<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Sunday, October 16, 2011

அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 4 - நிதித்துறை, நிதிமயமாக்கம், சூதாட்டம்

முதலாளித்துவத்துக்கும் சந்தைப் பொருளாதாரத்துக்கும் அடிப்படையான ஒரு முறைமை வங்கிகளும் நிதித்துறையும் ஆகும். பண்டமாற்ற்றில் இருந்து பணத்துக்கு மாறியதே நிதிமயமாக்கத்தின் முதல் கட்டம் எனலாம். பணமும், வங்கிகளும் பணத்தின் ஊடான பண்டமாற்றை, பொருட் பாதுகாப்பை, முதலீட்டை ஏதுவாக்கின. பாதுகாப்புக்காக/காப்புறுதிக்காக, பண்டமாற்று வசதிக்காக மக்கள்/வணிகங்கள் வங்கிகளிடம் பணத்தைக் கொண்டு இருப்புச் செய்கிறார்கள். இருப்புச் செய்த எல்லோரும் ஒரே சமயத்தில் தமது பணத்தை கேக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வங்கிகள் உற்பத்தியாளர்களுக்கு, புத்தாக்கர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுக்கிறார்கள். இந்த வட்டியே வங்கிகள் பெறும் வருமானத்தில் ஒரு முக்கிய பகுதி.

நவீன சமூகத்துக்கு வணிகத்துக்கு வங்கிகளும் நிதித்துறையும் அடிப்படையானது. ஆனால் சில வங்கிகளும் வணிகங்களும் இந்த முறைமையை தமக்கு பெரும் இலாபம் ஈட்டுவதற்கு வகையான முறையில் அமைத்துக் கொண்டனர்.

நிதிமயமாக்கத்தின் ஒரு ஆபத்தான பகுதி இருப்பை மிகையாக நெம்பவைத்தல் (overleverage) ஆகும். 1000 ரூபாய் முதல் வைத்திருக்கும் ஒரு வங்கியில் 10000 ரூபாய்களை 100 பேர் இருப்பு வைத்தால், அந்த நூறு பேரில் பத்துப் பேர் 1000 வரை ஒரே நேரத்தில் கேக்கலாம் என்று எதிர் பார்த்து, மிகுதி 9000 யை கடனாகக் கொடுக்கலாம். வங்கிகள் 9000 என்பதை விட அதைவிட பல 5-10 மடங்கு வரை இருப்பை முதலாக நெம்பு வைத்து பணத்தை கடன் கொடுக்கும். இவ்வாறு நெம்புவைத்து பெரும் இலாபம் ஈட்டு நோக்கில் இந்த வங்கிகள் மிக மோசமான கடன்களையும் வழிப்பொருட்களையும் (derivatives) வழங்கின அல்லது வாங்கின. பொருளாதாரம் சரிந்த போது இந்த வங்கிகள் கடன்களை திருப்ப முடியாத நிலைக்குப் போகின. இதனால் இருப்பு வைத்தவர்களின் நிலையும் சிக்கலானது. இவ்வாறு இருப்பு வைத்த பொது மக்களும், கடன்களை முதலீடாக தேவைப்படும் வணிகங்களும் பணம் பெற முடியாமல் போன போது ஐக்கிய அமெரிக்க அரசு அத்தகைய சில வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் பிணை எடுத்தல் அவசியமானது. 2008 இருந்து இப்போது தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு வங்கிகள் மிகையாக நெம்புவைத்தது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சந்தையில் ஒரு முக்கிய சேவையைச் செய்கின்றன, எனினும் ஒரு பொருளாதாரத்தின் அடிப்படை உற்பத்தி ஆகும். ஆனால் ஐக்கிய அமெரிக்காவிலும் உலகென்கும் இந்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இலாபம் ஈட்டும் முதன்மை வழிகளாக மாறிவிட்டன. நிதி நிறுவனங்கள் பல்வேறு நிதிக் கருவிகளை உற்பத்தி செய்துள்ளன. கடன், வட்டி, பங்கு மட்டுமல்ல futures, options, swaps, Asset-backed security என்று பல வகைக் கருவிகள். 1970 களில் ஐ.அ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொ.உ.உ)13.1% வீதமாக இருந்த பங்குச் சந்தை 2000 களில் 140% மேல் ஆனது.

