<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, April 13, 2012

குடிவரவாளர் அனுபவங்கள் 2 - கடன் பெற்ற வாழ்க்கை

கனடாவிற்கு வந்து எதாவது ஒரு வேலை பெற்றுவிட்டால் பலரும் அடித்து முந்திக் கொண்டு கடன் தருவார்கள். பேரங்காடிகள், வங்கிகள், விசா போன்ற கடன் அட்டை நிறுவனங்கள், கார் கம்பனிகள் என்று எல்லோரும் தருவார்கள். பலர் தவணை முறையில் பொருட்களை வாங்க விடுவார்கள். குறிப்பாக புதிதாக வந்தவர்கள் தளபாடங்கள், கருவிகள் வாங்க வேண்டும். எனவே கடனுக்கும், தவணை முறையிலும் சோபா, டைனிங் செட், பெட்ரூம் செட், ரிவி, மைக்ரோவே அவண் எண்டு எல்லாப் பொருட்களை வாங்கி வேகமாகச் சேர்த்துடுவம்.

அவைக்கு தவணை முறையில கட்டலாம். ஆகக் குறைஞ்ச கட்டணம் (மினிமம் பேய்மண்) செலுத்தலாம். வாடகை, தொலைபேசி என்ற எல்லாத்தையும் சேர்த்துப் பாக்கையில இவைக்கு ஆகக் குறைஞ்ச அளவில்தான் கட்டலாம். பொதுவா சாமான்கள் வாங்கிறதுக்கு வட்டி வீதம் 28%, கடன் அட்டைக்கு 19%, அதிலையும் நீங்கள் ஒன்று இரண்டு தடவை பிந்தினால் இன்னும் பல விழுக்காடுகள் உயர்ந்துவிடும். ஆகக் குறைஞ்ச அளவில் அதிக கூடிய வட்டியில் எங்களை கடன் சிறையில் இவை தள்ளி விடும். இந்தக் கடனை அடைக்க வாழ்வின் ஒரு பெரும் பகுதி போய் விடும்.

இதுக்கு அடுத்த கட்டமாக எழும் ஆசைதான் கார், வீடு. மேலே சொன்ன அதே தோரணம் தான் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. ஆற்றலுக்கு மீறிய வீடு, ஆடம்பரக் கார் என்று வாழ்க்கை கடனுக்குக் கொள்முதல் செய்வதிலும் கடனை அடைக்க முயற்சிப்பதில் உதைபட்டு நகர்கிறது.

தேவைகளையும் ஆசைகளையும் வேறுபடுத்திக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்வில் எது முக்கியமானது என்பதை வரையறை செய்து கொள்ள வேண்டும். நிதி அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும். நிதித் திட்டமிடல் செய்ய வேண்டும். வரவு செலவுத் திட்டமிடல் செய்ய வேண்டும். சேமிப்பது என்பது ஒரு பயிற்சி, ஒழுக்கம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு சதமும் எங்கு செல்கிறது என்று கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். கடுமையான பாடங்கள். எம்மில் பலர் மிக மெதுவாகவே படிக்கிறோம்.

Labels:

குடிவரவாளர் அனுபவங்கள் 1 - மோக உணவு

கனடாவிற்கு இலங்கை, இந்தியா போன்ற வசதிகள் குன்றிய நாடுகளில் இருந்து குடிவந்தவர்களுக்கு இங்கு உடனடியாகத் கிட்டும் ஒரு வசதி உணவு ஆகும். குறிப்பாக ஊட்டச்சத்துக்கு குன்றிய உணவுகள். அங்கே கொக்கக்கோலா, ஐசுகீரீம், சிப்சு, சொக்கிலட், பிசுக்கோத்துப் போன்ற பண்டங்கள் விலை உயர்ந்தவை. யாராவது வீட்டுக்கு வந்தால், எதாவது விசேடம் என்றால் அந்த மாதிரி உணவுகளை உண்போம். இளநீர் எவ்வளவுதான் சுவையாக இருந்தாலும் அங்கு ஒரு பான்ரா குடிப்பது மோகமாக இருந்தது. இங்கே அவை ஒப்பீட்டளவில் மலிந்த விலையில் தொகையாக கிடைக்கும். எனவே புதிதாத வந்தவர்கள் ஆசையாக இவற்றை நிறைய வாங்கி உண்ணுவோம்.

அடுத்தது இங்க இருக்கிற வேக உணவகங்களில அதிகமாக சென்று உண்போம். மக்டோனல்சு, கெ.எப்.சி, பேர்கர் கிங் போன்ற வேக உணவகங்களில் விலை மலிவு. வந்த புதுசில் உணவுகளும் புதுமையாக இருக்கும். எனவே இவற்றையும் நிறைய வாங்கி உண்ணுவோம். ஊரிலை கொக்குத் தடி மாரி இருந்தவை, இஞ்ச வந்து கோயில் கொடிக் கம்ப அடி மாதிரி ஊதுறத்துகு இந்த வழக்கங்கள் ஒரு முக்கிய காரணம்.

இஞ்ச வந்து எங்கட உணவுப் பழக்கங்களிலையும் நிறைய மாற்றாங்கள் ஏற்பட்டு விட்டன. அவித்து சமைத்த உணவு வகைகள் பல பொரித்து சமைத்த உணவுகளாக ஆகிவிட்டன. சோறு பிறைட் ரைசு ஆகி விட்டது. இடியப்பம் இடியப்ப மிக்சு ஆகி விட்டது. மீன், மரக்கறிகள் குறைந்து இறைச்சிப் பயன்பாடு மிகவும் அதிகரித்ததுள்ளது.

சுருக்கமாக, ஊட்டச்சத்தைப் பற்றி கவனம் இல்லாமல், விழிப்புணர்வு இல்லாமல் ஆசை மோகத்தில் எமது உடல்களைக் கெடுத்துக் கொள்கிறோம். உணவு, ஊட்டச்சத்து, சமைத்தல், தோட்டக்கலை பற்றிய அறிவுகளை வளர்த்துக் கொள்வது அனைவருக்கும் முக்கியமானது ஆகும்.

Labels:

Tuesday, April 10, 2012

யாழ் நூலகம் கழிவறையாக மாற்றப்படுகிறதா?

வடக்கு மாகாணத்தின் ஆளுனர் போர் குற்றம் சாட்டப்பட்ட மேயர் யென்ரல் சன்டறசிறீ யாழ் நூலகத்தின் கணினிப் பிரிவை அகற்றி விட்டு அதற்குப் பதிலாக நவீன கழிவறைகளைக் கட்டுவதற்கான திட்டத்தை செயற்படுத்தவுள்ளார். யாழ் நூலக வருகையாளர்களுக்கு, குறிப்பாக தெற்கில் இருந்து வருபவர்களுக்கு வசதியாக இந்த கழிவறைகள் கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. வெளிநாடுகளின் உதவியுடன் அமைக்கப்பட்ட இந்தக் கணினிப் பிரிவை மீள் குடியமர்த்துவதற்கு திட்டம் ஏதும் இல்லை. இது ஒரு பழிவாங்கள் நடவடைக்கையாகவும், தமிழரின் அறிவு வளங்களை சிதைக்கும் நடவடிக்கையாகவும் பரலாலும் பார்க்கப்படுகிறது. யாழ் நூலகம் யாழ் மாநகரசபை பெயருக்குப் பராமரிக்கிறது.

Labels: