் பொழுது எப்பொழுதும் ஒரு வேகமும், நேரடியான உண்மையும் தெரியும்.

-/பெயரிலி அவர்களின் இரு பதிப்புக்கள் யாபகத்தில் இருக்கின்றன, ஒருவர் எந்த கண்னோட்டத்தில் சொல்ல வருகின்றார், எங்கே ஒருவரது கருத்து சறுக்குகின்றது என்பதை சுட்ட வல்லவர்.

ஒரு பொடிச்சி முதலில் வாசித்த் பொழுது ஒரு தெறிப்பு இருந்தது, கருத்துக்களை துணிவுடன் முன்வைக்கிறார்.

கறுப்பி, டிசே, வசந்தன், சுந்தரவடிவேல், மாயவரத்தான் பதிவுகளும் பின்னூட்டங்களில் செய்யும் கூத்துக்களும் ரசிக்க கூடியவை.

சுந்தரவடிவேல் தனது இளைய கால டயரியின் சில குறிப்புக்களை பதிவில் போட்டிருந்தார், பல விதமான தேடல்களை அடையாளம் கொள்ள கூடிதாக இருந்தது.

தங்கமணி-பலர் புத்தக மீமீ க்களில் இவரை ஒரு நூலகம் என்று வருணித்துள்ளார்கள்.

செல்வராஜ் நன்றாக விபரித்து, தெளிவாக எழுதுவார்.

ரவி ஸ்ரிநிவாஸ் பதிவுகளில் பல விதயங்கள் ஆழமாக ஊடுவி பதியப்பட்டிருக்கும்.

காசியின் எளிமை, எடுத்துக்காட்டுக்கள் என்றுமே நல்ல முன்மாதிரி.

ஈழம் என்றாலே உயிர் துடிக்கும் ஈழநாதனை யார்தான் தமிழ்மணத்தில் அறியாது இருக்க முடியும்.

வன்னியனின் ஈழ போர் பதிவுகள் சில ஈழத்துக்கே அழைத்து செல்ல வல்லன.

பத்ரி எங்கும் ஆழுமையுடன் பரவி நிற்க்கின்றார்.

கிஸோ, சினேகிதி பதிவுகளில் கனடா வாழ்க்கை வெளிப்பட்டு நிற்க்கின்றது.

மதி முன்னெடுக்கும் திட்டங்கள் எத்தனை எத்தனை...எப்படி நேரம் கிடைக்கின்றது.

இராம்.கி அவர்களின் பதிப்பை ஒரு பாடமாகவே படிப்பதுண்டு.

அல்வாசிட்டிகள் என்றாலே நகச்சுவை அல்லது கிண்டல்தான்.

ஜீவா அவர்களின் வலைப்பூவின் தலைப்பு self-checkout என் பதிவுகளுக்கு பொருந்தும் என்று நினைக்கின்றேன்.

பாலாஜி புத்தக மீமீ என்னை அழைத்திருந்தார். இனித்தான் பதிய வேண்டும். சற்று பிந்திவிட்டதுதான்.

தமிழ் பித்தன் - யாழ்பாணத்தில் இருந்து பதியும் ஒரு இளைஞ்ஞர்.

வெங்கட் - அறிவியலாளர், மைக்ரோ சோவ்ற் உடன் எப்பவும் சண்டைதான்.

காஞ்சி பிலிம்ஸ் படங்கள் போட்டிகள் என்றும் அசத்தல்தான்.

அண்ணா கண்ணன் - எழுத்து நடை கட்டுரைகள் மிகவும் நன்று.

வலைப்பதிவுகளின் ஆரம்பத்தில் மிகவும் அமர்களப்படித்தியவர் இட்லிவடை, இப்பொழுதும் அதே பகிடி இருக்கின்றது ஆனால் பதிவுகளின் எண்ணிக்கைதான் குறைந்து விட்டது.

இப்படி இப்படி பலருடை பதிவுகளை வாசிக்கின்றேன். எல்லோரை பற்றியும் இங்கு குறிப்பிடமுடியவில்லை.

இந்த வாரம் கூட ஐவர் புதிதாக வலை பதிய வந்திருக்கின்றார்கள்.