அடிப்படையில் அமெரிக்க முதலாளித்துவம் ஒரு சூதாட்டம் ஆக மாறிவிட்டது என்பது விமர்சகர்களின் கருத்து. அரசை அவர்கள் கட்டுப்படுத்துவதன் மூலம் அரசும் அதற்கு உடந்தையாக அமைந்துவிட்டது என்கிறார்கள்.

Labels:

Saturday, October 15, 2011

அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 3 - அரச உதவியில் நகரும் அரைவாசி அமெரிக்கர்களின் வாழ்கை

தற்சார்பை, தனே செய்வதை, தனே தன்னை உருவாக்கிக் கொள்வதைப் வேறு எந்த நாட்டவர்களையும் விட அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். ஆனால் அண்மைக் காலமாக நிசம் வேறு ஒரு தரவை முன்வைக்கிறது. 2011 இல் ஏறக்குறைய 48.5% அமெரிக்கர்கள் அரச நல உதவி பெற்று வாழ்வை நகர்த்துகிறார்கள். இது எல்லோரும் பயன்படுத்தும் வீதி, பாதுகாப்பு, பூங்கா போன்ற சேவைகள் அல்ல. மாற்றாக வசதி குறைந்தவர்களுக்கான உதவிகள் ஆகும். அதாவது தொழில் இல்லாமைக்கான பண உதவி, உணவு உதவி, வீட்டு உதவி, மருத்துவ உதவி போன்ற உதவிகளை 48.5% ஆனோர் பெறுகிறார்கள். ஒரு விதத்தில் முதலாளித்துவத்தின் மூர்க்கத்தை பெரும்பான்மை மக்கள் உணர்வதைத் தடுக்க இந்த உதவிகள் இன்றியமையாமல் அமையலாம். ஆனால் அமெரிக்கா போதிக்கும் முதலாளித்துவ கொள்கைக்கும் அவர்களின் நிசத்துக்கும் இங்கு ஓரு பெரும் இடைவெளி இருக்கிறது.

தமிழ்நாட்டில் இலவசமாக தொலைக்காட்சி வழங்குவது வாக்குக்களைப் பெறுவதற்கான விசமத்தனமாகத் தெரியலாம், ஆனால் கணினிகளை வழங்குவதோ அல்லது பள்ளிக்கூடத்தில் ஒரு வேளை உணவு வழங்குவதே அப்படியல்ல. ஏழைகளைப் பொறுத்தவரை வாழ்வை நகர்த முன்னேற்றா அவர்களுக்குத் தேவையான ஒரு உதவி. அமெரிக்காவை விட முதலாளித்துவ நாடு இந்தியாதான். ஏன் என்றால் அமெரிக்காவில் இருப்பதைப் போல ஒரு சிறு பங்குகூட அரச உதவிகள் அங்கு இல்லை.

Labels:

அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 2 - தொழில் வெளியேற்றம்

ஐக்கிய அமெரிக்காவில் இடதுசாரிகள் என்றாலும் வலதுசாரிகள் என்றாலும் இப்பொழுது எழுப்பும் கோசம் அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கு என்பதாகும். முன்னர் எந்தவித உயர் கல்வியும் இல்லாமல் கார், கணினி அல்லது பிற இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொகுப்புவரிசையில் வேலை செய்யும் ஒருவரால் நடுத்தர வர்க்க வாழ்கைத் தரத்தை அடைய முடியும். ஆனால் அந்தத் தொழில்களில் பெரும்பாலனவை சீனாவிற்கும், கிழக்காசியாவிற்கும், இந்தியாவிற்கும் போய் விட்டன.

உலகின் தொழிற்சாலையாக இருந்த ஐக்கிய அமெரிக்கா இன்று உலகின் சந்தைப்படுத்தல் கடையாக மாறி உள்ளது. இப்போதும் அங்கேயே அதிக புத்தாக்கம் நிகழ்கிறது. வடிவமைப்புக்கள் அங்கேயே நடக்கிறது. ஆனால் அதற்குத் தேவையான பணியாளர்கள் அமெரிக்க பணியார்களின் ஒரு சிறு பகுதி மட்டுமே. அந்தப் பணிகளையும் இப்போது சீனாவும், இந்தியாவும் கைவைக்கத் தொடங்கி விட்டன.

