<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Thursday, September 29, 2011

சதாவின் கடிதம்: வன்முறைப் போராட்ட வழிமுறையில் சிதைக்கப்பட்டவர்கள்

ஈழப் போராட்டத்தில் 1970 களின் இறுதிகளுக்குப் பின்பு அறவழிப் போராட்ட வழிமுறைகள் எவையும் உறுதியான முறையில் நேர்மையான முறையில் யாராலும் முன்னிறுத்தப்படவில்லை. இயக்கங்களாலும் சரி, அவற்றை வளர்த்த இந்திய உளவு நிறுவனம் ஆனாலும் சரி, அரசியல் கட்சிகள் ஆனாலும் சரி அறவழிப் போராட்ட வழிமுறைகளைப் பொருட்படுத்தவில்லை. இதன் காரணமாக வன்முறைக்குப் பதில் வன்முறை என்று நாம் ஈழத் தமிழர் இனப்படுகொலை வரைக்கும் தள்ளப்பட்டோம்.

அந்த வன்முறைப் போராட்டத்தின் உச்ச வடிவம் விடுதலைப் புலிகளே. விடுதலைப் புலிகளின் அடிப்படைக் கருத்தியல் என்பது வன்முறையிலானது, அதிகாரத்திலானது. அதிகாரத்தால் எதையும் வெல்லாம் என்பதுவே அது. இந்த வன்முறையும், அதிகாரமும் இலங்கை அரசின் கோரத்தை எதிர்த்த போது தமிழ் மக்கள் அவர்களோடு அணி திரண்டார்கள். அதுவே உள்ளே திரும்பிய போது விளைந்ததே சகோதர இயக்கப் படுகொலைகள், சர்வதிகார அடக்குமுறைகள். இந்த வகையில் பெரும்பாலான மற்ற இயக்கங்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளை விட பல மடங்கு மோசமானவர்கள், சற்றும் ஒழுக்கம் அற்றவர்கள்.

இந்த வன்முறைப் போராட்டத்தின் உரமாக 25000 மேற்பட்ட போராளிகளின் உயிர்கள் கொடுக்கப்பட்டன. 11 500 வரையான பேர் இலங்கைப் படைத்துறையிடனரிடம் சரணடைந்தார்கள். இவர்களின் கணிசமானவர்கள் மிகக் கொடுமையான தண்டனைகளுக்குப் பின்பு விடுவிக்கப் பட்டுள்ளார்கள். மேலும் பெருந்தொகையினர் இன்னும் தண்டனை அனுபவிக்கிறார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவது அனுபவிப்பார்கள். விடுவிக்கப் பட்ட போராளிகளை யாழ் தமிழ்ச் சமூகம் மிகக் கேவலமாக நடத்துகிறது. எந்தவொரு நாடோ, எந்தவொரு மக்கள் சமூகமோ தமது போராளிகளை ஒருபோது இழிவுபடுத்தாது. தலைமைகள் எந்தளவு பிழையாக இருந்தாலும், சுத்த போராளிகளை இழிவுபடுத்துவது போல கொடுமை எதுவும் இல்லை. ஒரு வகையில் இந்தப் போராளிகள் மறக்கப்பட வேண்டியவர்களாக, மறைக்கப்படவேண்டியவர்களாக மாறிவிட்டனர்.

சதாவும் இப்படிப் பட்ட ஒரு போராளிதான். ஆனால் இவன் ஈழத்துக்கு அப்பாலேயே செயற்பட்டவன். இங்கு (ரொறன்ரோவில்) தமிழ் இளையோர் அமைப்பின் தலைவராக செயற்பட்டவன். இவனை வலை விரித்து இலங்கை அரசும் ஐ.அ உளவுத்துறையும் கைதுசெய்து 25 ஆண்டுகள் சிறைவைத்துள்ளன. கனடாவில் ஒரு பெரும் தமிழ்ச் சமூகம் இருந்தும், இவனது கைதும் சிறையும் இங்கு யாரையும் உசுப்பவில்லை. அண்மையில் அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் இங்குள்ள "தலைமைகளால்" தான் பயன்படுத்தப் பட்டதாகவும், தமக்குள் வெறுப்பு விதைக்ப் பட்டதாகவும் கூறியுள்ளார். நடந்த பல சந்திப்புக்களில் சுமூகமான எந்த தீர்வுக்கும் இடம் கொடுக்கப் படவில்லை என்றும், வெற்றி என்ற இலக்கைக் காட்டி உணர்வை உசுப்பி இளையவர்களை தலைமைகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் கூறுகிறார். இவரது மதிப்பீடுகள் மிகச் சரி என்றே கருதுகிறேன். மேலும், இளையவர்கள் வன்முறையில் இருந்து விலக வேண்டும் என்றும், விடுதலைப் புலிகளின் கருத்தியலில் இருந்து விலக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார்.

