<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Sunday, November 06, 2011

குடிவரவை எதிர்க்கும் குடிவரவாளர்கள்

கனடாவில் குடிவரவை (immigration) எதிப்பவர்களில் அண்மையில் குடிவந்தவர்கள் கணிசமானவர்கள். கடந்த வெள்ளி சி.பி.சி காலை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட ஓர் உரையாடலில், ஒரு தெற்காசியர் தான் குடிவரவை எதிர்ப்பதாகவும், ஏன் என்றால் தனக்குத்தான் தெரியுமாம் எப்படிப்பட்டவர்கள் இங்கு வருவார்கள் என்றும் கூறினார். குடிவந்து சற்று நிலைபெற்ற பின்னர், இத்தகைய கருத்து மாற்றத்தை நன்கு அவதானிக்கலாம்.

கனடாவைப் பொறுத்த வரை, அதன் அளவுக்கும் செல்வத்துக்கும் திட்டமிட்ட முறையில் செய்தால் இப்பொழுது அனுமதிப்பதை விட பல மடங்கு குடிவரவாளர்களை ஏற்றுக் கொள்ளலாம். எல்லோருக்கும் உச்ச வாழ்தரம் கிடைக்காது, இருப்பவர்களின் வாழ்தரம் சற்று மோசமடையலாம், ஆனால் பல மில்லியன் மக்கள் பலன் பெறுவார்கள். இதற்கான எதிர்ப்பை நீண்ட காலம் இங்கு இருப்பவர்கள் செய்தால், அதை ஓரளவு புரிந்து கொள்ளலாம். ஆனால் இப்போ வந்தவர்கள் ஏன் செய்கிறார்கள்.

இதற்கான சரியாக பதில் தெரியவில்லை. ஒரு காரணம் அதிகப் பேர் வந்தால், பொதுச் சமூகம் குடிவரவாளர்களை தீர்க்கமாக எதிர்க்கும், அதனால் தாமும் பாதிக்கப்படுவர் என்பது. இன்னொரு காரணம் இனவாதம். குறிப்பாக தெற்காசியர்கள், தமிழர்கள் கறுப்பின மக்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களைக் கொண்டவர்கள். அவர்களை காப்புலிகள், காடையர்கள் என்று ஒதுக்குவார்கள். இப்போதைய உலகச் சூழலில் கறுப்பின மக்கள் கணிசமான அளவிற்கு கனடாவிற்கு வருகிறார்கள்.

நாம் இங்கெ வந்து நாட்டை பாதிக்கும் வகையில் சில வகைகளில் நடந்து கொள்கிறோம் என்பது உண்மைதான். ஊழலுக்கு உடந்தை செய்கிறோம். சாதி, காதல் எதிர்ப்பு, சமயம் போன்ற எமது வறண்ட பண்பாட்டு கட்டமைப்புக்களை இங்கும் நிறுவுகிறோம். ஆனால் ஒட்டு மொத்தத்தில் கனடாவின் பொருளாதரத்திற்கும், அதன் நலத்துக்கு நல்லதே செய்கிறோம் எனலாம். எல்லோரும் சுதந்திரத்துடன், அவரவர் வேலையைப் பார்த்தபடி, குறை நிறைகளுடன் வாழ்க்கையை ஓட்டுவது, அதையே கனடா வழங்கும், சொர்க்கத்தை அல்ல. கடும் குளிரையும், கடின உழைப்பையும் தாங்க முன்வரும் அனைவரையும் இயன்றவரை கனடா ஏற்றுக் கொள்ளும் ஒரு குடிவரவுக் கொள்கைக்கு நாம் ஆதரவு வழங்க வேண்டும்.

Labels: ,

Friday, November 04, 2011

இலங்கையில் கொண்டுவரப்படும் நிலங்கள்/வணிகங்கள் அரசுடைமைக்கப்படும் சட்டம்

இலங்கை சமவுடமை, பொதுவுடமை வாதிகளுக்கு ஒரு பெரிய வெற்றி. எல்லாச் சொத்துக்களும் பொதுவுடமையாக்கப்பட வேண்டும் என்ற சமவுடைமைக் கொள்கையை இலங்கையின் சமவுடமை அரசு நிறைவேற்ற தொடங்கி உள்ளது. இலங்கைப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்து வெற்றி பெற்ற ராசபக்ச குடும்பம் அங்கு வெற்றிகரமாக செயற்படாத அல்லது பயன்படுத்தப்படாத வணிகங்களையும் நிலங்களையும் அரசுடமையாக்கி உள்ளார்கள். இந்தச் சட்டத்தை முதலாளித்துவம் நசுக்க முடியாதவாறு ரகசியமாக உருவாக்கி, உயர் நீதி மன்றத்திலும் அனுமதி பெற்றாச்சு. ஐலண்ட் போன்ற வலதுசாரிப் பத்திரிகைகள் கொக்கரித்தாலும், இலங்கையின் பொதுவுடமைச் சிங்கம் ராசபக்ச நாட்டு நலன் கருதி இதைச் செயற்படுத்தி உள்ளார்.

இதுவரை 37 வணிகங்களும் நிலங்களும் இவ்வாறு அரசுடமைமையாக்கப்பட்டது என்று கூறினாலும், தமிழர்களின் சொத்துக்களை முதலே பட்டியல் போட்டாச்சு. அவற்றை இந்தச் சட்டத்துக்கு முன்னாலேயே எடுத்தாச்சு. இப்ப சிங்கள் ஆக்களிண்ட சில சொத்துக்களையும் நாட்டின் நலன் கருதி பொதுவுடமை ஆக்கி ஆச்சு. அவற்றை நாட்டுக்காக ராசபக்ச குடும்பம் திறமையாகப் பயன்படுத்தும். இது பற்றித்தான் ஐலண் பத்திரிகை சற்றுக் கவலை கொண்டு உள்ளது.

இலங்கை அரசு மேலும் மேலும் பலம் பெற வேண்டும். கல்வி, மருத்துவம், ஊடகம், வணிகம், பாதுகாப்பு, சமயம் என எல்லா விடயங்களையும் அரசே எல்லோருக்காகவும் சமமாக சரியாகப் பார்த்துக் கொள்ளும். அந்த நாள் வெகு தூரம் இல்லை. இலங்கையில் மலர்கிறது, சோவியர்கள் கனவு கண்ட பொதுவுடமைச் சொர்க்கம்.

Labels: , ,