<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Tuesday, June 04, 2013

ஆங்கில வழிக் கல்விக்குப் பின்னால் இருக்கும் பண்பாட்டுப் பொருளாதாரம்

தமிழ்நாட்டில் ஆங்கில ஆசிரியர்கள் தேவை.  உடனே விண்ணப்பிக்கவும்.  தகுதி: ஆங்கில அறிவு, வெள்ளை நிறம், சரியான உச்சரிப்பு.  வெகுமதி தங்குமிடம், உயர்ந்த சம்பளம், நீண்ட விடுமுறை. 

திரைப்படம், இசை, ஊடகம், பதிப்புத்துறை, உணவு, உடை, அரசு, சட்டம், நிகழ்வுகள் என ஒரு சமூகத்தின் அனேக கூறுகள் மொழியுடன் தொடர்புடையவை.  ஒரு நாட்டு மொழியில் அதன் அரசு இருந்தால், ஊடகங்கள் செயற்பட்டால், கலைகள் படைக்கப்பட்டால் அந்த நாட்டில் தன்னிறைவான, தனித்துவமான ஒரு பொருளாதாரத்தை அவை ஊக்குவிக்கும்.  மாற்றாக வேற்று, ஆதிக்க மொழியில் அவை நிகழ்ந்தால், அவை எல்லாம் இறக்குமதிகளாக மாறிவிடும்.  இது உணர்ச்சிவசப்பட்ட ஒரு வாதம் இல்லை.  மிகவும் யதார்த்தமான உண்மை நிலவரம்.

அமெரிக்காவின் ஆதிக்கம் அதன் படைத்துறையை விட பண்பாட்டில் தான் என்பது பல ஆய்வாளர்களின் கருத்தாகும்.  தமிழ்நாட்டில் ஆங்கிலம் வந்தவுடன் தமிழ்நாட்டின் கோடம்பாக்கம் கோலிவுட் ஆகிவிடாது.  ஆமெரிக்க திரைத்துறையுடம் பிற ஆங்கில நாட்டு திரைத்துறைகளே போட்டியுட முடியாது.  அதனால் தான் கனடா போன்ற ஆங்கில மொழி நாடுகளில் கூட கனடிய உள்ளடக்கம் என்ற ஒரு சட்டம் ஊடகத்துறையில் உள்ளது.  ஆகவே தமிழ்த் திரைத்துறை, இசை, அவை எல்லாம் தங்கி இருக்கும் எழுத்துத்துறை ஆகியன நலிவடைந்து அழிய ஆங்கிலவழிக் கல்வி உதவும். 

உள்ளூர் உணவுகளை விடுத்து மக்கடொலால்சையும் பிற்சாவையும் உண்டால், அதனால் ஒரு பெரும் பொருளாதாரப் பாதிப்பு வரும்.  சோறு, கறி, இட்லி, தோசை, கொத்து, பிட்டு, அப்பம் என்று இல்லாமல் இறக்குமதி உணவுகளாக அவை மாறும்.  இதன் பின்னால் இருக்கும் பொருளாதாரத்தை புகலிட நாடுகளில் நன்கு அவதானிக்க முடியும்.  முதலாம் தலைமுறைத் குடிவரவாளர்களின் ஒரு முதன்மை பொருளாதார மூலமாக அமைவது, தமிழ்க் கடைகள், தமிழ் உணவகங்கள், தமிழ் உணவு உற்பத்தி நிறுவனங்கள்.  சுவைப்பொருட்கள், நல்லெண்ணைய், தானியங்கள், பல வகை மாக்கள், அரிசிகள், தமிழர் மரக்கறிகள், மீன் என்று பெரும் நிறுவனங்கள் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளாத பொருட்களில்தான் நூற்றுக் கணக்கான தமிழ் வணிகங்கள் தங்கி இருக்கின்றன.  இதையே தமிழ்நாட்டில் மாற்றிப் போட்டால் எப்படி இருக்கும்.  மக்டொலால்சும் பிற்சாக்களும் நிறைந்தால் உள்ளூர் பொருளாதாரம் என்னவாகும்.  இது வெறும் ஒப்பீடு இல்லை, எதிர்கூவலே. 

ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் அரச பணிக்கு தமிழ்த் துறை மாணவர்கள் சிறப்புத் தகுதி பெறுவார்கள்.  கனடாவில் பிரெஞ்சு மொழி தெரியாமல் பெரும்பான்மை அரச பணிகளில் அமர முடியாது.  பிரெஞ்சு 20% மக்களால் மட்டுமே பேசப்படுகிறது.  இந்த கட்டுப்பாட்டல் மட்டும் பிரெஞ்சு கற்பித்தல் இங்கு ஒரு பெரும் வணிகம்.  தமிழ்த் துறை மாணவர்களுக்கு மொழி மட்டும் தெரிந்து பணி கொடுக்க வேண்டும் என்று கூறுவது இதன் நோக்கமல்ல.  மாற்றாக எவ்வாறு மொழி தொடர்பான அரச முடிவுகள் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதையே இங்கு சுட்ட விரும்புகிறேன்.