அவரின் கடிதத்தின் கனத்தை, அதன் பின் இருக்கும் வலியை உணர முடிகிறது. ஆனால் ஒரு முக்கிய இடத்தில் வேறுபடுகிறேன். இந்தக் கடிதத்தில் அடிமைகள் பயன்படுத்திய வன்முறையைப் பற்றி மட்டும் குறிப்படுகிறார், அடக்குமுறையாளர்கள் பயன்படுத்திய, பயன்படுத்தும் வன்முறையையும், கருத்தியலையும், வெறுப்பையும் பற்றிக் குறிப்பிடவில்லை. "சமதானமும் இணக்கப்பாடும்" சமாதானமும் அபிவிருத்தியும் என்ற இலங்கையின் தற்போதைய அரசியல் கோசங்களைக் குறிப்பிடுகிறார், ஆனால் உண்மை, உரிமைகள், விடுதலை பற்றிக் குறிப்பிடவில்லை. உண்மை இல்லாத இணக்கப்பாடு என்பது போலியானது. விடுதலை, தமிழ் மக்களின் நியாமான உரிமைகள் என்பவை விடுதலைப் புலிகளோடு முடிந்துவிடுபவை அல்ல. தோற்றவர்கள் மீது, பாதிக்கப்பட்டவர்கள் மீது எல்லா குற்றங்களையும் சுமத்துவது என்பது தீர்வு அல்ல. தமிழ் மக்களின் போராட்டங்களுக்கான காரணங்கள் அனைத்தும் இன்றும் நிலைத்து நிற்பவை. இலங்கைப் பத்திரிகைகளில் சில தமிழ் மக்களின் கருத்துமாற்றங்கள் பற்றி நேர்காணல்கள் முன்வைக்கும் சிங்கள பேரினவாதப் பத்திரிகைகள் எவைதானும் ஒரு சிங்களப் போரினவாதியின் கருத்துமாற்றம் பற்றியும் இன்னும் ஒரு நேர்காணலைத்தானும் வெளியிடவில்லை.

நாம் சதாவின் கடிதத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். வெறுப்பு எமக்குத் தேவையில்லை. வன்முறை எமக்குத் தேவையில்லை. நாம் சிந்தித்து
செயற்படவேண்டும்.

எமது கடந்த காலத்தை ஆய்வுக்கு உட்படுத்தி ஒரு நேர்மையான போராட்ட வழிமுறையை நாம் கட்டமைக்க வேண்டும். வன்முறையற்ற, மனித உரிமைகளை மதிக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப அந்த விழுமியங்களின் அடிப்படையிலான போராட்ட வழிமுறைகளே எமக்குத் தேவை.

சதா படித்த பள்ளியில் நான் இரண்டு ஆண்டுகள் கல்வி கற்றவன். அவன் ஒரு சிறந்த உதைப்பந்தாட்ட வீரன். நன்றாக கணக்குச் செய்வான். தமிழ் மீது அவனுக்கு ஒர் ஈர்ப்பு. இவ்வாறுதான் அவனைப் பற்றிய நினைவுகள் என்னிடம் உள்ளன. அவன் தனது இளமையை சிறையில் துலைப்பது என்பது என்னை இடிக்கும் ஒரு நிலைமை.

