திராவிடக் கட்சிகளிடம் கொள்கை வறட்சி, தளர்ச்சி, விற்பனை முற்று முழுதாகிவிட்டது. இவர்களிடம் சமூக நீதி, பகுத்தறிவு, தமிழ் அடையாளம், பெண்கள் உரிமைகள், தன்னாட்சி போன்ற கொள்கைகள் நீத்துவிட்டன. அறம் தவறி, தலைவர் தொழுகையிலும், குடும்ப அரசியலும், பச்சை ஊழலிலும் திராவிடக் கட்சிகள் நாறுகின்றன.
திராவிடக் கட்சிகளும் சரி, இடதுசாரி, தமிழ்த் தேசிய அமைப்புகளானாலும் சரி குறுகிய சில விடயங்கள் தவிர பல முக்கிய களங்களைப் பற்றி எதுவும் உரையாடுவதில்லை. அப்படிச் சிந்திக்கிறார்களா என்று கூடச் சந்தேகம். தமிழ்ச் சூழலில் இருக்கும் இடதுசாரிகள் தமது இயக்கத்தில் இருக்கும் பிரிவுகளைக் கூட அறிந்திரார். அரச முதன்மை மும்மூர்த்திகள் (மார்க்சு, லெனன்/இசுராலின், மாவோ), வர்க்கப் போராட்டம், புரட்சி, தொழிலாளர் சர்வதிகாரம் ஆகியனவே இவர்களின் தாரக மந்திரம். தமிழ்த் தேசியவாத அமைப்புகள் பொருளியல், சூழலியல், அரசின் தன்மை, பன்மைத்துவம் என்று எதிவும் பற்றி விரிவாகப் பேசுவதில்லை. உசுப்பும் குறும் தேசியம் தவிர்த்து மேலெழுந்து சிந்திக்க முடியதாவர்களாகவே உள்ளன.
இவர்களுக்கு எல்லாம் மாற்றாய் ஒரு சிறு மாற்றம் அண்மையில் உருவாகி உள்ளது. டில்லியில் தொடங்கிய அந்த மாற்றம் இப்பொழுது தமிழ்நாட்டுக்கும் வந்துள்ளது. அதுதான் ஆம் ஆத்மி கட்சி. தமிழ்நாட்டில் அணு உலைக்கு எதிராக மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்தை முன்னெடுத்த சு. ப. உதயகுமார் தலைமையில் எளிய மக்கள் கட்சியாக உருவாகி உள்ளது.
ஆனால் அண்மையில் சுருக்கமாக ஒரு கொள்கை அறிக்கையை அவர்கள் "எளிய மக்கள் கட்சி (எ.ம.க.)...எமக்கான கொள்கை" என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார்கள். இது ஒரு விரிவான கொள்கை அறிக்கை இல்லை. எனினும், இவர்கள் இதில் முன்வைக்கும் எண்ணங்கள், அண்மையில் தமிழ் அரசியலில் அலசப்படும் விடயங்களை விட கனதியானது.
தமிழ்நிலம் தமிழ்நிலம் என்று கத்துவோர்கள் அதன் சூழலைப் பற்றி அவ்வளவு யோசிப்பதில்லை. சூழலியல் அறிவு...சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவர்களின் ஒரு முக்கிய கொள்கையாக அமைகிறது. அரசின் தீமைகளைப் பற்றி விரிவாக அறிவோம். ஆனால் அதற்கான தீர்வுகளைப் பற்றி சிந்திப்பதில்லை. அதிகாரப் பரவல்...பங்கேற்பு மக்களாட்சி, மையப்படுத்தப்படாமை, கூட்டுறவு அமைப்புகள் போன்றவையை எ.ம.க முன்வைக்கிறது. மாற்றத்துக்கான வழிமுறையாக அறவழியை, மென்முறையை முன்னிறுத்துகிறது. சமூக நீதி, சம வாய்ப்பு, பெண்கள் விடுதலை, பன்மைத்துவம் போன்ற சமூக அசைவுக்கான, அமைதிக்கான, வளர்ச்சிக்கான வழிகளைக் கூறுகிறது.
அயல்நாட்டு முதலீடு, பெரும் நிறுவனங்கள், உலக வங்கிக் கடன் என்று முன்னெடுக்கப்படும் பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றாக, இயற்கை வேளாண்மை, மாற்று எரிசக்தி கொள்கை, சிறு நடுத்தரத் தொழில்கள், மாற்றுத் தொழில்நுட்பங்கள், பேண்தகு வளர்ச்சி என்று இன்னும் அதிகம் கவனம் பெறாத பொருளாதர முறைகளை எ.ம.க யின் கொள்கை எடுத்துரைக்கிறது.
