<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Monday, July 29, 2013

டிட்ராயிட்டின் (detroit) வீழ்ச்சியும் ஏழை கறுப்பின மக்களும்

ஐக்கிய அமெரிக்காவின் எந்திர நகரம் (Motor City) என்று அறியப்பட்ட பெரும் நகரங்களின் ஒன்றான டிட்ராயிட் (Detroit) அண்மையில் கடன் நொடிக்கு (bankruptcy) தள்ளப்பட்டுள்ளது.  இன்றுவரை, கடன் நொடிக்கு தள்ளப்பட்ட மிகப் பெரும் நகரம் இதுவே ஆகும். அமெரிக்காவின் முப்பெரும் தானுந்து நிறுவங்கள் (GM, Ford, Chrysler) இங்கேயே தலைமைபீடம் கொண்டுள்ளன.  நெடுங்காலமாக தானுந்துக்கள் உற்பத்தி பெருமளவு இங்கேயே நடைபெற்றது. ஆனால் இன்று 12 தொழிற்சாலைகளில் இருந்து வீழ்ந்து இரண்டு தொழிற்சாலைகள் மட்டுமே இங்கு உள்ளன.  1950 களில் இங்கு 296,000 உயர் சம்பளம் கொண்ட உற்பத்தி வேலைகள் இருந்தன, இன்று 27,000 வேலைகள் மட்டுமே உள்ளன. 

1960 களில் 1.6 மில்லியன் மக்கள் வாழ்ந்த டிட்ராயிட் நகரத்தில் இன்று 700,000 மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். இதில் 83% ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், 11% வெள்ளையர்கள், 6% பிறர்.  கடந்த சில பத்தாண்டுகளாக "வெள்ளையர் வெளியேற்றம்" (white flight) நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.  குறிப்பாக இவர்கள் புற நகரப் பகுதிகளுக்கு நகர்ந்துள்ளார்கள்.  டிட்ராயிட் வீழ்ச்சி பெறத் தொடங்கியதில் இருந்து வேலையின்மை கூடியுள்ளது, நகர சேவைகள் பல செயலிழந்து போயுள்ளன, குற்றச் செயல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.  டிட்ராயிட்டின் வீழ்ச்சியும் வெள்ளையர் வெளியேற்றம் ஒரே நேரம் நிகழ்ந்துள்ளது.  இதனை சுட்டிக் காட்டி பல தேர்ந்த ஆய்வாளர்கள் கூட டிட்ராயிட்டின் வீழ்ச்சி வெள்ளையர் வெளியேற்றத்தாலேயே நிகழ்ந்துள்ளது என்று வாதிட்டுள்ளார்கள்.

இவ் இரண்டு நிகழ்வுகளுக்கு இடையே ஒரு பலவீனமான ஒட்டுறவு (weak correlation) நிலை இருக்கலாம்.  ஆனால் வெள்ளையர் வெளியேற்றமே டிட்ராயிட்டின் வீழ்ச்சிக்கு காரணமாக (causes) அமைந்தது என்பதற்கு வலுவான சான்றுகளும் இல்லை.  டிட்ராயிட் பொருளாதாரத்தில் ஏற்ற முகத்தில் இருந்த போது வேலை வாய்ப்புக்கள் தேடி ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்கள் பெருந் தொகையில் டிட்ராயிட்டுக்கு வந்தார்கள்.  அவர்களும் வெள்ளை உழைக்கும் மக்களும் ஒரே வர்க்கமாக இருந்தாலும், அவர்கள் கடும் இனவாதத்தை எதிர்நோக்கினார்கள். வெள்ளையர்களின் மிகக் கோரமான ஒடுக்குமுறைகளும், அதற்கு எதிராக வலுவான எதிர்ப்புப் போராட்டங்களும் இந்த நகரத்தில் நடந்தன.  இந்த ஒடுக்குமுறைகளும் இனவாதக் கட்டமைப்புக்களும் கறுப்பின மக்களை தொடர்ந்து பெருமளவு பொருளாதார கல்வி அரசியல் நோக்கில் பாதித்து வந்தன.  இவர்களின் ஒரே இணக்கப் பாலமாக இருந்த தொழிற் சங்கங்களும் இவர்களை அரசியல் நோக்கில் இணைப்பதில் வெற்றி கொள்ளவில்லை. 