நெல்லை மைந்தன் - நெல்லை மாவட்டம் பற்றிய தவல்களை, படங்களுடன் பகிர்கின்றார்.
தார்சன் - நல்ல சுட்டிகளையும், கணனி தகவல்களை பகிர்வதகும் என பதிவு ஆரம்பித்திருக்கின்றார்.
அனிதா-நல்ல ரசனையுள்ள திரைப்பட பாடல்களை (எழுத்தில்) தருகின்றார்.
மூக்குகண்ணாடி-பல பார்வைகள் கொண்ட "கலவையான" பதிவு என்கின்றார், கனமாகவும் இருக்கின்றது.
கயல்விழி - சிறு கதைகள் பல பதிவில் இருக்கின்றன.

இறுதியாக, எனது வாசிப்புக்களும் பதிவுகளும் பல திசைகளின் விரிய உதவிய தமிழ் பட்டியல், தமிழ்மணம், வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

Monday, August 01, 2005

இணையத்தில் தமிழ் படித்தல்

தமிழை பள்ளியில் முழுமையாக கற்க இயலாமல், தகுந்த ஆசான்கள் இல்லாமல் இருக்கும் தமிழ் மாணவர்களுக்கு இணையம் நல்ல ஆயுதம். தமிழ் மொழி என்ற கடலில் நீந்த கற்று கொள்வது என்பது தெளிவான எதிர்பார்ப்புகளுடன் ஒழுங்கமைத்து செயற்பட்டால் நிச்சியம் முடியும். பின்வரும் இணைய தளங்கள் தமிழ் கற்பதற்க்கு உதவும்.


தமிழ் சூழலில் தமிழ் கற்றல்
ஓளி கோப்புக்களை அல்லது தொலைக்காட்ச்சி பதிவுகளை பிரதானமாக உபயோகித்து தமிழ் சூழலில் தமிழ் கற்பதற்க்கு உதவும் ஒரு அரிய தளம்.

இணைய உதவியுடன் தமிழ் படிப்பித்தல்
இணையத்தை பாவித்து ஆசிரியர் உதவியுடன் தமிழில் பேசவும், எழுதவும் கற்றுக்கொள்ள உதவும் பென்சல்வேனிய பல்கலைக்கழ்கத்தின் தளம். தொடக்க நிலையில் இருந்து படிப்படியாக உயர்நிலை நோக்கி பயிற்சிகள் உள்ளன. ஒலி கோப்புக்கள், யாவா நுட்பம் கொண்டு செய்யப்பட்ட பயிற்ச்சிகள், படிநிலை தேர்வுகள் என்பன சிறப்ம்சங்கள்.

"தமிழ் பாடநூல்"
ஆங்கிலம் மூலம் படிபடியாக தமிழ் கற்பதற்க்கு 38 பகுதிகளை கொண்ட "தமிழ் பாட நூல்".

"ஆங்கிலம் மூலம் தமிழ் படித்தல்"
செந்தில் குமார் சேரன் அமெரிக்காவில் ஆங்கில சூழலில் வளர்ந்து பின் தன் சுய முயற்ச்சியால் தமிழ் கற்றவர். அவரது அனுபவங்கள் பலருக்கு உந்துதலாக வழிகாட்டலாக அமையும். பயிற்ச்சிகள், கதைகள், பாட்டுக்கள், உரையாடல்கள், பொது சொற்கள் என பல மூலங்களை தந்து பாவித்து தமிழ் படிக்க இத்தளம் உதவுகுகின்றது.

"தமிழ் கற்போம்"
பொள்ளாச்சி நசன் அவர்களின் கல்வி ஆராச்சி அனுபவங்கள் இணைய நுட்பங்களை ஒருங்கே இணைத்து உருவாக்கப்பட்டுவரும் படி நிலை தமிழ் பாடங்கள்.

தமிழில பேசலாம் வாங்க
இணையத்தில் பல ஒலி பதிவுகளை உபயோகித்து, வேகமாக தமிழை பேச உதவ முயலும் தளம். உச்சரிப்பில் அழகான ங்க இருக்கின்றது.

தமிழ் இணைய பல்கலைகழகம்
உலக தமிழர்களுக்கு தமிழ் கல்வி பயில உதவும் முறையில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட தளம். உத்யோக பூர்வமான, பட்ட படிப்புக்கான சேவைகளை தருகின்ற தளம்.

உங்களுக்கும் வேறு தளங்கள் தெரிந்தால் பட்டியலில் இனையுங்களே.