ஒடுக்குமுறைக்கும், அடிமைத்தனதுக்கு எதிராக போராட்டாமல் இருப்பதை விட எந்த வழியாலும் எதிர்ப்பது நன்று. ஆனால் அறவழிப் போராட்டமே மனித இனத்துக்கு சார்பானது. அறவழிப் போராட்டம் என்றால் இலகுவானது, வேகமானது, இழப்புகள் இல்லாதது என்பது பொய். அங்கேயேயும் இழப்புக்களும் அர்ப்பணிப்புக்களும் அதிகம் தேவைப்படும். ஆனால் நாம் எட்ட நினைக்கும் இலக்குகளுக்கும் அதற்கான வழிமுறைகளுக்கும் அங்கே முரண்ப்பாடு இருக்காது. அவ்வாறு என்றும் இருக்கக் கூடாது.

Labels: , ,

Monday, September 19, 2011

கனடாவிலும் இந்தியர்கள்/தமிழர்கள் ஊழல்

உலகிலேயே ஊழல்கள் மிகக் குறைந்த நாடுகளில் ஒன்று கனடா. மக்களாட்சி, திறனான அரசு சேவைகள், கண்காணிகள் மற்று குறைகேள் அதிகாரிகள் போன்ற முறைமைகள், சுதந்திரமான ஊடகங்கள், பண்பாடு ஆகியவை இதற்கு காரணமாக இருக்கலாம். இங்கேயேயும் சில சூழல்களில் ஊழல் கூடுதலாகவும், சில சூழல்களில் குறைவாகவும் இருக்கிறது. ஆனால் ஊழல் அதிகரிப்பில் இந்தியர்கள்/தமிழர்களின் பங்களிப்பு பயமுறுத்துவதாக இருக்கிறது.

ஊழலை வாழ்கையாகி, சாதரமாகிவிட்ட சூழல்களில் இருந்துவரும் இந்தியர்கள்/தமிழர்களுக்கு இங்கு இருக்கும் முறைகளுக்கும் தில்லுமுல்லுக் காட்டுவது மிக சுலபம். எ.கா வாகன ஓட்டுனர் அனுமதி பெறுவதில் இந்தியர்கள்/தமிழர்கள் ஊழல் செய்கிறார்கள். குறிப்பாக காப்புறுதிக் குறைப்புக்காக 25 மணித்தியால வகுப்பை 1 மணித்தியாலத்தில் கேள்வி பதிலோடு இவர்கள் செய்து தருவார்கள். பெரிய வாகனங்கள் ஓட்டுவதற்கு, பரிசோதர்கர்களே சிறப்புச் சலுகைகள் செய்வார்கள்.

ஐயர்மார், சமூக சேவை எண்டு (தனியார்) கோயில்களைக் கட்டுவார்கள். சமய தாபனங்கள் என்றால் அரசுகளும் நம்பி செயரிட்டி எண்ட அந்தசுது வழங்கிவிடும். அவற்று வரி நன்கொடை செய்பவர்களுக்கு வரிக் கழிவு கிடைக்கும். எனவே அவர் தந்ததிலும் பார்க்க கூடுதலாக அவர்களுக்குப் பற்றுச் சீட்டுக் கொடுத்து, அவர் நன்கொடை செய்ததிலும் பார்க்க கூடுதலாக வரிக் கழிவைப் பெற்று விடுவார்.

தற்போது கல்வியும் ஊழல் செய்யத் தொடங்கி விட்டார்கள். மாணவர் வகுப்புப் வருகிறாரோ, சோதனைகளில் தேறுகிறாரோ இல்லையோ, அவர் கட்டும் கட்டணத்துக்கு ஏற்ப புள்ளி குடுக்கிறார்கள். இது முழுக்க முழுக்க ஒரு இந்திய மாதிரிதான். பணம் தந்தால் புள்ளி, பட்டம்.

விகாரத்துப் பெற்றுவிட்டோம் என்று கூறி அரசு பணம் பெறுகிறவர்கள். வரியே கட்டாம வணிகங்களை நடத்துகிறவர்கள். இப்படி பட்டியல் நீண்டு கொண்டு போகுது.

போகிற போக்கில, இங்கேயும் அண்ணா அசாரே தேவைப்படலாம். எங்கட மொழியைப் பேணக் காணோம். ஆனா இந்த இழிவு மரபுகளை எல்லாம் திறமையாகப் பேணுகிறோம்.