அமெரிக்க தானுந்து தொழிற்துறை தமது உற்பத்தியை மிகுந்து மலிவான உற்பத்தி வழிகளைத் தேடி மெக்சிக்கொ, இந்தியா, சீனா என்று தமது தொழிற்சாலைகளை நகர்த்தின.  இந்த நகர்வால் பெருமளவு உயர் ஊதியம் வழங்கும் தொழிகள் இல்லாமல் போயின.  இந்த வீழ்ச்சியை பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் இருந்த வெள்ளையின மக்களாலும், அப்பொதுதே சற்று மேலெழுந்து வந்த கறுப்பின நடுத்த மக்களாலும் எதிர்கொள்ள முடிந்தது.  அவர்கள் நகரத்தை விட்டு வெளியேறினார்கள்.  வேறு ஒரு வழியில் கூறுவதாயின் நடுத்தர வகுப்பினர் வெளியேறினார்கள். இந்த வகுப்பில் வெள்ளையினரே பெரும்பான்மையினராக இருந்தால் இதை வெள்ளையர் வெளியேற்றம் என்று சிலர் தவறாகக் கருதினர்.  வெள்ளையர்கள் தமது அரசியல் செல்வாகினால் புற நகர்ப் பகுதிகளுக்கு பல சேவைகளைப் பெற்றுக் கொள்ளத் தக்கதாக இருந்ததும் இந்த நகர்வை ஏதுவாக்கியது.

அடிமைத்தனத்தையும், ஒடுக்குமுறையும் எதிர்கொண்ட கறுப்பின மக்களிடம் பொருளாதார மூலங்கள் மிகச் சொற்பமாகவே இருந்தன. நிதி, கல்வி, அரசியல் செல்வாக்கு இவர்களிடம் பெருமளவில் இருக்கவில்லை.  ஆகவே பொருளாதார ஆற்றல் கொண்ட நடுத்தர மக்கள் வெளியேறிய போது பொருளாதார ஆற்றல் நலிந்த மக்களால் டிட்ராயிட்டை திருப்பி நிற்க வைக்க முடியவில்லை. 

டிட்ராயிட் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளின் இனவாதம், ஊழல், மடைமைத்தனம் நிறைந்த நிர்வாகம் ஒரு முக்கிய காரணம்.  தனியே தானுந்து தொழிற்துறையை மட்டும் நம்பி இருந்தது, அந்த துறை வீழ்ந்த போது வேகமாக மாற்றுக்களைக் கண்டடையாதது, இனங்களுக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாதது என்று பல நிர்வாகக் குறைபாடுகள் உண்டு.

இறுதியாக, டிட்ராயிட்டின் வீழ்ச்சிக்கு உலகமயமாதாலாலும், கம்பனிகள் அதிக இலாப தேடியதால் தானுந்து தொழிற்சாலைகளை இழந்தது, அதனால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, அரசியல்வாதிகளின் இனவாத, ஊழல்நிறைந்த, தொலைநோக்கற்ற, நிதிப் பொறுப்பாண்மையற்ற இடதுசாரி நிர்வாகம், இனவாத, இன ஒடுக்குமுறைச் சூழல் ஆகியன டிட்ராயிட்டை வீழ்த்தின.  இதனால் நடுத்தர மக்கள் வெளியேறினார்கள்.  அதில் பெரும்பான்மையினராக வெள்ளையினர் இருந்தனர். 

எந்த ஒரு நகரமும் ஊரும் பன்மைத்துவத்தைப் பேணுவது அதன் பொருளாதார நலனுக்கு நல்லதே. ஆகவே வெள்ளையினர் அல்லது மக்கள் பெருந்தொகையில் வெளியேறியது டிட்ரொயிட்டை கணிசமாகப் பாதித்து இருக்கும்.  ஆனால் இது சிலர் சிலர் சொல்லாமல் குறிப்பிடுவது போன்று வெள்ளையர்கள் நிர்வாக பொருளாதார அரசியல் மேன்மைத்துவத்தினால் அல்ல.  அவ்வாறான வாதங்கள் இனவாதமே.


