<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Monday, October 25, 2010

இடதுசாரிகள் மட்டுமா மக்கள் சார்பானவர்கள்

மக்கள் சார்பான கொள்கைகள் எல்லாம் இடதுசாரிக் கொள்கைகள் எனப்படுகிறது. அப்படி என்றால் இடதுசாரித்துவம் உலகின் மிகச் சிறந்த தத்துவம். உலகின் இயங்கியல் பற்றிய பூரண உண்மையை இடதுசாரித்துவம் தருகிறது. மற்றவர்கள் எல்லோரும் தமது மக்கள் விரோத கொள்கைகளை விடுத்து முழுமையாக இடதுசாரித்துவத்தில் சங்கமித்து விடவேண்டும் என்பது சிலரின் வாதமாக இருக்கிறது. இது ஒரு குறுகிய, வட்ட ஓட்டத் தர்க்கமே.

இல்லை, இல்லை இடதுசாரிக் கொள்கைகளிலும் பாதகமான கூறுகள் உள்ளன. பிற கொள்கைகளிலும் நல்ல அல்லது மக்கள் சார்பான கொள்கைகள் உள்ளன என்று சுட்டிக் காட்டினால், அதை மொழி விளையாட்டுக் காட்டி மறுத்து விடுகின்றனர். இடதுசாரிக் கொள்கைகள் தோற்றுப் போகையில் அவை இடதுசாரிக் கொள்கையாக இல்லாமல் போகின்றன. மற்றக் கொள்கைகள் நல்லதாக அல்லது மக்கள் சார்பாக அமைந்தால், அவை மேலோட்டமாகத்தான் அப்படி உள்ளன, உண்மையில் அவை "ஆதிக்க" சக்திகளுக்கே துணை போவதாக கூறப்படுகிறது.

இடதுசாரித்துவத்தின் பெரும் வெற்றியாக கருதப்படும் சோவியத் ஒன்றியம் ஒரு சர்வதிகார படைத்துறை அமைப்பாக இருந்தது. வட கொரியாவில், சீனாவில், வியட்நாமில், கியூபாவில் என்று நீண்டகாலமாக பொதுவுடமை நாடுகள் ஒன்றிலும் அடிப்படை மனித உரிமைகள் இல்லை, மக்கள் ஆட்சி இல்லை. இதுவா மக்கள் சார்பு இடதுசாரித்துவம்.

மக்கள் என்றால் யார், தனிமனிதர்களைக் கொண்ட கூட்டுத் தானே. அப்படி என்றால் தனிமனிதருக்கான சுதந்திரங்களை, உரிமைகளை மறுத்து, மக்களை மாந்தைகளாகப் பார்ப்பதும் சில இடதுசாரி கொள்கைளின் கூறுகளாக உள்ளது. மூட நம்பிக்கைகள் என்றாலும், பிறருக்கு தீங்கு வராத வரை நம்பிக்கைகளை வைத்திருப்பது மனிதர்களின் சுதந்திரம். சொத்துரிமை என்பதும் ஒர் அடிப்படை தனிமனித உரிமையே.

மனிதருக்கு இருக்கும் அடிப்படைத் தெரிவுகளில் ஒன்று என்ன தொழில் செய்வது, என்ன வாங்குவது, யாரிடம் வாங்குவது போன்ற பொருளாதாரத் தெரிவுகள் ஆகும். வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு விருப்பு வெறுப்புகள் இருக்கும். அந்த பல கோடி சிறிய சிறிய தெரிவுகளை ஒரு பெரிய கூட்டம் போட்டு மத்திய குழு தீர்மானிப்பது மக்கள் சார்பு கொள்கை வகுப்பா. எனக்கு இன்னும் வேணும் என்று போட்டி போட்டு உழைப்பவனை, இல்லை இந்தளவுதான், சமமாக இரும் என்று சொல்வது நியாமானதா. ரோபோர்ட் நோசிக்கின் கூற்றை இங்கு நினைவு கூறுவது நன்று: "From each as they chose, to each as they are chosen". சமனான வாய்புக்களை உருவாக்கிக் கொடுப்பது நன்று, ஆனால் சமனான முடிவுகளை எதிர்பார்ப்பது நியாமன்று.

இடதுசாரி கொள்கையின் ஒரு நோக்கம், அதிகாரத்தை கைப்பற்றி, தொழிலாளர்கள் அதிகாரத்தை அமைப்பது ஆகும். அப்படி என்றால் இந்த அதிகாரத்தை தக்க வைக்க இடதுசாரித்தத்துவம் ஒரு கட்டத்தில் பயன்படும், பயன்படுகிறது. இதை அரசின்மைவாதிகள் சுட்டிக் காட்டி உள்ளார்கள். அதிகாரம் புரட்சிவாதிகளையும், எல்லோரயும் மாசுபடுத்தும் என்றும், யார் அரசுக்கு வந்தாலும் அவர்கள் ஆதிக்க இயல்புகளைப் பெறுவார்கள் என்ற விமர்சனத்திற்கு பதில் இல்லை.

