<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, March 23, 2012

தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் 4 - காட்டூன், ராப், காமிக்சு

காட்டூன், ராப், காமிக்சு போன்றவை மாணவர்களின் நேரத்தை வீணடிக்கும் பொழுது போக்குகளாகவே கருதப்படுகின்றன. ஈழத்தில் பாடசாலையில் காமிக்சு (வரைகதை, சித்திரக்கதை) இதழ்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலேயே பறிமுதல் செய்யப்பட்டு, கிளிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும். ஆனால் மாணவர்களுக்கு இடையே வரைகதை வாசிப்பு, பண்டமாற்று, கருத்துப் பரிமாற்றம் விரிவாக நடைபெற்றது.

சிறுவர்களுக்கு இயல்பாக காட்டூன் (அசைபடம், இயங்குபடம்) பார்க்கப் பிடிக்கும். தற்போது போதியளவு இயங்குபடங்கள் தமிழில் உள்ளன. ஓரளவு மொழி அறிந்த, அறியாத பிள்ளைகள் கூட இயங்குபடங்களைப் போட்டவுடன் அமைதியாக இருந்து பார்ப்பார்கள்.

மேற்கில் தற்போது இளையோரிடையே மிகவும் வரவேற்புப் பெற்ற இசைவடிவம் ராப் ஆகும். ராப் இசையின் ஒரு பகுதியில் வன்முறை, வக்கிரகம் நிறைந்துள்ளது என்ற விமர்சனம் ஏற்புடையதே. ஆனால் அவற்றை விட மேலாக நல்ல கருத்துக்களைக் கூறும், திறங்களை வளர்க்கும் ராப் இசையும் உள்ளது. தமிழ் இசை மலேசியா, ஐரொப்பா போன்று புலபெயர்ந்தவர்கள் இடையே வளர்ச்சி பெற்ற ஒரு துறை ஆகும். தமிழில் இவ்வளவுக்கு ராப் இசை இருக்கு என்பதை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம். இசையோடு மொழியை ஊக்குவிக்கலாம்.

புகலிட நாடுகளில் பெற்றோர்கள் பார்ப்பதால் பிள்ளைகளும் தமிழ்த் திரைப்படங்களையும் தொலைக்காட்சிகளையும் பார்க்கிறார்கள். இவற்றையும் முறையாக தமிழ் கற்பித்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thursday, March 22, 2012

தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் 3 - மொழி விளையாட்டுக்கள்

அனைவரும் விரும்பும் மொழி விளையாட்டுக்கள் மொழியை கற்பிக்கப் பயன்படும் ஒரு நல்ல வழிமுறை ஆகும். ஈழத்திலும் இலங்கையிலும் குழந்தைகள், சிறுவர்கள் பல மொழி விளையாட்டுக்களை விளையாடுவர். அத்தளி புத்தளி, கிள்ளாப் பறண்டி, நான் வளர்த்த நாய்க்குட்டி, தட்டலங்காய் புட்டலங்காய், தொடர்வினா, விடுகதைகள் போன்ற நூற்றுக் கணக்கான தமிழ் மொழி விளையாட்டுக்கள் உண்டு.

புகலிட நாடுகளில் இந்த மொழி விளையாட்டுக்களை சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். இங்கு தமிழ் தொலைக்காட்சிகளில் வானொலிகளில் நடத்தப்படும் விளையாட்டுக்களையும் விளையாடலாம். இங்கு வானொலிகளில் பல காலமாக ஓம் என்று சொல்லக் கூடாது, இல்லை என்று சொல்லக்கூடாது, ஒரு சொல்லை மூன்று முறை சொல்லக் கூடாது, ஆங்கிலத்தில் பேசக்கூடாது என்ற விதிகளைக் கொண்ட ஒரு விளையாட்டு வளர்ந்தவர்களிடம் பிரபலமானது. இதை சிறுவர்களிடம் அறிமுகப்படுத்தலாம். விசய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் போட்டி விளையாட்டை சிறுவர்களுக்கு இடையே நடத்தலம். இணைச் சொற்களைக் கண்டுபிடித்தல் சிறுவர்களை ஈர்க்கும் இன்னொமொரு விளையாட்டு ஆகும். தமிழுக்கு இணையான ஆங்கிலச் சொல்லை, அல்லது ஆங்கிலத்துக்கு இணையான தமிழ்ச் சொல்லை கேட்டு புள்ளிகள் குடுப்பதே இணைச் சொல் கண்டுபிடித்தல் விளையாட்டு ஆகும். இதைப் போட்டியாக நடத்தும் போது சிறுவர்கள் தமக்கு அறிந்த சொற்களை உறுதிசொய்து கொள்வதற்கும், புதிய சொற்களை அறிந்து கொள்வதற்கும் இந்த விளையாட்டு உதவும்.

இலக்கணம், இலக்கியம் என்ற இறுக்கத்தில் இருந்து பிள்ளைகளை விடிவித்து, அவர்களுக்குப் பிடிக்கும் வகையில் மொழியைச் சொல்லிக் குடுக்க மொழி விளையாட்டுக்கள் உதவுகின்றன. பிற பல பாடங்கள் போல் இல்லாமல், மொழி மிக இயல்பான முறையில் சொல்லித் தரக்கூடிய ஒரு பாடம் ஆகும். தமிழ் ஆசிரியர்கள் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாமே.

Labels:

Sunday, March 11, 2012

தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் 2 - பல்லூடகங்கள்

இப்போதும் இராமயண கதையின் பாகங்களை வாசிக்கச் சொல்லி, கேள்விக்கு பதில் எழுதச் சொல்வதே தமிழ் கற்ப்பிப்பவர்களின் மூல உக்தியாக இருக்கிறது. பத்தி வாசித்து கேள்விக்கு பதில் எழுதுவதற்கு ஒரு இடம் இருக்கு இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் மொழிக் கல்விக்கு அதைத் தவிர வேறு பல வழிகள் உள்ளன.

தமிழ்மொழிக் கல்வியின் ஒரு முக்கிய நோக்கம் ஒருவர் தமிழ் மொழி ஊடாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் ஆற்றலை உருவாக்குதல் ஆகும். இதற்கு மாணவர்களை ஈர்க்கும் ஒரு வழியாக பல்லூடகங்கள் அமைகின்றன.

ஒரு நிகழ்படத்தை, குறும்படத்தை, ஆவணப்படுத்தை உருவாக்கும் பயிற்சி ஒன்றை வழங்கலாமே. அதைப் பின்னர் யுடீப் போன்ற தளங்களில் உலகத் தமிழ் மொழி மாணவர்களோடும் பிறரோடும் பகிரலாமே. அத்தகையைப் பகிர்வில் கிட்டும் மறுமொழிகள் மாணவர்களுக்கு ஊக்கமாக அமையும் அல்லவா. பிற தமிழ் கற்கும் மாணவர்களோடு ஒரு உறவுப் பாலமாக இவை அமையும் அல்லவா. ஒரு வலைப்பதிவை, அல்லது ஒரு சமூக வலைப்பின்னலில் ஒரு குழுவைத் தொடங்கலாமே. வானொலி நிகழ்சியைத் தயாரிக்கலாம். ஒரு பாட்டு நிகழ்படத்தை உருவாக்க கேக்கலாம். ஒரு அசைபடத்தை தமிழில் உருவாக்கக் கேக்கலாம். ஊடகங்களை மீள்கலப்புச் செய்ய கோரலாம். விளம்பரங்கள் தயாரிக்கலாம். முதியோர்களை நேர்காணலாம். அந்த அந்த நாட்டு தமிழ் ஊடகங்களை பயிற்சியில் பயன்படுத்தலாம்.

ஊடகவியல், பல்லூடகங்கள் எந்த ஒரு மொழிக் கல்வியிலும் ஒரு முக்கிய பங்காற்ற வல்லவை, பல்லூடகப் பயிற்சியால் மாணவர்களுக்கு மொழிப் பயிற்சி மட்டும் அல்ல, ஊடகவியல் பயிற்சியும் கிடைக்கிறது. இதை ஏன் தமிழ் மொழிக் கல்வியின் ஒர் அங்கமாக ஆக்கக் கூடாது.