இவை எல்லாவற்றையும் விட ஆங்கில மயமாக்கலின் பினால் ஆங்கில ரியூசன் நடுவங்களும், அனைத்துலக வணிக கல்வி நிறுவனங்களும் உள்ளன. அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து தமிழ்நாட்டின் பொதுக் கல்வி நிறுவனங்களை பயனற்றவை ஆக்கி விட்டாயிற்று.  இப்பொழுது இவை நாயகன்கள் போல் வந்திறங்கியுள்ளார்கள்.  இதனால் கல்வியின் விலை மடக்கு வேகத்தில் உயரப் போகிறது. 

இவ்வாறு அடுக்கிக்க் கொண்டே போகலாம்.  ஆங்கிலவழிக் கல்வி, ஆங்கிலமயமாக்கம் என்பது தன்னியல்பாக நடக்கும் நிகழ்வன்று. அதற்குப் பின்னால் ஆதிக்கங்கள் உள்ளன.  பிரித்தானியப் பேரரசின் போது அது வெளிப்படையாக நடந்தது.  இப்பொழுது சூட்சமமாக நடக்கிறது.  பண்பாட்டுப் பொருளாதார ஆக்கிரமிப்பு என்பது இதன் வடிவம்.  நாம் அடிமை ஆவது என்று தெரிவு செய்துவிட்டால், அதன் பின் எக் காரணங்களும் எதிர்ப்புக்குப் பயன்படா. 

Labels:

ஆங்கிலக் கல்வியால் மலேசிய, இலங்கைத் தமிழர்களை தமிழ்நாடு விற்றுவிட்டது

தமிழ்நாடு அரசின் ஆங்கில வழி முன்னெடுப்பு மலேசிய, இலங்கைத் தமிழர்களைப் பார்த்து என்ன சொல்கிறது.  நீங்கள் எல்லாம் மடையர்கள்.  தமிழ் தமிழ் என்று ஏன் சாகிறீர்கள்.  பேசாமல் மலாய் மொழியை, சிங்கள மொழியை அல்லது எதாவது திணிக்கப்படும் மொழியை ஏற்றுக் கொள்ளுங்கள்.  அது உங்கள் அறிவை வழக்கிறதோ இல்லையோ, உங்களின் குறுகிய கால அடிமைப் பொருளாதாரத்தை வளர்க்கும். 

தமிழர்களின் உரிமைகளை மறுக்கும், மிகவும் இக்கட்டான சூழல்களிலும் கூட மலேசியாவிலும் இலங்கையிலும் தமிழர்கள் தமிழ் வழிக் கல்வியை விட்டுக் கொடுக்கவில்லை.  ஆனால் முழுமையான உரிமைகள் இருந்தும், ஒரு வித குறுகிய பார்வையில் ஆங்கில வழிக் கல்வியை தமிழ்நாடு அரசு அமுல்படுத்துகிறது.  தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி இல்லாமல் போனால், அதனால் கணிசமான பாதிப்பு மலேசிய இலங்கை மாணவர்களுக்கு ஏற்படும்.  எ.கா தமிழில் கல்வி வளங்கள் உருவாக்கப்படுவதற்கு எந்தவித ஊக்கமும் தமிழ்நாட்டில் இல்லாமல் போகும்.  அந்தக் கல்வி வளங்கள் இலங்கை, மலேசிய மாணவர்களுக்கு கிடைக்காமல் போகும்.  இதுவல்ல மோசமான விளைவு. 

தமிழ்நாட்டின் இந்த முடிவை முன் உதாரணம் காட்டி இலங்கையோ மலேசியாவோ வேற்று மொழிகளை தமிழ் மாணவர்கள் கல்வி மொழியாக ஆக்க முயற்சி செய்யக் கூடும்.  ஏற்கனவே அனைத்துலக வணிக கல்வி நிறுவனங்களுக்கு இது ஒரு விளம்பரமாக அமையும். 

ஈழப் போராட்ட கால கட்டத்திலும் சரி, மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் சரி தமிழ்நாடு அரசு ஒரு முதுகெலும்பு இல்லாத டமில் அரசாவே இருந்து வருகிறது.  அயலகத் தமிழர்கள் பற்றி தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கவலைப்படுவது போன்று காண்பிப்பது எல்லாம் பொது மக்களுக்காகப் போடும் ஒரு நாடகம் என்று அனைவரும் அறிந்து இருந்தாலும்.  இவ்வாறு அடி வயற்றில் கை வைப்பார்கள் என்று யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள். 

தமிழ்நாட்டில் தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழிய அரசியலாளர்களுக்கும் மட்டும் இல்லை, அயலகத் தமிழர்களுக்கும் இது ஒரு பெரும் தோல்வி.  ஈழப் போராட்டம் போன்று மீள முடியாத ஒரு திருப்புமுனைக்கு இது இட்டுச் செல்லும். 

Labels: