<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Sunday, June 12, 2005

"இறை உணர்வு" இருக்கின்றதா?

நான் என்ற உணர்வு.
மற்றய மனிதர்களின் உணர்வு.
மிருகங்கள், தாவங்களின் உணர்வு.
கல், மண், கடல், மண், போன்றவற்க்கு இருக்க கூடிய உணர்வு.
"இறை" என்னும் உணர்வு.

மற்றய மனிதர்கள் எப்படி உணர்வார்கள் என்பதை என்னை வைத்து நான் அனுமானிக்க முடியும்.

ஒரு குரங்கு எப்படிபட்ட உணர்வுகளை கொண்டிருக்கும், அதன் உலகை நோக்கிய புரிதல்கள் எப்படி இருக்கும் என்பதை என்னால் அனுமானிக்கமுடியவில்லை. அனால் குரங்கின் வெளி நடத்தைகளை வைத்து குரங்கை பற்றி பல தகவல்கள் அறியலாம். ஆனால் குரங்கின் உணர்வு எப்படி இருக்கும்? குரங்கின் வெளிநடத்தைகளை, அதன் உடல் கூறுகளை ஆய்வு செய்ய முடியும், ஆனால் அதன் உணர்வுகளை எம்மால் ஆய முடியுமா? இச் சிக்கலையே அறம்-புற இருநிலை சிக்கல் என்பர்.

கல், மண், கடல், பூமி போன்றவற்க்கு உணர்வு இருக்கின்றதா? இல்லை என்றே கருதுகின்றேன். ஆனால் அக் கருத்தை தீர்மானமாக சொல்ல முடியாது. அப்படியானால் அவைகளுக்கு இருக்கும் இயல்புகளை எப்படி விளக்குவது.

சடப்பொருளுக்கு இருக்ககூடிய இயல்புக்கும், ஒரு மனிதருக்கு உரிய உணர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை அவதானிக்க. உணர்வு என்பதன் மூலம் "consciousness" என்பதையே குறிக்கின்றேன். மனித உணர்வு தன் இருப்பை உணர்கின்றது. தனக்கு உணர்வு இருக்கின்றது என்பதை உணர்கின்றது. இன்று, இங்கே, இப்படி இருக்கின்றது என்று உணர்கின்றது. ஆனால் சடப்பொருளுக்கு அப்படிப்பட்ட உணர்வு இல்லை என்றே கருதுகின்றேன். (சில வேளைகளில் உணர்வுகளில் பல நிலைகள் இருக்கலாம், அப்படியாயின், சடபொருளின் இயல்புகள் வேறு நிலையில் இருக்கலாம்.)

இதே சிந்தனை ஓட்டத்தில் எழும் கேள்வியே இறை உணர்வு இருக்கின்றதா? (இக் கேள்வியை முன்வைக்கவே சிறு பயம் ஏற்படுகின்றது. அவ் இறை உணர்வு என் சந்தேகத்துக்காக என்ணை தண்டித்து விட்டால்...) என்னை மீறிய, என்ணை தவிர்ந்த அல்லது உள்ளடக்கிய, எனக்கும் மேலானா ஒரு சக்தி வாய்ந்த உணர்வையே இறை அல்லது இறை உணர்வு என்கிறேன். என்ணை ஆளும் சக்தியாக ஒரு இறை இருக்கலாம், அவன்/அவள்/அதுக்கு நான் அடிமை போன்ற ஒரு விலங்காக இருக்கலாம் என்பதை என்னால் ஏற்றுகொள்ள முடியும். காரணம், மனித வாழ்விலேயே பிற மனிதருக்கும், காரணிகளுக்கும் கட்டுபட்டே வாழ்கின்றேன், எனவே என் மீதான இறையின் ஆளுமையை ஏற்றுகொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை. ஆனால், இப்பொழுது இருக்கு அடிப்படை தேடல் இறை உணர்வு இருக்கின்றதா என்பதே?

இறை உணர்வு உண்டு, அவ்வுணர்வோடு நான் தொடர்பாடலாம், உணரலாம் என்கின்றார்கள் சிலர். இவ் இறை உணர்வை நான் உணர்வதன் மூலம் நான் என் இருப்பின் விளக்கத்தை அறியலாம் என்கின்றார்கள். மேலும், இறை உணர்வை அறிவது மனத்திற்க்கு அமைதி, மகிழ்ச்சி போன்ற நிலைகளை அளிக்கும் என்கின்றார்கள். இவ் இறை உணர்வை அறிவதற்க்கு தகுந்த வாழ்வு முறைகளையும், மார்க்கங்களையும் (தியானம், நம்பிக்கை!) போன்றவற்றையும் பரிந்துரைக்கின்றனர்.

இறை உணர்வு எப்படி இருக்கும் என்று கேட்டேன்? நீயே உணர முடியும் என்றனர்.