உலகமயமாதல் என்பது முதல் மட்டையும் அல்லாமல் தொழில்களையும், தொற்சாலைகளையும் அதிக இலாபம் நோக்கி நகர்த்தி விடுகிறது. இப்போது இது ஐக்கிய அமெரிக்க முதலாளித்துவ கொள்கையில் இது ஒரு பெரும் உடைப்பாக பெருக்கெடுக்கிறது. ஒரு புறத்தில் ஐக்கிய அமெரிக்க பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தொழில்களை வெளியே நகர்த்தி பெரும் இலாபம் ஈட்டுகின்றன. மறுபுறத்தில் ஐக்கிய அமெரிக்க நடுத்தர வர்க்கம் இல்லாமல் போகிறது.

தொழில்கள் வெளியேறாத படி குறைந்த வரியும், தகுந்த வணிகச் சூழல்களையும் உருவாக்க வேண்டும் என்று சில தேனீர் கட்சியினர் கூறினாலும், இரு கட்சிகளும் தொழில் வெளியேற்றத்தை எதிர்க்கின்றன. அமெரிக்கா போதிக்கும் திறந்த சந்தை இதுவல்ல. திறந்த சந்தையில் பிறர் சற்று போட்டி போடத் தொடங்கியவுடன் அவர்கள் விதிகளை மாற்றப் பார்க்கிறார்கள்.

Labels:

அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 1 - வேளாண்மை மானியங்கள்

ஐக்கிய அமெரிக்கா சுமார் 180 பில்லியன் வரையான டொலர்களை தனது விவசாயிகளுக்கும், வணிக வேளாண் நிறுவனங்களுக்கும் மானியமாக வழங்குகிறது. எந்தவித பொருளாதாரத் தேவையும் இல்லாமல் கூட நேரடி மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 2-3 % மக்கள் மட்டுமே வேளாண்மையைத் தங்கி இருக்கிறார்கள். அரசியல் மற்றும் பிற காரணங்களுக்காக இந்த வேளாண் மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்கவில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகள் பலவும் இதையே செய்கின்றன.

ஒரு நாட்டின் உணவு மூலம் அந்த நாட்டின் சமூகப் பொருளாதார நலனுக்கு அடிப்படையானது. ஆகவே அவர்கள் தங்கள் வேளாண்மையை தக்க வைக்கும் நடவடிக்கைகள் மிக உகந்ததாகப் படலாம். ஆனால் இந்தக் கொள்கை அவர்கள் முன்வைக்கும் முன்னெடுக்கும் முதலாளித்துவம் அல்லது திறந்த சந்தைக் கொள்கைக்கு எதிரானது. மேலாக இது ஆப்பிரிக்க மற்றும் வளர்ந்துவரும் நாடுகளையே பெரிந்தும் பாதிக்கிறது.

உணவை உற்பத்தி செய்யும் ஒரு ஆப்பிரிக்க அல்லது இந்திய விவசாயி மானியம் பெறும் அமெரிக்க விவசாயியோடு போட்டி போட முடியாது. அமெரிக்க விவசாயி பல இந்திரங்களைப் பயன்படுத்தி அதிகமாக உற்பத்தி செய்து அதிக பணத்தை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்கிறான். அதனால் சந்தையில் பொருட்கள் கூடி விலையைச் சரிக்கிறது. எனவே இந்திய அல்லது வளர்முக நாடுகளின் விவசாயிகள் தங்கள் உற்பத்திகாக தகுந்த பெறுமதியைப் பெறமுடியாமல் போகிறார்கள். ஆப்பிரிக்க இந்திய விவசாயிகளின் தொழில்நுட்ப வீச்சுக் குறைவு என்று கூறுவது உண்மையல்ல. உலக ஒழுங்கு முறையே அவர்களுக்கு எதிராக உள்ளது.

முன்னர் சுட்டியபடி 2-3 % அமெரிக்க மக்களே வேளாண்மையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இப்போது குடும்ப வயல்கள் போய், கார்ப்பிரட் வயல்களே பெருகி உள்ளன. எனவே மானியம் அந்த வணிக நிறுவனங்களுக்கே பெரிதும் போகிறது. அவர்களுக்காக இந்தியாவின், ஆப்பிரிக்காவின், பிற வளர்முக நாடுகளின் பெரும்பான்மை மக்களின் நலத்தை பாதிக்கும் கொள்கையே அமெரிக்காவினது. இந்தக் கொள்கை அமெரிக்காவின் அனைத்து கட்சிகளாலும் முன்னெடுக்கப்படுவதுதான்.