"பசுமை மார்க்சியம், காந்தியம், தமிழ்த் தேசியம்" என்று தலைப்பு இட்டதன் மூலம், இதுவரை முரண்களைக் கொண்ட கொள்கைகளாகப் பார்க்கப்பட்ட கொள்கைகளை இணைத்துப் பார்க்கிறார்கள்.
எ.ம.க முன்வைக்கும் எண்ணங்கள், தீர்வுகள் பற்றி எல்லோரும் உடன்படப்போவதில்லை.. "பசுமை மார்க்சியம்" என்றால்தான் என்னை. ஒரு சலசலப்பு சொல்லாடலா. தமது முற்போக்கு இடதுசாரி சார்புநிலையை எடுத்துரைப்பதற்கான குறியீடா. அல்லது மார்சியத்தின் கடந்த நூற்றாண்டு போதாமைகளை, அதன் படுதோல்விகளை, சர்வதிகாரத் தன்மைகளை, அரச முதன்மை வாதத்தை புரிந்து, அதற்கான விடைகளைத் தேடி முன்மொழியப்படும் ஒரு கொள்கையா. தெரியவில்லை.
கல்வி, நலம், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் அவர்களின் நிலைப்பாடுதான் என்ன. இவற்றை அரசு வழங்க வேண்டுமா? எப்படி வழங்குவது, விரிவுபடுத்துவது. இது போன்ற பல விடயங்களை இந்தச் சுருக்கமான கொள்கை அறிவித்தல் தொடவில்லை.
ஒரு கல்வியாளர் சித்தித்து, யாதார்த்தை, தடைகளை, இடர்களை, பக்க விளைவுகளைச் சிந்திக்காமல், கற்பனையில் கக்கிய கொள்கைகள் போல் இவை இருந்தாலும், இவை பற்றி ஒரு குறைந்த பட்ச உரையாடல் நடைபெற்றால் கூட அது பல நல்ல விளைவுகளைத் தரும்.
மேற்கோளுக்கா, அவர்களின் கொள்கை அறிவித்தல் கீழே:
எளிய மக்கள் கட்சி (எ.ம.க.)...எமக்கான கொள்கை:
பசுமை மார்க்சியம், காந்தியம், தமிழ்த் தேசியம்
சூழலியல் அறிவு...சுற்றுச்சூழல் பாதுகாப்பு
அதிகாரப் பரவல்...பங்கேற்பு சனநாயகம்
சமூக நீதி...சம வாய்ப்பு
அறவழி...மென்முறை
மையப்படுத்தப்படாமை
பெண் விடுதலை
வேற்றுமை போற்றல்
தனிமனித, ஒட்டுமொத்த பொறுப்புணர்வு
வருங்காலச் சிந்தனை
கூட்டுறவு போற்றும் சமூகம் சார்ந்த மாற்றுப் பொருளியல்
இயற்கையை அழிக்காத வளங்குன்றா வளர்ச்சி முறை
மாசு படுத்தாத தொழில்-வேளாண் கொள்கை
சிறு நடுத்தரத் தொழில்கள்
இயற்கை வேளாண்மை
மாற்று எரிசக்தி கொள்கை
மாற்று தொழில்நுட்பங்கள்
நீடித்த நிலைத்த வளர்ச்சி
தேசிய இனச் சமூக மாற்றுக் கொள்கைகள்
மரபு சார்ந்த மக்கள் அமைப்புக்கள்
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி
உலகமயப் பொருளியலுக்கு எதிராக தேசியங்களின் பொருளியல்
உலகமயம் திணிக்கும் ஒற்றைத்தன்மைக்கு எதிராக தேசியங்களின் பன்மை
தமிழர் அறம் சார்ந்த அரசியல், வாழ்வியல்:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
பயன்பட்டக் கட்டுரையும், நூலும்:
[1] கி. வெங்கட்ராமன், “பசுமை மார்க்சியம், காந்தியம், தமிழ்த் தேசியம்,”
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், பொங்கல் மலர் 2014. பக். 12-23.
[2] S. P. Udayakumar, _Green Politics in India_. Nagercoil, India: Transcend South Asia, 2008. pp. 15-17.
https://www.facebook.com/eliyamakkalkatchi
Labels: சுற்றுச்சூழல், நேரடி மக்களாட்சி, பரவலாக்கல், பொருளியல், மாற்றுக்கள்