<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, September 30, 2005

உத்தமத்துக்கு என்ன நடந்தது?

தமிழ் கணிமையின் தலமை நிறுவனமாக இயங்குவது உத்தமம் (INFITT). ஒவ்வொரு ஆண்டும் "தமிழ் இணைய மாநாடு" நடைபெறுவது வழமை. அதாவது கடந்த ஏழு ஆண்டுகள் தொடர்ந்து தமிழ் இணைய மாநாடுகள் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.

இவ் வருடம் மாநாடு பற்றி எந்த செய்திகளும் இன்னும் பரவலாக வெளியிடப்படவில்லை. உத்தமத்தின் இணைய தளம் கடந்த வருட இறுதிக்கு பின்னர் இன்றைப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. உத்தமத்தின் மின் மஞ்சரியும் இரண்டு இதழ்களுடன் நின்றுவிட்டது. உத்தமம் - ஐரோப்பாவும் எந்த முனைவிலும் இருப்பதாக தெரியவில்லை. உத்தமத்தின் இன்றய நிலை என்ன?

திரையின் பின்னால் பலர் உழைத்துக்கொண்டு இருக்கலாம், ஆனால் எந்த முனைப்பும் பகிரப்படவில்லை. ஏன்? பல செயல் வல்லுனர்களை, தன்னாவலர்களை, சிங்கப்பூர்-தமிழக-இலங்கை அரச ஆதரவை, வர்த்தக தாபன அங்கத்துவர்களை கொண்ட உத்தமத்தின் இன்றய நிலை என்ன?

இவ்வருடம் மாநாடு நடைபெறுமா? போன வருடம் மார்கழியில்தான் மாநாடு நடைபெற்றது, ஆகவே இன்னும் காலம் இருக்கென்றும் நினைக்கின்றேன்.

வெறும் ஆவல்தான். வேறெதுவும் இல்லை.

Sunday, September 04, 2005

புலம்பெயர் ஊர் ஒன்றியங்கள்

புலம்பெயர் தமிழ் மக்கள் தாங்கள் வந்த ஊர் அடிப்படையிலும் வாழும் ஊர் அடிப்படையிலும் அமைப்புக்கள் உருவாக்கி செயல்படுகின்றார்கள். இவ் அமைப்புக்கள் பழைய உறவுகளை மீள் கட்டமைப்பதிலும், புதிதாக இணைப்புக்களை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாயகத்தில் இருக்கும் மக்களுடன் தொடர்புகள் பேணுவதிலும், தேவையேற்படின் உதவிகளை பரிமாறி கொள்வதற்க்கும் இவ் ஒன்றியங்கள் வழிசெய்கின்றன. தேசிய பாரிய அமைப்புக்களிலும் பார்க்க ஊர் ஒன்றியங்களின் செயல்பாடுகள் நேரடியான செயல்பாட்டுக்கு வழி செய்கின்றன. இவ் ஊர் ஒன்றியங்களின் செயல்பாட்டில் ஒரு முக்கிய அம்சம் ஊர் ஒன்றுகூடல்கள் ஆகும்.

தோற்றம்
ஆரம்பத்தில் புலம்பெயர் மக்கள் புலம்பெயர் தமிழர் என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள். குறிப்பாக தமிழ் சங்கங்கள் தாங்கள் வசிக்கும் பிரதேசத்தில் இருக்கும் தமிழ் மக்களை இணைக்கும் நோக்கில் செயல்பட்டார்கள். நாளடைவில் மக்கள் செறிவு பெருக்கத்தால் நெருகிய தொடர்பிலான அமைப்புக்கள் தோன்றின. இவற்றுள் தொழில், ஈடுபாடுகள், இலட்ச்சிய, ஊர் அடைப்படையிலான அமைப்புகள் அடங்கும்.