இடது வலது என்ற இருமைக் கொள்கைத் துருவ முனைகளும் பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. சில தளங்களில் பொதுவுடமை, சேர்ந்தியங்கல் பயன் தருகிறது. சில இடங்களில் போட்டி, முனைப்பாக்கம் பயன்தருகிறது. அதிகாரத்தை கேள்விகுட்படுத்தல், எதிர்த்து நின்றல் அவசியமானது. சமூகத்தின் பலவீனமானவர்களுக்கு உதவுதல் அவசியமானது. ஆனால் ஒற்றைப் பரிமாண தத்துவங்கள் எந்தளவு பயன் மிக்கவை என்பது மேலும் ஆயப்பட வேண்டும்.

Sunday, October 24, 2010

தற்பால்சேர்க்கையாளர் ரொறன்ரோ மேயர் வேட்பாளரை எதிர்த்து சிரிபிசி விளம்பரம்

தற்பால் சேர்க்கையாளர் ரொறன்ரோ மேயர் வேட்பாளரை (யோர்ச் சிமித்தர்மன்) எதிர்த்து சிரிபிசி (கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - http://www.ctbc.com/) விளம்பரம் ஒன்றை ஒலிபரப்பி உள்ளது. அதை நீங்கள் இங்கு கேக்கலாம் http://www.youtube.com/watch?v=8-4Q-gdDwCo. விளம்பரம் என்று கூறி ஒலிபரப்பினாலும், யார் ஒலிபரப்பினார்கள் என்று கூறவில்லை. இந்தச் செய்தி அனைத்து மைய ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுத்து பகிரப்படுகிறது. இது மொத்த தமிழ்ச் சமூகத்துக்கு கேடான ஒரு பெயரைப் பெற்றுத் தந்துள்ள ஒரு வெக்கக் கேடான செயலாகும். சொற்ப விளம்பர பணத்திற்காக, எந்த வித வானொலி அறமும் இல்லாமல் இதை ஒலிபரப்பு செய்தது, கனடாவின் மூத்த முதல் முழு நேர ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு ஒரு வரலாற்றுக் கறையாகும்.

இந்து விழுமியங்களை துணைக்கு இழுத்திருப்பது, இந்த விடயத்தில் பிற சமயங்களிலும் பார்க்க ஒரு நெகிழ்ந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இந்து சமயத்துக்கும் ஒரு இழுக்கு ஆகும். எங்கட கலாச்சாரமாம், மண்ணாங்கட்டியாம்...காலம் காலமாக் பல கலந்துரையாடல்களில் பண்பாட்டை பரிசீலிக்க வேண்டும், சூழலுக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்று கூறி வந்த வானொலியின் இன்றை வெளிபாடு இது. என்ன பம்மாத்து. ஊருக்கெல்லோ உபதேசம், எமக்குகில்லையே.

கனடாவிலும் உலகெங்கும் தமிழ்ச் சமூகம் இனவேறுபாட்டால், வர்க்க வேறுபாட்டால், சிறுபான்மை இனம் என்பதால் பல பாதிப்புகளைச் சந்தித்து வந்துள்ளது. இதனால் நாம் ஏணையோரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் முழுமையான மதிப்புத் தந்து இயங்க வேண்டும். சாதியத்தால், பெண் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட நாம், தற்போது மீண்டும் மேலும் ஒரு சங்கிலியால் எம்மை பிணைந்து உள்ளோம்.

தற்பால் சேர்க்கையாளர்களுக்கு எதிராக இந்த வானொலி மட்டும் அல்ல, கீதவாணி வானொலியிலும் பல தடவைகள் மிக மோசமான எதிர்ப்புக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. ஒரு பல்லினப்பண்பாட்டு சூழலில் வாழும் தமிழர்கள் இன்னும் எவ்வளவு பிற்போக்கான விழுமியங்களைக் கொண்டுக்கிறார்கள் என்று எண்ணுகையில் நான் வெக்கிக்கிறேன்.

இந்த விளம்பரத்தில் குடிவரவாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிக்கும் ஃபோர்ட்டை ஆதரித்து கருத்து கூறி இருக்கிறார்கள். ஆனால் இதை எந்த ஒரு மைய ஊடகமும் ஒலிபரப்பி இருக்க மாட்டாது. ஏன் என்றால் அவர்கள் எம்மளவு பிற்போக்கானவர்களைக் கொண்டிருக்கா. இதை விட கவலைக்கிடமான நிலை என்னவென்றால், இந்த விளம்பரத்தால் கவரப்பட்டு பல தமிழர்கள் ஃபோர்ட்டுக்கு ஓட்டுப் போடப் போவதுதான்.

நாம் வேட்பாளர்களின் நிதி, சூழலியல், நிர்வாகம், வரி, போக்குவரத்து, உள்கட்டுமானம், கழிவு அகற்றல் போன்ற கொள்கைகளை ஆராய்ந்து விமர்சிக்கலாம். ஆனால் அவர்களுக்கு இயற்கையால் நிர்பந்திக்கப்பட்ட பாலியலை முன்வைத்து விமர்சிப்பது அறம் அற்றது, அறிவற்றது. சிரிபிசி வானொலி முழுமையாக இந்த விளம்பரத்தை நிராகரித்து, மன்னிப்புக் கோர வேண்டும். இதை உடனே செய்ய வேண்டும்.