Labels: ,

ரோப் ஃபோர்ட்டை எதிர்ப்பது எப்படி?

வாக்குப் போட்ட இந்தியர்கள், சீனர்கள், முசுலிம்கள், தமிழர்கள் உட்பட்ட பெரும்பான்மைனோர் ஆதரவில் வெற்றி பெற்றவர் ரோப் ஃபோர்ட். இவருக்கு போட்டியாளாராக இருந்த யோர்ச் சிமிர்த்தமன் ஒருபாலினித்தவாராக இருந்தது, பழமைவாத குடியேறியவர்களின் வாக்குக்களை இவர் பெற ஒரு முக்கிய காரணமாக இருந்தது. மற்றது பொருளாதாரச் சிக்கனத்தை, பொறுப்புடமையை, வெளிப்படைத்தன்மையை தான் கடைப்பிடிக்கப் போதவது என்று கூறியதும் பலரைக் கவர்ந்தது. மேலும் முக்கியமாக, இவர் நகர அரசில் வளங்கள் வீணடிக்கப்படுவதைத் நிறுத்தப் போவதாக கூறி இருந்தார்.

ரோப் ஃபோர்ட் பதவிக்கு வந்ததவுடன் தானுந்துக்கு எதிரான போர் நிறுத்தப்பட்டது என்று கூறி, நிறைவேற்றும் நிலையில் இருந்து பொதுப் போக்குவரத்துத் திட்டத்தை ரத்துச் செய்தார். இதனால் பாதிக்கப்பட்டது குடிவரவாளர்கள் அதிகம் இருக்கும் இசுகார்பரோ பகுதிதிதான். மாற்றாக தானுந்துப் பயன்பாட்டுக்கு இருந்த சிறிய வரியையும் ரத்துச் செய்தார். மேலும், நடுநகரில் மிதிவண்டிப் பாதைகளை மூடிவதற்கான முனைப்படுகளைத் தொடங்கினார்.

அடுத்து இவர் நிலக் கைமாற்று வரியை ரத்துச் செய்வதாக கூறி உள்ளார். சொத்து வரியை பண வீக்கத்துக்கு மேலாக கூட்ட மாட்டார் என்று உறுதி செய்துள்ளார். இவ்வாறு தனது வலதுசாரி ஆதரவாளர்களை மகிழ்விக்கும் வண்ணம் அரசுக்கு வரக் கூடிய வருமானங்களை இல்லாமல் செய்தார் அல்லது குறைத்தார். இதனால் வரவு செலவில் ஒரு பெரிய ஓட்டை விழுந்தது.

கனடாவில் கூட நகர அரசுகள் திறமையாக, வெளிப்படையாக, நேர்மையாக இங்குகிறது என்று கூறமுடியாது. இங்கும் தெரிந்தவர்களுக்கு வேலை கொடுப்பது, தேவையில்லாத வேலைய்ச் செய்து கொண்டிருப்பது, தொழிலாளர் சங்கங்களால் அதி கூடிய ஊதியம் வேண்டுவது எல்லாம் நடக்கிறது. வரிப் பணத்தில் அரசு ஈடுபடத் தேவையில்லாத பல திட்டங்களில் தலையிடுவது இங்கும் நடப்பது ஒன்றுதான். ஆனால் ரோப் ஃபோர்ட் கூறியவாறு அதிக அளவு வள வீணடிப்பை இவர் கண்டு பிடிக்கவில்லை. எனவே வரவு செலவின் இடைவெளியைக் குறைக்கவென இவர் ரொன்றரோ அரசின் பொதுமங்களையும், ஏழைகளுக்கான சேவைகளையும், பொதுச் சேவைகளையும் இலக்கு வைக்கலானார்.