தொலைதொடர்பு வசதிகள், இணையம், போக்குவரத்து வசதிகள் ஆகியவை இவ் ஊர் ஒன்றியங்களின் தோற்றத்துக்கும் பேணலுக்கும் முக்கியம். இவ் தொழிநுட்பங்கள் வளர்ச்சியடையாத காலகட்டங்களில் ஏற்பட்ட புலப்பெயர்வுகள் ஊர் அடிப்படையிலான ஒன்றியங்களை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர் சார் ஒன்றியங்கள் தமிழ் மக்களுக்கு தனித்துவமானது அல்ல. சீன, யப்பானிய, மற்றும் பிற இன மக்களும் ஊர் அடிப்படையிலான அமைப்புக்களை கொண்டிருக்கின்றார்கள்.

கட்டமைப்பு
ஊர் ஒன்றியம் அவ் ஊர் சார்ந்த குடும்பங்களை, தனி நபர்களை உறுப்பினர்களாக கொண்டடிருக்கின்றன. இவ் உறுப்பினர்களின் பொருளாதார பங்களிப்பின் மூலமே ஒன்றித்தின் செயல் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இவ் ஒன்றியங்கள் ஒரு இலகிய நட்பின் அல்லது உறவின் அடிப்படையிலான கட்டமைப்பையே பேணுகின்றன. எனினும், சில பெரிய ஊர்களின் அல்லது சீரிய செயல்பாட்டு நோக்கங்கள் கொண்டிருக்கும் ஊர் அமைப்புகள் சீரிய அல்லது பலக்கிய கட்டமைப்புகளை பேணுகின்றன. பொதுவாக, தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாளர், தொடர்பாளார்கள், தொண்டர்கள் ஆகியோரை கொண்ட ஒருங்கிணைப்பு மன்றம் ஊர் ஒன்றியத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும்.

செயல்பாடுகள்
ஊர் ஒன்றியங்களின் செயல்பாடுகள் ஆறு முனைகளில் அமைகின்றது எனலாம்:
ஒன்றிய நிர்வாகம்
தாயக உதவி
ஒன்றுகூடல்
தொடர்பாடல்
பொது வாழ்வியல்நீரோட்ட இணைப்பு
பண்பாடு பேணல்

சமூக தாக்கம்
ஊர் ஒன்றியங்கள் வந்த இடத்துக்கும் வாழும் இடத்துக்கும் இருக்கும் இடைவெளியில் இயங்குகின்றன. இவற்றின் செயற்பாடுகள் வந்த இடத்துகான பாலமாக அமைந்தாலும், வாழும் இடத்துடன் இணைப்புக்களை இறுக பேணும் படியாகவும் செயல்படவேண்டும். இவற்றின் தாக்கங்கள் புலம்பெயர்ந்தவர்களையும், ஊர் மக்களையும் சென்றடைகின்றன. பல வழிகளில் புலம்பெயர் ஊர் ஒன்றியங்கள் ஊர் மக்களின் நலன்களுக்கு உதவிகளை அழித்தாலும், புலம்பெயர்ந்தவர்களின் ஆவல்கள் ஊர் மக்களின் நேரடி தேவைகளுடன் ஒன்றியமையாமலும் அமைவதுண்டு, குறிப்பாக அரசியல் நிலைப்பாடுகளில்.

பல் கலாச்சார, உலகமயமாக்க, தேசிய சக்திகளின் மத்தியில் ஊர் ஒன்றியங்கள் கீழே இருந்து மேலே நோக்கும் அமைப்புக்களாக இயங்குகின்றன. இவற்றின் செயல்பாடுகள் பரந்த அமைப்புகளுக்கு கிடைக்ககூடிய வலுவை அல்லது ஆதரவை சிதைக்ககூடிய போக்குக்களையும் கொண்டுள்ளன. அதேவேளை பரந்த அமைப்புக்களுடன் கூட்டாக கூடிய செயல்வலுவுடன் இணைந்து செயலாற்றும் தன்மையையும் கொண்டுள்ளன.

Saturday, September 03, 2005

அறிவியல் அறிவு மார்க்கம்

அறிவியல் அறிவு மார்க்கம் (இ.வ: விஞ்ஞான அறிவு மார்க்கம்) இவ்வுலகின் இயல்பை, இயக்க முறையை ஒரு சீரான அணுகுமுறையினூடாக கண்டறிந்து, நிரூபித்து, பகிர முனைகின்றது. அறிவியல் நோக்கிலான அறிதல் தொன்று தொட்டு நிலவியதெனினும், ஐரோப்பாவின் விழிர்புணர்ச்சி காலமே தற்கால அறிவியல் அறிவு மார்க்கத்திற்க்கு அடித்தளம் இட்டது. அதற்கு முன்னைய சீன, இந்திய, இஸ்லாமிய, ஐரோப்பிய முன்னேற்றங்களை உள்வாங்கி அல்லது தெரிந்து அறிவியல் அறிவு மார்க்கம் என்ற தனித்துவமான அறிதல் வழிமுறையாக உருவாகியது.

அறிவியல் அறிவு மார்க்கத்தை மூன்று கூறுகளாக பின்வருமாறு பிரிக்கலாம்:
1. அறிவியல் வழிமுறை
2. அறிவியல் அறிவு
3. அறிவியல் அறிவின் பயன்பாடு

அறிவியல் அறிவு மார்க்கம் என்ற சொற் தொடர் அறிவியல் வழிமுறையையே பொதுவாக சுட்டி நிற்கின்றது. அறிவியல் வழிமுறையின் ஊடாக பெறப்படுவதே அறிவு. அவ் அறிவை சீரிய அமைப்பு அடைப்படையிலான பயன்பாட்டின் விளைவே தொழில்நுட்பம். ஆரம்பத்லேயே, அறிவியல் அறிவு மூலம் தொழில் நுட்பம் விருத்தி அடைந்து என்றாலும், 1900 களுக்கு பிற்பாடே அவ் அறிவை திட்டமிட்ட செழுமையான முறையில் பொறியிலுக்கு பயன்படுத்தப்பட்டது.

அறிவியல் மார்க்கத்தின் அடிப்படை தத்துவம்

அறிவியல் அறிவு மார்க்கத்துக்கு அடிப்படை உலகாயுத தத்துவம். இத் தத்துவத்தின் பல கூறுகளை சோ. ந. கந்தசாமி "இந்திய தத்துவக் களஞ்சியம்" என்ற நூலில் விரிவாக விள்க்கியுள்ளார். "பிரபஞ்சமாகிய இயற்கை பிறருடைய தயவின்றித் தானே என்றும் உள்ளது, தானே இயங்குகின்றது." இவ் இயற்க்கைக்கு மாறா இயல்புகள் உண்டு. எம்மால் அவ் இயல்புகளை அறிய முடியும் என்ற அடிப்படை நம்பிக்கையிலேயே அறிவியல் அறிவு மார்க்கம் செயல்படுகின்றது.

கணி, அள, "அளக்கப்பட கூடியதே அறிய பட கூடியது" என்கிற கூற்று சற்று மிகைப்பட்ட கூற்று என்றாலும், அளத்தல் அறிவியல் மார்க்கத்தின் முக்கிய அம்சம். மேலும், உலகில் உண்மை இருக்கின்றது. அதை நாம் சார்பற்ற நிலையில் நோக்கலாம் என்பதும் இவ் மார்க்கத்தின் ஒரு முக்கிய அம்சம்.

அறிவியல் வழிமுறை

அவதானிப்பு
எமது புலன்களின் வழியே இவ் உலகின் நிகழ்வுகள், பொருட்களின் தன்மைகளை அவதானிக்கின்றோம்.

பரிந்துரை நடைமுறை கோட்பாடு
துல்லியமான அவ் அவதானிப்புகளை அடிப்படையாக வைத்து இவ் உலகின் இயல்பை, இயக்கத்தை நோக்கி நாம் ஒரு புரிதல் அடைந்து, அப் புரிதலின் அடிப்படையில் நாம் ஒரு நடைமுறை கோட்பாட்டை பரிந்துரைக்கின்றோம் அல்லது ஒரு கேள்வியை முன்வைக்கின்றோம்.