இறை உணர்வு எதற்க்கு என்று கேட்டேன்? வாழ்க்கையின் தேடல்களுக்கான பல விடைகள் அங்கேதான் கிடைக்கும் என்றனர்.

இறை உணர்வு ஏன் என் உணர்வுகளுக்கு அப்பால் இருக்கின்றது என்று கேட்டேன்? அப்படி இல்லையே உன்னால் நிச்சியம் அவ் உணர்வை உணர முடியும் என்றார்கள்.

இயற்கையிலே, மனித உறவுகள் ஊடாக, என் உணர்வுகள் செயல்கள் ஊடாக இவ் இறை உணர்வை தேடுகின்றேன். இதுதான் இறை என்று நான் எதை எண்ணி உணர? (எண்ணம் இருக்கும் வரை இறை உணர்வு மழுங்கடிக்கப்படும் என்றும் கூறுகின்றார்கள்.)

எது எப்படியோ அன்பே உருவான இறை இருக்கின்றது என்ற நம்பிக்கையிலேயே நான் வாழ்கின்றேன்.

Wednesday, June 01, 2005

பொருளாதார தத்துவங்கள்

எதை உற்பத்தி செய்வது?
எப்படி உற்பத்தி செய்வது?
எப்படி பகிர்ந்தளிப்பது?

இவையே ஒரு குமுகாயத்தின் அடிப்படை பொருளாதார கேள்விகள். பல்வேறு பொருளாதார தத்துவங்கள் அல்லது நடைமுறைகள் இக் கேள்விகளுக்கான பதில்களை தர முனைகின்றன. அவை:

1. மரபு பொருளாதாரம் (Traditional Economic System)
2. நிலபிரபுத்துவம் (Feudalism)
2. பாசிசம் (Fascism)
3. பொதுவுடமை (Communism)
4. சோசலிசம் (Socialism)
5. திறந்த சந்தை (Free Market Economic System or Capitalism)
6. எழுவரல்/இடைநிலை (Liberal/Mixed Economic System)
7. காந்திய பொருளாதாரம் (Ghandian Economic System)

மரபு பொருளாதாரம்

மரபு பொருளாதாரம் ஆதிவாசிகளின் மிகவும் எழிமையான காடு, வயல், கடல் சார்ந்த பொருளாதார நிலையையே குறிக்கும் (எ.கா: அந்தமான் ஆதிவாசிகள்). இவர்களின் கலாச்சார வளர்ச்சி இன்மை, கடின குறுகிய வாழ்க்கை இவ் வழிமுறையின் வரம்புகள் (limits) எனலாம்.

நிலபிரபுத்துவம்

வேட்டையாடி குழுக்களாக திரிந்த மனிதன், பின்னர் விவசாயம் கற்று கொண்டான். விவசாயத்தின் பலனாக கிராம நகர கட்டமைப்புக்கள் எழுந்தன. இக்கட்டமைப்புக்களின் மிகவும் பரவலான வடிவந்தான் நிலபிரபுத்துவம். விவசாயத்திற்க்கு முதலான நிலத்தை உரிமைப்படித்திக்கொண்ட பிரபுக்கள் பெரும்பான்மை மக்களின் உழைப்பை பெற்று கூலி வழங்கி ஒழுங்கியதே நிலபிரபுத்துவம். இந்தியாவில் இது பல கிராமங்களில் நடைமுறையில் இருக்கின்றது. நிலத்தின் உரிமையை குமுகாய அமைப்பின் ஊடாக தனியுடமையாக்கி மாற்றான் உழைப்பின் பயனை அனுபவிக்கும் நீதியற்ற தன்மைக்கு இவ் நடைமுறை இட்டு சென்றது என்பது இன்று கண்கூடு.

பாசிகம்

பாசிகம் என்பது ஒரு குமுகாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வதிகாரமுறையில் பொருளாதார மற்றும் மற்றைய விதயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ் அதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ் அதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். பெனிற்ரோ முஸ்ஸிலினியின் இத்தாலி, கிற்லரின் யேர்மனி பாசிகத்திற்கு உதாரணங்கள்.

பொது உடமை பொருளாதாரம்

பொது உடமை பொருளாதார தத்துவத்தின் முக்கிய மூன்று கூறுகள் பின்வருமாறு:
1. உற்பத்தி மார்க்கம், உடமைகள் அரசு மக்களின் சார்பில் பொது உடமையாக வைத்திருக்கும்.
2. எதை, எப்படி உற்ப்பத்தி செய்வது என்பதை அரசின் வல்லுனர் குழு ஒரு மையப்படுத்தப்பட்ட முறையில் தீர்மானிக்கும்.
3. மக்கள் அவரவர்க்கு இயன்றபடி உழைத்து தமக்குரிய சம பொருளாதார பங்கை பெறுவர்.