 

Labels: , ,

Wednesday, July 24, 2013

திராவிடம் தமிழியம் 1 - பகுத்தறிவு

தொடக்கத்தில் திராவிடத்தின் அடிப்படைக் கொள்கையாக, முக்கிய கருவியாக பகுத்தறிவு இருந்தது.  மூடநம்பிக்கைகளை, சாதியத்தை, பெண் அடிமைத்தனத்தை, சமயத்தின் மூடத்தனத்தை அறுக்கப் பயன்படும் ஆயுதம் பகுத்தறிவு.  ஒரு கோட்பாட்டை தானே பரிசோதித்து, கோள்வி கேட்டு, விமர்சித்து, கூர்ப்படையப் பயன்படும் கருவி பகுத்தறிவு.  வெறுமே வேதம்/சமயம் என்றும், அதிகாரம் கூறியது என்றும் ஏற்றுக் கொள்ளாமல் எமது பகுத்தறிவின் ஊடாக நிரூபித்து கண்டறியும் அறிவியல் முறையே உண்மையை அறிய மனிதர்களுக்கு இதுவரை இருக்கும் சிறந்த வழி. 

தமிழ்ச் சூழலில் பகுத்தறிவை விதைத்தவர் பெரியார்தான்.  அவர் கூறுகிறார் "என்னுடைய அபிப்பிராயங்களையும் நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தான் அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன்.  ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் யாவரும் அடிமைகளே!...நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மையென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்." என்று. 

ஆனால் இன்றைய திராவிடக் கட்சிகள் பகுத்தறிவை கருவறையில் வைத்து வழிபாடு செய்கிறார்களே ஒளிய கொள்கையாகவோ, கருவியாகவோ பயன்படுத்தவில்லை.  பெரியாருக்கே மாலை போடுவது, பூசை செய்வது.  சாமியார்களின் கால்களில் போய் விழுவது.  கல்வியின்றி, நலமின்றி தவிக்கும் மக்களுக்கு இலவச தொலைக்காட்சிகளை வழங்குவது.  புள்ளிவிபர, ஆய்வடிப்படையில் கொள்கை அமைக்காமல் எக் கொள்கை பிரபலமானதோ அக் கொள்கையைக் கொள்வது.  குடும்ப அரசியலை செய்து குடும்பத்தை வளர்ப்பது, சமூகத்தை கொலை செய்வது.  இதுதான் இன்றைய திராவிடம்.  இதில் எங்கே பகுத்தறிவு இருக்கிறது.  பெரியார், அண்ணா ஆகியோரின் மறைவுக்கு பின்னரே நேர் எதிர்மாறான கொள்கைகளை அது ஏற்றுக் கொண்டுவிட்டது.

திராவிடம் போன்றே கலக்கத்திலும் எதிர்ப்பிலும் தமிழியம் தோன்றியது.  ஆனால் பகுத்தறிவு பற்றி தமிழியம் என்றும் விரிவாகப் பேசியது இல்லை.  தமிழியத்தின் தோற்றுவாயகக் கருதப்படும் தனித்தமிழ் இயக்கம், தமிழ்த் தேசியம் ஆகிய இரண்டும் உணர்ச்சி அடிப்படையில் மக்களைத் திரட்டும் இயக்கங்கள்.  இவை தொழில் உத்திகை அணுகுமுறையை (technocratic approach) மிகுந்து கையாண்டாலும், பகுத்தறிவு பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.  தமிழியம் என்றும் சமயத்தை, கடவுளை எதிர்க்க துணிந்தது இல்லை.  ஒரு வகையில் இவர்களின் அடித்தளம் ஐக்கிய அமெரிக்காவின் 6000 ஆண்டு உலகை நம்பும், படிவளர்ச்சியை எதிர்க்கும் சமய அடிப்படைவாதிகளை ஒத்தது.

ஆக, தமிழ்ச் சூழலில் இன்று செல்வாக்குப் பெற்று இருக்கும் இரண்டு கோட்பாடுகளுமே பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் தரவில்லை.  பகுத்தறிவை கருவாகக் கொள்ளாத எந்தக் கோட்பாடுமே தொலைநோக்கில் நிலைத்து நிற்க வாய்ப்பு இல்லை.

Labels: , ,