பொதுப் போக்குவரத்து, நூலகங்கள், பூங்காக்கள், ஏழைகளுக்கான வீடுகள், குழந்தைப் பராமரிப்பு இடங்கள் என்று ஒரு நகரத்தின் அடிப்படைகளை இவர் இலக்கு வைத்து தாக்கலானார். பின்னர் தனியார் முதலீட்டோளார்களுடன் இரகசியமாகப் பேசி, ரொறன்ரோ கடற்கரையில் இருக்கும் பெறுமதி மிக்க நிலங்களை விற்பதற்கு இவரும் இவரது சகோதரரும் (ஓம், இவரது சகோதரும் ஒரு நகர அவை உறுப்பினர்) திட்டம் தீட்டினார்கள். வெளிப்படைத்தன்மை, பொறுப்புடமை, போட்டி ஏலம் எல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த போது இவர்கள் எழுப்பிய கோசங்கள். அதிகாரத்துக்கு வந்ததும் இவர்கள் தமது நண்பர்களின் வணிகங்களை (இவர்களும் தொழில் அதிபர்கள்) எப்படி விருத்தி செய்யலாம் என்பதைப் பற்றியே அதிகம் அக்கறை காட்டுகிறார்கள்.

எந்தச் சேவைகளையும் வெட்ட மாட்டோம், மாற்றாக அவற்றை திறமையா வழங்குவோம் என்று கூறி பதவிக்கு வந்தவர்கள், புல்லு வெட்டுவது, பனி வழிப்பதில் இருந்து நூலகங்கள் வரை எல்லாத்தையும் வெட்ட தயாராகினர். இதற்கு ரொறன்ரோ மக்கள் கடுமையான எதிர்ப்புக் காட்டத் தொடங்கி உள்ளனர். நூலகங்களை பூட்டுவதற்கு எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் எதிர்த்தார்கள். ரொறன்ரோ கடற்கரையை தனது நண்பர்களுக்கு விற்பதற்கு நகரத் திட்டமிடளார்கள், துறை சார்ந்தவர்கள் எதிர்த்தார்கள். ஏழைகளின் சேவைகளை வெட்டுவதற்கு சமூக செயற்பாட்டாளர் எதிர்த்தார்கள். இவ்வாறு பல வழிகளில் இருந்தும் மக்கள் தமது எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். கீழே நீங்கள் அந்த எதிர்பின் ஒரு பட்டியலைப் பார்க்கலாம்.

சேவைகளை திறமையாக வழங்குவது. தேவையற்ற செலவீனங்களை குறைப்பது. பொறுப்பான வரவு செலவைக் கையாள்வது என்பது எல்லோரும் ஆதிரிக்க கூடிய செயற்பாடுகள். ஆனால் இவர்கள் இவர்கள் செய்ய நினைப்பது பொதுமங்களாக இருப்பவற்றை தனியாருக்கு விற்பது. சொத்து வரியை ஆகக் குறைந்து ஆகக் கூடிய சொத்துள்ளவர்களை மகிழ்விப்பது. இது தீவர வலதுசாரித் கருத்தியலின் நிறைவேற்றலாகும்.

வணிகங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவென இங்கு கோரவில்லை. மாற்றாக பொதுமங்களையும், பொதுச் சேவைகளையும் தகர்ப்பதை தடுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

Public Transit
http://www.ttcriders.ca/

Environmental Programs
http://www.torontoenvironment.org/servicereview/petition

Waterfront
http://codeblueto.com/

Riverdale Farm
http://www.facebook.com/pages/Riverdale-Farm-Toronto/101628989895157#!/SaveRiverdaleFarm
http://www.petitiononlinecanada.com/petition/residents-against-closing-r...

Public Libraries Petition
http://ourpubliclibrary.to/

Protect the Arts & Culture
http://www.ipetitions.com/petition/friendsofthearts/

Connect with others, organizing and speaking out resources:
www.commitment2community.org

OneToronto
http://www.onetoronto.ca/

Women Against the Cuts
http://womenagainstcuts.tumblr.com/

Stop the Cuts
http://www.torontostopthecuts.com/

City Hall Blogs

There are a number of independent journalists covering City Hall on these blogs:
http://afuitbs.wordpress.com/
http://spacingtoronto.ca/
http://fordfortoronto.mattelliott.ca/
http://theclamshell.blogspot.com/2011/09/let-us-compare-mythologies.html
http://www.torontostandard.com/

http://rabble.ca/blogs/bloggers/krystalline-kraus/2011/09/activist-communiqu%C3%A9-toronto-councillor-vaughan-says-stop-ro

Labels: , ,