நடைமுறையில் பொது உடமை சர்வதிகார அரசுக்கும், மந்தையான பொருளாதாரத்துக்கும் வழிகோலின, உதாரணங்கள் சோவியத் யூனியன், கியூபா, வட கொரியா.

பொது உடமை பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால் தனிமனித தொழில் முனைவுகள், முயற்ச்சிகள், உந்தல்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. அரசிடம் அதிகாரம் குவியப்படுவதால் ஊழல், அதிகார துர்பிரியோகத்திற்கும் இத் தத்துவம் வழி கோலுகின்றது.

சோசலிசம்

சோசலிசம் பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகின்றது. முக்கிய துறைகள் அரசுடமையாக இருப்பதையும், சமத்துவத்துவை அல்லது சம சந்தர்ப்பதை நிலை நிறுத்தும் கோட்பாடுகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கை தர உத்தரவாதத்திற்க்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. மேலும், சோசலிச சிந்தனைகள் பொது நலம், கூட்டு செயற்பாடு ஆகிவற்றை முன்நிறுத்தி அமைகின்றன.

திறந்த சந்தை பொருளாதாரம்

திறந்த சந்தை அல்லது முதலாளித்துவ பொருளாதார தத்துவம் தனி உடமை உரிமையை வலியுறுத்துகின்றது. குமுகாயத்திற்க்கு பயனளிக்கும் பொருட்களை சேவைகளை செய்வதன் மூலம் இலாபம் ஈட்டும் தனியார் வியாபார தாபனங்களை திறந்த சந்தை வலியுறுத்துகின்றது. எது எப்படி உற்ப்பத்தி செய்யப்படுதல் என்பதை திறந்த சந்தையே தீர்மானிக்கின்றது. அதாவது மக்கள் பொருட்களை சேவைகளை சந்தையில் தெரிவதன் மூலம் வியாபார தாபனங்களிற்க்கு தமது விருப்பு வெறுப்புக்களை தெரிவிக்கின்றார்கள்.

அரசு இயன்றவரை இத் தனியார் நிறுவனங்களை சுயமாக இயங்க விட வேண்டும் என்பதும், திறந்த சந்தை ஊடாக மக்கள் தங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யலாம் என்பதும் இத் தத்துவத்தின் முக்கிய கூறுகள்.

நடைமுறையில் இத்தத்துவம் பொருளாதார வழங்கள் அனைத்தையும் ஒரு குறுகிய அதிகார வர்கத்திற்க்குள் குவியவே வழி செய்கின்றது. மேலும், குமுகாயத்தின் சமத்துவத்தை பேணுவத்திற்கும், பொது நலத்தை பேணுவதற்க்கும் இத் தத்துவத்தில் வழி சொல்லப்ப்டவில்லை.

எழுவரல்/இடைநிலை பொருளார தத்துவம்

திறந்த சந்தை, பொது உடமை ஆகிய இரு துருவ தத்துவங்களையும் உள்வாங்கி, ஒரு வித நடு நிலை தத்துவமாக எழுவரல் வெளிப்படுகின்றது. திறந்த சந்தை பொருளாதார முறை தத்துவத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் பொருளாதார நிபுனர் கினீசியன் (Keynesian) அவர்களின் தத்துவங்களையும் எழுவரல் உள்வாங்கியுள்ளது. பொருளாதாரத்தை வளப்படுத்துவதில் அரசின் பங்கை கினீசியன் வலியுறுத்தினார். எழுவரல் தத்துவம் திறந்த சந்தையை பொதுவாக ஏற்று கொள்ளும் அதே சமயம் பொருளாதாரத்தை வளப்படுத்துவதில் அரசுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதையும் வலியுறுத்துகின்றது. திறந்த சந்தையால் வழங்க முடியாத சேவைகளை வழங்குதல், பொதுநலனை பாதுகாத்தல், சமத்துவத்தை பேணல், சுற்றாடலை பாதுகாத்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் அரசு பங்களிக்கின்றது.

காந்திய பொருளாதார தத்துவம்

காந்திய பொருளாதாரம் கிராமத்தை அடிப்படை அலகாக கொண்டது. தன் நிறைவு, சுய சார்பு, கூட்டு செயற்பாடு, பொது நலம், சமத்துவம் ஆகியவற்றை முன்நிறுத்துகின்றது. சுற்றாடல் சார்ந்த, கைத்தொழில் சார்ந்த பொருளாதார அமைப்பையும் வலியுறுத்துகின்றது.

(வழமை போல "பொருளாதார தத்துவங்கள்" ஒரு மேலோட்டமான பார்வையே. ஒவோரு தத்துவமும் நீண்ட வரலாற்றையும், விபரிப்புக்களையும், பின்புலன்களையும் கொண்டவை. இங்கே ஒரு பட்டியல் ஒன்றையே தர முயன்றுள்ளேன்.)