பரிசோதனை
பரிந்துரைக்கப்படும் எக் கோட்பாடும் எதோ ஒரு வழியில் பரிசோதனைக்கு உட்பட்டு நிருப்பிக்கப்பட வேண்டும், அப்படி நிருப்பிக்கப்பட இயலாத கோட்பாடுகள் அறிவியல் அறிவுமூல கோட்பாடுகள் என கருதப்பட முடியாது. எவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்துவது? பரிந்துரைக்கப்படும் கோட்பாடு எதாவது சவலான நிகழ்வை அல்லது இயல்பை ஊகிக்க அல்லது வருவதுரைக்க வேண்டும். பரிசோதனைமூலம் அந் நிகழ்வு நிருபிக்கப்படும், அல்லது மறுக்கப்படும். இன்னுமொரு வழியில் சொல்லுவதானால், பரிந்துரைக்கப்படும் நடைமுறை கோட்பாடின் "உண்மையான பரிசோதனை அந்த கோட்பாட்டை பொய்யென நிரூபிக்கும் முயற்சி, அல்லது தவறு என்று காட்டும் முயற்சியே." எனவே தகுந்த பரிசோதனை வடிவமைத்தல் அறிவியல் அறிவு மார்க்கத்தின் மூல அம்சம்.

எந்த ஒரு நடைமுறை கோட்பாடும் அதன் வரையறைகளை தெளிவாக குறிப்புடுதல் வேண்டும். குறிப்பாக பரிசோதனை உபகரண குறிப்புக்கள், பரிசோதனை குறைபாடுகள், சூழ்நிலைகளை பற்றி தெளிவான விளக்கங்கள் தரப்படுதல் வேண்டும். எந்த ஒரு பரிசோதனையும் அதன் விளைவுகளும் மீண்டும் பிறர் செய்யகூடியதாக இருந்தாலே அது ஏற்றுக்கொள்ளப்படும்.

முடிவுகள்
பரிசோதனை முடிவுகள் சவாலான நிகழ்வுகளை அல்லது இயல்பை சரியாக வருவதுரைத்தால் அக் கோட்பாடுகள் ஏற்கனவே உள்ள பரந்த நடைமுறை கோட்பாடுகளுடன் இணைக்கப்படும். மாறாக, பரிசோதனை முடிவுகள் வருவதுரைக்க தவறினால், பரிந்துரைக்கப்பட்ட கோட்பாடுகள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை கோட்பாடோ அல்லது பரிசோதனையோ மீள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

பகிர்வு
முக்கியமான பரிந்துரைக்கப்படும் நடைமுறை கோட்பாடுகள், பரிசோதனை முடிவுகளை பிறருடன் பகிர்வது, அறிவியல் அறிவு மார்க்கத்தின் முக்கிய ஒரு படி நிலை. பகிர்வதன் மூலமெ பிறர் ஆய்வுக்கும் கேள்விக்கும் உட்படுத்தப்பட்டு, பரந்த நிருபீக்கப்பட்ட நடைமுறை கோட்பாடுகள் விரிவடைந்து அல்லது செதுக்கப்பட்டு முன்னேற்ற பாதையில் தொடர்ந்து செல்ல உதவுகின்றது.

இறுதியாக, ஒரு நடைமுறை கோட்பாட்டின் திறன் அதன் வருவதுரைக்கும் ஆழத்தில் உள்ளது. இன்றைய அறிவியல் நடைமுறை கோட்பாடுகள் உலகின் பல இயல்புகளை விளக்கி நிற்கின்றது. அந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே எமது தொழில்நுட்ப சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. எனினும் பல துறைகளில் நாம் ஆரம்பத்திலேயே இருக்கின்றோம். அறிவியல் அறிவு மார்க்கம் (அவதானிப்பு, நடைமுறை கோட்பாடு பரிந்துரைப்பு, பரிசோதனை, முடிவுகளை அலசுதல், பகிர்வு) பரினாம வளர்ச்சி பாதையில் மனிதனை இட்டு செல்வதாகவே நாம் நம்புகின்றோம். இவ் அறிவியல் அறிவு மார்க்கத்திற்கு எல்லைகள் உண்டா? இருந்தால் அவை எவை என்பதுவே மேற்கொண்டு நாம் கேட்க வேண்டிய கேள்விகள்.