எனவே அமெரிக்காவின் போதனைகளுக்கும் நிசத்துக்கும் பெரும் இடைவெளி உண்டு. உண்மையான திறந்த சந்தை இதுவல்ல. உண்மையான திறந்த சந்தை சாத்தியமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

Labels:

Friday, October 14, 2011

ரொறன்ரோ ஆக்கிரமிப்பு (Occupy Toronto Market Exchange) - 7 கோரிக்கைகள்

வோல் இசுரீட் ஆக்கிரமிப்பு ஒரு மாத காலமாகத் தொடர்கிறது. அவர்களுக்கு ஆதரவாகவும் தமது கோரிக்கைகளை முன்வைத்தும் ரொறன்ரோ பே வீதியை ஆக்கிரமிப்புச் செய்யவிருப்பதாக சில குழுக்கள் கூறுகின்றன. பொதுவா இடதுசாரிச் சார்புள்ள இவர்கள் இதை ஏன் செய்கிறார்கள், என்ன மாற்றுக்களை முன்வைக்கிறார்கள், என்ன விளைவுகளை எதிர்பார்க்கிறார்கள் என்பதில் அவர்கள் உட்பட எல்லோருக்கும் குழப்பம் உண்டு.

உலக பொருளாதாரச் சிக்கல்களுக்கு களவும் குற்றமும் பண்ணும் வணிக நிறுவங்கள் ஒரு முக்கிய காரணம் என்று அவர்கள் கருதுகிறார்கள். நிதித் துறையை பல வழிகளால் ஒரு சூதாட்டத் துறையாக மாற்றி மக்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று இவர்கள் கருதுகிறார்கள். அவர்களின் முன்னால் அரசுகளும் பலம் இல்லாதவை என்று இவர்கள் கருதுகிறார்கள். அதை நிவர்த்தி செய்வதற்காக 7 முதன்மைக் கோரிக்கைகளை இவர்கள் முன்வைக்கிறார்கள். அவை யானவை:

1) வணிக நிறுவனங்களுக்கும்/வங்கிகளுக்கும் அரசுகளுக்கும் இடையேயான உள் கூட்டை முடி. தேர்தெடுக்கப்பட்ட சார்பாளர்கள் மக்களின் (99%) நலனுகாகப் பாடுபட வேண்டும், நன்கொடை கொடுத்த பணக்காரர்களின் (1%) நலன்களுக்கு மட்டு அல்ல.
1) End the Collusion Between Government and Large Corporations/Banks, So That Our Elected Leaders Are Actually Representing the Interests of the People (the 99%) and Not Just Their Rich Donors (the 1%).

2) மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்த மோசடிகளைச் செய்தத வோல் இசுரீட் மற்றும் உயர் செயலதிகாரிகளை விசாரி.
2) Investigate Wall Street and Hold Senior Executives Accountable for the Destruction in Wealth that has Devastated Millions of People.

3) பண உருவாக்கும் உரிமையை ஐக்கிய அமெரிக்க நிதித் துறையிடம் திருப்பிக் கொடுக்கவும், நியாமான பண முறைக்கு திரும்பவும்.
3) Return the Power of Coining Money to the U.S. Treasury and Return to Sound Money

4) வங்கிகளின் அளவையும் வீச்சையும் கட்டுப்படுத்து. மீண்டும் ஒன்றும் வரி கட்டுபவர்களால் பிணை எடுக்கப்பட வேண்டிய தோற்கப்பட விட முடியாத நிலைக்கு வரக் கூடாது.
4) Limit the Size, Scope and Power of Banks so that None are Ever Again “Too Big to Fail” and in Need to Taxpayer Bailouts

5) வணிக நிறுவனங்களுக்கு மனிதத் தகுதி குடுக்கும் சட்டத்தை நீக்கும்.
5) Eliminate “Personhood” (Santa Clara County v. Southern Pacific Railroad Company) Legal Status for Corporations

6) நாட்டுப்பற்றாளர் சட்டத்தை நீக்கு. போதை மருந்துக்கு எதிரான போரை நிறுத்து. மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்புச் செய்.
6) Repeal the Patriot Act, End the War on Drugs and Protect Civil Liberties

7) எல்லா வல்லரசுப் போர்களையும் நிறுத்து. படைவீரர்களை வீட்டுக் கொண்டுவா. படைத்துறை வரவுசெலவை வெட்டு. தாய்நாட்டை பாதுகாப்பதை மட்டும் படைத்துறையின் பொறுப்பாகக் கொள்.
7) End All Imperial Wars of Aggression, Bring the Troops Home from All Countries, Cut the Military Budget and Limit The Military Role to Protection of the Homeland

Labels: ,