Labels:

தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் 1 - தட்டச்சு

ஆறாம் திணையாகத் கணினித் தமிழை, இணையத் தமிழை நாம் கொண்டாலும், தமிழ் மொழிப் பாடத்திட்டத்தில் தமிழ்க் கணிமைக்கோ, அதற்கு அடிபடையான தட்டச்சுகோ இடம் இன்னும் அறவே இல்லை. குறிப்பாக புகலிட நாட்டு தமிழ் வகுப்புகளில் அனைத்து வசதிகள் இருந்தும், மாணவர்களின் முக்கிய விருப்பு வேண்டுகோளாக இது இருந்தும் கூட தட்டச்சை தமிழ் மொழிப் பாடத்தின் ஓரு முக்கிய அங்கமாக தமிழ் மொழிக் கல்வியாளர்கள் கொள்ள இல்லை.

தமிழ் தட்டச்சுத் தெரிந்தால் தமிழ் இணையம் என்ற ஒரு பெரும் உலகை மாணவர்களுக்கு திறந்த வைக்கலம். இணையத்தில் தமிழ் வளங்களை அவர்கள் கண்டடைந்து பயன்படுத்துவதற்கு முதற்படியாக தட்டச்சு இருக்கும். வலைப்பதிவு, விக்கி, சமூக வலைப்பின்னல்களில் தமிழைப் பயன்படுத்தி, இயல்பாக தமிழ் கற்க வழிசெய்யலாம்.

ஏன் இவர்கள் தட்டச்சை ஒரு முக்கிய அங்கமாக கொள்ளவில்லை. பெரும்பான்மைத் தமிழ் ஆசிரியர்கள், கல்வியாளர்களுக்கே தமிழ் தட்டசுத் தெரியாதது ஒரு முக்கிய காரணம். தெரியாத ஒன்றை எப்படிச் சொல்லிக் குடுப்பது.

இன்னுமொரு காரணம் எந்த முறையைச் சொல்லிக் குடுப்பது. ஆங்கிலேய புகலிட நாடுகளில் எழுத்துப்பெயர்ப்பு அல்லது தமிங்கல முறையே தமிழ் தட்டச்சுக்கு எளிதானது என்பது அனைவரும் ஏற்றுக் கொண்டது. அதைப் பயிற்று விக்கலாம். இப்போது தானே அதற்கான வசதிகள் மிக இலகுவாக ஆக்கப்பட்டு விட்டன.

தமிழ் எழுத்துக்கள் கற்றுக் கொடுத்த உடனேயே தமிழ் தட்டச்சையும் சொல்லிக் குடுக்கலாம். எழுத சிக்கல்படும் மாணவர்கள் தட்டச்சை எளிதாக கற்றுக் கொள்ளக் கூடும். தமிழ் மொழிக் கல்வியின் நோக்கம் தமிழை இன்றைய பயன்பாட்டுக்கு ஏற்ப திறனாக சொல்லிக் குடுப்பது என்றால் தட்டச்சு உடனடியாக அனைத்து தமிழ் மொழிக் கல்வி பாடத் திட்டங்களிலும் முதன்மையாக இடம்பெற வேண்டும்.

கனடாவில் இதற்கான மாணவர்களின் விருப்பத்தை learntamil.com மருத்துவர் செந்தில் அவர்கள் புள்ளிவிபரங்களோடு கண்டடைந்து, இங்குள்ள கல்வியாளர்களுக்கு எடுத்துச் சொல்ல மிகவும் பாடுபடுகிறார். இவ்வாறு பல புதிய எண்ணக்கருக்கள் அவரிடம் உள்ளன. யாரும் கேப்பார்களா அல்லது தமிழ் மொழிக் கல்வியை தோண்டிப் புதைப்பார்களா, தெரியவிலை.


இவற்றையும் பார்க்க

இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல் (பாகம் 1)

Labels: